சிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்!
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் ‘வேதா இல்லம்’ என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டரின் ரத்தத்திலும் உணர்விலும் கலந்த ஒரு கோயிலைவிட மரியாதைக்குரிய இடம். இன்னும் சொல்லப்போனால், ’தமிழக சட்டசபை நடக்கும் செயிண்ட் சார்ஜ் கோட்டைக்கு நிகரான ஒரு அதிகாரக் கோட்டை அது’ என்கின்றனர் அரசியல் தெரிந்த பலரும். அதிமுக தொண்டர்களுக்கு அந்தக் கோட்டையின் ராணி; கடவுள் எல்லாமே, அவர்களின் ‘அம்மா’ ஜெயலலிதாதான்.
கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் ஒரு அதிகாரப்பூர்வமான மையமாக இருந்தாலும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதெல்லாம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில்தான். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை, அக்கட்சியின் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் இருந்தாலும் அது வெறும் ஒப்புக்குத்தான் இருந்ததே தவிர, கட்சியின் அதிகாரத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகள் எல்லாமே போயஸ் கார்டன் ’வேதா’ இல்லத்தில்தான் எடுக்கப்பட்டது.
தமிழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றை கோபாலபுரம் இல்லம் தீர்மானித்தது என்றால், அதில், 30 ஆண்டுகாலம் போயஸ் கார்டன் இல்லத்திற்கும் உண்டு. அதிமுகவின் அதிகார மையம் வேதா இல்லம்தான். ஜெயலலிதாவின் உயிர்; உலகமாக திகழ்ந்த வேதா இல்லத்தில் அவர், கடைசியாக வாழ்ந்தது இதே செப்டம்பர் 22 ஆம் தேதிதான். அன்றுதான், உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு, 70 நாட்கள் கழித்து வேதா இல்லத்தில் அவரை சடலமாகத்தான் தமிழக மக்கள் பார்க்க முடிந்தது.
ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கு எப்படி வேதா இல்லம் 44 நான்கு ஆண்டுகள் சாட்சியாகிறதோ, அப்படித்தான், அவரது அரசியல் வாழ்க்கைக்கும் 34 ஆண்டுகள் சாட்சியாய் இருக்கிறது.
எண்- 81 போயஸ்த்தோட்ட வேதா இல்லம் 24,000 சதுர அடி இடம் கொண்டது. அதன், தற்போதைய மார்க்கெட் விலை 43 கோடியே 96 லட்சத்து 74 ஆயிரத்து 900 ரூபாய். போயஸ்கார்டன் வாசலுக்கேப்போக முடியாத அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் போயஸ்கார்டனை நினைவில்லமாக்கினால் வீட்டை ஒருமுறை பார்வையிடவேண்டும் என்ற ஆசை மனசுக்குள் மங்காத்தா ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்பேற்பட்ட போயஸ்கார்டனில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவும் இல்லை… இளவரசியும் இல்லை. ஆனால், அது தமிழக அரசியலின் அதிகார மையமாக எப்படி விளங்கியது?
போயஸ் கார்டன் அல்ல; போயஸ் அரண்மனை
ஆட்சியில் இருக்கும்போது நாடாளுமன்றத்திற்கு நிகரான ஒரு அதிகாரமும் ஆட்சியில் இல்லாதபோது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் தலைவிதியை தீர்மானிக்கும் மையமாகவும் போயஸ் கார்டன் இல்லம் திகழ்ந்தது என்றே சொல்லலாம். கருணாநிதி என்ன அறிக்கைவிட்டாலும் உடனுக்குடன் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து பதிலடி வரும். ஏறக்குறைய கோபாலபுரம் வந்த அனைத்து தலைவர்களும் போயஸ்கார்டனுக்கும் வந்துள்ளார்கள். கோட்டையில் இல்லாத பரபரப்பைவிட போயஸ் கார்டன் இல்லத்தில் எப்போதும் இருக்கும். கோட்டையில் நகராத ஃபைல்கள்கூட வேதா இல்லத்தில் நகர்ந்தது என்று சொல்வார்கள். யார் மாவட்டச் செயலாளர் ஆகவேண்டும்? யார் சட்டமன்ற உறுப்பினர்? யார் நாடாளுமன்ற உறுப்பினர்? யார் மாநிலங்களவை உறுப்பினர்? போன்ற பட்டியல் எல்லாமே கடந்த 30 வருடங்களாக தயாரானதும் போயஸ்கார்டனின் முதல் மாடியில் உள்ள ஜெயலலிதா அறையில்தான். பிரதமர் மோடி ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்திற்கு சென்றிருக்கிறார் என்பதே அந்த இல்லத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
பிரதமர் மோடி வந்ததோ, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்ததோ பெரிய விஷயமல்ல. ஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பெற்று ஜாமீனில் இருந்தபோதே இந்தியாவின் அப்போதைய நிதித்துறை அமைச்சர் அமைச்சர் அருண்ஜெட்லி போயஸ் கார்டன் இல்லத்தில் வந்து சந்தித்ததுதான், அந்த இல்லத்தின் அதிகாரம் எவ்வளவு பவர்ஃபுல்லானது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
ஜெயலலிதாவுக்கு வீடுதான் உலகம்; வீடுதான் சுற்றுலாதலம். ஏனென்றால், எந்த வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. எப்போதாவது, டெல்லி சென்றாலும் ஒரே நாளில் வந்துவிடுவார். பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு ஆஜராக செல்வார். அதோடு, கோடைகாலத்தில் ஓய்வெடுக்க கொடநாடு எஸ்டேட் செல்வார். அதற்கடுத்து சிறுதாவூர் பங்களா. அவ்வளவுதான். அப்படி உலகமாக உயிராக திகழ்ந்த வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் உயிர் போகவில்லை. அப்போல்லோ மருத்துவமனையில்தான் போனது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்தே போயஸ் கார்டன் தனது அதிகார மையத்தை இழக்க ஆரம்பித்துவிட்டது.
வேதா இல்லம் எப்படி உருவானது?
கர்நாடகாவின் மைசூரில் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் ஜெயராம்- வேதவள்ளி தம்பதிக்கு மகளாக 1948 ஆம் ஆண்டு பிறந்தார் ஜெயலலிதா. மேல்கோட்டையில் பிறந்தவர்தான், பின்னாளில் சென்னையின் ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வரானார்.
ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க தனது இயற்பெயரான வேதவள்ளியை ‘சந்தியா’ என்று மாற்றிக்கொண்டார் ஜெயலலிதாவின் அம்மா. தனது உறவினர்கள் தமிழகத்தில் இருந்ததால், தனது இரண்டு பிள்ளைகளோடு சென்னை வந்துவிட்டார், அவரது அம்மா வேதவள்ளி. தனது தங்கை வீட்டில் தங்கியிருந்தபடியே சினிமாவில் நடிக்கத்தொடங்கினார். ஜெயலலிதாவையும் நடிக்க வைத்தார்.
அதன்பிறகு தங்களுக்கென்று தனிவீடு வாங்கவேண்டுமென்று நினைத்து சென்னை தேனாம்பேட்டையிலுள்ள போயஸ்கார்டனில் 1967 ஆம் ஆண்டு 1 லட்சத்து முப்பது இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு இடத்தை தனது பெயரில் வாங்கி வீடு கட்டத்துவங்கினார் வேதவள்ளி. ஆனால், இல்லம் முழுமையடைவதற்கு முன்பே, 1971 ஆம் ஆண்டு இறந்துவிடவே, அந்த சொத்து ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது. அம்மாவின் நினைவாக, போயஸ் கார்டன் இல்லத்திற்கு ‘வேதா இல்லம்’ என்று சூட்டினார் ஜெயலலிதா. அதன் கிரகபிராவேதத்தின்போது எல்லோரையும் அழைத்துச்சென்று ஒவ்வொரு அறையாக காட்டி “ எனது அம்மா இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து பார்த்து எனக்காக கட்டினார். ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை” என்றுகாட்டி கண்கலங்கியிருக்கிறார்.
வேதா இல்லத்தின் கிரகபிரவேசம் 1972 ஆம் ஆண்டு நடந்தது. சரியாக 44 ஆண்டுகள் அந்த இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, சோகம் என அனைத்தையும் பார்த்துள்ளது. தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும்தான், அது வேதா இல்லம்; அரசியல்வாதிகளுக்குத்தான் அது சிங்கம் வசிக்கும் குகை; தமிழகத்தின் அதிகார மையம். ஆனால், அந்த அதிகார மையத்திலோ இரும்புப் பெண்மணியான ஜெயலலிதா ஒரு எளிமையான சாதாரண பெண்மணியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
வினி சர்பனா
இதையும் படிக்கலாமே... நடனம் கற்க ரிக்ஷா ஓட்டுநர் மகனுக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த ஹிரித்திக் ரோஷன்.!