ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 10 | நோயாளிக்காக ஓடும் மனிதம்!
"வாழ்க்கை சுவாரஸ்யமாய்ப் போவதற்கு ஏதாவது உபாயம் தரமுடியுமா?" என்று நண்பர் கேட்டார்.
"உனக்குப் பதில் விளையாட்டிற்கு வேண்டுமா.. இல்லை, சீரியஸாவே வேண்டுமா?" என்று கேட்டேன்.
"முதலில் விளையாட்டாய்ச் சொல்; பிறகு சீரியஸாகச் சொல் " என்றார்.
'வாழ்க்கை சுவாரஸ்யமாய்ப் போகணும், அவ்வளவுதான, விளையாட்டாய்ச் சொல்றேன்.. உன் மனைவியிடம் அவர் சமைத்த உணவில் உப்பு இல்லை; காரம் இல்லை என்று எதையாவது சொல்' என்றேன்.
"நல்ல ஐடியா, ஆனா ரெண்டு நாளைக்குத்தான் சுவாரஸ்யமா போகும்" என்று அலுத்துக்கொண்டார்.
"அப்படினா, மனைவியை அழைத்துக்கொண்டுப் போகாமல் அவருக்கு நீயே துணி வாங்கிக் கொண்டுவந்து கொடு" என்றேன்.
"முடிஞ்சது சோலி, உனக்கு எதுக்கு இது வேண்டாத வேல, இத்தன வருசத்துல எனக்கு எது பிடிச்ச கலர்னு தெரியலயா, என் அளவு தெரியலயா, அது இதுனு ரெண்டு மாசம் ஓடுமே" என்றார்.
"இன்னும் சுவாரஸ்யம் வச்சிருக்கேன், வேணும்னா சொல்லுங்க, ஐடியா நிறைய தர்றேன்" என்றேன்.
"ஐயா சாமி, வேணாம், சீரியஸா சொல்லுங்க" என்றார்.
கீழ்க்காணும் நிகழ்வை அவருக்குச் சொன்னேன்.
மருந்துக் கடையில் பங்குதாரராக இருக்கும் ஓர் அண்ணன் எனக்குப் பழக்கம். ஆனால் தொழில் ரீதியாக அவர் ஓர் ஆசிரியர். ஒரு மாவட்டமும் இன்னொரு மாவட்டமும் சேரும் இடத்தில் உள்ள குக்கிராமப் பள்ளியில் அவருக்கு வேலை. அதை ஏன் இவ்வளவு விவரமாகச் சொல்கிறேன் என்றால், பொதுவாக மாவட்டங்களின் எல்லையில் உள்ள கிராமங்களுக்கு வசதி வாய்ப்பு பெருகுவதில் நிறைய குழப்பங்கள் இருக்கும். அவருடன் வேலை பார்த்திருந்த இன்னொரு ஆசிரியர் இதைப் போன்றே குக்கிராமம் மற்றும் வேறு மாவட்டத்திற்குச் சென்றுவிட்டார். இவர் மருந்துக்கடை வைத்திருப்பதால் பல மருந்துகள் பற்றி இவரிடம் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்வார்போல.
ஒரு முறை அவருக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட, அது பற்றி இந்த அண்ணனிடம் கேட்க, தனக்குத் தெரிந்ததுபோக அதிகமான தகவல்களுக்காக, என்னை அழைத்திருந்தார். என் அலைபேசி எண்ணை அவரது நண்பரிடம் தந்துவிடுவதாகவும், மதுரையில் நல்ல மருத்துவமனை ஒன்றை அவருக்குப் பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஒரு நல்ல மருந்துக்கடைக்காரர், மருந்துச்சீட்டுக்கு மருந்துகளை எடுத்துத் தருவாரே தவிர, 'உடல் பிரச்னைகளுக்கு மருத்துவரைச் சென்று பாருங்கள்' என்று சொல்லிவிடுவார், அதைத்தான் அந்த அண்ணனும் சொல்லியிருக்கிறார்.
அந்த ஆசிரியர் வருடத்திற்கு ஒருமுறையாவது அழைத்து விடுவார். அப்போதைக்கு இருக்கும் அவரது உடல் நலப் பிரச்னைகளைக் கூறுவார். நான் அது சார்ந்த ஏதாவது மருத்துவரைப் பரிந்துரைப்பேன். அல்லது அவரே சிலரிடம் கேட்டு, 'மருத்துவமனை முகவரி, தொலைபேசி எண் இவற்றை வாங்கித் தர முடியுமா' என்று கேட்பார். தெரிந்த மருத்துவர் என்னும்பட்சத்தில் அவரிடமே அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தருவதும் உண்டு.
இப்படிப் போய்க் கொண்டிருக்கும்போது, ஆசிரியர் அவருக்கு மட்டுமல்ல, அவரது உறவினர்களுக்காகவும், உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்காகவும், ஊரில் தெரிந்தவர்கள் 'யாருக்காவது ஒன்று' என்றால் அது பற்றியும் கேட்பார்.
இப்படியான உரையாடல் எப்படி வந்து நிற்கிறது என்றால், இவர் ஒரு நோய் பற்றிக் கேட்பார், நான் ஒரு மருத்துவரைப் பரிந்துரைப்பேன். அவர் சென்று குணமாகி, தன் சிகிச்சைக்காகப் பார்ப்பதுடன், தன் உறவினர்களுக்கு அது சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்தால் அவர்களையும் அந்த மருத்துவர்களுக்கு அவரே பரிந்துரைத்துவிடுவார். (இதை மார்க்கெட்டிங்கில் REFERRAL SALE என்போம். ஒரு வாடிக்கையாளர் திருப்தி அடைந்து அவரே மற்ற வாடிக்கையாளர்களைப் பரிந்துரைப்பது.)
விற்பனையின் மாயாஜாலமே அதுதான். எனக்கு மருத்துவரைத் தெரியும். பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக என்னிடம் இது சார்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த ஆசிரியரை நான் ஒருமுறைகூடப் பார்த்ததில்லை. அவர் மருத்துவரைச் சந்தித்ததையோ, அவர் மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதோ எந்த மருத்துவருக்கும் தெரியாது. எனக்கும் யாரையும் தெரியாது. யாருக்குத் தெரியும், நான் காத்திருக்கும் ஒரு மருத்துவமனையில், என் அருகிலேயே அந்த நோயாளி நான் பரிந்துரைத்திருந்த மருத்துவரைப் பார்க்க வேண்டி அமர்ந்திருக்கலாம்.
பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்னொருவருடன் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஓர் இணைப்பு இருக்கத்தான் செய்யும். மனிதன் ஒரு சமூகப்பிராணி என்று அதை வைத்துத்தான் சொல்லியிருப்பார்கள்போல.
இந்தப் பிணைப்பை மனிதகுலம் எப்படியெல்லாம் பயன்படுத்தும், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் போவார்கள், காவல்துறை நிறுத்துவார்கள், "எனக்கு இவரைத் தெரியும்" என்பார்கள்.
மாநகராட்சி அனுமதி இல்லாமல் கடை நடத்துவார்கள், ’உரிமம் இல்லையா’ என்று அதிகாரிகள் கேட்பார்கள், "லேடன்ட்ட பேசுறியா" என்று வடிவேல் கேட்பதுபோல உயரதிகாரியின் பெயரைச் சொல்வார்கள்.
சுயலாபத்திற்காக ஒருவரது பழக்கத்தை மாசுபடுத்துதல் என்பது பொதுபுத்தி. அதையும் தாண்டித்தான் மனித குலம் ஒரு மகத்துவமான சக்தி என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
எனக்கு அந்த ஆசிரியர் ஒரு முறை அழைத்தார்.
"சார், நான் வேலை பார்க்குறது ஒரு குக்கிராம ஸ்கூல் சார், கஷ்டப்படுற கிராத்துப் பசங்கதான் வருவாங்க, மூணு நாளா ஒரு பையன் வரல, ஏன்டா வரலனு ஸ்கூல்ல கேட்பாங்கனு வரப்ப அவனோட அப்பாவோட வந்தான், அவங்க அப்பாக்குப் பெரிய தொழில்லாம் கிடையாது, யாராவது கூப்பிட்டா வரப்புக்குப் போவார், ஆடுகள மேய்ப்பார், கிடைக்கிற வேலைய செய்வார். அவரோட இரண்டாவது மகனுக்கு, நாலு வயசு சார், இரண்டு நாளா காய்ச்சல் இருந்திருக்கு, பக்கத்தூருல ஒரு ஆஸ்பத்திரில பாத்திருக்காங்க, அங்க அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்களாம், இரண்டாவது நாள்ல அந்தப் பையன் முதுகுலாம் வலிக்குதுனு சொல்லிட்டு இருந்திருக்கான், பக்கத்தூர்ல சும்மா காமிக்க போயி அட்மிட் ஆனதுனால இவன ஸ்கூலுக்கு அனுப்ப முடியலனு” சொன்னார்.
”இப்ப அந்தச் சின்னப் பையன் எப்படி இருக்கானு” கேட்டேன், அதுக்கு அந்த ஆளு கண் கலங்கிட்டாரு... ”அந்தப் பையனோட ரிப்போர்ட்ட வாங்கி அனுப்பிருக்கேன், நீங்க யாராவது டாக்டர்ட்ட கேட்டுச் சொல்ல முடியுமா?" என்றார்.
நான், பொதுவாக இந்த மாதிரி சில உறவினர்களோ, நண்பர்களோ உதவி கேட்டால், அவர்கள் அனுப்பும் ரிப்போர்ட்டை ஒருமுறை பார்ப்பது வழக்கம். எனக்கு அந்த மெடிக்கல் வார்த்தைகள்லாம் புரியாது, அவ்வளவு ஞானம் இல்லை. ஆனால் மருத்துவரிடம் அனுப்பும்போதோ அல்லது கேட்கும்போதோ, இன்னார், இந்த ஊர், இவ்வளவு வயது, இந்தச் சோதனை என்று ஓரளவிற்காகவாவது சொல்ல வேண்டும் என்று பார்ப்பது வழக்கம். மேலும் அறிவியல்ரீதியாக அது என்ன நோய், எப்படி ஏற்படுகிறது போன்ற அறிவியல் விசயங்களை என் தொழில் மேம்பாட்டிற்காகத் தெரிந்துகொள்வதைப் பழக்கமாக வைத்திருப்பதால் அந்த ரிப்போர்ட்டைப் பார்த்தேன்.
கிடைக்கும் தொழிலான, இன்னொருவரின் வரப்பு செல்வது, அவர்களது ஆடுகளைப் பராமரிப்பது, போன்ற சமூகத்தின் பொருளாதார விளிம்பில் இருக்கும் கூலித் தொழிலாளியின் நான்கு வயது சிறு மகனிற்குப் புற்றுநோய் இருக்க வாய்ப்புகள் என சந்தேகக்கூறுகளை அந்த ரிப்போர்ட் பட்டியலிட்டிருந்தது.
ரிப்போர்ட்டைப் பார்த்த மாத்திரத்தில் ஆசிரியரை அழைத்தேன்.
"சார், ரிப்போர்ட்ல என்ன இருக்கு சார்?" அவர் முந்திக்கொண்டு கேட்டார்.
"பையன் எப்படி இருக்கான்?" என்று கேட்டேன்.
”அந்த ஆஸ்பத்திரில கேன்சர் மாதிரி இருக்கு, ’மதுரை போங்கனு’ லெட்டர் தந்திருக்காங்களாம்” என்றவர், "சார்.. ” என்று இழுத்தார்
"டாக்டர் யார்ட்டயாவது கேட்டுச் சொல்றேன்” என்பதற்குள்,
"சின்னப் பையன் சார், பொழச்சிருவானா?" என்றார்.
வாழ்க்கை நமக்குத் தரும் அபத்தங்களின் அழகே நம் விருப்பங்களைப் பதிலாக தருவார்கள் என்று நினைத்துக் கேள்வி கேட்பதுதான்.
எனக்கு மட்டுமல்ல, இந்த வரியை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்குக்கூட அந்தச் சிறுவன் பிழைத்துவிடவேண்டும் என்றுதான் விருப்பமிருக்கும்.
புற்றுநோயின் தன்மையை வைத்து மருத்துவ நிபுணர்கள் ஓரளவிற்குக் கணித்தாலும், அந்தச் சிகிச்சைக்கு மனிதனின் உடலியல் எப்படி ஒப்புக்கொடுக்கும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது. இந்தத் தத்துவார்த்த எதார்த்த சிந்தனைகளை எல்லாம் " சின்னப்பையன் சார், பொழச்சிருவானா?” என்று கேட்டு அலைபேசியில் காத்துக்கொண்டிருக்கும் ஆசிரியருக்குச் சொல்லவா முடியும்?
”பார்க்கலாம் சார், யாராவது மருத்துவரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று அலைபேசியைத் துண்டித்துவிட்டேன் .
ஆங்கிலத்தில் SYMPATHY , EMPATHY என இரண்டு ஆங்கில வார்த்தைகள் இருக்கின்றன. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
தன் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன் ஏன் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்ற ஒரு கேள்வி கேட்கிறார். தன் தம்பியின் உடல் நிலையைக் காரணம் காட்டி அவன் விடுமுறை எடுத்திருக்கிறான். அவனது அப்பாவிடம் தம்பியின் உடல் நிலை குறித்து விசாரிக்கிறார், ஐயோ பாவம், என்று மட்டும் உணர்ந்திருந்தால், அதுதான் SYMPATHY. ஆனால், அச்சிறு குழந்தையின் நோய் பற்றிக் கேட்டதும் பதைபதைத்து ஒரு நல்ல மருத்துவரிடம் அனுப்பி அவனைக் காப்பாற்ற துடிக்கிறதல்லவா, அதுதான் EMPATHY.
இப்போது நான் ஒருபோதும் பார்த்திராத அந்த ஆசிரியரின் கற்பனை முகம் மறைந்து உருவமற்ற ஒரு குழந்தையின் முகம் என் மூளைக்குள் மின்னுகிறது. முதுகெலும்பில் பரவியிருப்பதாக காணப் பெற்ற அந்த ரிப்போர்ட்டும், ’முதுகு ரொம்ப வலிக்குதாம் சார், படுத்தே இருக்கானாம்’ என்ற ஆசிரியரின் குரலும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.
ஒருவரின் உணர்வை உணர, அவரை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவரின் வலியைப் புரிந்துகொள்ள அவர் உங்களுக்குத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றுகூடத் தேவையில்லை.
கட்டுரையின் முதல் வரிக்குச் சென்று பாருங்கள், சுவாரஸ்யம் பற்றிக் கேட்ட நண்பன் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, "என்னடா வாழ்க்கை இது" என்று நான் சொல்வதை நிறுத்தக் கேட்டான்.
நீங்கள் நிறுத்தச் சொன்னால் உங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் நின்றுவிடுகிறதா என்ன?
பரமபதம் விளையாடுகிறோம். ஏணிகள் எத்தனை, பாம்புகள் எத்தனை என்று தெரிந்துதான் விளையாடுகிறோம். பாம்பின் வாயில் அகப்பட்டுக் காலில் விழும்போது விளையாட்டாய் இருந்தாலும் பாம்பின் அருகே பதைபதைப்பு வருகிறது அல்லவா?
வாழ்க்கையிலும் சில சோழிகள் உருட்டப்படுகின்றன, எப்போது தாயம் விழும் என்றுதான் காத்திருக்கிறோம், சில சமயங்களில் எது தாயம் என்றே தெரியாமல்கூட நழுவ விட்டிருக்கிறோம்.
அந்தச் சின்னப் பையன் விசயத்தில் சோழிகள் உருட்டப்பட்டு கேன்சர் என்பது உறுதியானது. அடுத்தவர்களுக்கு உரிமையான ஆடுகளை மேய்க்கப்போன தகப்பனுக்கு செய்தி சொல்லி அனுப்பி, மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறான். ஒரு கடிதம் தந்து உங்கள் சின்னப்பையனுக்குப் புற்றுநோய், ’உடனே பெரியாஸ்பத்திரி கொண்டு போங்க’ என்றதும் அந்த மேய்ப்பனே வழி தவறிய ஆட்டைப் போல நின்று கொண்டிருக்கிறான்.
இந்தச் சோழியில் தாயம் விழுந்ததா.. காத்திருங்கள்...
(டைரிக்குறிப்பு தொடரும்...)

