\
oru marunthu virpanai prathinithiyin diary kurippu 8 at hospital and pollution control board
Model imagegoogle gemeni

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 8 | மருத்துவமனையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள்!

பிரச்னை வரும்போது மன உளைச்சலுக்கு உள்ளாகும். காரணம் என்னவென்றால், அரசு இயந்திரத்திற்கும் சாமான்ய குடிமகனுக்கும் உள்ள இடைவெளியும் சிக்கலும்தான், அதில்தான் பொருளாதாரச் சுமை வரும்.
Published on

சென்னையில் ஒரு வேலை விசயமாக நானும் என் நண்பரும் சென்றிருந்தோம். காலை உணவிற்காக ஒரு பிரபல ஹோட்டலில் அமர்ந்தபோது, தட்டில் இலை போடாமல் உணவைப் பரிமாறியிருந்தார்கள். நண்பர், ஒரு திருநெல்வேலிக்காரர், அவரது உறவினர் வாழை இலை வியாபாரம் செய்பவர். வாழை இலை போட்டுச் சாப்பிடும்போது நாம் வாழை இலையில் சாப்பிடுகிறோம் என்ற உணர்வு வருவதில்லை, ஆனால் வெளியூரில் வாழை இலை இல்லாமல் வெறுந்தட்டில் சாப்பிடும்போது அது பற்றிய நினைவு எழுந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த சிப்பந்தி, 'தானும் சங்கரன் கோயில்தான் சார்' என்றார். பிறகு, "நம்மூர்ப் பக்கம்தான் சார், வாழை இலை போட்டு ஹோட்டலுல சாப்பாடுலாம், இங்க மெயின் ஏரியால இருக்குறனால வாழை இலை போட்டா குப்பைகொட்ட இடம் இருக்காது, இந்த ஏரியால மாடுலாம் இருக்காது, அதுனால தட்டுல போட்டுறாங்க" என்றார்.

Model image
Model imagegoogle gemeni

வாழை இலை பேசும்போதே மாடு பற்றியும் அந்தச் சிப்பந்தி சொன்னது எனக்கு மகிழ்வாய் இருந்தது. கிட்டத்தட்ட அது சுயசார்பு பொருளாதரம் பற்றிய நினைவை மீட்டியது. எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அவர் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் இயற்கை சம்பந்தப்பட்டதாக, சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்களாக இருக்கும். பொதுவாகப் புத்தகம் வாசிப்பாளர்களுக்குத் தங்களுடைய நண்பர்கள் என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கிறார்கள் என்ற தேடல் இருக்கும். ஆதலால், அவர் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் மீது தேடலும் ஈர்ப்பும் ஏற்பட்டது. அவருடைய நட்பின் விளைவாக நானும் சுற்றுச்சூழல் எழுத்துகளைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். அவருக்காக நானும், எனக்காக அவரும் சில புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வதுமுண்டு. ஒருமுறை ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி , "இந்தப் புத்தகம் வாசித்திருக்கிறீர்களா? கிடைத்தால் வாங்கிவிடுங்கள்" என்றார். அப்படி அவர் பரிந்துரைத்திருந்த புத்தகம் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் J.C.குமரப்பா பற்றியது.

போராட்ட வீரர் J.C.குமரப்பா

J.C. குமரப்பாவை, வெறுமனே சுதந்திரத்திற்குப் போராடியவர் என்று நிறுத்திவிட முடியாது. தமிழின் ஆகச்சிறந்த பொருளியல் அறிஞராகத் திகழ்ந்தவர். காந்தியடிகளின் கொள்கைகளை உள்வாங்கி ’காந்தியப் பொருளாதாரம்’ என்ற கோட்பாட்டை உருவாக்கியவர். அவரது ’Economy of Permanence’ நிலைத்த பொருளாதாரக் கோட்பாடு அதுவும் இயற்கையைப் பாதிக்காதபடி பொருளாதாரவியலை உலகிற்குக் காண்பித்துக்கொடுத்தவர். மிகச் சுருக்கமாக ஆற்றல் மூலங்களை RENEWABLE , NON RENEWABLE அதாவது புதுப்பிக்க முடிந்தவை, புதுப்பிக்க முடியாதவை எனப் பிரித்து அவற்றை மக்களின் வாழ்வியலுக்குள் நுழைக்க வித்திட்டவர். உதாரணத்திற்குத் தட்டில் சாப்பிடுகிறீர்கள், கரண்டி பயன்படுத்துகிறீர்கள். இரண்டையும் கழுவ வேண்டும் இதே வாழை இலையில் சாப்பிட்டால் தண்ணீர் செலவு மிச்சம், வாழை இலையை மாட்டிற்கு உணவாக்கலாம், மாடு மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கலாம். இப்படியான உதாரணங்களின் மூலம் காந்தியப் பொருளாதாரத்திற்கு வடிவம் தந்தவர். சென்னையில் அந்தச் சிப்பந்தி சொன்னது நான் வாசித்த ஒரு புத்தகத்தை மீட்டெடுத்தது என்றால், ஒரு நிறுவன முதலாளியாக ஹோட்டல் வெளியேற்றும் குப்பைகளை எப்படி பெரிய நகரங்களில் சமாளிக்கிறார்கள் என்ற கேள்வியையும் நான் வாசித்த புத்தகங்கள் எனக்கு மூளையில் கொண்டுவந்தன.

மதுரையில் நான் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்ளும் நடையாளர் கழகத்தில் ஒரு ஹோட்டல் முதலாளியும் வருவதுண்டு. அவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. "இலைய வாசல் முன்னாடி போட்டா , மாடு வந்து டிராஃபிக் பண்ணுது, சரி, மாநகராட்சி குப்பையில போடலம்னா அதுக்குத் தனி வரி கட்டி எடுக்க வேண்டியதிருக்கு" குப்பைக்கு மட்டும் வாரவாரம் இரண்டாயிரம் செலவழிக்கிறேன்" என்றார். இந்தச் செலவினங்களை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்றால், அவரது ஹோட்டல் உணவு விலைப்பட்டியல் அதற்கு நியாயம் சொல்லும்.

"தோசை , 40 ரூபாய் போடுறான்" என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிறோம். அந்த முதலாளி சொன்னார், "30 ரூபாய்க்குத் தோசை தந்தவன்தான் சார் நானும், இப்ப கட்டுபிடி ஆகல, விலைய ஏத்தலாட்டி, நான் காணாம போயிருவேன் " என்றார். மாவு விலை அதிகமாகி அவர் தோசை விலை ஏற்றவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மூலப்பொருள் விலை அதிகமாவதன் காரணம் மட்டுமில்லாமல், நிர்வாகச் செலவு அதிகமாவதும்கூட ஒரு பொருளின் விலை அதிகமாவதற்குக் காரணமாகலாம்.

அரசாங்கத்தின் வழிமுறைகளைச் செயல்முறைப்படுத்த வேண்டும்!

இப்போது என் சிந்தனை ஒரு மருத்துவமனை நிறுவனராக யோசிக்க வைத்தது. சில வாரங்களுக்கு முன் நான் உதாரணம் காட்டிய மருத்துவமனைகளில் உற்பத்தியாகும் சிரிஞ்ச், ஊசி, இரத்தம் தோய்ந்த பஞ்சு போன்ற பயோ மெடிக்கல் கழிவுகளை அள்ள ஆகும் காசை மருத்துவமனைகள் எங்குச் சென்று சரி செய்யும் என்று யோசிக்கத் தோன்றியது. ஒரு வியாபாரியாக ஒரு நிறுவனத்தை கைகாசு போட்டு ஆரம்பிக்கலாம், ஆனால் கைகாசை மறுபடியும் மறுபடியும் 'அதில் போட்டு' வியாபாரம் நடத்த முடியாது. இப்போதிருக்கும் காலகட்டத்தில் நீங்கள் ஒரு நிறுவனத்தை, அது விற்பனை செய்து லாபம் பார்க்கத் திட்டமிட்டாலும் சரி, சேவை செய்யக்கூடிய நிறுவனமாக இருந்தாலும் சரி, நிறுவனத்தை நிறுவும்போதே அரசாங்கத்தின் வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றனவோ, அதைச் செயல்படுத்திவிட வேண்டும்.

ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க திட்டமென்றால் அதற்கு FSSAI உரிமம் எடுக்க வேண்டுமா?- எடுத்துவிட வேண்டும்; கடை இருக்கும் இடத்திற்குரிய நகராட்சியோ, மாநகராட்சியோ அதற்கான உரிமம் பெற்று விட வேண்டும்; GST தேவைப்பட்டால் அதற்குரிய வரம்பிற்குள் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியாய்த் தொழில் செய்ய முடியும். ஆனால், சமூகத்தின் பொதுபுத்தி என்ன செய்யும், பிரச்னை வந்தால் உரிமம் எடுத்துக்கொள்ளலாம், அதுவரை ஓட்டலாம் என்ற நினைப்பில் இருக்கும். பிரச்னை வரும்போது மன உளைச்சலுக்கு உள்ளாகும். காரணம் என்னவென்றால், அரசு இயந்திரத்திற்கும் சாமான்ய குடிமகனுக்கும் உள்ள இடைவெளியும் சிக்கலும்தான், அதில்தான் பொருளாதாரச் சுமை வரும்.

Model image
Model imagegoogle gemeni

இதற்கும் பொருளாதாரச் சுமைக்கும் என்ன சம்பந்தம்?

மருத்துவமனையை எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஒரு MBBS படித்த பட்டதாரி என்று நினைத்துக்கொள்ளுங்கள். MBBS படித்ததுமே ஊருக்கு ஒதுக்குப்புறமாக பத்திற்கு பத்து ஓர் இடத்தைப் பிடித்து பிராக்டிஸ் ஆரம்பிக்க இப்போது முடியாது. முறையாக, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிந்து, பிறகு கிளினிக்கல் எஷ்டபிளிஷ்மென்ட் சட்டப்படி பதிய வேண்டும். அரசாங்கத்திடம் முறையாக நான் அனுமதி வாங்க வேண்டும்.

MBBS சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு கிளினிக் போட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.

இப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நான் அனுமதி வாங்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மருத்துவமனைகள் எதற்காக அனுமதி வாங்க வேண்டுமென்றால், உங்கள் இரத்தம் தோய்ந்த பஞ்சுகள், ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளிவரும் கழிவுகள் மூலம் நீர், காற்று ஆகியவற்றை நாம் மாசுபடுத்துவதால் அரசாங்கத்திடம் அதற்கான கட்டணம் கட்ட வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செல்லுங்கள், ஒவ்வொரு மருத்துவமனையும் இலட்சக்கணக்கில் பணம் கட்டுகிறார்கள். ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் மருத்துவமனைகளுக்கென்று தனி வகைமையே ( PORTAL) கிடையாது.

ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி வாங்க விண்ணப்பிக்கும்போது எந்தெந்த கேள்விகளுக்கு விண்ணப்பத்தில் பதில் எழுதுவீர்களோ, அதைத்தான் எழுதுவீர்கள்.

உதாரணத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதள விண்ணப்பத்தில் உங்கள் தொழிற்சாலையின் விளைபொருட்கள் (PRODUCTS ) பற்றி கேட்டிருப்பார்கள். எல்லா மருத்துவமனைகளும் அந்த இடத்தில் நோயாளிகள் என்று குறிக்கிறார்கள். அதில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என்று வகை பிரித்து வேறு எழுத வேண்டும். மனிதர்களை (விளை)பொருட்களாகத்தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறித்துக்கொள்கிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியமும்; மருத்துவமனையும்

அடுத்ததாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்குப் பணம் கட்ட வேண்டும். மருத்துவமனைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பணம் வசூலிக்கும் சூத்திரம் விசித்திரமானது. முதலில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதற்காக மருத்துவமனைகள் பணம் கட்ட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்கான பதில், வரும் நோயாளிகள் காற்று நீர் ஆகியவற்றை மாசுபடுத்துவதனால். அப்படியானால், எத்தனை நோயாளிகள் வருகிறார்களோ, அதை வைத்துத்தானே பணம் வசூலிக்க முடியும். ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவமனையின் மதிப்பைவைத்து, அதாவது ( BUILDING VALUATION) எந்த இடத்தில் மருத்துவமனை இருக்கிறதோ, அதன் ரூபாய் மதிப்பை ஆடிட்டர் மூலம் பெற்று அந்தத் தொகைக்கான கட்டணமாக வாரியம் வசூலிக்கிறது.

model image
model imagegoogle gemeni

உதாரணத்திற்கு, என் தாத்தா ஒரு பெரிய டாக்டராக இருந்தவர் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவர் காலத்தில் இத்தனை டாக்டர்கள் போட்டிக்கு இல்லை என்பதால் அவருக்கு நல்ல ப்ராக்டிஸ், மதுரையின் மத்தியில் ஒரு ஹாஸ்பிட்டல் கட்டி வாழ்ந்து முடித்துவிட்டார். அவரது பேரனாகிய நான் இப்போது அந்த ஹாஸ்பிட்டலை நிர்வகிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், தாத்தா அளவிற்கு ஓஹோ என்று இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு வைத்துச் சமாளிக்கிறேன். இதே, என் நண்பன் ஊருக்கு வெளியே ஒரு ஹாஸ்பிட்டல் கட்டி அதிகமான நோயாளிகள் வந்து போகுமளவிற்கு நடத்துகிறான். இப்போது அவன் என்னைவிட குறைவான கட்டணத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்குக் கட்டுவான், காரணம் ஊருக்கு வெளியே கட்டட மதிப்பு குறைவு, ஊருக்கு மத்தியில் கட்டட மதிப்பு அதிகம். இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்பீர்கள், "மாசு ஆக்குவதற்குத்தான் கட்டணமென்றால் அதிக நோயாளிகள் வருமிடத்திற்குத்தானே அதிக கட்டணம் வசூலிக்க முடியும் என்று?" இந்தப் பேச்செல்லாம் இங்கு எடுபடாது. அதுதான் இங்கு நிலைமை. இதனால் என்ன ஆகும், பாதிப்பு பொதுமக்களுக்குத்தான் நிகழும்.

இதற்கும் பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்பீர்கள்? மருத்துவமனைகள் இந்தச் செலவினங்களை எல்லாம் எங்குப் போய்க் கழிப்பார்கள்? வரும் நோயாளிகள் தலையில்தான் கட்டுவார்கள். வேறு வழியில்லை. அநேக இரண்டாம் தலைமுறை மருத்துவர்கள் தங்கள் தாத்தா, அப்பா காலத்து மருத்துவமனைகளைவிட்டு வெளியேறி கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு ஓடுவதற்குக் காரணம் இந்த மாதிரி சிக்கலான பிரச்னைகள்தான்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டும் இல்லை, சானிட்டரி இன்ஸ்பெக்டர் துறையிலும் சான்றிதழ் வாங்க வேண்டும், மாநகராட்சியில் உரிமம் வாங்க வேண்டும், தீயணைப்புத் துறையினரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும், தொழிலாளர் நல வாரியம் வந்து போவார்கள். ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒவ்வோர் அதிகாரியும் ’வந்து போகும்’ போது சில செலவினங்கள் இல்லாமலா இருக்கும். அதையும் நீங்கள் கணக்கிட வேண்டும்.

தீபாவளி, பொங்கல் படிகளையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு மருத்துவர் இந்தச் செலவுகளை எல்லாம் ஒரு நோட்டில் குறித்துவைக்கும் பழக்கமுள்ளவர். ஒருநாள் இதுபற்றிப் பேச்சு எழுந்தபோது, நோட்டைப் பார்த்து எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு கட்டணம் கட்டியிருக்கிறார், அதற்கான ’கூடுதல் செலவு’ இதைக்கூட அவர் செலவாக எழுதி வைத்ததைப் பகிர்ந்தார்.

model image
model imagechat gpt

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, " இது சொந்தக் கட்டடம் பழனிக்குமார், அதுனால கிளினிக் நடத்திட்டு இருக்கேன், என் பையன்லாம் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை பார்க்கத் தேவையில்லை, கார்ப்பரேட் ஹாஸ்பிடல்க்கு போயிருனு, நானே சொல்லிட்டேன், இப்ப இருக்குற நிலைமைக்கு இந்த கிளினிக்க" ஒரு எலைட் சலூன் கடைக்கோ, ப்யூட்டி பார்லருக்கோ, ஹோட்டலுக்கோ வாடகைக்கு விட்டாக்கூட நல்ல வாடகை வரும், பிரச்னை இருக்காதுலனு நினைக்கிற இடத்துக்கு வந்துட்டேன்' என்றார்.

தனக்கு இருக்கும் பிரச்னைகளை அடுத்தவரிடம் பகிர முடியாமல் இருப்பவர்கள் விரக்தியின் எல்லைக்குச் செல்கிறார்கள். ’குடும்ப மருத்துவர்கள்’ தத்துவம் தேய்ந்து போவதற்கு மருத்துவமனைகள் விரக்தியை நோக்கிச் செல்வதுகூடக் காரணமாயிருக்கலாம்.

இணைந்திருங்கள்...இன்னும் சுவாரஸ்ய விரக்திகளை அலசலாம்.

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 7 | மனஅழுத்தத்திலும் தீர்வுகள் தரும் மகிழ்ச்சி!

(டைரிக்குறிப்பு தொடரும்..)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com