ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு 13 |வெற்றியாளர் புறக்கணிப்பை புறக்கணிக்கிறார்!
வெற்றியாளர்கள் புறக்கணிப்புகளைப் புறக்கணித்துவிடுகிறார்கள் - ஜான்.சி.மேக்ஸ்வெல்
கொரோனா காலகட்டம்
'கிளப் ஹவுஸ் 'என்ற செயலி ( APPLICATION) ஒன்றை அதுவரை 'ஆப்பிள்' மொபைல் ஃபோன் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திவந்தனர். கொரோனா பரவிக்கொண்டிருந்த நேரத்தில் , 'ஆன்ட் ராய்ட்' ஃபோன் வைத்திருப்பவர்களுக்கும் தன் சேவையை 'கிளப் ஹவுஸ்' விரிவுபடுத்த ஆரம்பித்தது. அதன் விளைவாக 'க்ளப் ஹவுஸ்' பயனாளர்கள் எண்ணிக்கை அதிவேகமாகக் கூடியது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் என்பதால், இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.
'கிளப் ஹவுஸ்' செயலிக்குள் நானும் ஐக்கியமானேன். தமிழில் நிறைய சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. பெரிய பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் கூட 'க்ளப் ஹவுஸி'ல் பயனாளர்களாகப் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிந்துகொண்டிருந்தார்கள்.
'கிளப் ஹவுஸ்'
'கிளப் ஹவுஸ்' பற்றித் தெரியாதவர்களுக்காக - 'கிளப் ஹவுஸ்' என்பது ஒரு செயலி. 'ஃபேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம்' போன்று அதுவும் ஓர் ஊடகம். குரலை மட்டும் நேரலையில் கேட்டுக்கொள்ளலாம், வீடியோ கிடையாது. கிட்டத்தட்ட நேரலையில் அனைவரும் பேசிக்கொள்ளலாம்.
தமிழ் நாட்டில் கூட நிறைய பயனாளர்கள் தனிப்பட்ட பெயரில் சேனல் ஆரம்பிப்பது போல 'கிளப்'களை அவர்கள் பெயரில் ஆரம்பித்து, அதில் நல்ல நல்ல தலைப்பில் பேசவும் கலந்துரையாடலை மேற்கொள்ளவும் ஆரம்பித்தனர். நிறைய தொழில் முனைவர்கள் இப்பொழுதும் அதில் சிறப்பாகப் பங்கெடுக்கின்றனர்.
அப்படியான ஒரு மாலை நேரத்தில் முன்னாள் 'ஸ்டார்ட் அப்' இயக்குனரும் நண்பருமான திரு. சிவராஜ் ராமநாதன் அவர்கள் ஒருங்கிணைத்த ஒரு நேரலையில் நானும் கலந்துகொண்டேன். அன்றைக்குச் சில முதலீட்டாளர்களை வரவழைத்து சிறந்த தொழில் வளர்ச்சி பற்றியும் நிதி மேலாண்மை பற்றியும் விவாதிக்க இருந்தனர். முக்கியமான விருந்தினர்கள் வரும்வரை பேசிக்கொண்டிருக்கலாம் என்று பார்வையாளனாக இருந்த என்னைப் போல சிலரை 'SPEAKER PANEL' க்கு அழைத்து, சில கேள்விகள் மூலம் ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்தார். அப்படி என் முறை வரும்பொழுது திரு.சிவராஜன் என்னிடம் கேட்ட கேள்வி முக்கியமானதாக இருந்தது. ஒரு முறை மருத்துவரைப் பார்ப்பதற்காக மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் காத்திருக்கும்பொழுது, "இங்கு மெடிக்கல் ரெப்கள் உட்கார அனுமதி கிடையாது" என்று ஒரு நோட்டிஸ் ஒட்டப்பட்டதைப் பார்த்ததாகவும், அது குறித்து கேள்வியை முன்வைத்தார். சுருக்கமாக அவரது கேள்வி, அந்தச் சம்பவத்தை அல்லது அப்படியான நோட்டிஸை ஒரு புறக்கணிப்பாகவும், ஓர் அவமரியாதை தரும் உணர்வாகவும் இருக்கிறதா? அதை எப்படி நாங்கள் எல்லாம் எடுத்துக்கொள்கிறோம் என்பதை ஒரு மெடிக்கல் ரெப்பாக இல்லாமல் ஓர் எழுத்தாளராகக் கூறமுடியுமா? என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒரு மெடிக்கல் ரெப்பின் தொழில் நிமித்த நிரல் என்பது, தன் மருந்து நிறுவன மருந்துகளை ஒரு மெடிக்கல் ரெப் விற்க வேண்டும். மருத்துவர்களை அதன் நிமித்தம் சந்தித்து , தன் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைக்குமாறு கேட்க வேண்டும். மற்ற தொழில் விற்பனைப் பிரதிநிதிகளின் வேலையிலிருந்து மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் இங்கு தான் வேறுபடுகிறார்கள். மருந்துகள் பற்றியும் நோயின் தன்மை பற்றியும் மருந்துவிற்பனைப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். புதிய கண்டுபிடிப்பான சில மருந்துகள் சந்தைக்கு வரும்பொழுது மருந்தாளுனர்களுக்கும் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கும் அதுகுறித்து பயிற்சி அளித்துவிடுவார்கள். அவர்கள் தான் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மருத்துவர்களுக்கு அது குறித்த தரவுகளை விளக்குவார்கள். இதனால் தான் மருத்துவர்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகளைச் சந்திக்க அனுமதிக்கிறார்கள்.
ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒவ்வொரு பார்வையும் தன்மையும் இருக்கும். நோயாளிகளைச் சந்தித்துவிட்டு மெடிக்கல் ரெப் பார்க்கும் மருத்துவர்கள் இருப்பார்கள், சில மருத்துவர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் என்று ஒதுக்கியிருப்பார்கள், சில மருத்துவர்கள் மாதத்திற்கு ஒரு முறை என்று அனுமதி தருவார்கள்.
இப்பொழுது திரு.சிவராஜன் பார்த்த அவரது " இங்கு மெடிக்கல் ரெப்கள் உட்கார அனுமதி கிடையாது" என்ற நோட்டிஸ் குறித்த என் அனுமானத்திற்கு வருகிறேன்.
பொதுவாக மருத்துவமனை என்பது நோயாளிகளும், வயதானவர்களும் வந்து போகும் இடம். அங்குச் சமயத்தில் 'மெடிக்கல் ரெப்' கள் என்று மட்டுமில்லை நோயாளிகள் உடன் வரும் துணையாட்களும் வந்துபோவார்கள், அது போக, 'அட்மிட்' ஆகியிருந்த நோயாளிகளைப் பார்க்க வெளியாட்களும் வருவார்கள். இவர்கள் எல்லாம் அமர்ந்துவிட்டால் நோயாளிகள் அமர இடம் கிடைக்காது. மேலும், திரு.சிவராஜன் பார்த்த மருத்துவமனையில் அந்த மருத்துவரைப் பார்க்க அநேக மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் வருகை தரலாம். அனைவரும் அமர்ந்துவிடுவதால் நோயாளிகள் நிற்க வேண்டியது வந்திருக்கலாம். ஆதலால் 'மெடிக்கல் ரெப்'கள் உட்கார அனுமதி கிடையாது என்று நோட்டிஸ் ஒட்டியிருக்கலாம். இது எல்லாம் ஓர் அனுமானமே. எனக்கு வந்த கேள்வி அது மட்டுமல்ல, இது போன்ற அனுபவங்களைப் புறக்கணிப்பாக, அவமரியாதை தரும் உணர்வாக எடுத்துக்கொள்கிறோமா? அல்லது எப்படிக் கையாள்கிறோம் என்பது தான் கேள்வியின் மையம்.
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு வரையறை இருக்கும். ஒரு நேர்த்தியான நிரல் இருக்கும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் இருக்கும். தொழில் சார்ந்து சிலவற்றைப் பழகிக்கொள்ள வேண்டும்.
எனக்குத் தெரிந்த நண்பன் ஆசிரியராக இருக்கிறான். வகுப்பில் 'மொபைல்' பயன்படுத்தமாட்டான். பள்ளி நிர்வாகம் அதை அவனுக்குச் சொல்லியிருக்கிறதா? அல்லது அவனே பயன்படுத்துவதில்லையா? என்று தெரியாது.
இன்னொரு நண்பன் ஒரு டயர் தொழிற்சாலையில் மேலாளராக இருக்கிறான். அவனுக்கு அங்கு மொபைல் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்கு அவன் பழகிக்கொண்டதால் தான் மேலாளர் வரை உயர்ந்திருக்கிறான் . எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் மருத்துவராக இருக்கிறார். வீட்டில் அவரது குழந்தைகள் சுற்றுலா கிளம்பலாம் என்று முன் கூட்டியே திட்டம் போட்டாலும் திடீரென ஏதாவது நோயாளி 'அட்மிட்' ஆகிவிட்டால், நோயாளியைக் கவனிக்கவேண்டி சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு குழந்தைகளைச் சமாதானப்படுத்துவார். அவர் அதற்குப் பழகிவிட்டார். அது போல் 'மெடிக்கல் ரெப்'களுக்கு என்று சில விசயங்கள் பழகிக்கொள்ளவேண்டும். அது அவமரியாதை அல்ல, புறக்கணிப்பு அல்ல. தொழிலுக்கு ஏற்ற நெளிவு அவ்வளவே.
நீங்கள் யானையைப் பழக்க வேண்டும் என்று இறங்கியபிறகு அதைக் குளிக்க வைக்க சிரத்தை எடுத்துத்தானே ஆக வேண்டும். ஒரு தேர்ந்த யானைப்பாகனுக்கு யானையைக் குளிக்க வைத்தல் கடினமான காரியமாக இருக்காது. கடமையாகத்தான் இருக்கும். இங்கு யானை என்பது எந்தத் தொழிலுக்கும் குறியீடாக எடுத்துக்கொள்ளலாம். குளித்தல் என்பது திறம்பட செய்தலுக்கு உவமையாக இருக்கட்டும்.
ஒரு மனிதனைப் புறக்கணிப்பும், அவமரியாதையும் தான் மென்மேலும் உயர்த்தும். "SUCCESSFUL PEOPLE REJECT REJECTIONS" என்ற JOHN .C. MAXWELL அவர்களது கூற்று ஒன்று இருக்கிறது.
புறக்கணிப்புகளையும் தோல்விகளையும் கடந்து போனால்தான் வெற்றி.
மெடிக்கல் ரெப் என்று கிடையாது எந்தத் தொழிலுக்கும் ஏதாவது ஒரு வகையில் சில கடினங்கள் இருக்கத்தான் செய்யும். மெடிக்கல் ரெப்களுக்கு அவர்கள் முகத்திற்கு நேராக மட்டுமில்லை மற்றவர்கள் முகத்திற்கு நேராகவும் இங்கு அமர அனுமதியில்லை என்று ஒட்டியிருப்பது கடினமான ஒன்று தான். மெடிக்கல் ரெப்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கிறது. இடதுசாரி அமைப்பான அந்தச் சங்கப் பிரதிநிதிகள் அதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தில் பேசி, அந்தச் சொற்றொடருக்கு மாற்றாக, " நோயாளிகள் அமர முன்னுரிமை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று மாற்றலாம்.
"எல்லாமே வார்த்தை பிரயோகங்கள் தானே. வலியைத் தருவதும், ஆற்றுப்படுத்துவதும் சொற்கள் தானே."
எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவமனையில் மருத்துவர் அழைக்கும் வரை, மெடிக்கல் ரெப் கள் மருத்துவமனைக்குள் வரக்கூடாது என்று தெருவிலேயே நிறுத்திவைக்கும் பெரிய மருத்துவமனைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல ஒவ்வோர் இடத்திற்கும் ஒரு விதி இருக்கத்தான் செய்யும்.
தூண்டில் போட்டால் ஒரு மீன் தான் கிடைக்கிறது என்று நிறைய மீன்கள் பிடிக்க வலையை விரிக்க கரையிலிருந்து நீங்கள் தண்ணீருக்குள் இறங்கித்தான் ஆக வேண்டும். இது எல்லாத் தொழிலுக்கும் எழுதப்படாத விதி.
ஆதலால் அந்த நோட்டிஸில் எங்களுக்கு எந்தக் கடினமும் இருந்ததில்லை. மேலும் அதைக் கடந்து போய்விட எங்கள் தொழில் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று தான் அன்றைக்குப் பதிலாகக் கூறியிருந்தேன்.
வாழ்க்கையில் நாமாகக் கற்றுக்கொள்ளும் பாடங்களைத் தவிர வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் வீரியமானவை. தோல்வியின் மூலமாக, அவமரியாதையின் மூலமாக, நிராகரிப்பின் மூலமாக வாழ்க்கை அதன் முகத்தை நமக்குக் காட்டும். அதிலிருந்து நல்ல கற்பிதங்களைக் கிரகித்துக்கொள்வதில் தான் நம் புத்திசாலித்தனம் உள்ளது. அதற்கு முதலில் நாம் நம்மை நம் வாழ்விற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ஒப்புக்கொடுக்க தொடர்ந்து இருங்கள்.. இது 'ஒரு மருந்து விற்பனைப் பிரதநிதியின் டைரிக்குறிப்பு.'

