ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 4 | குடும்ப மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?
மருத்துவமனைகளில் ஒலிக்கும் வேதனைகளின் குரல்!
விளம்பரங்களில் திடீரென நடிகை காஜல் அகர்வால், ‘உங்கள் டூத்பேஷ்டில் உப்பு இருக்கிறதா’ என்று நம் வாசல் கதவுகளைத் திறந்துகொண்டு வருவதைப் போல, நம் பிரச்னைகளுக்குத் தீர்வைச் சொல்ல ஏதேனும் ஒரு தேவதை வந்துவிடாதா என்பதுதான் எல்லாருடைய குறைந்தபட்ச விருப்பம். ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியாக மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் மருத்துவர்களுக்காகக் காத்திருந்திருக்கிறேன். கண்முன் அடிபட்டவர்களும், ஏன் சிகிச்சை பலனின்றி மரணித்தவர்களின் முகங்களையும் அங்கு ஒலிக்கும் வேதனையின் குரலையும் கேட்டிருக்கிறேன்.
பெரும்பாலான சமயங்களில் வலிகளும், வாதைகளும் சக மனிதனைச் சூழ்ந்துகொண்டிருக்கும்போது அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது சதா காலமும், அப்போதைக்கு நாமும்தான். என் கண் முன்னே மருத்துவருக்காகக் காத்திருந்த ஒரு நோயாளித் தாத்தா, "என்னைய ஏன்டா இப்டி தூக்கிச் சுமக்குறீங்க, என்னைய விட்டுடுங்கடா, நான் செத்துறேன்டா" என்கிறார். அருகில் கணவனை இழந்த அவரது மகளும், அவருடைய கல்லூரி போகும் பேத்தியும் நின்றார்கள். இங்கு எல்லோருக்கும் கனவுகளும் அவர்கள் ஆசைப்படும் வாழ்வும் இயலாமைக்கு வெளியில்தான் நின்றுகொண்டிருக்கின்றன. இயலாமைக்கும் கனவிற்கும் இடையே நீடித்துக்கொண்டிருக்கும் தூரத்தைக் குறைக்கத்தான் ஏதோ ஓர் ஆபத்பாந்தவான் வந்துவிடமாட்டானா என்று எல்லோரும் ஏங்குகிறார்கள்.
குடும்ப மருத்துவர்களும் ஆபத்பாந்தவான்கள்தான்!
ஒரு மதிய நேரத்தில், மூதாட்டி ஒருத்தி மருத்துவமனையில் ஊசியைப் போட்டுவிட்டு மருந்துகளை வாங்கிவிட்டு மருந்திற்கான சில்லறையைத் தன் இடுப்பில் சொருகிவைத்திருந்த சுருக்குப் பையைத் திறந்து தன் வயோதிக கண்ணால் விழித்து சரியான சில்லறையை எடுத்துத் தர எத்தனிக்கும்போது அந்தப் பாட்டியின் விரல் இடுக்குகளிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயம் விழுந்து ஓடியது. "ஐயோ”, என்று திணறி அந்த மூதாட்டி பதற்றமடைந்தார். பார்வை மங்கிய அவரது தேடலில் என் கால் அருகே நான்கு முறை வட்டமடித்து விழுந்த அந்த நாணயத்தை எடுத்து அந்தப் பாட்டியின் கைகளில், "இந்தாங்க பாட்டி” என்று தந்ததும், "நல்லவேள சாமி, எடுத்துட்டியா, நல்லாருக்கணும்ப்பா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். ஐந்து ரூபாயின் மதிப்பு எவ்வளவு முக்கியத்துவமாய் இருந்திருந்தால் அந்த மூதாட்டிக்கு அந்தத் திணறலும் ஒரு கும்பிட்டு வாழ்த்தும் சொல்லத் தோன்றியிருக்கும்.
வலிகள்தான் நமக்கு ஆபத்பாந்தவானைக் காட்டுகின்றன. வாழ்க்கையில் நாம் பெறும், பெரும் வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு பெரிய விரக்தியையும் தோல்வியையும் தாண்டியதாகத்தான் இருக்கும். நோயாளிகளுடன் அமர்ந்திருக்கும்போது சில இடங்களில் சில நோயாளிகள் எங்களிடம், "ஏம்ப்பா, இந்த டாக்டர் நல்லா பார்ப்பாரா" என்று கேட்பார்கள். ஏற்கெனவே முடிவெடுத்துத்தான் அங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள், ஆனாலும் அவர்களுக்கு ஒரு வார்த்தை தேவையானதாயிருக்கிறது . அது வலி போக்கும் தேடலுக்கான வார்த்தை. அந்த வார்த்தையை உச்சரிக்கப்போகும் மருத்துவர்களைத் தேடித்தான் நோய்களைச் சுமந்துகொண்டு இங்குப் பலர் இருக்கிறார்கள். நோய்கள் நம்மைப் பீடித்துக்கொண்டிருக்கும் தருவாயில் ஆபத்பாந்தவான்கள் வந்துவிடமாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். சில நேரங்களில் குடும்ப மருத்துவர்கள்தான் அப்படியான ஆபத்பாந்தவான்களாக இருப்பார்கள்.
குடும்ப மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?
எங்கள் உறவினர் ஒரு சர்க்கரை நோயாளி. நெடுநாட்களாக ஒரே சர்க்கரை மருத்துவரைப் பார்த்துவந்தார். அவ்வப்போது சர்க்கரை கட்டுக்குள் இருப்பதில்லை (சர்க்கரை கட்டுக்குள் இருக்காது என்று சர்க்கரையைப் பழி போடுவது பொது குணம், உண்மையில் சர்க்கரையைக் கட்டுக்குள் இருக்கவைப்பது மனிதர்களின் வேலை). ஒருமுறை, அந்த உறவினருக்கு வயிற்று வலி சன்னமாக இருந்துகொண்டே இருந்தது. பொதுவாக, 'பொது புத்தி' என்று ஒன்று இருக்கும். அதாவது, பெரும்பாலானோர் செய்யும் செயலாக இருப்பது. ஒரு நோயாளிக்கு உடலுக்கு ஒன்று வரும்போது 'ஒருவேளை இப்படி இருக்குமோ, நம்ம சொன்னத டாக்டர் சரியா கேக்கலையோ, டாக்டர் தப்பான மருந்தை எழுதிட்டாரோ, இப்படியெல்லாம் பொது புத்தி வேலை செய்யும். என் உறவினருக்குக்கூட டாக்டர் ஒருவேளை பவர் அதிகமான மாத்திரையை எழுதிவிட்டார்போல, அதான் அல்சரைக் கிளப்பி விட்டுருச்சு என்று எண்ணம். தான் எப்போதும் பார்க்கும் சர்க்கரை மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்று தனது சந்தேகத்தை அவரிடமே கேட்டுவிட்டார். ஆனால், அந்த முறை மருத்துவர் அப்படி ஒன்றும் மாத்திரையின் அளவை மாற்றிக் கொடுக்கவில்லை. இருந்தாலும், ”சரியாகச் சாப்பிட்டு இருக்க மாட்டிங்க” என்று அறிவுரை கூறிவிட்டு எதற்கும் ஒரு அல்சர் மாத்திரை எழுதிக் கொடுத்துவிட்டார்.
முதல் நாள் நோயாளிக்கு வயிற்றுவலி இல்லை. ஆதலால், இது அல்சர்தான், அல்சர் மாத்திரை சாப்பிட்டதும் வயிறு வலி குறைந்துவிட்டது என்று உறவினர் தனது சந்தேகத்தின் மீது நம்பிக்கையை அதிகப்படுத்திக்கொண்டார். மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் நோயாளிக்கு வயிறு வலி அதே மென்மையாக ஆரம்பித்திருக்கிறது. இந்த முறை முதல் நாள் சாப்பிட்ட வத்தக்குழம்பு காரமாயிருந்தது அதுதான் காரணம் என்றிருந்துவிட்டார், மறுநாள், மாவு சரியில்லை, புளித்திருந்த காரணம் என்றிருந்துவிட்டார், மூன்றாம் நாள் எதற்கும் ஒரு எட்டு மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று மறுபடியும் தான் எப்போதும் பார்க்கும் சர்க்கரை மருத்துவரைப் பார்த்திருக்கிறார். ”எல்லாம் சரியாய் இருக்கிறது, அல்சர்தான், சரியான நேரத்திற்குச் சாப்பிடுங்கள்” என்ற அறிவுரை மட்டும்தான் கிடைத்தது. உறவினருக்கு இந்த முறை திருப்தி இல்லை. மருத்துவர் தன் வயிறைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை, காரம் இல்லை, பொறிச்சது இல்லை, எல்லாமே பார்த்துப் பார்த்துத்தான் சாப்பிடுகிறேன், இருந்தாலும் மருத்துவர் எங்கு வலி என்றுகூட ஆராயவில்லை என்ற வருத்தம் இருந்திருக்கிறது.
இப்போது இந்தப் பிரச்னையை என்னிடம் கொண்டுவந்தனர். இந்த இடத்தில் கமல்ஹாசன் இயக்கிய, ‘விருமாண்டி’ படம் எடுத்த விதத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். பசுபதி பார்வையில் ஒரு மாதிரியும், கமல் பார்வையில் ஒரு மாதிரியும் காட்சி அமைந்திருக்கும். அந்த உறவினர் என்னிடம் கூறியபோது, ’வெறுமனே வயிற்றுவலி’ என்று கூறினார். இந்த வயிற்றுவலி பத்து நாட்களாக இருப்பதாகவும், அது சார்ந்து மூன்று நாட்களுக்கொருமுறை அவர் எப்போதும் பார்க்கும் மருத்துவரைப் போய் பார்த்திருக்கிறார் என்றோ கூறவில்லை.
வயிற்று வலி என்றால் அல்சரா என்று கேட்டதும், "இருக்கும்போல" என்றார்.
”ஒரு நல்ல மருத்துவரைச் சொல்லுப்பா” என்றார்.
”நீங்கள் எப்போதும் போய்ப் பார்க்கும் மருத்துவருக்கு என்னாயிற்று" என்று கேட்டேன்.
”அவர் வயிற்றைத் தொட்டுக்கூட பார்க்கமாட்றார். சும்மா சும்மா மாத்திரையை மட்டும் எழுதிக்கொடுத்துடுறார், வயிறு வலிக்கிறமாதிரி மாத்திரை ஏதும் தரல, ’நல்லா சாப்பிடுங்க’ என்று சொல்லி ஓட்டிவிடுறாருப்பா" என்றார்.
நோயாளி ஒரு பெண். ஆதலால் ஒரு பெண் மருத்துவரை அணுகினால் அல்லது ஒரு பெண்கள் நல மருத்துவரை அணுகினால் நல்லது என்று எனக்குத் தோன்றியது. எனக்கு அந்த ஊரில் தெரிந்த ஒரு மகளிர் நல மருத்துவரின் பெயரைப் பரிந்துரைத்து, ”எதற்கும் இவரைப் போய்ப்பாருங்கள், பழைய மருந்துச்சீட்டை எடுத்துக்கொண்டு செல்லுங்கள், நானும் மருத்துவரிடம் பேசுகிறேன்” என்றேன்.
இரத்தத்தில் கிரியாட்டினின் என்ற காரணி
உறவினருக்கு வயிற்று வலி என்பதால் உடனே கிளம்பி அந்த மருத்துவரிடம் சென்றுவிட்டார். வயிறு வலி அதிகமாயிருப்பதாலும், நோயாளி பலவீனமாய் காணப்பட்டதாலும் முதலுதவி ஆரம்பித்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவர் என்னை அழைத்து, ”ஆரம்பகட்ட ரத்த சோதனை, சிறுநீர் சோதனை எடுத்துருவோம், அல்சர் மாதிரி தெரியல" என்றார். அவர் சந்தேகித்த மாதிரி வந்த சோதனையின் முடிவில் இரத்தத்தில் கிரியாட்டினின் என்ற காரணி 3க்கு மேல் இருந்தது. அதன் அடிப்படை அளவு ஒன்றுக்கும் குறைவாக இருக்க வேண்டும். சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறதைக் காட்டும் காரணிதான் அது, அதன் அறிகுறிதான் அந்த வயிற்றுவலி.
பிறகு, ஒரு சிறுநீரக சிறப்பு மருத்துவரைப் பரிந்துரைத்து அந்த உறவினரை அங்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ளவைத்து அவர் தேறிவிட்டார். இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்... ஆனாலும், அந்த உறவினருக்கு இப்போது சின்ன காய்ச்சல் என்றாலும் அந்த மகளிர் நல மருத்துவரிடம் காண்பித்துவிட்டுத்தான் மற்ற மருத்துவரை அணுக வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். ஒவ்வொரு முறை உறவினருக்கு உடல்நலக் கோளாறு வந்தால் உடனடியாக சர்க்கரை அளவையும், கிரியாட்டினின் அளவையும் சோதித்துவிட்டு, சிறுநீரக சிறப்பு மருத்துவரையும் அணுகச் சொல்லிவிடுகிறார். எல்லாம் நார்மலாக இருந்தால் அவரே அந்தந்த சீசனல் காய்ச்சலைக் குணப்படுத்துகிறார்.
நோயாளிகள் மருத்துவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை
இந்தச் சம்பவத்தை இப்போது கூறக் காரணம், கடந்த பகுதியில் குடும்ப மருத்துவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்று முடித்திருந்தேன். ’குடும்ப மருத்துவர்’ வெறுமனே MBBS மட்டும் படித்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் எந்தச் சிறப்பு மருத்துவராகக்கூட இருக்கலாம், ஆனால் நமக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதை அடையாளம் காணுமளவிற்கு ’நோயறியும் திறன்’ DIAGNOSING SEQUENCE பெற்றவராக இருத்தல் வேண்டும். மேற்சொன்ன நிகழ்வில் உறவினர் போய்ப் பார்த்தது ஒரு மகளிர் நல மருத்துவர். மகளிர் நல மருத்துவர் என்றால், கர்ப்பம், கர்ப்பப்பை, மாதவிலக்கு போன்ற பிரச்னைகளுக்கான மருத்துவர் என்று மட்டும் நாம் உறுதிசெய்துவிட முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மருத்துவர்கள் ராசியாக இருப்பார்கள்.
நான் பல முறை கேட்டிருக்கிறேன், சில குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வருவார்கள், மருத்துவரிடம் பேசும்போது, ”நைட்டு ஃபுல்லா காச்சல் சார், உங்கள பாக்க கிளம்புனோம், இங்க உள்ள நுழைஞ்சதும் ஒரு பொட்டு காச்சல் இல்ல சார்" என்பார்கள். உண்மையில், அது நோயாளிகள் மருத்துவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை, வைரல் காய்ச்சல் வருவதும் போவதும் என்பது எல்லாம் அதன் இயல்பே தவிர வேறு எந்த ராசியும் இல்லை.
சில நோயாளிகள் அவர்களுக்குள் சொல்லிக்கொள்வதுண்டு, ’இவர் மட்டும் கைவச்சு பார்த்துட்டார்னு வை, குழந்தைக்கு காய்ச்சல், வலி எல்லாம் பறந்துரும், அதுக்காகதான ராம்நாட்டுல இருந்து வர்றேன்’ என்பார்கள்.
இது எல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடும்போது எந்தப் பாட்டின் நடுவே சிரிக்கிறாரோ, அந்தப் பாட்டு ஹிட் அடிக்கும் என்று நம்புவதற்குச் சமானம். உண்மையில், அவருக்குப் பிடித்த பாடலில் எஸ்.பி.பி சிரிப்பாராக்கும், அந்தப் பாடல் அநேக பேருக்குப் பிடிக்குமானதாயிருக்கும். அதேபோல்தான் பச்சிளங்குழந்தைகளை மருத்துவர்கள் தொட்டுப்பார்த்தல் என்பது எழுதப்படாத விதி. கை வைத்ததும் சரியாகிவிடும் என்பது மருத்துவர் நோயாளிகளுக்கு ஏற்படுத்தும் நம்பிக்கை அல்லது அவர்களாகவே நம்பிக்கொள்வது. இப்படி ஏதாவது ஒரு நம்பிக்கை நோயாளிகளை நம்பவைக்கும். அதன்மூலம் நோயாளிகள் மருத்துவர்களை இனம் காணுவார்கள். அவர்களை தம் ஆதர்சன மருத்துவராக வரிந்துகட்டிக்கொள்வார்கள்.
எனக்குத் தெரிந்த ஊரில் ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ’மகன் ஃபாரின் போகிறான் நாளைக்கு, அதான் உங்கிட்ட காமிச்சிட்டு போகலாம்னு வந்தேன்’ என்று அம்மாக்காரி மகனுடன் வந்து நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அதாவது, தன் குடும்பத்தில் ஏதாவது நல்லது நடந்தால்கூட நம்ம டாக்டர்ட்ட ஒரு வார்த்தை சொல்லிவிடுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படுகிறது.
அப்படியான ராசியோ, நம்பிக்கையோ உங்கள் அனுபவத்தில் அல்லது வேறொருவரின் அனுபவம் மூலம் உங்களுக்குச் செய்தியாகவோ வந்து சேரும். அப்படியான நம்பிக்கையின் பாத்திரமாக நீங்கள் யாரை உருவகிக்கிறீர்களோ, அவரே உங்களுக்கான குடும்ப மருத்துவர். சரி, குடும்ப மருத்துவர் யார், அவரை அணுகுவதன் அனுகூலம், அவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்றெல்லாம் பார்த்தோம். ஆனால், ’குடும்ப மருத்துவர்’ தத்துவம் தேய்ந்துவருகிறது என்று சொன்னேன் அல்லவா.. ஏன் என்று தெரியுமா...?
சில அபத்தங்களையும் இரகசியங்களையும் வாசிக்க தயாராகிக்கொள்ளுங்கள். இது மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு..
(டைரிக்குறிப்பு தொடரும்...)

