சூடாகும் கோவா தேர்தல் களம்: எதிர்க்கட்சிகளை 'ஒன்றிணைக்கும்' மம்தாவின் வியூகம் எடுபடுமா?

சூடாகும் கோவா தேர்தல் களம்: எதிர்க்கட்சிகளை 'ஒன்றிணைக்கும்' மம்தாவின் வியூகம் எடுபடுமா?
சூடாகும் கோவா தேர்தல் களம்: எதிர்க்கட்சிகளை 'ஒன்றிணைக்கும்' மம்தாவின் வியூகம் எடுபடுமா?

மேற்கு வங்க மாநிலத்தை அடுத்து தற்பொழுது கோவாவிலும் கால்பதிக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். அதுவும் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த அவர் வகுத்துள்ள வியூகம் அவருக்கு கை கொடுக்குமா? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு மிக வலுவான அஸ்திவாரமாக அமைந்து இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

'எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரியான தலைமை இல்லை' என்று அரசியல் நோக்கர்கள் கருதி வந்த நிலையில், அந்த இடத்தில் தற்பொழுது முன்னணியில் இருக்கிறார் மம்தா பானர்ஜி. காரணம், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பெற்ற மாபெரும் வெற்றி. மேற்கு வங்க மாநிலத்தில் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என அவர் உறுதியாக நம்பியிருந்தார். ஆனால் இப்படியான இமாலய வெற்றி பெற்று அசைக்க முடியாத ஆட்சியாக அமைத்துள்ளார்.

இது கொடுத்த உற்சாகம் தற்பொழுது வரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி உள்ளது. அதுதான் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கேற்கும் அவரது முடிவு.

இதற்காக அவர் எடுத்த மிகப்பெரிய அடிதான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான
லூயிசேனியோ பலேரியோவை தனது கட்சியில் இணைத்துடன் பொதுச் செயலாளர் பதவியும் வழங்கிய நகர்வு. மேற்கு வங்கத்தை அடுத்து அதன் அண்டை மாநிலங்களாக உள்ள அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கவனம் செலுத்த மம்தா பானர்ஜி திட்டமிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்தபொழுது இந்த ஏழு மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றியதால் லூயிசேனியோ பலேரியோவை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டதன் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவா என இரண்டு மாங்காயையும் ஒரே கல்லில் அடிக்க மம்தா திட்டமிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் மற்றும் பிற கட்சியை சேர்ந்தவர்களும் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சி அம்மாநிலத்தில் காலூன்ற தொடங்கியுள்ளது.

இந்த நிலையில்தான் வரும் 28-ம் தேதி அரசியல் பயணமாக கோவா செல்கிறார் மம்தா பானர்ஜி. "தனிநபர்கள், அமைப்புகள், இயக்கங்கள் பிற கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மிக மோசமான கொள்கைகளை கடைபிடித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி தனது கோவா பயணத்தின்பொழுது இதை நடைமுறையில் சாத்தியமாகும் முயற்சிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மம்தாவின் இந்த செயல்பாடு வெறும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மட்டும் என்று சுருக்கிவிட முடியாது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ஒரு பெரிய வெற்றியை மம்தா பானர்ஜி ஈட்டும் பட்சத்தில் தேசிய அளவில் அவரது தேர்தல் வியூகங்கள் மிகப்பெரிய கவனம் பெறும். இதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தவிர்க்க முடியாத சக்தியாக மம்தா பானர்ஜி மாறுவார்.

கடந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தலின் பொழுது கூட மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 13 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் வென்று யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலைதான் இருந்தது. பிறகு உள்ளூர் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன்தான் பாஜகவால் ஆட்சி அமைக்க முடிந்தது.

தற்பொழுது மம்தா பானர்ஜி களத்தில் குதிக்கிறார் என்றவுடன் சில சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தற்போது அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கோவாவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ காங்கிரஸ் மம்தா பானர்ஜிக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க கூட வாய்ப்பு உள்ளது. இதற்கு அரசியல் நோக்கர்கள் கூறும் காரணம் இயல்பாகவே உள்ள அரசுக்கு எதிரான மனநிலை மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என்ற மக்களின் மாறுபட்ட சிந்தனை.

எதுவாக இருந்தாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை, வருவது வரட்டும் என தூண்டிலை வீசியிருக்கிறார் மம்தா. அவருக்கு அதில் விலாங்கு கிடைக்கிறதா திமிங்கலம் கிடைக்கிறதா என்பதைதான் பார்க்கவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com