'நந்தினி' Vs 'அமுல்' மோதல்.. பால் பிரச்னையால் சூடேறும் தேர்தல் களம்! கர்நாடகாவில் நடப்பது என்ன?

கர்நாடகாவில் தேர்தல் களைகட்டத் தொடங்கியிருக்கும் நேரத்தில்தான், இடஒதுக்கீடு மற்றும் இன்னும் பல பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நந்தினி, அமுல் பால்
நந்தினி, அமுல் பால்pti

224 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (மே) 10ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. என்றாலும், தேர்தலுக்கு இடையே இடஒதுக்கீடு மற்றும் நந்தினி பால் விவகார பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கி ஆளும் கட்சிக்கு தலைவலியை உண்டாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் அதிகாரப்பூர்வ பிராண்டாக ’நந்தினி’ பால் கொள்முதல் உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் பிராண்டாக ‘ஆவின்’ (Aavin) பால் இருப்பதைப் போன்று, கர்நாடகாவில் ’நந்தினி’ பால் பிராண்டாக உள்ளது. இந்த நிலையில், குஜராத் பிராண்டான ’அமுல்’ பால் பொருட்களை கர்நாடகத்தில் திணித்து, ’நந்தினி’யை அழிக்க முயற்சி நடப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மக்கள் பலரும் 'நந்தினி’யை விரும்பும் வேளையில், கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அமுல் நிறுவனம் ட்விட்டரில், ’பெங்களூருவில் விரைவில் அமுல் பால் மற்றும் தயிர் விற்பனை செய்யப்படும்’ எனப் பதிவிட்டிருந்ததுதான் தற்போது பிரச்சினையாக வெடித்துள்ளது. ’அமுல்’ வருகையால் ’நந்தினி’யின் விற்பனை சரியும் என்றும், கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனால் கர்நாடகாவில் பலர் வேலை இழக்கும் நிலை உருவாகும் என்றும் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், ”கர்நாடகாவின் ஆளும் கட்சியான பாஜக, வேண்டுமென்றே குஜராத்தின் அமுலை இங்கே திணிக்கிறது. அமுலைவிட நந்தினி பால் மற்றும் பால் பொருட்கள் தரமானவை. எங்களிடம் தரமான ஒரு பிராண்ட் இருக்கும்போது எங்களுக்கு அமுல் எதற்கு? எங்கள் தண்ணீர்; எங்கள் மண்; எங்கள் பால் அதுதான் எங்களுக்கு வலிமை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்திலும் ‘நந்தினி’ குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

’கர்நாடகாவில் பால் பிராண்டான நந்தினியைச் சுற்றி நடப்பது என்ன?,

இந்த பிராண்டை அழிக்க பாஜக ஏன் குறியாக இருக்கிறது?,

’நந்தினி’க்கு எதிரான நடவடிக்கையை கர்நாடக பாஜக தலைவர்கள் நியாயப்படுத்துவது ஏன்?,

’நந்தினி’யை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களை கர்நாடக பாஜக தலைவர்கள் தாக்குவது ஏன்?, ’நந்தினி’யில் பால் உற்பத்தி தொடர்ந்து குறைய பாஜக வேண்டுமென்றே அனுமதித்தது ஏன்?” எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பு மொத்தம் 16 சங்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. 20,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் கர்நாடக பால் கூட்டமைப்பில் கிட்டத்தட்ட 26 லட்சம் விவசாயிகள் உள்ளனர். கர்நாடகா பால் கூட்டமைப்பானது, இந்தியாவின் 2வது மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாகும். தென்னிந்தியாவில் விற்பனை மற்றும் பால் கொள்முதல் அடிப்படையில் நந்தினி முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், அமுல் விற்பனை கர்நாடகத்துக்குள் நுழைந்தால், அது அங்குள்ள அனைவருக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்பதாலேயே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது, தேர்தல் களத்தில் பாஜகவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கும் எனச் சொல்லப்படுகிறது.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்file image

அதன்படி, ’அனைத்து கர்நாடகா மக்களும் ’அமுல்’பாலை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா பிரச்சாரத்தை முன்னெடுக்க, டி.கே.சிவகுமாரோ, ’எங்களுக்கு குஜராத் மாடல் தேவையில்லை; ஏற்கனவே எங்களிடம் கர்நாடக மாடல் இருக்கிறது’ என அதை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்கிறார். இதனால் நந்தினி - அமுல் பால் விவகாரம் இந்த அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தினர், “ ‘நந்தினி’ என்ற பிராண்ட், கர்நாடகாவில் வீட்டுப் பெயராக உள்ளது. ’நந்தினி’யின் தரம் மற்றும் உற்பத்தியின் மீது கன்னடர்கள் நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கர்நாடகா பால் கூட்டுறவுச் சங்கங்கள் பெரும்பாலும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தற்போது அதில் பாஜக கொஞ்சகொஞ்சமாய் ஊடுருவி வருகிறது. காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்டுப்பாட்டை அழித்துவிட்டு, அந்த இடத்தில் பாஜக குடியேற நினைக்கிறது.

அதனால் சமீபகாலமாக பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாஜக அரசு ஊக்கத்தொகையை அதிகரிக்கவில்லை. அதற்கு மாறாக, குஜராத்தின் அமுலைக் கொண்டுவந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ’ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற நோக்கில் பால் பிராண்டையும் பாஜக கொண்டுவர நினைக்கிறது. இதனால், கூட்டுறவுடன் இணைக்கப்பட்ட 1.25 கோடி மக்களை பாதிப்படைவர். இது பாஜகவின் மோசமான, திட்டமிடப்பட்ட சதி. அதை, அரசியல் ரீதியாகப் பயன்படுத்த நினைக்கிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்லும்” என்கின்றனர்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மைfile image

முதல்வர் பசவராஜ் பொம்மையோ, "அமுல்பால் விவகாரத்தை கையில் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம்" என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அது ஏற்கெனவே அரசியலாக மாறி, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் களத்தில் அனலை வீசி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com