”இதனை கேட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள்” - தமிழுக்காக உயிர் துறந்த மூன்றாம் நந்திவர்மனின் கதை!

கலம்பக நூலானது தேவர்களுக்கு 100 , மறையோருக்கு 95 அரசனுக்கு 90 என்ற எண்ணிக்கையும் உண்டு.
நந்தி வர்மனின் கட்டிட கலை
நந்தி வர்மனின் கட்டிட கலைPT

தமிழுக்காக உயிரை விட்ட மூன்றாம் நந்தி வர்மனின் கதை தெரியுமா?

தமில் தமில்(தமிழ்) என்று உயிரை விடும் இக்காலத்து இளைஞர்களின் மத்தியில் தமிழுக்காகவே, தமிழ் மீதுள்ள பற்றினால் தனது உயிரை துறந்த ஒரு அரசன் இருந்தான் அவன் பெயர் நந்தி வர்மன். தன் மீது இயற்றப்பட்ட கலம்பகத்தினால் (கவி) அவன் இறந்தான் என்றால் நம்பமுடிகிறதா?... ஆம்...

அரசர் காலத்தில் அரசனை பற்றி புலவர்கள் புகழ்ந்து கலம்பகங்கள் (கவி) பாடுவார்கள். அரசர்களும் அதைக்கேட்டு மகிழ்ந்து கவிஞர்களுக்கு சன்மானம் வழங்குவது உண்டு. அது போல் தன் மீது இயற்றப்பட்ட கலம்பகத்திற்காக நந்திவர்மன் உயிர் துறந்தான் என்றால் தமிழ் மொழியின் சிறப்பை நாம் இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

சங்ககால பாடல்களில் புலவர்கள் கலம் பாடுதலில் அகத்தினை செய்திகள் குறைவாகவும் புறத்தினை செய்திகள் அதிகமாகவும் பயன்படுத்துவார்கள்.

இதிலும் சில ஒழுங்குமுறை உண்டு, கலம்பக நூலானது தேவர்களுக்கு 100, மறையோருக்கு 95 அரசனுக்கு 90 என்ற எண்ணிக்கையும் உண்டு.

அரசர்கள் மீது பாடப்படும் கலம்பகம் தொண்ணூறு பாடல்களால் பாடப்படுவதுதான் மரபு என்றாலும் நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் இருக்கின்றன.

இந்நூலில் நந்திவர்மனின் தெள்ளாறு வெற்றியை 16 பாடல்கள் சிறப்பாக கூறுகின்றன. கொற்ற வாயில் முற்றும், விரியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்கள் குறித்த செய்திகள் இதில் உள்ளன.

நந்திவர்மனின் வரலாறு

பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மனின் ஆட்சிக்காலமானது கி.பி.846 தொடங்கி 869 வரை என்று சொல்லப்படுகிறது, இவர் தந்தி வர்மனின் மகனாவார்.

காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் தெள்ளாறு என்னும் இடத்தில் பாண்டியர்களுடன் நடந்த போரில் நந்திவர்மன் ராஷ்டகூடர்களுடனும் கங்கணர்களுடனும் கூட்டணி அமைத்துக்கொண்டு பாண்டியர்களை தோற்கடித்தான். வீரத்தில் மட்டும் அல்ல.. கடல் கடந்த வாணிபத்திலும் நந்தி வர்மன் சிறந்து விளங்கினான்.

அதனால் இவனை மக்கள் பல்லவகோன் மல்லை வேந்தன், மயிலை காவலன், காவிரி வளநாடன் என்று அழைத்து வந்தனர். புலவர்கள் இவன் தெள்ளாற்றில் பெற்ற வெற்றி குறித்து நந்தி கலம்பகத்தில் எழுதப்பட்டுள்ளது.

இப்படி பலபேர் இவனை புகழ்ந்து வந்தாலும் இவனை வீழ்த்த ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்தது. அது வேறு யாரும் அல்ல.. அவனது மாற்றான் தாய் சகோதரர்கள் நால்வர் தான். பல்லவ மன்னனின் செல்வாக்கை பார்த்து அவன் மேல் பொறாமைக்கொண்டு அவனை அழிக்க முற்பட்டனர். அதில் ஒருவன் மந்திரவித்தையை கற்று அதன் மூலம் பல்லவ மன்னனை அழிக்க நினைத்தான். அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்தவன், தந்திரத்தைக்கொண்டு அழிக்க முயன்றான் அதுவும் தோல்வியில் முடிந்தது. மற்றொருவன், போர் யுக்தியை கையாண்டான் அதுவும் தோல்வியில் முடியவே... சகோதரனில் கடைசியான காடவர்கோன் என்பவன் தமிழின் பெருமை அறிந்தவன். கவியால் ஒரு மன்னனை அழிக்கவும் முடியும் என்பதை உணர்ந்து தமிழை நன்கு கற்று தேர்ந்து பெரும் புலவரானான். கலம் பாடி நந்தி வர்மனை அழிப்பேன் என்று சபதமும் மேற்கொண்டு எதிர் மறை சொற்களைப்பயன்படுத்தி நந்தி கலம்பகம் ஒன்றை எழுதினான்.

அது தான் நந்திகலம்பகம்.

வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம்

நானுமென் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நந்தயா பரனே... என்று இதில் அறத்தை மேற்கொண்டு 100 பாடல்களை காடவர்கோன் எழுதி முடித்தான்.

இதில் என்ன வேடிக்கை என்றால் நந்திகலம்பகத்தை எழுதி முடித்ததும் அவன் மனதில் உள்ள வன்மமானது மாற்றமடைந்தது. அவன் நந்திவர்மனை பழிவாங்கும் என்னத்தை துறந்து புத்ததுறவியாக மாறிவிடுகிறான். ஆனாலும் இவன் இயற்றிய நந்தி கலம்பத்தை பாடியபடி ஊர் ஊராக பிரயாணம் மேற்கொண்டு காஞ்சிபுரம் வந்த சமயத்தில் “புத்த துறவி ஒருவர் மன்னரை அறம் கொண்ட பாடல்களால் பாடி வருகிறார்” என்ற செய்தி அரசருக்கு எட்டியதும் வீரர்கள் நந்திவர்மனை அரசவைக்கு அழைத்து வந்தனர்.

அந்த புத்த துறவி தனது தமயன் காடவர்கோன் தான் என்பதை தெரிந்துக்கொண்ட நந்தி வர்மன் அவனை வரவேற்று, “தமயனே... நீ தமிழில் புலமைபெற்று கவி படைப்பதில் திறமைவாய்ந்தவன் என்பதை கேள்வி பட்டேன். நீ எனக்காக அறம் கொண்ட கவியும் படைத்திருக்கிறாய் என்பதையும் அறிந்துக்கொண்டேன். நீ இயற்றிய நந்திகலம்பகத்தை பாடவேண்டும்.” என்றான்.

இச்சமயத்தில் காடவர்கோன், “அரசே... அந்நாட்களில் உங்களின் மேல் இருந்த வெறுப்பால் உங்களை பழிவாங்குவதற்காக நான் எழுதிய அறம் தோய்ந்த பாடல் அது... இப்பொழுது நான் புத்த துறவி... உங்களை பழி வாங்கும் என்னமானது என் மனதில் துளியும் இல்லை.” என்றான்.

“உங்களைப்போலவே நான் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டவன். ஒருவரை பழி தீர்க்க தமிழ் கவியால் முடியும் என்று நீங்கள் நம்பினீர்களோ... அதே நம்பிக்கை என்னிடமும் உள்ளது. ஆகவே... கவியினால் நான் உயிர் துறந்தாலும் அதை பெருமையாகவே எண்ணுகிறேன். ஆகவே... நீர் நந்திகலம்பகத்தை பாடி தான் ஆகவேண்டும். இது எனது ஆணை” என்றான்.

அரசனின் ஆணையை மீறலாகாதென்பதால், பணியாட்களிடம் 99 பச்சை ஓலையைக்கொண்ட குடில் அமைக்கச்சொன்னான் காடவர்கோன். அதன்படி பணியாட்கள் 99 குடிலை அமைத்தனர். காடவர்கோன் நந்திகலம்பத்தை பாட ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடல் முடியும் பொழுது ஒவ்வொரு குடிலாக எரிந்தது. 99 பாடல்கள் முடிந்ததும் 99 குடில்களும் எரிந்து சாம்பலாகி விட்டதை அறிந்த நந்தி வர்மன், “தமிழுக்கு இத்தனை பெருமையா.. சரி.. நூறாவது பாடலையும் பாடி விடு” என்றான்.

“அரசே.. நூறாவது பாடல் உங்கள் உயிரை பறிக்கக்கூடிய பாடல். மரக்கட்டைகள் அடுக்கி அதில் நீங்கள் படுத்தப்படி 100 வது பாடலை கேட்கும் சமயத்தில் நெறுப்பானது கட்டைகளையும் எரித்து உங்களையும் எரித்து விடும். ஆகவே... இது வேண்டாம்” என்றான்.

“இதில் என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் 100 வது கவியை கேட்டே ஆகவேண்டும்” என்று அறுதியிட்டு கூறவும், வேறு வழியில்லாமல் காடவர்கோன் அறம் பாடவும் நெறுப்பனது நந்திவர்மனை எரித்ததாக நந்திகலம்பத்தில் கூறியுள்ளது. இது நந்திக்கலம் என்ற இலக்கியத்தின் வாயிலாக நமக்கு கிடைக்கும் சித்திரம். உண்மையில் என்ன நடந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களுக்கே வெளிச்சம். இருப்பினும் இப்படியொரு செய்தி நம்மை சிலிர்க்க வைக்கவே செய்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com