\
oru marunthu virpanai prathinithiyin diary kurippu 5 at Decline of Family Doctors
Model Imagechat gpt

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 5 | தோயும் குடும்ப மருத்துவர் தத்துவம்!

இணையத்தில் பேசுபொருளாக இல்லை என்றால், இந்தக் காலகட்டத்தில் எதற்கும் மதிப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. அதுதான் ஜென்சி தலைமுறையின் வழக்கமாக உள்ளது.
Published on

குறையும் ’குடும்ப மருத்துவர்’ தத்துவம்

கடந்த நான்கு வாரங்களாக ’குடும்ப மருத்துவர்’ தத்துவம் தோய்ந்துகொண்டே வருகிறது என்பதைக் குறிப்பிட்டதும் சில நண்பர்கள் என்னை அழைத்து அதற்கான காரணங்களைக் கேட்டனர். இவைதான் காரணங்கள் என்று எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால், எனக்குச் சில அனுமானங்கள் உண்டு.

1) எனக்குத் தெரிந்த அண்ணன் ஒருவர் வெளியூரிலிருந்து மதுரை வந்திருக்கும் தன் சொந்தக்காரர்கள் ஏழெட்டுப் பேரை மதிய உணவிற்கு அழைத்துச் செல்லும்பொருட்டு, எங்கள் பகுதியில் நல்ல உணவகம் ஒன்றைப் பரிந்துரைக்கச் சொன்னார். நானும் ஓர் உணவகத்தின் பெயரைப் பரிந்துரைத்திருந்தேன்.

ஒருவாரம் கழித்து அந்த அண்ணனை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது, அன்றைய தினம் எப்படி இருந்தது, நான் பரிந்துரைத்த உணவக உணவு எப்படி இருந்தது, உறவினர்களுக்குப் பிடித்திருந்ததா என்று கேட்டேன்.

oru marunthu virpanai prathinithiyin diary kurippu 5 at Decline of Family Doctors
google gemeni

ஜென்சி தலைமுறையின் வழக்கம்

"ஆமா பழனி, உன்ட கேட்டேன், ஆனா அந்த ஹோட்டலுக்குப் போகல, என் பையன் அங்கிருந்து (ஆஸ்திரேலியா) ஒரு ஹோட்டல நெட்ல பாத்து அது நல்லாருக்கு, அங்க போங்கனான், அதுனால அங்க போயிட்டோம். போனா, அங்க அந்தளவுக்கு ஒண்ணுமில்லப்பா, சுமாராத்தான் இருந்துச்சு... எனக்கு அங்க சாப்டு வயித்துவலி வந்ததுதான் மிச்சம், மறுநாள் ஓமத்தண்ணீயும், இளநீயும் குடிச்சேன்" என்றவாறு தன் அனுபவத்தை விவரித்தார்.

நடந்தது என்னவென்றால், நான் பரிந்துரைத்த உணவகத்தை இவர், ஆஸ்திரேலியாவிலிருக்கும் தன் மகனிடம் கூறியிருக்கிறார். அவர் இணையத்தில் நான் பரிந்துரைக்கும் ஹோட்டலுக்கான ரிவ்யூக்களைச் சோதித்திருக்கிறார். அந்த ஹோட்டல் பாரம்பரியமாக சிறப்பான சேவையுடன் செயல்படும் ஹோட்டலாக இருந்தாலும், இணையத்தில் அவர்களை ப்ரோமோட் செய்வது பற்றி அவர்கள் கவலைபட்டதாகத் தெரியவில்லை. இணையத்தில் பேசுபொருளாக இல்லை என்றால், இந்தக் காலகட்டத்தில் எதற்கும் மதிப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. அதுதான் ஜென்சி தலைமுறையின் வழக்கமாக உள்ளது. ஆதலால் அப்பா பரிந்துரைத்த ஹோட்டல் மீது மகனுக்குப் பெரிய அளவில் மதிப்பீடுகள் இல்லை. அவரே இணையத்தில் நல்ல ரிவ்யூ இருக்கும் ஹோட்டலைத் தேடி அதைப் பரிந்துரைத்து அங்குப் போயிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் அதிமுக்கியமாக தேவை!

இந்த ஒரு நிகழ்வை நான் மேற்கொள்ளும் வணிக மேம்பாட்டிற்கான கூட்டங்களிலும், மருத்துவர்களுக்கிடையே சிறப்பு அழைப்பாளராகச் செல்லும் கூட்டங்களிலும் எடுத்துக்காட்டாகக் கூறுவதுண்டு.

காரணம் ஒன்று: நீங்கள் எவ்வளவு பாரம்பரியமிக்கவராக இருந்தாலும் சரி, நாங்கள் எங்கள் தாத்தா காலத்திலிருந்து ஹோட்டல் நடத்திக்கொண்டிருக்கிறோம், அரிசிக்கடை வைத்திருக்கிறோம், மருத்துவமனை வைத்திருக்கிறோம் என்று கூறினாலும், இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாளர்களைச் சென்று சேரும் ஊடகங்களைப் பயன்படுத்தாவிட்டால், உங்களால் வணிகரீதியாக தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்க முடியாது.

காரணம் இரண்டு: மருத்துவமனைகளில் நடக்கும் கூட்டங்களில் இதைச் சொல்வதுண்டு. எவ்வளவு சிறப்பான நேர்த்தியான சேவை செய்தாலும், அதை வெளிப்படுத்தும் திறன் மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் இன்றைய காலகட்டத்தில் அதிமுக்கியமாக தேவை.

Model image
Model imagechat gpt

நாகரிக வளர்ச்சியின் உச்சம்

இன்றைய தலைமுறையினர் ஒரு பரோட்டா கடையைக்கூட கூகுளில் ரிவ்யூ பார்த்துச் செல்கிறார்கள். அங்கு பரோட்டா கடைக்காரனே தன் நண்பர்களை வைத்து ரிவ்யூ எழுதிப்போட்டிருப்பான் என்றுகூட தெரியாத வெள்ளந்திகளை ஒன்றும் செய்ய முடியாது. பிரச்னை அது அல்ல. ஒரு பரோட்டா கடையைத் தேர்ந்தெடுப்பதைப்போலதான் மருத்துவமனையையும் இன்றைய தலைமுறை தேர்ந்தெடுக்கிறது.

உண்மை என்னவென்றால், நல்ல ரிவ்யூ போடவில்லை என்பதாலோ, இணையத்தில் ஈடுபாடாக இல்லை என்பதாலோ மருத்துவமனையைத் தரம் தாழ்ந்த மருத்துவமனை என்று மதிப்பிட முடியாது. ஆனால் ஜென்சி தலைமுறை எதற்கெடுத்தாலும் இணையத்தைக் கேட்க ஆரம்பித்திருப்பது நாகரிக வளர்ச்சியின் உச்சம் அல்லது அபத்தம். இல்லை, இரண்டுமேகூட இருக்கலாம்.

இங்கிருந்து ’குடும்ப மருத்துவர்’ தத்துவம் தோய்ந்ததற்கு என் அனுமானங்கள் ஆரம்பமாகின்றன. "இப்போது இருக்கும் தலைமுறை தன் தாய் தந்தையரைவிட நாகரிக, அறிவு சார், கல்விசார், தொழில் நுட்பம் சார் வளர்ச்சிகளை எளிதாக அடைந்துவிடுவதால், தன் பெற்றோர் கூறும் சில விசயங்களில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. அதிலொன்று அவர்கள் காண்பிக்கும் மருத்துவரும், மருத்துவமனையும் இருக்கலாம்."

2. "எனக்குச் சின்ன காய்ச்சல்னாலும், என் பையன் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைக்குத்தான் போகச்சொல்றான்" என்று பெருமையாகக் கூறும் தாய் தந்தையர் உண்டு. ’ஏன்’ என்று நீங்கள் அலசினால், ஒன்று காப்பீட்டுத் திட்டம் அங்குதான் இருக்கும் என்று சொல்வார்கள். இல்லை என்றால், நாம் வெளியூரில் இருக்கும்போது அப்பா அம்மாவிற்கு நல்ல மருத்துவமனையைப் பரிந்துரைக்க வேண்டும் என்ற அக்கறையாய்கூட இருக்கலாம். அவர்கள் நல்ல மருத்துவமனை என்று நினைப்பது பல ஊர்களில் கடை விரித்திருக்கும் மருத்துவமனை கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாகப்படலாம்.

Model image
Model imagechat gpt

என் இரண்டாவது அனுமானம் இப்படி இருக்கிறது,"மகன்/மகள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வெளியூரில் வேலை பார்த்து, சொந்த ஊரில் அப்பா அம்மாவிற்கு உடல் நலப் பிரச்னை வந்தால் தன் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் காப்பீட்டுத் திட்டங்களுக்காக சின்ன சின்ன பிரச்னைகளுக்குக் கார்ப்பரேட் மருத்துவமனைகளை அணுகுதல்.

மனிதர்கள் தவறான படிப்பினைக்கு ஆளாக வாய்ப்பு

3. இப்போது நவ நாகரிக வளர்ச்சியில் உலகம் உங்கள் கைகளுக்குள் வந்துவிடுகிறது. CHAT GPT, GEMINI போன்ற செயற்கை நுண்ணறிவு சாதனங்களும் வளர்ச்சி பெற்று நீங்கள் எந்தத் தலைப்பைக் கேட்டாலும் அவைத் தரவுகளைப் பெற்றுத்தருகின்றன. இதனால் உங்களால் எந்தத் துறையிலும் தன்னிச்சையாக செய்திகளை, தரவுகளை, கல்வியறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு யாராவது வழி நடத்த வேண்டும் என்ற வரம்புகளை மீறி சில சமயங்களில் மனிதர்கள் தவறான படிப்பினைக்கு ஆளாக நேரிட வாய்ப்புகள் இருக்கின்றன .

Model image
Model imagechag gpt

எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் அழைத்து, ”அவரது ஊரில் சிறந்த காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் யாரையாவது பரிந்துரைக்க முடியுமா” என்று கேட்டார். ”ஏன் ஐயா எதுவும் பிரச்னையா என்று கேட்டால், "ஆமா இரண்டு நாளா தலவலி" என்றார். தலைவலிக்கும் காது மூக்கு தொண்டை க்கும் என்ன சம்பந்தமாக இருக்க முடியும், ஒருவேளை ஒற்றைத் தலைவலி (Migraine)யாக இருக்குமோ என்று என் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன். அவருக்கு அப்படித் தொந்தரவும் இல்லை. ஐடியில் வேலை பார்க்கும் அவரது மகளிடம் தனக்கு இரண்டு நாட்களாக தலைவலி என்று சொல்லியிருக்கிறார், அதற்குத்தான் அவரது மகள் ஒரு ENT மருத்துவரைப் பார்க்கச்சொன்னாராம்.

எனக்குத் தெரிந்த ஒரு காது மூக்கு தொண்டை மருத்துவரைப் பரிந்துரைத்துவிட்டேன், இருந்தாலும் இது எப்படிச் சாத்தியம் என்று எனக்குச் சந்தேகம்? அலைபேசியைத் திறந்து கூகுளிடம் "எனக்கு இரண்டு நாட்களாக தலைவலி. என்ன என்ன காரணங்களாக இருக்கலாம்?" என்று கேட்டுப்பார்த்தேன். கூகுளாண்டவர் மூன்று காரணங்களைச் சொன்னார். அதில் மூன்றாவது காரணம், மூக்கில் உள்ள சைனஸில் அழுத்தம் ஏற்பட்டு, இரத்தக்குழாயில் சீரற்ற தன்மை ஏற்பட்டு அதனால் தலைவலி வரலாம் என்று கூறினார். அதைத்தான் அவரது மகளும் பார்த்திருக்கிறார். ஆட்டோவின் கண்ணாடியைத் திருப்பி ஆட்டாவை ஸ்டார்ட் செய்யலாம் என்று நம்புவதுதான் இந்த மன நிலை. இந்த நிகழ்விலும் எனக்கு ஓர் அனுமானம் உண்டு.

"தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பாதி மருத்துவ அறிவைப் பெற்றுக்கொண்டு, பல வருடங்கள் படித்து, மருத்துவம் பார்த்த அனுபவமிக்க மருத்துவர்களை நம்பாமல் கூகுளை நம்புவது, அருகில் இருக்கும் மருத்துவர்களைச் சந்தேகிப்பதால், ’குடும்ப மருத்துவர்’ தத்துவத்திலிருந்து விலகுதல்.

பிரம்மாண்டத்தை விரும்பும் விளம்பரப் பிரியர்கள்

4. பொதுவாக இப்போதிருக்கும் தலைமுறைக்கு விளம்பரமோ, பெரிய பெரிய உருவங்களாகவோ இருந்தால்தான் நம்பிக்கை வருகிறது, துணி எடுக்கச் சென்றாலும், நகை எடுக்கச் சென்றாலும் ரிவியூ கேட்டு வாங்கி அதை விளம்பரப்படுத்த முதலாளிகள் முயற்சிக்கிறார்கள். ஒருகாலத்தில் அதிகமாக லைட்டுகள் போட்டு விற்பனை நிலையம் வைத்திருந்தால், அப்போதிருக்கும் பெரியவர்கள், "இவன் போட்டுருக்குற லைட்டுக்கும் சேத்தீ நம்ம தலைலதான பில்ல போடுவான்" என்ற முன் முடிவோடு இருந்த மனநிலை உண்டு. ஆனால், இப்போது அப்படியில்லை. எங்கள் பகுதியில் ஒரு பெரிய இடத்தை அலங்காரமாக பெரிய வடிவமைப்புடன் தயார் செய்துகொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு எதிரே இருந்த கடைக்காரர் எனக்குப் பழக்கம், அவர் ஒரு டீக்கடை வைத்திருந்தார். எந்த வியாபாரமாயிருந்தாலும், எதிரே போட்டிக்கு ஆள் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தானே செய்யும். அவரும் அதை என்னிடம் வெளிப்படுத்தியிருந்தார். பெரிய அகலமான வளாகமாகச் சரி செய்தார்கள், ஓரமாக அலமாரிகள் எல்லாம் வைத்தார்கள், பெரிய அளவில் பெயர்ப்பலகையும், அலங்கார விளக்குகளும் வந்திறங்கின. கிட்டத்தட்ட பிரம்மாண்டமான ஹோட்டல்தான் என்று இருந்த நிலையில்தான் அந்த இடத்தின் முதலாளி வந்து அது ஹோட்டல் இல்லை, ப்யூட்டி பார்லர் என்று சொன்னார். இப்போதும் என் நண்பர் சொல்கிறார், நம்ம கடைய விட ப்யூட்டி பார்லர்க்குக் கூட்டம் ஜாஸ்திதான் என்கிறார். காரணம் அந்தக் கட்டமைப்பு.

Model image
Model imagechat gpt

பெரியது என்றால் நம்பிக்கை என்ற மாயைக்குள் உலகம் உலவ ஆரம்பித்திருக்கிறது. ஆதலால், அதன்மீது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாதது ஆகிறது.

பெரிய மருத்துவமனை நம்பகமானது, சின்ன மருத்துவமனைக்கு ஒன்றும் தெரியாது, என்ற நவ நாகரிக , படாடோபித்தனத்திற்கு மயங்குதல் என்பதுகூட ’குடும்ப மருத்துவர்’ என்ற கருதுகோள் மறைவதற்குக் காரணமாக இருக்கலாம்.

குறையும் தனி மருத்துவர்களின் எண்ணிக்கை!

5) நோய்கள் பெருகபெருக, சிகிச்சை முறையில் புதிய கண்டுபிடிப்புகள் வர, சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. இதனால் தனி மருத்துவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது. இது எல்லாம் எனக்கிருக்கும் அனுமானங்கள்தான். ஒவ்வொருத்தருக்கும் ஒரு பார்வை இருக்கும், வேறுபடலாம். இவை தவிர பொதுவான பார்வை ஒன்றுண்டு.

இரண்டாம் தலைமுறை வளர வளர, தம் அப்பா அம்மாவிற்கு எதுவும் தெரியாது, நாம்தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் என்ற அக்கறை வரும். இதைத் தலைமுறை இடைவெளி அல்லது தலைமுறைக்கேற்ற மாற்றம் அல்லது குழந்தைகளுக்கான பொறுப்பு என்றுகூட கருதலாம். நவ நாகரிக போக்கில், “அப்பா அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது" என்று தன்னிச்சையாக இணையத்தில் தேடும்போது இப்போதிருக்கும் தலைமுறைக்கு அனுபவம் சார்ந்த கருதுகோள்கள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இப்போது நாற்பதைத் தாண்டியிருக்கும் நபர்களுக்கும் இருபதில் இருக்கும் நபர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணுங்கள். இருபது வருடங்களுக்கு முன் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு விடுமுறையில் வரும் மகனையோ, மகளையோ, ”போய் சித்தப்பாவ பார்த்துட்டு வா, மாமாவைப் பார்த்துட்டு வா” என்று அவர்களது பெற்றோர்கள் அனுப்பிவைப்பார்கள். இப்போது அப்படி இல்லை.

மனிதர்களிடமிருந்து தூரங்களைப் பெறுவதற்காக மொபைல், இணையம் போன்ற கருவிகளை மனிதர்கள் நெருக்கமாகவைத்துக்கொள்கிறார்கள். இது மனிதர்களின் மீது , உறவுகளின் மீது, ஏன் உணர்வுகளின் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. மனிதர்களுக்கான உணர்வுகளிலிருந்து விலகி நிற்பவர்கள் ’குடும்ப மருத்துவர்’ இயலில் மட்டும் நின்றுவிடுவார்களா என்ன?

இணைந்திருங்கள்.. இது ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு..’

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 4 | குடும்ப மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com