ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 12 | நம்பிக்கையை அளிக்கும் சில நல்ல மனிதர்கள்!
வைக்கம் முகமது பஷீரின் எழுத்துகள் அவரது அனுபவங்களே!
"என் எழுத்துகளை வாசித்து அதிகம் சிரித்தது நானாகத்தான் இருப்பேன். அதிகம் அழுததும் நானாகவே இருப்பேன், காரணம் அவையெல்லாம் என் அனுபவங்களாக இருந்தன" - வைக்கம் முகமது பஷீர்
எனக்கு மிகவும் நெருக்கமான மருத்துவர் ஒருவர் அழைத்தார். இப்போதுதான் இந்தத் தொடர் சூடு பிடிக்கிறது என்றும், மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளும் என்றும் கலவையாக வருகிறது என்று பாராட்டினார், மேலும் அவர் மனதிற்குள் ஒரு கேள்வி எழுந்ததாகவும், அதையும் யாரோ ஒருவர் கேட்டுவிட்டார் என்றும் கூறியிருந்தார். ஒவ்வோர் அனுபவத்திலும் உங்களது பங்கு என்ன என்பதுதான் அவரது கேள்வியாயும் இருந்தது. அதற்கான பதிலாகத்தான் கடந்த இரு கட்டுரைகளும் இருக்கும் என நினைக்கிறேன்.
கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர்கூட அவரது எழுத்துகள் அவரது அனுபவங்களாகவே இருந்தன என்று கூறியிருக்கிறார்.
மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வாழ்தல் என்பது சுவாரஸ்யமானது. மனிதர்களைச் சந்திக்கும் வாழ்க்கை எப்பொழுதும் சுவாரஸ்யமானதுதானே. கல்லும் உண்டு, முள்ளும் உண்டு; பிறகு பூக்களுமுண்டு எதை விலக்கி எதைப் பார்க்கிறீர்களோ, அதுவே மிஞ்சும்.. நல்லவைகளை மட்டும் காணுதல் ஒன்றே வாழ்வின் நிம்மதிக்கான வழியைக் காட்டும்.
அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தபோது காலை மணி 11 இருக்கும். பொதுவாக மருத்துவமனைக்குள் நுழைந்ததும், ஒரு மெடிக்கல் ரெப்பிற்குச் சில வழக்கமான நிரல்கள் கடைபிடிக்க வேண்டும். அவற்றிலொன்று, மருத்துவமனையின் மருந்துக்கடைக்குச் சென்று, மருத்துவர் தன் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைத்திருக்கிறாரா இல்லையா என்று விசாரிக்க வேண்டும், அதற்கேற்ப தன் தொழில் ரீதியான உரையாடலை மனதிற்குள் தயார் செய்திட வேண்டும், அதன் நிமித்தம் நானும் அந்த மருத்துவமனையின் மருந்துக்கடைக்குச் சென்று அதன் பொறுப்பாளரைச் சந்திக்கப்போனால், அன்று அவர் இல்லை. அவர் ஒருவேளை விடுமுறையில் சென்றிருக்கலாம் என்று மருத்துவரைப் பார்க்க அவர் அறைக்குமுன் காத்திருந்தேன். சில மருத்துவர்கள் தனக்காகக் காத்திருக்கும் நோயாளிகளைச் சந்தித்துவிட்டுப் பிறகுதான் மெடிக்கல் ரெப்களைப் பார்க்கும் வழக்கம் வைத்திருப்பார்கள். அந்த மருத்துவருக்கு அன்று நிறைய நோயாளிகள் இல்லை என்பதால், கடைசி வரிசை நோயாளி மருத்துவர் அறையிலிருந்து வெளிவந்த பிறகு நான் உள்ளே செல்லலாம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் முறைக்காகக் காத்திருந்தபோது, ஒரு ஐம்பது வயது இருக்கும், மிகுந்த களைத்துப்போன கண்களுடனும், பதற்றத்துடனும் ஓர் அக்கா மருத்துவரைப் பார்க்க வந்திருந்தார். நோயாளி வெளிவந்ததும் செவிலியர் என்னை அழைக்க நான் உள்ளே நுழைந்துவிட்டேன்.
என் நிறுவன மருந்துகள் பற்றி மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே , "சுலோச்சனா அக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்திருக்காங்க" என்றார் செவிலியர்.
"உள்ளே வரச் சொல் " என்றார் மருத்துவர்.
உள்ளே வந்த அக்காவிடம், அவரது கணவர் தீராத நெஞ்சுவலி காரணமாக மாரடைப்பு வரும் அறிகுறிகளுடன் இன்னொரு பெரிய மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதையும், அவரது நலம் பற்றியும் மருத்துவர் விசாரித்தார், பிறகு, "இதயத்தில் உள்ள இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதையும், பைபாஸ் அறுவைச்சிகிச்சை செய்தாக வேண்டும் என்று சிறப்பு மருத்துவர் சொல்லியதையும், அறுவைச்சிகிச்சை நேரத்தில் இரத்த இழப்பு அதிகம் ஏற்படும் என்பதால், யாராவது அவரது இரத்தவகை சேர்ந்தவர்களையே வரவழைத்து இரத்தம் கொண்டு வாருங்கள் என்று மருத்துவமனை கூறிவிட்டதாகவும் மாலை அறுவைச்சிகிச்சை என்றும் சுலோச்சன அக்கா கூறிக்கொண்டிருந்தார்.
”அந்த மருத்துவமனையிலேயே இரத்த வங்கி இருக்குமே, அங்குக் கேட்டுப்பார்த்தியா" என்று மருத்துவர் கேட்டார்.
"வரவங்களுக்கு எல்லாம் இரத்தம் தந்துட்டே இருந்தா, அப்புறம் எங்களுக்கு எப்படிக் கிடைக்கும், யாராவது டோனர் இருந்தா, உங்க சொந்தக்காரங்கட்ட கேட்டு வாங்கிக் கொடுங்க " என்றார்களாம்.
மருத்துவரும் தனக்குத் தெரிந்த இரத்த வங்கியைத் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாக அந்தக்காவைத் தேற்றி வழியனுப்பினார்.
மருத்துவரிடம் என் வேலைகளை முடித்துவிட்டு, மருந்துக்கடைக்குச் செல்ல சுலோச்சனா அக்கா அங்கு நின்றுகொண்டு அங்கு வேலை பார்க்கும் செவிலியரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
தன் மனக்குறைகளைக் கொட்டும்போது கண்களுக்கு எப்படித் தெரியுமோ, கண்ணீரைத் தாரைதாரையாக வார்த்துவிடுகின்றன.
இயலாமையின், ஆற்றாமையின் பொது மொழி கண்ணீர்.
"உங்களுக்கு எந்த ப்ளட் வகை வேணடும்" என்று கேட்டேன்.
"பி பாசிட்டிவ்"
"என் காலேஜ் க்ரூப்ல போடுறேன், யாராவது டோனர் இருப்பாங்க, கேட்கிறேன்" என்றேன்.
சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஹாஸ்பிடல் இருந்து அவருக்கு போன். ’உடனடியாக இரத்தம் வேண்டும்’ என்று.
அந்தக்கா, கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்தார்.
நான் மருத்துவர் அறைக்குச் சென்று, மருத்துவரை வைத்து, அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம், "அதே இரத்த வகை அவசரத்தில் ஏற்பாடு செய்ய முடியவில்லை, அவர்களது கையில் இரத்த வங்கியில் இருக்கும் அதே இரத்த வகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதற்குப் பதிலீடாக உங்களது இரத்த வங்கிக்கு வேறு வகை இரத்த க்ரூப் உள்ள டோனர்களை வைத்து இரத்தம் வழங்கிவிடலாம்” என்று பேசவைத்தேன்.
அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். வெளிவந்து அந்தக்காவிடம், மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு அழைத்து ’இரண்டு பேர் வருவார்கள், இரத்தம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுங்கள்’ என்று நேராக அந்த மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன். போகும்வழியில் இன்னொரு நண்பனுக்கு அழைத்து விசயத்தைச் சொல்லி, அவனையும் வரச் சொல்லிவிட்டேன்.
மருத்துவமனையின் இரத்த வங்கிக்குச் சென்ற பிறகுதான் எந்த நோயாளிக்காக வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. நான் சென்ற மருத்துவமனைக்கு அழைத்து சுலோச்சனா அக்காவின் எண்ணை வாங்கி, நோயாளியின் பெயரைக் கேட்டுக்கொண்டு இரத்தம் வழங்கியாகிவிட்டது.
அழைத்ததும் வந்த நண்பனுக்கும் நன்றி சொல்லிவிட்டு நானும் வெளிவந்துவிட்டேன்.
மூன்று நாட்கள் கழித்து அந்த மருத்துவமனையின் மருந்துக்கடை பொறுப்பாளர் அலைபேசியில் அழைத்தார். வழக்கமாக, ஆர்டர் ஏதாவது என்றால் மெசேஜ் போட்டுவிடுவார், ஆர்டர் போட்ட மருந்து கிடைக்கவில்லை என்றால், அழைப்பது வழக்கம். எந்த மருந்து போய்ச் சேரவில்லை என்று தெரியவில்லையே என்ற குழப்பத்துடனேயே அவரது போனை எடுத்துப் பேசலானேன்.
எப்போதும்போல பிஸியா, எங்க வேலை, சாப்பிட்டாச்சா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
"என்னண்ணே, எதும் ஆர்டர் வரலையா, சப்ளை ஆகல, அதான் கூப்பிட்டீங்கனு நினைச்சேன்" என்றேன்
"இல்ல, பழனி ஒரு தேங்க்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றார்.
எனக்கு எதுக்கு நன்றி சொல்கிறார் என்று புரியவில்லை.
"இல்ல வீட்ல சொன்னாங்க, நீங்கதான் இரத்தம் கொடுத்தீங்கனு"
"யார் வீட்லண்ணே"
"என் வீட்ல WIFEட்ட பேசுனீங்களாமே" என்று கேட்டார்.
"அண்ணே, நான் இரத்தம் கொடுத்தேன், யார் உங்க WIFEனே தெரியாதே" என்றேன்
"கிளினிக்ல வச்சு பேசுனீங்களாமே"
"ஓ.. அந்தக்காவா... அப்ப உங்களுக்குத்தானா?" என்று அதிர்ச்சியானேன்.
"யாருனே தெரியாமத்தான் இரத்தம் கொடுத்தீங்களா?" என்றார்.
"அண்ணே, யாரோ ஒரு அக்கா, நிக்கிறாங்க அழுதுட்டு இருந்தாங்க, டாக்டர்கூட இரண்டு மூன்று ப்ளட் பேங்க்ட்ட பேசிட்டு இருந்தாங்க, என்னால முடிஞ்சத செய்யலாமேனு, கொடுத்தேன், உங்க பேர்தான் பேஷண்ட் லிஸ்ட் ல இருந்ததுகூட எனக்கு ஒட்டல பாருங்க" என்றேன்.
"நீங்க நானு நினைச்சுத்தான் வந்தீங்கனு நினைச்சேன், யாருனே தெரியாம வந்திருக்கீங்க, தேங்க்ஸ் பழனிக்குமார்" என்றார்.
நான் ஒரு கருவி. நான் ஒரு சாட்சி. நான் சதா ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன்.
அன்று நான் மட்டுமல்ல, என்னுடன் யார் யாரோ, யார் யாருக்கோ குருதிக்கொடை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
வாழ்வதற்கான நம்பிக்கை நீளும்
ரோஜாவைத் தழுவ நீளும் கை, முள்ளை மட்டும் பார்க்கும் வழக்கம் கொண்டது. முள்ளை விலக்கி , மலரைத் தீண்டும் மென் உணர்வுகளும் உண்டு.
ஆலய வாசலில் யாசகம் கேட்டு நிற்பவர்களின் கண்களுக்கு எத்தனை எத்தனைப் புறக்கணிப்புகளுக்கான கைகள் தெரிகின்றன. ஆனாலும் ஏதோ ஒரு கை அவர்களுக்கான அபயக்கரமாக நீளும் என்ற நம்பிக்கைதானே அவர்களை வாழ்விக்கிறது.
புறக்கணிப்புகளைத் தவிர்த்து நம்பிக்கைக்குரிய கைகளைக் காண்பதே வாழ்வியல்.
காலை நடைபயிற்சி செல்லும்பொழுது மதுரை தெப்பக்குளம் அருகே வைகை ஆற்றுப்பாலத்தில் தினமும் ஒருவர் காகங்களுக்குத் தீனி வைக்கிறார். கிட்டத்தட்ட அவரது கைகளிலேயே அலகால் கவ்விக்கொள்ளும் காகங்கள் உண்டு. எத்தனையெத்தனை பேர் காகங்களை விரட்டுவார்கள், ஆனால் தீனி வைக்கும் மனிதனைக் கண்டுகொள்கிறது காகங்கள்.
நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பார்கள்.
அப்படித்தான் அல்லவைகளை அகற்ற அகற்ற நல்லவைகள் மட்டுமே கண்ணில் படும். அப்படித்தான் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரியவரும்.
இந்த உலகம் கெட்டவர்களால் நம்பிக்கை இழக்கும்போது அங்கு காகங்களுக்குத் தீனி வழங்க ஒருவர் தென்படுவதுபோல, ஆலய வாசலில் திடீரென வண்டியை நிறுத்தி அங்கு வீற்றிருக்கும் அனைவருக்கும் உணவு தந்துவிட்டு நன்றியைக்கூட எதிர்பாராமல் கிளம்பிவிடுபவர்கள் இருப்பதுபோல, இன்னும் இன்னும் நல்லவர்கள் தென்பட்டு இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை அளிப்பார்கள்.
நீங்கள் அப்படி நம்பிக்கையை மற்றவர்களுக்கு அளித்ததுண்டா?
(டைரிக்குறிப்பு தொடரும்..)

