44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு ஐகோர்ட் அனுமதி - வழக்கு கடந்து வந்த பாதை!

44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு ஐகோர்ட் அனுமதி - வழக்கு கடந்து வந்த பாதை!
44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு ஐகோர்ட் அனுமதி - வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடுத்த ஆர்.எஸ்.எஸ்

கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளை விதித்ததுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

காவல்துறை தரப்பில் அனுமதி மறுத்தது ஏன்?

ஆனால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் கடந்த முறை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நவ.6ல் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி!

இதையடுத்து, நவம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊர்வலத்தை நடத்தும்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

காவல்துறை கொடுத்த அறிக்கை!

இந்த வழக்கு கடந்த 31-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிலவும் சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு, ஊர்வலத்தில் பங்கேற்ப்பவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபந்தனைகளை விதித்து நவம்பர் 6-ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளாதாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்ப்ட்டது.

அப்போது, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அனுமதியளிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை மீறி, பல மாவட்டங்களில் ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

”நீதிமன்றமே உத்தரவு பிறக்கும்”-நீதிபதி காட்டம்

இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவிட்டப்படி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் பிரபாகர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை என்றும், அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்ப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிட்டார்.

“தமிழகம் அமைதி பூங்கா”

அனைத்து தரப்பு மக்களையும் காப்பதுதான் அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார். அமைதியான ஊர்வலத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், அது ஜனநாயகம் உரிமை என்றும் உறுதிபட தெரிவித்தார். மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு, பேரணி அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

மேலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு மற்ற இடங்களில் ஏன் வழங்கவில்லை என காவல்துறை தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

“24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது” - காவல்துறை தரப்பு

காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

விசிக, நாம் தமிழர் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கியது இதனால்தான்!

மேலும், விசிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் பொதுக்கூட்டம், மனித சங்கிலிக்கு அனுமதி கேட்டதாலேயே அனுமதிக்கப்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ். கேட்பது பேரணிக்கான அனுமதி என்பதால், வழங்க முடியாது என தெரிவித்தார். உள் அரங்கு கூட்டம் என்றால் அனுமதி வழங்குவதில் பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். தரப்பு மாநிலத்தின் பாதுக்காப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் என்.ஆர்.இளங்கோ திட்டவட்டமாக தெரிவித்தார்.

கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிக்க பரிசீலிக்கலாமே?

கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிக்க பரிசீலிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களது உயிரை துச்சமென நினைத்தும், நேரத்தையும் தியாகம் செய்தும் தகவல்களை சேகரிக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்களை எப்படி யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிற்கு அவர் கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் உளவுத்துறையின் அறிக்கையையும் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தார்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது எனவும், பேரணிக்குதான் காவல்துறை அனுமதி வழங்க வேண்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா? வேண்டாமா? என உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நவம்பர் 4-ம் தேதி தள்ளிவைத்தார்.

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி!

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், காவல்துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன என்றும், கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைதான் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது எனவும், புதிய வழக்குகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவிலில் நாங்குநேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் எனவும், 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும், இந்த 6 இடங்களில் 2 மாதங்களுக்குப் பிறகு புதிய மனு கொடுக்கலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

- முகேஷ், சங்கீதா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com