``ஓ.பன்னீர்செல்வத்துடனான எனது சந்திப்பு நடந்ததே, இனிவரும் காலங்களில் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான். அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலைச் சந்திப்போம். இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்தே பயணிப்போம்” விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வாயிலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசிய வார்த்தைகள் இவை.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பாஜக முன்னணித் தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தபோது அமமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி, எடப்பாடி தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்கிற செய்திகள் வெளியாகின. பின்னாளில் டிடிவி தினகரனும் அதை ஆமோதிக்கும் விதமாக பல இடங்களில் பேசியிருந்தார். அதேநேர்ம், `அமமுகவைச் சேர்க்காமல், இருக்கின்ற கூட்டணியை வைத்தே ஆட்சியைப் பிடிக்கமுடியும்’ என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தன. அதிமுக கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 75 இடங்களில் மட்டுமே வெல்லமுடிந்தது. ஏற்கெனவே, தினகரன் மட்டும் தனித்துப் போட்டியிட்டபோதே கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் அமமுகவால், அதிமுகவின் வெற்றி பறிபோனது. இந்தநிலையில் தற்போது ஓ.பி.எஸ்ஸும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, தனியாகச் செயல்பட்டு வருகிறார். இருவரும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால், அது அதிமுகவுக்கு எந்தளவுக்கு பின்னடைவை உண்டாக்கும்?
`அதிமுக-வை மீட்பதே லட்சியம்' என்கிற முழக்கத்தோடு 2018, மார்ச் 15-ம் தேதி `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஆனால், கட்சி தொடங்கப்பட்டவுடன் முதலில் சந்தித்த 2019 நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், 2021 சட்டமன்றத் தேர்தலாகட்டும் அந்தக் கட்சியின் சார்பில் ஒருவர்கூட வெற்றி பெறாவிட்டாலும் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினரின் வெற்றியைப் பறித்திருக்கின்றனர்.
``திமுக என்கிற தீயசக்தியை எதிர்ப்பதற்காக 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே விட்டுக்கொடுத்து கூட்டணிவைக்கத் தயாராக இருந்தேன். ஆனால், ஒருசிலரின் ஆணவம், அகங்காரம், ஆட்சி அதிகாரம், பணத்திமிரால் கோட்டைவிட்டார்கள். வருங்காலத்தில் எல்லோரும் திருந்துவார்கள். அமமுக-வைப் பொறுத்தவரை திமுக-வை வீழ்த்த அதிமுக-வுடன் கூட்டணிவைக்கத் தயாராக இருக்கிறோம்''
டிடிவி.தினகரன் (2022 அக்டோபர், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்)
உதாரணமாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றதோடு மட்டுமில்லாமல், சிதம்பரம் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி பறிபோகவும் காரணமாக இருந்தது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வாக்குகளுக்கும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் பெற்ற வாக்குகளுக்கும் இடையில் வெறும் 3,190 வாக்குகள்தான் வித்தியாசம். ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட இளவரசன் 60,000-க்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அதேபோல, ராமநாதரபும் தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,27,122. ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வ.து.ந.ஆனந்த் பெற்ற வாக்குகள் 1,41,806. அந்தத் தேர்தலின்போது, 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடந்தது. அதில், ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றியை அமமுக மடைமாற்றியது.
2021 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டாலும், காரைக்குடி, மயிலாடுதுறை, மன்னார்குடி, சங்கரன்கோவில், சாத்தூர், வாசுதேவநல்லூர், திருவாடனை, நாங்குநேரி, ராஜபாளையம், கந்தர்வக்கோட்டை, பாபநாசம், ஆண்டிப்பட்டி, திருப்போரூர், திருமயம் என கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளைப் பிரித்து வெற்றி பறிபோக காரணமாக இருந்தது.
கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் யார் அமர்ந்தாலும், அதிமுகவின் கோட்டையாக இருந்த, சங்கரன்கோவிலிலேயே இந்தமுறை அதிமுக தோல்வியைத் தழுவியது. அதற்கு, அமமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை, 22,682 வாக்குகளைப் பெற்றது முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் ஜெயலலிதா இருந்த காலத்தில் மிகவும் பலமாக இருந்த அதிமுக, அவரின் மறைவு, அமமுக தொடக்கம் ஆகிய காரணங்களால் தற்போது பலமிழந்து, மிகப்பெரிய அளவில் வெற்றிகளைப் பெறமுடியாமல் இருக்கிறது.
தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும் அ.ம.மு.கவின் வாக்குப்பிரிப்பால் அ.தி.மு.க பல தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்ததைப் பார்க்கமுடிகிறது. கூடுதலாக, தற்போது ஓ.பி.எஸ்ஸுடனும் கைகோர்த்திருக்கிறார் டிடிவி.தினகரன். இந்தநிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன பாதிப்புகளை உண்டாக்கும்?
சிவகங்கை, ராமநாதபுரம் என தென்மாவட்டங்களில் தொடங்கி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி ஆகிய வட மாவட்டங்கள் வரை கிட்டத்தட்ட இருபது தொகுதிகளில், அதிமுகவின் வாக்குவங்கியை, தினகரன் - ஓ.பி.எஸ் கூட்டணி பதம் பார்க்கும் என்றே தெரிகிறது. அதிலும், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், தேனி, திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் ஆகிய தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளில், மிகப்பெரிய அளவில் அதிமுகவின் வெற்றிக்குப் பாதிப்பை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.
அமமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இப்போதுவரை, செந்தில்பாலாஜி, தங்கத்தமிழச் செல்வன் தொடங்கி கே.கே.சிவசாமி, திருச்சி மனோகரன், ஒரத்தநாடு சேகர் என முக்கியத் தலைவர்கள், தினகரனின் படைத்தளபதிகளாக இருந்த பலர் கட்சியைவிட்டு வெளியேறிய போதும், சமுதாய வாக்குகளும், ஓ.பி.எஸ்ஸுடன் கைகோர்த்திருப்பதும் அவருக்குக் கைகொடுக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்...
இந்தநிலையில், இதுகுறித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரத்திடம் பேசினோம்..,
``நிச்சயமாக அதிமுகவுக்கு இதனால் எந்தப் பின்னடைவும் ஏற்படப்போவதில்லை. காரணம், அமமுகவின் வாக்குவங்கி தொடர்ச்சியாக குறைந்துகொண்டேதான் வருகிறது. தினகரனை நம்பிப்போன பல தலைவர்கள், தொண்டர்கள் தற்போது எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்துவருவதைப் பார்க்கிறோம்.
அதேபோல, ஓ.பி.எஸ் அவருடன் சேருவதால் பலம் கூடும் என்று நாங்கள் பார்க்கவில்லை. காரணம், அவரின் சொந்த தொகுதிக்குள்ளேயே, பெருவாரியான தொண்டர்கள் எடப்பாடியாரின் தலைமையேற்று அணிவகுத்து நிற்கிறார்கள். தவிர, தென்மாவட்டங்களில் அதிமுகவுக்குப் பின்னடைவு என்கிற பிம்பத்தை உடைக்கிற வகையில்தான் ஆகஸ்ட் 20-ல் நடைபெறவிருக்கும் மாநாடு, நடைபெறப் போகிறது.
அதேபோல, இவர்கள் எல்லாம் கட்சியை விட்டுப் போனபிறகுதான், 1 கோடியே 70 லட்சம் உறுப்பினர்களை உறுதி செய்திருக்கிறோம். 2 கோடி உறுப்பினர்கள் என்கிற இலக்கை விரைவில் அடையவிருக்கிறோம். ஓ.பி.எஸ் போன்றவர்கள் விலகிச் சென்றதால், எங்களுக்கு வாக்குகள் அதிகமாகத்தான் கிடைக்கும். நாற்பது தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கிறது’’ என்கிறார் அவர்.