\
Journalist Suguna Diwakar Writes Niram Marum Cinema Series Part 5 at M. R. Radha story
நிறம் மாறும் சினிமா 5Pt web

நிறம் மாறும் சினிமா 5 - நடிகவேள் எம். ஆர். ராதா.. தமிழ் சினிமாவின் ஒரே ஹீரோ!

உண்மையில் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை என்பது நம்பவே முடியாத சாகசங்களைக் கொண்டது. அப்படி ஒரு சாகசக்காரன் அதற்குப்பிறகு தமிழ் சினிமாவில் தோன்றவே இல்லை.
Published on

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த்திரையில் எத்தனையோ ஹீரோக்கள் உண்டு. ஆனால் தமிழ்த்திரைத்துறையில் ஒரே ஹீரோ என்றால் அது நடிகவேள் எம்.ஆர்.ராதாதான். எம்.ஆர்.ராதா ஹீரோவாக நடித்த படங்கள் குறைவு. வில்லனாகவும் நகைச்சுவை வேடங்களிலுமே அவர் ஏராளமான சினிமாக்களில் நடித்திருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் அவர் ஒரு ஹீரோவாக வாழ்ந்தார்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது, 2025 செப்டம்பரில் கரூரில் 41 பேர் இறந்த நேரம். விஜய் அந்த இடத்தைவிட்டு அவசர அவசரமாக கிளம்பிவிட்டார். அவர் மட்டுமல்ல அவரது மொத்தக் கட்சியுமே கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தலைமறைவாகிவிட்டது. அப்போது ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ‘’தமிழ்நாட்டு அரசியல் மகத்தான அரசியல் தலைவர்களைக் கண்டிருக்கிறது; மோசமான அரசியல் தலைவர்களையும் கண்டிருக்கிறது. ஆனால் விஜய் போன்ற கோழைத்தனமான தலைவரை இதுவரை தமிழ்நாட்டு அரசியல் கண்டதில்லை’’ என்று சொன்னேன். இப்போது அவர் முதலமைச்சர்.

நடிகவேள் தன் வாழ்க்கையில் சந்தித்த நெருக்கடிகள், ஒடுக்குமுறைகள் ஏராளம். ஆனால் ஒருபோதும் அவர் பின்வாங்கியதில்லை.

விஜய் பல படங்களில் பஞ்ச் டயலாக் பேசி எதிரிகளைப் பந்தாடியிருக்கிறார். ஆனால் எதார்த்தத்தில் ஒரு நெருக்கடியை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் நான் எம்.ஆர்.ராதாவைத்தான் நினைவுகூர்ந்தேன். நடிகவேள் தன் வாழ்க்கையில் சந்தித்த நெருக்கடிகள், ஒடுக்குமுறைகள் ஏராளம். ஆனால் ஒருபோதும் அவர் பின்வாங்கியதில்லை. அந்த நெருக்கடிகளின் காரணமாக அவர் தனிப்பட்ட முறையில் எந்த ஆதாயத்தையும் அடைந்ததில்லை. அவர் அத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக்கொண்டது. தான் கொண்ட கொள்கைக்காக.

உண்மையில் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை என்பது நம்பவே முடியாத சாகசங்களைக் கொண்டது. அப்படி ஒரு சாகசக்காரன் அதற்குப்பிறகு தமிழ் சினிமாவில் தோன்றவே இல்லை. எம்.ஆர்.ராதா என்னும் கலகக்கார கலைஞனைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர் சினிமாக்களைப் பற்றி மட்டும் அறிந்தால் போதாது, அவர் நாடக வாழ்க்கையையும் தெரிந்துகொண்டால்தான் ராதா குறித்த முழுமையான பார்வை கிடைக்கும்.

எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னை சூளையில் முதன்முதலில் எம்டன் குண்டு வீசப்பட்ட தினத்தில் பிறந்தார். ராணுவ வீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.

சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித் திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.

ராதா நாடகத் துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து 'ராஜசேகரன்' என்னும் படத்தைத் தயாரித்தார். முதல் படத்திலேயே படத்தை இயக்கிய பிரகாஷ் என்பவருக்கும் ராதாவிற்கும் மோதல் ஆரம்பித்தது. இயக்குனர் என்ற தோரணையில் அவரின் திமிர்த்தனமான நடவடிக்கைகள் ராதாவிற்கு ஒத்து வரவில்லை. 1937ல் ’ராஜசேகரன்’ வெளியானது. அதன் பிறகு 1942 வரை ஐந்தாண்டுகள் ஐந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத் துறைக்கே திரும்பினார்.

எம்.ஆர். ராதா
எம்.ஆர். ராதாPt web

நாடகத்திலிருந்து அனைவரும் சினிமாவிற்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சினிமாவிலிருந்து நாடகத்திற்குத் திரும்பியவர் ராதா மட்டுமே. பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துதான் 1954ல் 'ரத்தக்கண்ணீர்' படத்தின் மூலம் சினிமாவிற்குத் திரும்பினார்.

125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். சினிமா வாழ்க்கையைக் குறிப்பிடும்போது 'ரிட்டயர்டு லைப்' என்றே குறிப்பிட்டார். எதிர்ப்பையும் வரவேற்பையும் நேரடியாக அனுபவிக்கும் ஊடகம் என்பதாலோ என்னவோ நாடகம் அவருக்குப் பிடித்துப் போனது.

நாடகத்தின் காதலரான ராதா சிறுவயதில் நாடகக் கம்பெனியில் பார்ப்பன ஆதிக்கத்தையும் வைதீக மூடத்தனங்களையும் சந்தித்திருக்கிறார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை எதிர்த்துக் கலகமும் செய்திருக்கிறார். நாடகக் கம்பெனிகளில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவும் காபியும் தயாரிக்கப்பட்டபோது, முடிந்த போதெல்லாம் அதை எச்சில் படுத்தியிருக்கிறார்.

எம்.ஆர். ராதாவின் மாறுபட்ட கருத்து

ஜெகந்நாதய்யர் என்னும் பார்ப்பனரின் நாடகக் குழுவில் நடித்துவந்த ராதா அவரைப் பெரிதும் மதித்திருக்கிறார். அவர் பெரும்பாலும் இந்த சாதி பேதத்திற்கு அப்பாற்பட்டே வாழ்ந்து வந்திருக்கிறார். 'சங்கரதாஸ் சுவாமிகள் நல்ல நாடகக் கலைஞர். ஆனால் அவர் வேறு கலைஞர்களை உருவாக்கியதில்லை. எனவே அவரை நாடக உலகின் தந்தை என்று அழைப்பது தவறு. ஜெகந்நாதய்யரைத்தான் அப்படி அழைக்க வேண்டும்' என்பது ராதாவின் கருத்து.

ஒரு முறை 'கிருஷ்ணலீலா' நாடகத்தில் ராதா சிறப்பாக நடித்திருந்தும் நாடகத்திற்குத் தலைமை தாங்கிய, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி (அய்யர்) அவரைப் புறக்கணித்துவிட்டு அதே நாடகத்தில் நடித்த டி.ஆர்.மகாலிங்கத்தை மட்டும் புகழ்ந்திருக்கிறார். அப்போதே இந்தப் பார்ப்பனப் புறக்கணிப்பு கண்டு மனம் வெதும்பியிருக்கிறார் ராதா.

பெரியாரின் இயக்கத்திற்கு வருமுன்பே இடதுசாரிச் சிந்தனையாளராகவே வாழ்ந்திருக்கிறார். பகத்சிங்கின் அனுதாபியாக இருந்த அவர் முதன்முதல் நாடக சபாவை ஆரம்பித்து நாடகத்தை நடத்தும்போது நாடகத் திரைச்சீலைகளில் 'உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்னும் வாசகம் இடம் பெற்றிருந்தது. பிறகு பெரியாரின் இயக்க ஆதரவாளராக மாறியபிறகு, 'திராவிடப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்று அந்த வாசகம் மாறியது.

 'பெரியார் என்பவர் யார்?'

முதன்முதலில் ராதாவிற்குப் பெரியார் யாரென்றே தெரியாது. நாடகக் கலைஞர்கள் பலரும் பச்சை அட்டை போட்ட குடியரசு புத்தகத்தை ரகசியமாகப் படிப்பதைப் பார்த்து நாடகக் கலைஞரான எதார்த்தம் பொன்னுச்சாமி (பிள்ளை)யிடம் 'பெரியார் என்பவர் யார்?' என்று விசாரித்திருக்கிறார். ராவணன் போல அவரும் ஒரு அரக்கன்’ என்று கூறிய பொன்னுச்சாமி, அவரைப் பெரியாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதன் பிறகு ராதாவின் 'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' நாடகத்திற்கு பெரியாரும் அண்ணாவும் தாங்களாகவே டிக்கெட் எடுத்துக் கொண்டு நாடகம் பார்த்தார்களாம். நாடகம் முடிந்ததும் இருவரும் மேடை ஏறினர். அண்ணா "நாங்கள் நூறு மாநாடுகள் நடத்துவதும் ராதா ஒரு நாடகம் நடத்துவதும் சமம்" என்று புகழ்ந்தார். அன்றிலிருந்து பெரியார் பற்றாளராக மாறிய ராதா சாகும்வரை பெரியாரின் மீது தணியாத பற்று கொண்டவராய் வாழ்ந்தார். பெரியாரின் போர்ப்படைத் தளபதியாய் வாழ்ந்த சுயமரியாதை வீரன் பட்டுக்கோட்டை அழகிரிதான் ராதாவிற்கு 'நடிகவேள்' பட்டம் அளித்தவர். இன்று உலகமெங்கும் புகழ்பெற்று பெயர்போலவே மாறிவிட்ட 'கலைஞர்' என்னும் பட்டத்தை மு.கருணாநிதிக்கு வழங்கியவர் ராதாதான்.

ராதா தன் நாடகங்களில் செய்த கலகங்களும் அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அதனை அவர் எதிர்கொண்ட முறைகளும் சொல்லி மாளாதவை. இந்திய வரலாற்றிலேயே இத்தகைய துணிச்சல் மிக்க ஒரு நாடகக் கலைஞனைக் காண்பது அரிது. சினிமாவின் மூலம் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை நாடகம் நடத்துவதற்கும் இயக்கப் பணிகளுக்கும் அவர் செலவிட்டார். ராதா வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் 'ராமாயணம்' நாடகத்தை நடத்தினார்.

நாடகத்தின் முதல் காட்சியிலேயே ஒரு புத்தக அலமாரி காட்டப்படும். அதில் ராமாயண ஆராய்ச்சி நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலனவை பார்ப்பன வரலாற்றாய்வாளர்கள் எழுதியவைதான். அதன்படி ராமனைக் குடிகாரனாகவும், புலால் உண்ணுபவனாகவும் சித்தரித்து நாடகம் நடத்தப்படும். தொடர்ந்து பார்ப்பனர்களும் வைதீகர்களும் காங்கிரசுக்காரர்களும் கலாட்டா செய்வர். அரசு தடை விதிக்கும். போலீசு கைது செய்யும். எத்தனை முறை தடை விதிக்கப்பட்டாலும் கைதாகி நாடகங்களை தொடர்ந்து நடத்துவார் அல்லது அதே நாடகங்களை வேறு பெயரில் நடத்துவார்.

தந்தை பெரியார்
தந்தை பெரியார்pt web

பெரியாருக்காகவே அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டதும் முதன்முதலில் தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடைச் சட்டம் அவருக்காகவே கொண்டு வரப்பட்டதும் வரலாற்றின் பக்கங்களில் எஞ்சிப் போன உண்மைகள். அதே போலத்தான் ராதாவை ஒடுக்குவதற்காகவே தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தைத் தயாரித்தது. முதன்முதலாக நாடகத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது ராதாவிற்காகத்தான். 1954ல் நாடகங்களின் திரைக்கதையை அரசின் அனுமதி பெற்றே நாடகம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கெதிராக சட்டமன்ற வளாகத்திலேயே போய் வாதாடினார் ராதா. இத்தனைக்கும் ராதாவுக்குத் தடை விதிக்கப்பட்ட காலம், பெரியாரும் திராவிடர் கழகமும் ஆதரித்த காமராசரின் ஆட்சிக்காலம்.

ராமாயண நாடக நோட்டீசில் 'உள்ளே வராதே' என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன்கீழ் 'இந்துக்கள் தங்கள் மனம் புண்படுகிறது என்று கருதினால் நாடகத்திற்கு வர வேண்டாம். அப்படி மீறி வந்து மனம் புண்பட்டால் நான் ஜவாப்தாரியல்ல' என்னும் வாசகமும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

ராமாயண நாடகம் மட்டுமல்ல ராதாவின் பெரும்பாலான நாடகங்கள் தடை செய்யப்படவே செய்தன. கூட்டங்களில் புகுந்து கலகம் செய்யப்படவே செய்தன. ஆனால் இதையெல்லாம் மீறி ராதாவின் நாடகங்கள் பலமுறை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. (ரத்தக் கண்ணீர் நாடகம் மட்டும் 3021 நாட்கள் நடத்தப்பட்டிருக்கிறது.)

இனிமே நாடகம் இல்லை; இனிமேல் பெரியார் மட்டும்தான் பேசுவார்

ஒரு முறை ராதா நாடகம் நடத்தும்போது அவருக்குத் தீராத வயிற்றுப்போக்கு. அவரால் நடிக்க முடியாத நிலை. எனவே தனக்குப் பதிலாகத் தன்மகன் வாசு நடிப்பார் என்று அறிவித்த ராதா, "விருப்பமிருப்பவர்கள் நாடகம் பார்க்கலாம். விருப்பமில்லாதவர்கள் கவுண்டரில் சென்று டிக்கெட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்" என்று அறிவித்தார்.

இன்னொரு முறை நாடகத்தினிடையில் பெரியார் பேசுவதாக இருந்தது. அவர் பேசுவதாக அறிவிக்கப்பட்டபோது முன்வரிசையிலிருந்த சில பார்ப்பனர்களும் காங்கிரசுக்காரர்களும் எழுந்து 'ராதா, உன் நாடகம் பார்க்கத்தான் காசு கொடுத்து வந்தோம். அந்தாள் (பெரியார்) பேச்சைக் கேட்க இல்லை" என்று கலாட்டா செய்தனர். உடனே ஒலிபெருக்கி முன் வந்த ராதா, "நாடகம் பார்க்கத்தானே வந்தாய். நான் சொல்றேன். நாடகம் முடிஞ்சு போச்சு. இனிமே நாடகம் இல்லை. இனிமேல் பெரியார் மட்டும்தான் பேசுவார்" என்று அறிவித்தார்.

அதேபோல பொதுவாகவே எல்லா நிகழ்ச்சிகளிலுமே வி.ஐ.பி. இருக்கை என்று தனியாக இருப்பது இன்றுவரை வழக்கத்திலுள்ள நடைமுறையே. இந்த வி.ஐ.பிக்கள் எப்போதுமே இலவச அழைப்பாளர்கள்தான். ஒரு முறை காசு கொடுத்து தரை டிக்கெட் வாங்கிய கூட்டம் அலைமோதியது. இன்னொரு பக்கம் வி.ஐ.பிக்கள் வரிசையும் நிரம்பி வழிந்தது. அப்போது மேடையில் தோன்றிய ராதா, "காசு கொடுத்தவன்லாம் தரையிலே உக்கார முடியாம தவிக்கிறான். ஆனால் ஓசியிலே வந்தவன்லாம் சேர்லே உட்கார்ந்திருக்கான்" என்று அவரது பாணியிலேயே முகத்திற்கு நேராக விமர்சித்திருக்கிறார். இத்தகைய தைரியமும் துணிச்சலும் ராதாவைத் தவிர வேறு யாருக்கு வரும்?

பொதுவாக ராதாவைக் கைது செய்ய வரும் போலீஸ் அதிகாரிகள் நாடகம் முடிந்த பிறகே கைது செய்வது வழக்கம். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி நாடகம் தொடங்குவதற்கு முன்பே கைது செய்ய வேண்டுமென்று உறுதியாக இருந்திருக்கிறார். நாடகக் குழுவினர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ராதாவிடம் போய்ச் சொல்லியிருக்கிறார்கள். ராதா நாடகத்தைத் தொடங்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். நாடகத்தின் முதல் காட்சியில் ராதா பேசிய முதல் வசனம், "யாருடா அங்கே நாயை அவிழ்த்து விட்டது? அது பாட்டுக்குக் குலைச்சுக்கிட்டிருக்கு" அந்த போலீஸ் அதிகாரியின் முகத்தில் ஈ ஆடவில்லை.

இன்னொரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்.ஏ.பி.அய்யர் தலைமை தாங்கியிருந்தார். அப்போது ஒரு பாத்திரம் ராதாவிடம் பேசுவதுபோல ஒரு வசனம். "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?" அதற்கு ராதா சொன்ன பதில், "பார்ப்பான் பார்ப்பான்" ராதா யாருடைய முகத்திற்காகவும் தயங்குபவரோ அஞ்சுபவரோ அல்ல என்பதற்கு இது ஒரு சான்று.

மேலும் அவர் வெறுமனே வசன வீரர் மட்டுமில்லை, செயல்வீரரும் கூட. நாடகத்திலும் மேடைகளிலும் கலகம் செய்பவர்களைக் களத்திலே இறங்கிச் சந்திப்பவர். சிலம்புச் சண்டை, துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் போன்ற பல கலைகளைத் தெரிந்து வைத்திருந்தார். எலெக்ட்ரிக்கல் வேலைகள் பார்ப்பதிலும் நிபுணர். ஆரம்ப காலகட்டங்களில் நாடகங்களில் தந்திரக் காட்சிகள் அமைப்பதற்கும் ராதாவின் உதவியே தேவைப்பட்டது. (பெரியாரிஸ்டாக மாறுவதற்கு முன்பு திருப்பதிக்கு ஏழுமலையானைத் தரிசிக்க சென்றிருக்கிறார் ராதா. மாலைவரை காத்திருந்தும் தரிசனம் பார்ப்பதற்குத் தாமதமாகவே, ஆத்திரங் கொண்ட ராதா திருப்பதி மலையைத் தகர்ப்பதற்குத் டைனமைட் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார்)

ராதாவின் மேடையில் எப்போதும் கலைஞர்களும் எதிர் வன்முறைக்குத் தயாராக இருப்பார்கள், ஆயுதங்களும் தயாராக இருக்கும். யாரேனும் எதிரிகள் தாக்குதலில் ஈடுபட்டால் நாடகக் குழுவினரும் பதில் தாக்குதலைத் தொடுப்பார்கள். ஒருமுறை நாடகக் குழுவினர் தங்கியிருந்த இடத்திற்கே வந்து காலிகள் தாக்குதலைத் தொடுக்க அவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமிருந்த நாடகக் குழுவினரின் தாக்குதல் தாங்க முடியாது ஓடிவிட்டனர். மறுநாள் எப்படியும் இன்னும் அதிக ஆட்களை அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்த்த ராதா கதவின் கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சியிருந்தார். தாக்க வந்தவர்கள் மின்சார அதிர்ச்சியில் தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள்.

ஒரு வகையில் ராதாவின் பிரதிகள் மாறிக் கொண்டேயிருந்ததால் அது 'நிலைத்த தன்மை' என்னும் இயங்கா தன்மையை மறுத்தது.

பெரியார் முன்னின்று நடத்திய பல போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார் ராதா. பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம், வடநாட்டு ஆதிக்க எதிர்ப்புக் கிளர்ச்சி, பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் போன்ற போராட்டங்களில் தான் கலந்து கொண்டது மட்டுமில்லாது தனது நாடகக் குழுவினரையும் ஈடுபடுத்தினார். சாதி ஒழிப்பிற்காக அரசியல் சட்டத்தை எரித்து சிறை புகுந்த தோழர்கள் பலருக்கும் பல வகையில் உதவினார். இயக்கத்திற்கும் இயக்கத் தோழர்களுக்கும் நிதி திரட்டுவதற்காகப் பல முறை இலவசமாக நாடகம் நடத்தினார்.

ராதாவின் நாடகங்கள் இறுகி நிலை பெற்றுவிட்ட பிரதிகள் இல்லை. அவை ஒரே கதையைக் கொண்டிருக்கலாம். ஆனால் திரைக்கதையும் வசனமும் நாடகம் நடத்தப்படும் இடங்கள், அரசியல் சூழல்கள், எதிர்ப்பின் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். ஒரு வகையில் ராதாவின் பிரதிகள் மாறிக் கொண்டேயிருந்ததால் அது 'நிலைத்த தன்மை' என்னும் இயங்கா தன்மையை மறுத்தது. என்றாலும் இன்னொரு வகையில் ராதாவின் நாடகங்கள் எழுத்துப் பிரதிகளாக உருமாறி ஆவணப்படாமல் போனதற்கும் இத்தன்மையே தடையாய் இருந்தது என்று சொல்லலாம்.

Journalist Suguna Diwakar Writes Niram Marum Cinema Series Part 5 at M. R. Radha story
நிறம் மாறும் சினிமா - 4 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்: முற்போக்கு முன்னோடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com