\
oru marunthu virpanai prathinithiyin diary kurippu 11
Model ImageGoogle Gemeni

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 11 | மனிதகுல வெற்றி எது?

மனித குலத்தின் ஆகச்சிறந்த பண்புகளில் ஒன்று மனிதத்தோடு இருத்தல் ஆகும்.
Published on: 

நிறைய நண்பர்கள் கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக அந்தச் சிறுவனுக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார்கள். ஏதோ ஒரு குக்கிராமத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளியின் நான்கு வயது மகனிற்கு இரண்டு நாட்கள் காய்ச்சல் மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகளால் அருகிலிருந்த ஊரில் சோதனை செய்தபோது புற்றுநோய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டதனால் அந்தத் தொழிலாளியின் நிலையறிந்து அவரது மகன் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் எனக்கு அழைத்திருந்தார்.

மரணத்தின் பிடியில் இருந்த புற்றுநோய் பீடித்த தாயைக் கவனித்துக்கொண்ட மகனொருவர் எனக்குத் தெரியும். ’புற்றுநோயின் தீவிரத்தன்மை வளர்வதற்குள் கண்டறிந்து அதனுடன் போராடி சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஓரளவிற்குத் தேறிவந்துவிடலாம், நோயின் தீவிரத்தன்மை முற்றிய பிறகுதான் கண்டறிகிறார்கள் என்றால், மருந்து ஓரளவிற்குத்தான் வேலை செய்யும். நோயின் கொடுமையான பிடியில் சிக்குவதைவிட மரணிப்பது எவ்வளவோ மேல்’ என்றார். வலி மிகுந்த வார்த்தைகள்தான். ஆனால், வலியைச் சதா அனுபவித்துக்கொண்டிருக்கும் நோயாளிக்கு அது விடுதலை அல்லவா! புற்றுநோய் எதனால் வருகிறது, அதைத் தடுப்பது எப்படி என்றுலாம் அரசாங்கங்களும், தன்னார்வலர்களும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Model Image
Model Imagegoogle gemeni

என் நண்பனிடம் இதைப் பகிர்ந்தபோது, ’அந்தச் சின்னப்பையன் என்னடா பண்ணான், அவனுக்குலாம் புற்றுநோய் வர’ என்று கவலைப்பட்டுக்கொண்டான்.

அந்த ஆசிரியர் எனக்கு அனுப்பிய ரிப்போர்ட்டை எனக்குத் தெரிந்த ஒரு குடும்ப மருத்துவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். ’இது, உடனடியாக ஒரு புற்றுநோய் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டிய பிரச்னை’ என்று பதில் அனுப்பியிருந்தார். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் புற்றுநோய் மருத்துவர். அவருக்கு அனுப்பியிருந்தேன். தொடர் அறுவைச்சிகிச்சை என அவரை என்னால் அணுகமுடியவில்லை.

தொடர்ச்சியாக ஒரு மருத்துவருக்கு அழைப்பது என்பது அவரைத் தொந்தரவு செய்வதாகும். மருத்துவரிடம் அந்த ரிப்போர்ட் பற்றி தெளிவான ஒரு விளக்கத்தை நான் பெறுவதற்கு முன்பே மூன்றாவது முறையாக அந்த ஆசிரியர் என்னை அழைத்தார்.

"சார் , கேட்டீங்களா?" என்றார்.

"டாக்டர், பிஸியா இருக்காங்கபோல, தொடர்புகொள்ள முடியல, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றேன்.

"இல்ல சார், எனக்குத் தெரிஞ்ச சார் மதுரைல இருக்கார், அவர் இப்ப யார்டயாவது கேட்டுச் சொல்லிருவாருனு அந்தக் குழந்தையோட அப்பாவ இங்கதான் நிப்பாட்டி வச்சிருக்கேன், நீங்க சொன்னதும் மதுரைக்குக் கிளம்பிருவாங்க" என்றார்.

கிட்டத்தட்ட இது ஓர் அழுத்தமான சூழ்நிலையாகப்பட்டது. எங்கோ யாரோ ஒருவருக்குப் புற்றுநோய்தான், இன்னும் சொல்லப்போனால், இதை என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த ஆசிரியர்கூட, "யாரோதான் எனக்கு. அவரை நான் பார்த்ததுகூடக் கிடையாது. நானிருக்கும் ஊர்கூடக் கிடையாது. எங்கோ தொலை தூரத்தில் நிற்பவர்கள்தான். ஆனால், ஒரு குழந்தையின் வலியும் வேதனையும் இங்கே என் கைகளுக்கு வெளியே தொடும் தூரத்தில் ஓடிக்கொண்டிருப்பதாக உணர்வு எழுந்தது.

நம்மை அடுத்தவர்களிடமிருந்து எவ்வளவு பிரித்து வைத்துக்கொண்டாலும், நமக்கு அடுத்தவர்பால் எழும் உணர்வுகளைப் பிரிக்க முடியாது. மனித குலத்தின் ஆகச்சிறந்த பண்புகளில் ஒன்று மனிதத்தோடு இருத்தல் ஆகும்.

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரும், தொழில் முனைவருமான JIM ROHN அவர்களது கூற்று ஒன்று இருக்கிறது. "நம்மைச் சுற்றிப் பெருஞ்சுவரை எழுப்பித் துயரங்களை அதற்கு வெளியே நிற்கவைக்க முயற்சி செய்தோம் என்றால், அந்தச்சுவர், நமக்கான மகிழ்ச்சியையும் வெளியே நிற்கவைத்துவிடும்" .

மனிதனின் வாழ்க்கை-சுகம், துக்கம் கலந்துபோன வலைப்பின்னல். சோப்புக்குமிழி போன்றதுதான் வாழ்க்கை. இன்னும் சொல்லப்போனால் அளவுக்கு ஊதி அழகு பார்க்கும் பலூன் போன்றதுதான். இருக்கும் கொஞ்சகாலம் அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்கு ஏதாவது செய்யமுடிகிறது என்றால் வாழ்க்கை அர்த்தமயமாகிறது.

"சார்..." என என் சிந்தனையிலிருந்து என்னை வெளியேற்றினார் அந்த ஆசிரியர்.

"பக்கத்துலதான் அந்தக் குழந்தையின் அப்பா இருக்கிறாரா?" கேட்டேன்.

"ஆமா சார், பேசுறீங்களா" என்றார்.

மகன் புற்றுநோயைச் சுமக்க, அதை அப்பன்காரன் நெஞ்சில் சுமக்க, அவரிடம் என்ன பேசுவது என்று யோசிப்பதற்குள்...

"வணக்கம்ண்ணே..." என்று குரல் மாறிக் கேட்டது. நான் அந்தக் குழந்தையின் அப்பாவின் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

"வணக்கம், பையன் இப்ப எப்படி இருக்கான்?"

"படுத்துருக்காண்ணே, முதுகுல எலும்புல ஏதோ கேன்சர் பரவிருக்குன்றாங்கண்ணே.. இவன் வலி வலினு சொன்னப்ப, ஏதோ சும்மா சொல்றானு நினைச்சிட்டேன்.. இப்ப படுத்துருக்கான், ஆட்டுக்கு வேப்பங்கொல மாட்டிவச்சிருப்பேன், அத எடுத்து விளையாடிட்டுஇருப்பான், இப்ப முதுகுல அரிக்குது, வலிக்குது, வேப்பங்கொலைய வச்சு தடவிக்கொடுனு கேட்டுட்டே இருக்கான், வேப்பங்கொலைய வச்சு தடவுனா வலி குறையும்னு வீட்லதான் கூட இருக்காங்க" என்றார்.

வேப்பங்கொலைக்கு கேன்சர் தரும் வலி குறையாது என்பதை இவர்களுக்கு எப்படிச்சொல்வது? மனதிற்குள் அங்கிங்குமாக ஒரு சின்ன பையன் ஓடிக்கொண்டு திரிந்தான். மூளைக்கு வெளியே விளிம்பில் யாரோ ஒரு குட்டிப்பையன் ஒரு கட்டிலில் படுத்திருப்பதும் அவனது முதுகில் யாரோ ஒரு பெண் வேப்பங்கொலையால் தழுவுவதும் தெரிய முற்பட்டது.

சமயத்தில் நீங்கள் யாருக்காகவாவது கடைசியாக இரக்கப்பட்டிருக்கிறீர்களா? யாருடனாவது கருணையுடன் அமர்ந்து அவர்களது வாதைகளை அவர்கள் வாயால் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? யாராவது முகம் தெரியாதவரை விடுங்கள். உங்களுக்குப் பரிச்சயமான யாரோ ஒருவர் உங்கள் முன் வந்து அவர்களது வலிகளைப் பகிரும்போது அவரை ஆற்றுப்படுத்தியிருக்கிறீர்களா? இந்தப் பிரபஞ்சத்தின் அளப்பரிய சாதனைகளைவிட உயர்ந்தது ஒருவரின் வலியிலும் வேதனையிலும் உடனிருப்பது.

"அண்ணே, நீங்க ஏதாவது டாக்டர் சொன்னீங்கனா, போய்ப் பார்த்துருவோம்" என்று மறுபடியும் என் சிந்தனைகளைக் கலைத்தார்.

யாருக்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தேனோ, அந்த மருத்துவரின் முகவரி தந்து அவரைச் சென்று பார்க்கச்சொன்னேன்.

அவர்கள் மறுநாள் கிளம்புவதாகவும் கூறியிருந்தார்கள்.

google gemeni

மறுநாள் எதேச்சையாக தவறவிட்ட அழைப்புகளைப் பார்த்த என் நண்பரும் மருத்துவருமானவர் காலையில் அழைத்தார். அந்த நோயாளியின் கதைகளைச் சொல்லி ரிப்போர்ட் அவருக்கு அனுப்பிவைத்ததையும் சொல்லியிருந்தேன். முழுக்கப் பார்த்துவிட்டு, அந்தக் குழந்தைக்கு என்ன மாதிரியான அதாவது ஹீமோதெரபி, அறுவைச்சிகிச்சை, கதிரியக்க இவற்றில் எந்த மாதிரியான சிகிச்சை தந்து பார்க்கலாம் என்பதோ, அல்லது அந்தக் குழந்தையின் பிழைத்தல் விகிதம் எப்படி இருக்கும் என்பதோ, அந்தக் குழந்தையை நேரில் பார்த்த பிறகுதான் தெரியும், மேலும் புற்றுநோய் கண்டறிதல் சோதனை போக அது எவ்வளவு தீவிரம் அடைந்திருக்கிறது என்பதைக் கண்டறியும் சோதனையும் செய்தாக வேண்டும். இதுவே அவர்களுக்குப் பெரிய பொருளாதாரச் சுமையாக மாறிவிடுமே என்றார். "சரி , வரட்டும்" என்றவர் அலைபேசியைத் துண்டித்துவிட்டார்.

காலையில் அந்தக் குழந்தையின் குடும்பம் மருத்துவரைப் பார்த்துவிட்டு சில சோதனைகளைச் செய்துவிட்டு மாலை நான்கு மணிக்கு அந்தக் குழந்தையின் அப்பா அழைத்தார்.

"சார், ரொம்ப நன்றி சார்" என்று அழுத குரல் தான் கேட்டது.

"என்னாச்சு?" என்று கேட்டேன்.

"காலைல உள்ள நுழஞ்சதும் , இந்த ஊரானு கரெக்டா கேட்டார், உங்க பேர சொன்னதும், பேசுனார்னு சொன்னார், ஒரு டெஸ்ட் எடுக்கச்சொன்னாங்க, காசு இருக்கானு கேட்டார், ஐயாயிரம் வச்சிருந்தேன், ஊர்லருந்து வாங்கிட்டு வந்தது வச்சிருந்தத சொன்னேன், அப்புறமா டெஸ்ட் எடுக்க போயிட்டோம், அங்க அவங்க எங்கட்ட காசு வாங்கல, சாயங்காலமா டாக்டர வந்து பார்த்தோம், இங்க நிறைய செலவாகும். நான் ஒரு லெட்டர் தரேன், என் நண்பன் ஒருத்தன் சென்னைல இருக்கான், அவன் எனக்கு சீனியர், ஒரு ட்ரஸ்ட் ஹாஸ்பிட்டல் இருக்கு, உங்க ரிப்போர்ட்ட அனுப்பிட்டேன், அங்க போங்க, செலவு நீங்க தங்குற செலவுதான், ட்ரீட்மெண்ட் செலவ அவங்க பாத்துக்குவாங்க, எல்லாமே இந்த லெட்டர்ல இருக்கு, போய்க் காண்பியுங்க, ஏதாவது சிக்கல்னா என்னைய கூப்பிடுங்கனு நம்பர் தந்திருக்கார் சார்" என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.

மருத்துவர்கள் என்றாலே பணத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்ற பொது புத்தியின் நடுவே இந்தமாதிரி மருத்துவர்கள் பணத்திற்காக அல்லாமல் நோயாளியின் நன்மைக்காக யோசிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இது நடந்து ஐந்தாறு ஆண்டுகள் நடந்தேறிவிட்டன. எப்போதாவது அந்த ஆசிரியர் அழைப்பார், அந்தப் பையன் எப்படி இருக்கான் என்று கேட்பேன், அவர் பள்ளியில்தான் படிக்கிறான் என்பார்.

மற்றொரு விசயம், அந்தப் பையனின் அப்பா அழைத்துப் பேசிய அன்று இரவு மருத்துவருக்கு அழைத்தேன், அவர் ஏதோ அறுவைச்சிகிச்சையில் இருந்திருப்பார் போல, ஃபோனை எடுக்கவில்லை." நன்றி அந்தக் குடும்பத்திற்காக" என்று வாட்சப்பில் அனுப்பியிருந்தேன். இரவு ஒரு மணிக்கு மேல் என் வாட்சப்பில் குட்டியாக ஒரு இதயம் போட்ட ஸ்மைலி அன்பால் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

இந்தத் தொடரின் முந்தையை பகுதியைப் படிக்க: ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 10 | நோயாளிக்காக ஓடும் மனிதம்!

(டைரிக்குறிப்பு தொடரும்..)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com