\
oru marunthu virpanai prathinithiyin diary kurippu 7 at medical rep job
model imagegoogle gemeni

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 7 | மனஅழுத்தத்திலும் தீர்வுகள் தரும் மகிழ்ச்சி!

வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரியான தருணங்களைத் தருவதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வதும், தகவமைத்துக்கொள்வதும் வாழ்வின் ஓர் அடிப்படை. அதேபோல் மகிழ்ச்சி என்பதும் அவரவர் புரிதலைப் பொறுத்தது.
Published on

"ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு" தொடரைத் தொடர்ந்து வாசித்துவரும் வாசக நண்பரொருவர் இத்தொடர் பற்றித் தன் கருத்துகளைத் தெரிவித்தார். அதில் ஒரு விமர்சனமும் இருந்தது. தொடர் முழுக்க குடும்ப மருத்துவர் பற்றியும் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் பற்றியுமென எல்லாம் சீரியஸான கட்டுரைகளாக இருக்கின்றன. இந்தத் தொடர் முழுக்க இப்படியே போய்விடுமா மற்றும் மெடிக்கல் ரெப் வாழ்க்கையில் மாத்திரை, மருத்துவர், டார்கெட் இப்படித்தான் இருக்குமா, சந்தோசம்லாம் எதுவும் இருக்காதா?" என்று கேட்டிருந்தார்.

எல்லாத் துறைகளிலும் ஓர் ஏற்ற இறக்கம் இருக்கத்தானே செய்யும். மேலும் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட இயல்பிற்கேற்றபடி உணர்ந்துகொள்வது.

வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரியான தருணங்களைத் தருவதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வதும், தகவமைத்துக்கொள்வதும் வாழ்வின் ஓர் அடிப்படை. அதேபோல் மகிழ்ச்சி என்பதும் அவரவர் புரிதலைப் பொறுத்தது.

கிரேக்க தத்துவியலாளர் அரிஸ்டாட்டில், மகிழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது EUDAIMONIA என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். வாழ்வில் மகிழ்ச்சி பற்றிய தீர்க்கமான உளவியல் சார்ந்த அர்த்தத்தை அந்தச் சொல் விளக்கும். நிலைத்தன்மை இல்லாத மகிழ்ச்சியை விடுத்து நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும் அர்த்தத்துடன் கூடிய வாழ்வு, வாழ்தலுக்கான நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல், பரிபூரண வாழ்வு, தன் உணர்வுகளின் மூலம் தொடர்ந்து வளர்ச்சியை அடைதல். இது எல்லாம் மகிழ்ச்சி தரும் என்பதன் சுருக்கம்தான் அந்த EUDAIMONIC.

என்னதான் மாதாந்திர இலக்கு, மன அழுத்தம், உடல் அழுத்தம் இருந்தாலும் மெடிக்கல் ரெப் வேலை மற்ற வேலைகளைப்போல உன்னதமான மகிழ்வைத் தரக்கூடிய வேலைதான். சிறு சிறு சந்தோசங்கள் பெரும் மகிழ்வாக பிற்காலத்தில் ஞாபகத்தில் இருப்பவைதான்.

கல்லூரி முடித்து இந்தத் துறைக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. ஒரு நிறுவனத்தில் மெடிக்கல் ரெப்பாக ஒரு மாத காலமாக வேலை பார்த்திருந்த சமயம்.

மறுநாள் மண்டல மேலாளர்(Regional Manager) மதுரைக்கு வருகை தருகிறார் என்ற செய்தியோடு இரவு முடிந்திருந்தது. அடுத்த நாள் காலை ஆறு மணிக்குலாம் மண்டல மேலாளர் அழைத்தார். மிகவும் உவப்பாக, "குட் மார்னிங் சார், மதுரை வந்தாச்சா?" என்று உல்லாசமாகக் கேட்டிருந்தேன். அவரிடம் போனில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தபோதே, லைனில் என் சீனியர் அழைத்துக்கொண்டிருந்தது, மனதில் ஏதோ சிக்கலான தருணமாக இருக்குமோ என்று பீதியைக் கிளப்பிக்கொண்டிருந்தது. மண்டல மேலாளர் என்பது கிட்டத்தட்ட நிறுவனத்தின் அதிகாரமட்டத்திலிருக்கும் ஒரு மாநில பொறுப்பில் இருக்கும் பதவி. அதனால் பயம் கலந்த மரியாதை வருவது இயல்பு.

மண்டல மேலாளர் , "மதுரை வந்தது இருக்கட்டும், மதுரை வந்து சேர்றதுக்கு முன்னாடி பிரச்னை வந்திருச்சேப்பா" எனப் பொடி வைத்தார்.

google gemeni

"என்னாச்சு சார்"

ஒரு ஏஜென்ஸி பெயர் சொல்லி, ”இது உன் ஏரியாலத்தான இருக்கு, நீதான பாக்குற" என்றார். சில ஊர்களும், அந்த ஊர்களுக்கான விநியோகஸ்தர்களையும் இப்படி மெடிக்கல் ரெப்களின் பொறுப்பில் பிரித்துக்கொடுப்பார்கள், அந்த விற்பனையும், அவர்கள் மூலம் நிறுவனத்திற்குப் பணமும் சென்றடையும்வரை நாம்தான் அதைக் கவனிக்க வேண்டும்.

மண்டல மேலாளர் சென்னையிலிருந்து மதுரைக்குக் காலை பாண்டியனில் வந்திறங்குவதற்கு முன்பே, இரவில் மும்பையிலிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. அதில் என் கவனிப்பில் இருந்த மருந்து விநியோகஸ்தர் ஒரு செக் கை 'பவுன்ஸ்'( bounce) செய்துவிட்டார். அதாவது எங்கள் நிறுவனத்திடம் வாங்கிய மருந்துகளுக்கான பணமாக அவர் காசோலை கொடுத்திருந்தார். அதை வங்கியில் செலுத்தியபோது அது பணமாகாமல் திரும்பிவிட்டது.

நிறுவனம் அதை இப்படிச் சந்தேகத்திற்குள்ளாக்கியது,

'ஒரு வேளை அந்தப் பகுதியில் வேலை பார்க்கும் மெடிக்கல் ரெப் அதாவது, நான், அந்த விநியோகஸ்தருக்குத் தெரியாமல் டார்கெட் பிரஷ்ஷர் காரணமாக அவரின் அனுமதியின்றி மருந்துகளை அனுப்பிவிட்டானா?(technical term - automatic dispatch)

இல்லையென்றால், அந்தப் பகுதி மெடிக்கல் ரெப் அதாவது, நான், அந்த விநியோகஸ்தருக்குச் சரியான ஆர்டர் எடுத்துத்தந்து மருந்துகளை விற்காமல் அவை தேங்கிவிட்டதனால், கோபப்பட்டு செக்கை பவுன்ஸ் செய்துவிட்டாரா?

இல்லையென்றால், அந்தப் பகுதி மெடிக்கல் ரெப், அதாவது நான் அந்த வினியோகஸ்தரைப் போய்ப் பார்க்கவில்லையா?சுருக்கமாக, நான் வேலைக்குப் போகிறேனா இல்லையா என்பதுதான் சந்தேகம்.

ஒன்றை மட்டும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்- இந்தச் சமூகம் கெட்டவனை ஒரே நொடியில் இவன் கெட்டவன் என்று தீர்மானித்துவிடும். பிறகு அவனை அந்தச் சோதனைக்கு உட்படுத்தாது. ஆனால், நல்லவனை அனுதினமும் ஏன் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இவன் நல்லவன்தானா என்று சோதனைக்கு உட்படுத்தும். ஒவ்வொரு சோதனையிலும் இவன் நல்லவன்தான் என்ற சான்றிதழ் சமூகத்திற்குத் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

google gemeni

மண்டல மேலாளர் அத்தனைச் சந்தேகங்களுடன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார், நான் வேலைக்குப் போகிறேன். என்னிடம் தவறில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். அன்று அந்த ஊருக்குப் போய் அந்த விநியோகஸ்தரைப் பார்த்துவிடலாம் என்று முடிவாகிவிட்டது. காலை எட்டு மணிக்குலாம் மாட்டுத்தாவணியில் பேருந்திற்குள் அமர்ந்திருந்தோம். நிர்வாகம் கடுமையான சொற்களால் மெயில் அனுப்பியிருந்ததை வாசித்துக்காட்டினார். ஏழுமணிக்கு அவருக்கு மேல் இருக்கும் தென்னிந்திய மேலாளர் அழைத்துப் பேசியதைச் சுட்டிக்காட்டினார். நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போதே நிர்வாக மேலாளர் பேசினார். ஒட்டுமொத்த அழுத்தமும் என் மண்டல மேலாளருக்கு இறங்க இறங்க, அதன் தாக்கம் எனக்கும் இறங்கிக்கொண்டிருந்தது.

ஒட்டுமொத்தமாக, "இது என் தவறு" என்பதுபோல் என்னைச் சுற்றி ஒரு வளையம் உருவாவதை உணர்ந்தேன். அதுவே எனக்கு அழுத்தத்தைத் தந்தது. பேருந்தின் ஜன்னலோரமாக அமர்ந்த நான் இடப்பக்கம் திரும்பி மேலாளரைப் பார்க்கவில்லை. ஜன்னல் வழியாக எதை எதையெல்லாம் பார்த்தேன் என்றுகூட நினைவிலில்லை. வழக்கமாக எதையெல்லாம் ரசிப்பேனோ, அது எல்லாம்கூட என் கண்ணுக்குப் புலனாகவில்லை.

அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் நாங்கள் இறங்கும்போது காலை மணி பத்தரை. "இப்ப என்ன ப்ளான்" என்று கேட்டார் மண்டல மேலாளர். வந்த முக்கியமான வேலை அந்த விநியோகஸ்தரைப் பார்த்து வேறொரு காசோலை வாங்குவதுதான். ஆனால், அது மட்டும் போதாது, நான் அங்கு நன்றாக வேலை பார்த்திருக்கிறேன் என்பதையும் காட்ட வேண்டும்.

"அந்த ஸ்டாக்கிஸ்ட் போவோம் சார், அவர்ட்ட என்னனு விசாரிப்போம், இன்னொரு செக் கேட்போம், எப்படியும் அரை மணி நேரம் கழிச்சுவானு சொல்வார், பக்கத்துல மூன்று டாக்டர்கள் இருக்காங்க; ஒரு மணி நேரம் ஆயிரும்.. போய்ப் பார்த்திடலாம், அப்புறம் இரண்டு கடைகள் இருக்கு, அங்கயும் போகலாம், அப்புறம் இவர்ட்ட செக் வாங்க வருவோம்" என்று அன்றைய தினம் முழுமைக்கும் ப்ளான் சொன்னேன்.

google gemeni

நான் சொல்லச் சொல்ல உற்றுப்பார்த்துக்கொண்டே கேட்டவர், "சரி, நான் ஒரு ப்ளான் சொல்றேன், கேக்குறியா?" என்றார்.

எனக்குப் பதற்றம் கூடியபடி "சரிங்க சார், சொல்லுங்க" என்றேன். "முதல்ல ஒரு டீய போடுவோம், அப்புறம் ஒரு தம்ம போடுவோம், நீ தம் அடிப்பியா?" என்றார்.

"இல்ல சார், வெறும் டீ மட்டும்தான்"

"சரி, நீ ஒரு டீய மட்டும் போடு, நான் டீயும் தம்மும் போடுறேன்," அப்புறம் அந்த ********** ஸ்டாக்கிஸ்ட போயிப் பார்ப்போம் , அப்புறமா இன்னொரு தம்ம போடுறேன், நீ ஒரு டீய போடு, ஓகேயா?" என்றார்.

கொஞ்சம் மனநிலை இலகுவாக மாறியது.

நேராக அந்த விநியோகஸ்தர் கடைக்குச் சென்றோம். ஒரு மணி நேரம் காக்க வைத்தாலும் புது 'செக்'(cheque) கிடைத்தது, நான் வேலை பார்த்திருந்ததை மண்டல மேலாளர் புரிந்துகொண்டார்.

எதிரே இருப்பவர்கள் நல்ல புரிதலோடு இருந்தால், நிரூபிக்கும் வேலைகள் சமயத்தில் இலகுவாகி விடுகின்றன.

மறுபடியும் மதுரை நோக்கிப் பயணிக்கும்போது சூழ்நிலைகள் மோசமாக இருந்ததையும், பதற்றத்துடன் வந்திறங்கியதையும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

நாம் பதற்றமடைவதால் மோசமான சூழ்நிலைகள் நல்ல நிலைமைக்கு மாறிவிடுவதில்லை, மேலும் மோசமான சூழ்நிலையைக் கையாளும் விதத்திலேயே இலகுவான சூழ்நிலையாக மாற்றிவிடலாம் என்பதெல்லாம் இதுபோன்ற அனுபவங்கள்தான் கற்றுக்கொடுக்கும். மேலாளர் சொன்னார், "அவன் செக் பவுன்ஸ் பண்ணதுக்கு நம்ம என்னபண்ண முடியும்? நம்ம கைய மீறி நடக்குறதுக்குலாம் நம்ம டென்ஷன் ஆகக்கூடாது" என்றார். (சூழ்நிலைக்குள் இருந்துகொண்டு யோசிப்பதற்கும், சூழ்நிலையை வெளியிலிருந்து கவனித்து அதற்கான தீர்வை யோசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அவரது குரல் சொல்லிக்கொடுத்தது)

மாலை ஆறு மணிக்குலாம் மதுரை வந்தடைந்தோம். ஏழு மணிக்கு அவர் தங்கியிருக்கும் "விடுதிக்கு வா பேசணும் "என்று கிளம்பிவிட்டார். எனக்குப் பதற்றம் குறைந்திருந்தாலும், அந்தக் காசோலை விசயத்தில் என் மீதுதான் தப்பு என்ற குற்றவுணர்வு எனக்குள் கொஞ்சம் இருந்தது. "ஏழு மணிக்கு வா பேசணும்" என்றதும் அந்தக் குற்றவுணர்வு இன்னும் அதிகமாகிக்கொண்டது. ஏழுமணிக்குலாம் அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றால், அங்கு ஏற்கெனவே என்னுடன் வேலை பார்க்கும் சீனியர்கள் வந்திருந்தனர்.

Model image
Model imagechat gpt

அவரது அறையில் நான்கு பேரும் அமர்ந்து , ஒரு மணி நேரம் அந்த மாத விற்பனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சில செயல்பாடுகள் பற்றி அவர் அறிவுரை வழங்கினார். இருந்தாலும் அன்று செக் வாங்கியதையும் அவர் பவுன்ஸ் பண்ணுமளவிற்குப் போனதைப் பற்றியும் எப்போது கேட்பார் என்று கலக்கத்துடன் அமர்ந்திருந்தேன்.

மணி எட்டரையைத் தொட்டது. மேலாளர் என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு, சீனியர் ஒருவரைப் பார்த்து, "என்ன, ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டார், அவரும் சரி என்றார். எனக்குக் குழப்பமாக இருந்தது.

சீனியர். தான் கொண்டுவந்திருந்த ஒரு பையில் இருந்து தேன் நிறத்தில் திரவம் நிரம்பியிருக்கும் ஒரு வெளிநாட்டு மது போத்தலை வெளியில் எடுத்தார். தங்க நிறத்தில் சீல் வைக்கப்பட்டு கருப்பு ஸ்டிக்கர் சுற்றியிருந்தது. அந்தப் பாட்டிலைப் பார்த்ததும் மேலாளரின் முகத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் தெரிந்தன.

நீங்கள் ரோலர் கோஸ்டர் (roller coaster) வகையான ராட்டினத்தில் போனதுண்டா? வேகமாக மேலே உயரமாய்ச் செல்லும், போன வேகத்தில் அதிவேகமாக கீழே விழுவதுபோல் இறங்கும், மனம் கிட்டத்தட்ட அந்த உணர்வைத்தான் அனுபவித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கை எப்போதும் சூழ்நிலைகளால் ஆனது. எந்தச் சூழ்நிலையில் இருக்கிறோமோ, அந்தச் சூழ்நிலைக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிடுவதே அந்தந்த நிமிட வாழ்க்கை. அந்தந்த நிமிடத்திற்கு நாம் செய்யும் அறம்.

"என்ன பழனி, திருதிருனு முழிக்கிற, தண்ணீ அடிப்பேல" என்றார்

"மாட்டேன் சார்"

"அட.. இப்ப வேலை நேரம்லாம் முடிஞ்சிருச்சு, இப்ப நம்ம நண்பர்கள், இதுலாம் சகஜம், சும்மா கூச்சப்படக்கூடாது, எடுத்துக்கங்க" என்றார்

" இல்ல சார், உண்மையிலேயே ஆல்கஹால் எடுக்கமாட்டேன்"

"அப்படியா.....சிகரெட்?"

"அதுவும் மாட்டேன் சார்"

"ட்டீ டோட்டலரா?" என்றார், அப்போது அதற்கான அர்த்தம்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.. எனக்கு டீ சாப்பிடுவியா என்று கேட்டது.

chat gpt

"ஹங், டீ சாப்பிடுவேன் சார்" என்றேன்.

அனைவரும் சிரித்தார்கள். சீனியர் அண்ணன், "அது இல்லப்பா, தம்மு, தண்ணீ, பாக்கு எதுவும் போடமாட்டியா?" என்று கேட்டார்

" ச்ச.. ச்ச இல்ல சார், மாட்டேன்" என்றேன்.

உடனே, "அடப்பாவி, தெரிஞ்சிருந்தா உன்னைய வேலைக்கே எடுத்திருக்க மாட்டேனே" என்றார்.

காலையில் இருந்த பதற்றம் மாலையில் இல்லவே இல்லை.

ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கத்தானே செய்யும். தீர்வுகள்தான் மகிழ்ச்சி. சிலருக்குத் தீர்வுகளை நோக்கிச் செல்லுதலே மகிழ்ச்சி. மற்றபடி எல்லா வேலையிலும் மகிழ்ச்சி உண்டு மகிழ்ச்சியாய் அதைச் செய்வதால். நிறைய மகிழ்ச்சிகள் வரவிருக்கின்றன..

இதன் முந்தைய பகுதியைப் படிக்க: ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 6 | தனி மருத்துவர் கிளினிக்கை மூடக் காரணம்!

(டைரிக்குறிப்பு தொடரும்..)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com