\
Life Begins at the End of Your Comfort Zone | Diary 14
ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு 14AI

ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு 14 | சௌகரிய எல்லை முடிவில், வாழ்க்கை தொடங்குகிறது

யாருமே தேங்கிப்போனால் தோல்வியிலும் எதிர்மறை உணர்வுகளிலும் புதைந்துவிடுவார்கள்.
Published on: 

"உங்கள் சௌகரியமான எல்லையைத் தாண்டும் போதுதான் வாழ்க்கை தொடங்குகிறது" - நீல் டொனால்ட் வால்ஷ்

வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் வீரியமானவை. அவற்றைப் புரிந்துகொள்ள  முதலில்  நாம் நம்மை நம் வாழ்விற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கடைசி அத்யாயத்தில் முடித்திருந்தேன். 

சில நண்பர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் அதன் மூலம் தான் கற்றுக்கொண்ட கற்பிதங்களையும் சொன்னார்கள். 

ஒவ்வொருத்தர் வாழ்விலும் சில சுவாரஸ்யங்களும் அதன் மூலம் அவர்கள் கற்றுத் தேர்ந்த தருணமும் இருக்கும்.

23 வருடங்களுக்கு முன்னதாக வேலை நிமித்தம் கோயம்புத்தூருக்கு மாறுதல் ஆனேன். அப்பொழுது வரை வீட்டை விட்டு நெடுநாட்கள் வெளியே தங்கியதாக அனுபவமும் இல்லை. அதற்கான மனநிலையும் இல்லை. இருக்கும் வேலையைத் தக்கவைக்க வேண்டுமென்றால் கோவைக்கு மாறுதலாக வேண்டிய சூழ்நிலை. 

மதுரையிலேயே இருக்கவேண்டுமென்றால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறி மறுபடியும் வேறு நிறுவனம் ஒன்றை வேலைக்குத் தேடவேண்டும். அதுவரை வேலையில்லாமல் கொஞ்ச நாள் இருக்கவேண்டும். 

பொதுவாக, ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு வேலை நிமித்தம் மாற வேண்டியதாக இருந்தால், வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே இதை விட வேறொரு நல்ல சந்தர்ப்பமும், நல்ல நிறுவனமும் கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். 

இப்பொழுதிருக்கும் GEN Z தலைமுறையினர் சிலர் வேலை பார்க்கும் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு தான் வேறொரு  வேலையைத் தேடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. 

என் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்று செய்தி அனுப்பினால், நிறைய இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள், அதில் பாதிக்கும் மேல், இப்பொழுது வேலையில் இல்லை என்ற பதிலைத் தருகிறார்கள். இருக்கும் வேலையை விட்டுவிட்டு 'சாவகாசமாக' இன்னொரு வேலையைத் தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு யார் தந்தது என்று தெரியவில்லை. 

வேலைக்கு ஆள் எடுப்பவர்கள், வேலைக்காக விண்ணப்பிப்பவர்களிடம் அவர்களது கல்வித்தகுதி, வேலைத் தகுதி பார்த்தபின், அவர்களது பொறுப்புணர்ச்சியைத்தான் முக்கியமாகப் பார்ப்பார்கள். வேலையில் இருந்துவிட்டு, வெளியேறி பிறகு 'சும்மா' இருந்துவிட்டு வேலை தேடுபவர்கள் மீது எந்த நிறுவனமும் அவ்வளவு எளிதாக நம்பிக்கையை வைப்பதில்லை. 

ஆதலால் 23 வருடங்களுக்கு முன், நானும் வேலையைத் தக்கவைக்க ஊர் மாறுதலுக்குச் சம்மதித்து கோவைக்குச் சென்றேன்.ஒரு மாதத்திற்குள் வேறொருநிறுவனத்தைத் தேடி மதுரைக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கோவைக்குள் நுழைந்தேன். ஆனால் ஆறு மாதங்கள் அப்படியான எந்த முயற்சியும் நான் மேற்கொள்ளவில்லை. காரணம், 'COMFORT ZONE' என்ற என் வசதியான மனநிலை தான். 

'CONVERSATION WITH  GOD' என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய Neale Donald Walsch அவர்களது புகழ்பெற்ற சொற்றொடர் இருக்கிறது, நம்முடைய சுகமான அல்லது வசதியான மனநிலையின் முடிவிலிருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறது. 

நான் கோவையில் இருந்த மன நிலை என்பது ஒரு " தேக்க மன நிலை". ஓடுகிற தண்ணீரில் தான் சுத்தமும் ஆக்ஸிஜனும், மின்சாரமும் என உபயோகங்கள் கிடைக்கும் . 

யாருமே தேங்கிப்போனால் தோல்வியிலும் எதிர்மறை உணர்வுகளிலும் புதைந்துவிடுவார்கள்.

 மதுரையில் இன்னொரு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருந்ததாகவும், எனக்கு விருப்பமிருந்தால் நேர்முகத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும்  என் நண்பன் மூலமாக செய்தி கிடைத்தது. ஆனால் அதுவரை நான் வேலை பார்த்தது ஓர் ஆயுர்வேத நிறுவனத்தின் மருந்துகளை விற்கும் பொறுப்பு, இப்பொழுது கிடைத்திருக்கும் வாய்ப்பு அலோபதி மருந்துகளை விற்கும் நிறுவனம். என்னால் அப்படி அலோபதி மருந்துகளை விற்கமுடியுமா என்ற சந்தேகத்தைக் காட்டிலும் நான் வேலை பார்க்கும் ஆயுர்வேத நிறுவனத்தில் இருந்த என் COMFORT ZONE மனநிலை என்னை பழைய நிறுவனத்திலேயே  இருக்கவைத்திருந்தது .  

அப்படியான comfort zone லிருந்து வெளிவருவதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. கோவையிலிருந்த சமயத்தில் சனிக்கிழமை மாலை மதுரை வந்து விட்டு மறுபடியும் ஞாயிற்றுக்கிழமை இரவு இரயிலில் கிளம்பி கோவைக்கு திங்கள் கிழமை அதிகாலையில் இறங்குவது வாடிக்கை. 

பதிவு செய்யப்படாத பெட்டியில் இடம் பிடித்து சன்னலோரமாக அமர்ந்துகொண்டேன். எனக்கு இடப்பக்கமாக வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் சகிதம் ஒருவர் அமர்ந்திருந்தார். இரயில் பயணம் அவருக்குப் புதிதோ என்று தோன்றுமளவிற்கு வியர்த்து, அதைத் துடைத்துக்கொண்டே இருந்தார். அவரைத் தவிர்க்கும்பொருட்டு சன்னலோரம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். 

இரவுக்குள் நுழையும் புகைவண்டிகளை என்ன சொல்வது? செடிகளையும் வயல்வெளிகளையும் இரவுப்பூச்சிகளையும் பட்சிகளையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இரயிலுக்குள்ளிருந்து எதையும் காண முடியவில்லை. ஓர் ஊர் தென்படுவதும், அதை உற்றுப்பார்ப்பதற்குள் இரவு வெளிப்படுவதும் என இரயில் போய்க்கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியே இந்தப் பிரபஞ்சமே இரவின் ஒரு துளியாக இருப்பது போலிருந்தது. கைகளை வெளியே நீட்டி அள்ளியெடுத்தால் இரவு கொஞ்சம் கருமையாக உள்ளங்கைகளில் ஒட்டிக்கொள்ளும்படி இருந்தது.  யார் யாரோ தூரத்திலிருந்து வீட்டின் மாடியிலிருந்து, சாலையின் விளிம்புகளிலிருந்து, பேருந்திலிருந்து, ஓடிக்கொண்டிருக்கும் இந்த இரயிலைப் பார்க்கலாம். ஒரு துளி வெளிச்சத்தில் நான் அமர்ந்திருப்பது அவர்களுக்குத் தெரிந்துவிடுமா என்ன? இதோ அருகிலிருக்கும் வெள்ளை சட்டை ஆளைப் பார்க்க மறுத்துத்தான் யார் யாரோ பார்ப்பதாகக் கற்பனை இரயில் தடம் புரண்டுகொண்டிருந்தது.  

சட்டென திரும்பி வியர்த்துத் துடைத்துக்கொண்டிருந்த வெள்ளை சட்டை ஆளிடம் ' சன்னலோரம் அமர்ந்து கொள்கிறீர்களா?" என்று கேட்டேன். 

கொஞ்சம் புன்னகைத்து, வேண்டாம் என்றவர், தான் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்ததாகவும், கிளம்பும்வரை அது உறுதி செய்யப்படவில்லை என்றும், இரயில் நிலையம் வந்த போது RAC வந்ததாகவும் கூறியவர், பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்து நெடுநாட்கள் ஆகிவிட்டன, மறுபடியும் பயணித்துப்பார்க்கலாம் என வந்திருப்பதாகக்  கூறினார். 

"முடி இருக்கும் சீமாட்டி கொண்டை எப்படி வேண்டுமென்றாலும் போடலாம்" என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. எனக்கு அப்படித்தான் தோன்றியது. 

"என் டிக்கெட் தரேன், நீ அங்க போய் உட்கார்ந்துக்கிறீயா"? என்று திடீரென கேட்டார்.

'வேண்டாம் சார். '

"ஏன்?" என்றார்.

'அது உங்கள் டிக்கெட் தான..எனக்கு வேண்டாம் 'என்றேன். இப்படித்தான் எங்களுக்குள் ஒரு சம்பாஷணை உருவானது.

நான் என்ன வேலை செய்கிறேன், என்ன படித்திருக்கிறேன், பிறகு அப்பா அம்மா என குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தார்.  ஆசிரியர் குடும்பத்தில் பிறந்துவிட்டு ஏன் மெடிக்கல் ரெப் வேலை போன்ற கேள்விகளைக் கேட்டார் . 

'ஆசிரியராகத் தான் ஆசைப்பட்டேன், கிடைத்த முதல் வேலையில் அப்படியே தொடர்ந்துகொண்டிருக்கிறேன்' என்றேன். நான் கல்லூரி முடித்து வேலைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகியிருந்தன என்பதையும் கேட்டுக்கொண்டார். 

"இந்த நிறுவனத்திலேயே நீ இருக்கக் காரணம் என்ன?" என்று கேட்டார். 

இரவைக் கிழித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்த இரயிலைப் போல அந்தக் கேள்வி என் மனதிற்குள் நுழைந்துகொண்டிருந்தது. 

டிடி ஆர் வந்தார். பயணச்சீட்டைப் பரிசோதித்துவிட்டு அவரிடம் ஏதோ கூறினார். தனக்கு ஒதுக்கிய முதல் நிலை இருக்கையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னுடன் பேசிக்கொண்டு போவதற்காக இருந்துவிட்டதாகவும் சொன்னார். 

எல் ஐ சி யில் அவருடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்ததாகவும், பசி, தாகம் அவரை வருத்தியதாகவும் கூறினார். தான் தோல்விகளால் அவமானப்பட்டதாகவும் கூறினார். 

சீட்டு விளையாட்டில் எதிராள் ஒரு சீட்டைப் போட்டால், நாமும் பதிலுக்கு ஒரு சீட்டைப் போடுவது போல, நானும் என் பங்கிற்கு, நான் அப்போது வரை அனுபவித்த தோல்விகளையும் என் குடும்பத்தில் நான் கேட்டறிந்த நாங்கள் வந்த பாதை பற்றியும் கூறினேன். 

இப்பொழுது  இரண்டு கார்களும், கோவையில் வீடும், ஊட்டியில் ஒரு வீடும் இருப்பதாகவும், பெரிய வெற்றிகளைப் பெற்றதாகவும் கூறியவர், யாரிடம் பேசப்போனாலும், அவர்களைப் பேச விட்டு அவர்களது கதையைக் கேட்பேன். அவர்களது கடினங்களின் பாதையைக் கேட்பேன், அதன் மூலம் தனக்கு நம்பிக்கை வந்ததாகவும் கூறினார். 

"புதிய மனிதர்களைச் சந்திக்கும் உன் வேலையைப் போலத்தான் என் வேலையும். ஒரு புது மனிதனைப் பார்த்துப் பழகி அவரிடம் பிஸினஸ் பண்ணுவதில் தான் எனக்கு இன்ட்ரஸ்ட் " என்றார். கோவையில் அந்தப் பயணம் விடிந்தது. 

"ஒரே மாதிரி கஷ்டமர்ஸை அப்ரோச் பண்ணாத, ட்ரை டிஃப்ரண்ட்( TRY DIFFERENT) ரிஸ்க் எடுத்தாத்தான் லைஃப் இண்ட்ரஸ்ட்டா இருக்கும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். 

அது ஒரு புது விடியல். கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் தூங்காமல் பேசிக்கொண்ட இரவுக்குள்ளிருந்து வந்த புது விடியல். 

அங்கிருந்தபடியே  நண்பனை அழைத்து, நேர்முகத்தேர்விற்கு மதுரைக்கு வருகிறேன் என்றேன். இத்தனைக்கும் அவன் தான் முதல் நாள் இரவு மதுரையிலிருந்து கோவை இரயிலுக்கு  என்னை  வழியனுப்ப வந்தவன். 

"என்னடா, நேத்து கூட ஒண்ணும் சொல்லல, நைட்டுக்குள்ள என்ன நடந்துச்சு?" என்றான்.

எண்ணங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால் சில முடிவுகள் சரியான சமயங்களில் எடுத்தால் தான் வெற்றி கிடைக்கும். 

தொடரும்..

Life Begins at the End of Your Comfort Zone | Diary 14
ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு 13 |வெற்றியாளர் புறக்கணிப்பை புறக்கணிக்கிறார்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com