\
oru marunthu virpanai prathinithiyin diary kurippu 3  role at Family Doctor
model imagechat gpt

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 3 யார் உங்கள் குடும்ப மருத்துவர்?

கிட்டத்தட்ட அவர் குடும்ப மருத்துவராக இருக்கலாம். அவரால் குணப்படுத்த முடியும் என்று நினைப்பதை அவரே செய்வார் அல்லது இந்த நோய்க்கு இந்தச் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவரை அணுகலாம் என்று அவரிடம் நம்மை அனுப்பிவிடுவார்.
Published on

ஊரில் அனுபவத்தைச் சொல்லும் பெரியவர்கள்

கிராமங்களில் ஒரு வழக்கம் உண்டு. ஊரில் ஏதாவது பிரச்னை வந்தாலோ, பருவகாலத்தில் எந்தப் பயிரை எப்போது ஊடுபயிராக விளைவிக்க வேண்டும் என்று குழப்பம் இருந்தாலோ அல்லது மழை பற்றிய தாக்கங்களைத் தெரிந்துகொள்ளவோ அந்த ஊரில் ஏதாவது பெரியவர்களை நாடுவார்கள். அவர்களிடம் வம்புக்காவது வாயைக் கொடுத்துத் தேவையான விசயங்களைத் தெரிந்துகொள்வார்கள். அந்தப் பெரியவர்களுக்கு எல்லா விசயமும் தெரியுமா என்று கேட்டால், அப்படி அர்த்தம் இல்லை. அவர்களுக்கு அனுபவம் இருக்கலாம். பல புயல்களைப் பார்த்திருப்பார்கள். பல பிரச்னைகளைக் கடந்தவர்களுக்கே எந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள முடியும் என்று தெரியும். எந்த மரத்தில் எந்தக் கிளையை வெட்டிவிட்டால், மரம் ஆடாமல் நிற்கும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பர், அடை மழைக்கு எந்தக் கண் உடையும் என்று கண்மாயின் குணங்களைத் தெரிந்துவைத்திருப்பர். அனுபவங்கள் வாய்க்கப்பெற்றவர்கள் அனைவருமே ஒரு வகையில் பெரியவர்கள்தான்.

chat gpt

எனக்குத் தெரிந்த ஒருத்தர் இருக்கிறார். அவர்தான் அந்தக் குடும்பத்தில் பெரியவர். அனுபவஸ்தர். எல்.ஐ.சி கன்சல்டன்ட் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். யாருக்காவது ஏதாவது உதவியோ, பிரச்னையோ என்றால் முன் நின்று அதைத் தன் பிரச்னையாக எடுத்துத் தீர்வு சொல்வார். தன் தம்பிகளின் குடும்பங்கள் - குடும்பங்கள் என்றால் தம்பியின் மகன் வழி சம்பந்தக்காரர்கள், அவர்களின் வீட்டுப் பிள்ளைகள்வரை வழிகாட்டும் இடத்தில் இருப்பவர். அதுமட்டுமல்லாமல், அவரது ஊரில்கூட பொதுப் பிரச்னைகளை அவரிடம் கொண்டுவருவார்கள். ஊர் முக்கியஸ்தர்களுடன் பேசி சமரசமான முடிவை எடுக்க வேண்டுமானால், இன்னாரைத் தொடர்புகொள்ளலாம் என்று தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார். அவர் தன் அனுபவத்தில் பல மனிதர்களின் தொடர்பையும், பல சூழ்நிலைகளையும் கையாண்டவர்.

அனுபவத்தின் மூலம் செயல்படும் மருத்துவர்

ஒரு முறை தன் சொந்தக்காரர் ஒருவர் அழைத்து அவரது சம்பந்தக்காரரின் பேரன் ப்ளஸ்டூ முடித்துவிட்டதாகவும் ஜே.ஈ.ஈ ( JOINT ENTRANCE EXAMINATION) எழுதியிருப்பதாகவும், எந்தக் கல்லூரியில் சேர்வது என்று குழம்புவதாகவும் இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். இந்தப் பெரியவர், தன் அனுபவத்தில் யாரோ ஒருவரின் மகன் ஜேஈஈ எழுதித் தேர்வாகி I.I.T சேரப்போனது ஞாபகம் வந்தது. சம்பந்தப்பட்ட பையனின் அப்பாவிற்கு அலைபேசியில் அழைத்து பையன் எவ்வளவு மதிப்பெண், எப்போது கவுன்சிலிங் வரும், எந்தக் கல்லூரி பிரசித்தம் என்றெல்லாம் சொல்லி, ஏற்கெனவே அதுபோன்று தேர்வான ஒரு பையனின் குடும்பத்து அலைபேசி எண்ணைத் தந்து அவர் பெயர் சொல்லிப் பேசிக்கொள்ளுங்கள் என்று வழி காட்டியிருக்கிறார்.

உண்மையில், அந்தப் பையனின் குடும்பம் எந்தக் கவுன்சிலிங், அதை எப்படி விண்ணப்பிப்பது என்றெல்லாம் தெரியாமல் ஒரு கன்சல்டிங்க் நிறுவனத்தை அணுகலாம் என்று இருந்திருக்கிறார்கள். கன்சல்டிங்க் நிறுவனமோ, சில கல்லூரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ’இவ்வளவு பணம் கொடுங்கள்’ என்றெல்லாம் கேட்டார்களாம். ஆதலால், இந்தப் பெரியவரின் வழிகாட்டல் இவர்களுக்கு பெரும் உதவியாய் இருந்திருக்கிறது. ஒரு எல்.ஐ.சி கன்சல்டன்ட் அவரது துறையில் நிபுணத்துவம் இருந்தாலும் தன் அனுபவங்களின் வழியே பல துறைப் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட இதே சூத்திரம்தான் நமக்கென்று ஓர் உடல் பிரச்னை வரும்போதும்.

chat gpt

உதாரணத்திற்கு, நான்கு நாட்களாக தினம் காலையில் தலைசுற்றுகிறது. இதை வெகு இலகுவாக ஒரு பையன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஜேஈஈ எழுதிய சூழ்நிலையோடு ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். எப்படி மேற்சொன்ன நிகழ்வில் அந்தப் பையனின் குடும்பம் அந்தப் பெரியவரை அணுகினார்களோ, அப்படி அணுக நமக்கு ஒருவர் தேவை. அவர் மருத்துவராக இந்த உதாரணத்தில் இருப்பார். எப்படி அந்தப் பெரியவர், ஜேஈஈ தேர்வு பயிற்றுனராக இல்லாமல் தன் அனுபவத்தின் வாயிலாக அந்தப் பையனிற்குத் தீர்வுகாண உதவினாரோ, அப்படி அந்த மருத்துவர் நமக்கு உதவ வேண்டும். அவர் தலை சுற்றுவதற்கான சிறப்பு மருத்துவராக இல்லையென்றாலும், தன் அனுபவத்தின் வாயிலாக நம் பிரச்னைகளைத் தீர்க்க உதவுபவராக இருத்தல் வேண்டும். கிட்டத்தட்ட அவர் குடும்ப மருத்துவராக இருக்கலாம். அவரால் குணப்படுத்த முடியும் என்று நினைப்பதை அவரே செய்வார் அல்லது இந்த நோய்க்கு இந்தச் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவரை அணுகலாம் என்று அவரிடம் நம்மை அனுப்பிவிடுவார். அதுதான் ஒரு குடும்ப மருத்துவரின் குணம். அப்படிப்பட்டவர் இல்லையென்றால் என்னாகும், அந்தப் பையனின் குடும்பம்போல ஏதாவது இடத்திற்குச் சென்று பணத்தை விரயமாக்க வாய்ப்பு ஏற்படலாம்.

நோயாளிகளிடம் குடும்ப நல மருத்துவர்கள் காட்டும் அக்கறை 

நான் மருந்து நிறுவனம் நடத்திவருவதால், உறவினர்களோ, நண்பர்களோ அவ்வப்போது அழைத்து அவர்களுக்கு இருக்கும் உடல் பிரச்னைகளைப் பற்றிக் கேட்பார்கள். ஒரு நண்பன் இருக்கிறான், மாதம் ஒருமுறையாவது அழைத்துவிடுவான். அவனது அழைப்பு வந்தாலே அவன் வீட்டிலோ அல்லது அவனது அலுவலகத்திலோ யாருக்கோ உடம்பு சரியில்லை என்று அர்த்தம், இவ்வளவு ஏன்? ஒருமுறை அவன் வசிக்கும் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டிக்குத் தொடர்ந்து இருமலாய் இருக்கிறது, என்ன செய்யலாம் என்றுகூடக் கேட்டிருக்கிறான். இப்படிப்பட்ட பல நண்பர்களுக்கும் நான் முதலில் கூறுவது, "உங்களுக்கான குடும்ப மருத்துவரிடம் ஒருமுறை காட்டிவிடுங்கள்" என்று. அப்படியும் ஒரு நண்பன் கேட்டான், "எதற்காக family physician" குடும்ப மருத்துவர் என்ற தத்துவம் எதற்காக என்று பலருக்குக் குழப்பம்.

நான் தொழில்முறையாக ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரது அறையில் அமரவைத்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நோயாளி உள்ளே வந்தார். " என்ன பரமசிவம், என்னாச்சு?” என்றார் மருத்துவர். காலையில் வரப்பில் நடக்கும்போது ஒரு கல் இடறி கால் பெருவிரலில் காயம் என்று காயத்தைக் காண்பித்தார் பரமசிவம். மிகச் சிறிய அளவிலான காயமாக இருந்தது. செவிலியரை அழைத்து அதைச் சுத்தம்செய்து மருந்து போட்டுவிடும்படிச் சொல்லிவிட்டு, "போய் மருந்தைக் கட்டிக்கிட்டு வாங்க பரமசிவம்" என்றார். பரமசிவத்தை அழைத்துக்கொண்டு வந்த மகன் வெளியே நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும், "எலே நீ வந்திருக்கியா, எப்ப வந்த?" என்று டாக்டர் கேட்டார். விப்ரோவில் வேலை பார்ப்பதாகவும் விடுமுறைக்கு வந்திருப்பதாகவும் தெரிந்தது.

chat gpt

"குடும்பத்தோட வந்திருக்கியா, மனைவி, உம்பிள்ளைலாம் எப்படி இருக்காங்க" என்றபடியெல்லாம் குசலம் விசாரித்த மருத்துவர், பரமசிவத்தின் மகன் நெற்றியை உற்றுப்பார்த்து "நெத்தி காயம் தடம் இன்னுமாடே இருக்கு" என்றார். அதற்குள் பரமசிவம் காலில் மருந்தைக் கட்டிக்கொண்டு வந்து, "அது என்னமோ உங்கட்ட தூக்கிட்டு வந்தேன், தையல போடாம காப்பாத்திட்டீங்க" என்றார்.

அதாவது, பரமசிவத்தின் மகன் குழந்தையாக இருந்தபோது வரப்பில் விளையாடி கால்இடறி விழுந்து நெற்றியில் மண்வெட்டி பட்டுக் கீறி இரத்தம் வந்திருக்கிறது. தூக்கிக்கொண்டு இவரிடம் வந்திருக்கிறார்கள். அப்போது ஒரு குடிசை பரலைப் போட்டு பிராக்டிஸ் செய்துகொண்டிருந்தாராம் இந்த மருத்துவர். அந்த ஞாபகத்தை மருத்துவர் பரமசிவத்திடம் கேட்கிறார். இப்போது பரமசிவத்திற்கு பேத்தியே வந்துவிட்டது. "அப்பாவுக்கும் மகனுக்கும் வரப்பிலேயேதான் அடிபடுமாடே" என்று கேட்பாராம். பெரும்பாலான நோயாளிகளுக்கு அமாக்ஸிசிலின் க்ளாவனிக் அசிட் எழுதும் மருத்துவர் அவர்களுக்கு மட்டும் செஃபிக்ஸிம் எழுதுவாராம். ஏனென்றால், அமாக்சிசிலின் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் வயிற்றுப் பேதியை உண்டாக்குமாம்.

கிளம்பும்போது பரமசிவத்தின் மகனிடம், "எலே உமக்கு பொண்ணுதான, வந்து முகத்த காமி" என்று கேட்டுக்கொண்டார் மருத்துவர். இந்த அனுபவத்தில் பரமசிவம் அவரது மகன், இப்போது பரமசிவத்தின் பேத்தி என்று மூன்றாவது தலைமுறைவரை ஒரே மருத்துவரிடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு நகரத்தில் தேய்ந்துபோய்க்கொண்டிருந்தாலும், கிராமங்களில் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு தேர்ந்த குடும்ப மருத்துவர் பரமசிவத்திற்கு இருப்பதனால் என்ன பலன் என்றால், கீழே விழுந்து புது மருத்துவரிடம் போய்க் காண்பித்து அவர் அமாக்ஸிசிலின் க்ளாவனிக் ஆசிட் எழுதி அது மூன்று நாட்களுக்குப் பின் வயிற்றுப்பேதியை உருவாக்கி அதற்குப் பிறகு அதற்கு வைத்தியம் பார்க்க மறுபடியும் மருத்துவரிடம் போகவேண்டிய அவசியம் ஏற்கெனவே தெரிந்த குடும்ப மருத்துவரிடம் போவதால் ஏற்படுவதில்லை. இதுதான் குடும்ப மருத்துவரை அணுகுவதன் தேவை.

கடந்த வாரம் ஒரு மருத்துவரைப் பார்க்க போயிருந்தபோது, அவரிடம் வழக்கமாக வைத்தியம் பார்க்கவரும் ஆசிரியர் தனது ஒவ்வாமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அடிக்கடி சளியும், கையில் தடிப்புதடிப்பாக வருவது பற்றியும் மருத்துவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். மருத்துவர் பரிசோதித்துவிட்டு, “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சாய வேலையையும் பார்க்கப்போறீங்க, அதான் மகன் எந்திரிச்சுட்டான்ல, இந்த வேலைனாலதான் இப்ப தடிப்பு தடிப்பா வருது உங்களுக்கு” என்றார்.

chat gpt

மருத்துவரிடம் செல்கிறீர்கள், உங்கள் நோய் பற்றிச் சொல்கிறீர்கள், நீங்கள் என்னாவாக இருக்கிறீர்கள் என்று கேட்பார், ஆசிரியர் என்று சொல்வீர்கள். நான் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்துவிட்டு என் மகனுக்குத் துணையாக இரவு ஏழு மணிக்கு மேல் சாய வேலை பார்ப்பேன் என்றெல்லாம் பெரும்பாலும் சொல்லமாட்டார்கள். குடும்ப மருத்துவர் என்பதால் இவரது கதை எல்லாம் அந்த மருத்துவருக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு நோய் பற்றிச் சொன்னதும், அது எதனால் வருகிறது என்பதை மருத்துவர் கண்டறிந்துவிடுகிறார். பொதுவாக, நோயைக் கண்டறிதலும் அது எதனால் வருகிறது என்பதைக் காண்பதும்தான் ஒரு மருத்துவனுக்குக் கடினமான வேலை, மற்றபடி வைத்தியம் பார்ப்பது எளிதான வேலை. இதுபோன்ற பல காரணங்களுக்காகவும் குடும்ப மருத்துவர் தேவைதான்.

அதுலாம் சரி குடும்ப மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?

(டைரிக்குறிப்பு தொடரும்...)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com