\
journalist suguna diwakar writes niram marum cinema series at 16 Kamal Haasans Cinema Politics
கமல்x page

நிறம் மாறும் சினிமா - 16 | கமல்ஹாசனின் சினிமா அரசியல்.. எப்படி புரிந்துகொள்வது?

கமலின் சினிமா வெறுமனே தயாரிப்பாளரின் சினிமாவோ இயக்குநரின் சினிமாவோ மட்டுமல்ல, முதன்மையாக அது கமலின் சினிமா.
Published on: 

கமல்ஹாசனை எப்படி மதிப்பிடுவது?

தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர் கமல்ஹாசன். பல்வேறு கதைசொல்லல் முறைகளையும் பல்வேறு தொழில்நுட்ப உத்திகளையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர். வெறுமனே அழகியல், தொழில்நுட்பத்துடன் நின்றுவிடாமல் தன் சினிமாக்களில் அரசியலையும் முன்வைத்தவர்.

கருத்தியல் சார்ந்த அரசியல் கருத்துகளை அவர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். குறிப்பாகத் தன்னைப் பெரியாரியப் பின்பற்றாளராக அடையாளப்படுத்திக்கொள்ளும் கமல், கறுப்புச்சட்டை அடையாளத்துடன் பல பொதுமேடைகளில் தோன்றியிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் 'நான் ஒரு பகுத்தறிவுவாதி' என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, 'நான் வெட்கப்படுகிறேன்' என்று கண்டனம் தெரிவித்தவர் கமல்ஹாசன்.

சினிமாவுக்கு வெளியில் மட்டுமல்ல,சினிமாவுக்குள்ளும் கமல் கருத்தியல் சார்ந்த அரசியலை முன்வைத்திருக்கிறார். அதேநேரம், கமலை பார்ப்பனியவாதியாகவும் சாதியப்படங்களுக்கு வித்திட்டவராகவும் முஸ்லிம் எதிர்ப்பு திரைப்படங்களை உருவாக்கியவராகவும் விமர்சனங்கள் உள்ளன. அவர் திரைப்படங்கள் வழியாக கமல்ஹாசனை எப்படி மதிப்பிடுவது?

கமலின் சினிமா வெறுமனே தயாரிப்பாளரின் சினிமாவோ இயக்குநரின் சினிமாவோ மட்டுமல்ல, முதன்மையாக அது கமலின் சினிமா.

'ஹே ராம்' எப்படிப்பட்டது?

கமலின் அரசியல் சினிமாக்களில் முக்கியமானது மட்டுமல்ல, இந்திய சினிமாக்களிலும் முக்கியமானது 'ஹே ராம்'. கலைத்தன்மையும் அரசியலும் இணையும் படமாக அது உருவாகியிருந்தது. 'காந்தியைப் படுகொலை செய்தது இந்துத்துவ மதவாதமும் பார்ப்பனியமும்தான்' என்பதை வெளிப்படையாகவே சொன்ன படம் 'ஹே ராம்'. இந்தியாவின் பல்வேறு மொழிகள், கலாசாரங்களைக் காட்சிப்படுத்தியன் மூலம், 'இந்தியா என்பது பன்மைத்தன்மையின் மூலம் மட்டுமே நீடிக்கமுடியும்' என்பதை அழுத்தமாகச் சொன்னதுடன், இந்த பன்மைத்தன்மைக்கு இடையிலும் பார்ப்பனியம் ஒற்றை மனநிலையுடன் இயங்குவதையும் 'ஹே ராம்' சொன்னது.

சிண்டும் பூணூலும் காற்றில் பறக்க, காந்தியைக் கொல்வதற்காக சாகேத்ராம் கைத்துப்பாக்கியுடன் ஒத்திகை பார்க்கும் காட்சி ஹே ராமின் அரசியலை வெளிப்படையாகவே சொன்னது. ஒரு காட்சியில் ஸ்வஸ்திக் சின்னம் தாமரையாக மாறுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

'ஹே ராம்' இந்துத்துவ எதிர்ப்பை மய்யப்படுத்திய படம் என்றால் 'அன்பே சிவம்' முதலாளித்துவ எதிர்ப்பை மய்யப்படுத்திய படம். இதில் கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராகவே நடித்திருப்பார். கம்யூனிஸ்டாகவே இருந்தாலும் கறுப்புச்சட்டை மீதுள்ள காதலால் பல காட்சிகளில் கறுப்புச்சட்டையுடன் தோன்றியிருப்பார். பெருமுதலாளியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் காட்சிப்படுத்தியிருப்பது, அவர் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று சொல்வது போன்ற அபத்தமான காட்சியமைப்புகள் இருந்தாலும்கூட, கமல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக நடித்து முதலாளித்துவத்துக்கு எதிராக சில கருத்துகளைச் சொன்னதால் அது தமிழக கம்யூனிஸ்ட்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் அடிப்படையாகவும் அவர் நாத்திகத்தை வலியுறுத்தினார்.

மரணதண்டனை எதிர்ப்பு என்பது..

இப்படி முழுநீள அரசியல் படங்களாக இல்லாவிட்டாலும் தன் பல படங்களில் நாத்திகம் உள்ளிட்ட தன் அரசியல் சார்பையும் வெளிப்படுத்தியிருப்பார். 'நம்மவர்' படத்தில் கௌதமியுடனான காதல் காட்சியில் பெரியார் புத்தகத்துடன் தோன்றுவார். 'காதலா காதலா' படத்தில் ஜூனியர் விகடானந்தா, ஆனந்த விகடானந்தா பாத்திரங்களின் மூலம் போலி சாமியார்களையும் மூடநம்பிக்கைகளையும் விமர்சித்திருப்பார். 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் 'கடவுள் இல்லைனு சொல்றவனை நம்பலாம்; இருக்குன்னு சொல்றவனைக்கூட நம்பலாம்; 'நான்தான் கடவுள்'னு சொல்றவனை நம்பாதே' என்பார். 'விஸ்வரூபம்' படத்தில் நாத்திக விஞ்ஞானியாக வரும் கமலின் அப்பா பெயர் ராமசாமி நாயக்கர். 'கடவுள் இல்லைனு சொல்லலை; இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொன்னேன்' என்ற அவரின் நாத்திகச் சாயல் வசனம் புகழ்பெற்ற ஒன்று.

'தேவர்மகன்' வெற்று சாதியப் பெருமிதத்தின் அடிப்படையிலான வன்முறையை விமர்சித்த படம் என்றால் 'விருமாண்டி' மரணதண்டனைக்கு எதிரான படம். விருமாண்டி என்னும் தூக்குத்தண்டனைக் கைதியை ஆவணப்படம் எடுக்க வரும் ரோகிணி, கீழ்வெண்மணியைச் சேர்ந்தவர். குற்றமும் தண்டனைகளும் வெவ்வேறு பார்வைகளையும் வெவ்வேறு சார்பையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதற்கான குறியீடு இது. கீழ்வெண்மணியில் குழந்தைகள் உள்பட 44 பேரை எரித்துக்கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடு 'குற்றவாளியில்லை' என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதை இங்கு நினைவுகூரும்போதுதான் மரணதண்டனைக்கும் விடுதலைக்குமான சாத்தியங்களின் பின்னுள்ள அரசியலைப் புரிந்துகொள்ள முடியும். ஒருவகையில் மரணதண்டனை எதிர்ப்பு என்பது காந்திய அடிப்படை கொண்டதும்கூட.

கருத்தியல் சார்ந்த அரசியல்

கமல் பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் பார்ப்பனர்களையும் தன் படங்களில் கிண்டலடித்திருப்பார். அவர் பார்ப்பன எதிர்ப்புக்கான வரலாற்று நியாயங்களை உணர்ந்து கொண்டவர்தான் என்று தோன்றுகிறது. அவரை ஒரு பார்ப்பனராக முன்னிறுத்தி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், அதைக் குற்றச்சாட்டாக அவர் எங்கும் சொன்னதில்லை. 'அவ்வை சண்முகி'யில் அவரது பாத்திரம், 'மடிசார் அணிந்த மாமிகளைக் கொச்சைப்படுத்துகிறது' என்று குற்றம் சாட்டப்பட்டது. தோல் தொழிற்சாலை நடத்திவரும் பார்ப்பனர், மாட்டுக்கறி சாப்பிடும் முஸ்லிமை வேலைக்கு வைத்ததற்காக கோபப்படும்போது, அதன் போலித்தனத்தை 'அவ்வை சண்முகி'யில் சுட்டிக்காட்டியிருப்பார் கமல்.

இப்படி கருத்தியல் சார்ந்த ஏராளமான அரசியல் வெளிப்பாடுகள் கமல் படங்களில் உண்டு. மற்ற எதையும்விட நாத்திகம் என்பதற்குத்தான் அதிகம் முக்கியத்துவம் தருகிறார் என்ற விமர்சனமும் உண்டு.

எனவே 'கமலை காந்தியச் சார்புள்ள, மார்க்சிய அனுதாபம் கொண்ட பெரியாரிஸ்ட் என்று புரிந்துகொள்ளலாமா?' என்றால் 'அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது' என்பதுதான் பதிலாக இருக்கும்.

'அன்பே சிவம்' படத்தில் கம்யூனிச ஆதரவு பேசிய கமல்தான், 'குருதிப்புனல்' படத்தில் நக்சல்பாரி போராளிகளை வெறுமனே வன்முறையாளர்களாகவும் போலீஸ் வீட்டுக் குழந்தைகளிடமும் காமுறும் பெண் பித்தர்களாகவும் காட்டியிருப்பார். உலகம் முழுக்க ராணுவமும் போலீஸும் பாலியல் அத்துமீறல்களை நடத்திக்கொண்டிருக்க, நக்சல்பாரிகள் போலீஸ் குடும்பப் பெண்கள்மீது பாலியல்மீறல்களை நிகழ்த்துபவர்களாகக் காட்டுவது என்ன கருத்தியல் நியாயம்? அதேபோல் 'தசாவதாரம்' படத்தின் கருத்தியல் மயக்கம் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

விமர்சனங்களை முன்வைப்பவர் கமல்

'தசாவதாரம் ஒரு பகுத்தறிவுப் படம்' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கமல்ஹாசனைப் பாராட்டினார். ஆனால் படத்தின் பல காட்சிகள் பகுத்தறிவுக்கு விரோதமானவை. 'சைவ மன்னனின் ஆதிக்கத்துக்கு' எதிராகப் போராடி உயிர்துறந்த வைணவப் பற்றாளர் ரங்கராஜ நம்பியும் அவரது மனைவியும்தான் சமகாலத்தில் விஞ்ஞானி கமல்ஹாசனும் அக்கிரஹாரத்துப் பெண் அசினும். ''உனக்கும் எனக்கும் ஸ்நான பிராப்திகூடக் கிடையாது" என்று சொல்லும் அசின், கால் தடுக்கி விழும் இடம், பெருமாள்சிலை மண்ணில் புதைந்த இடம். 'ஸ்நான பிராப்தி மட்டுமல்ல, பூர்வஜென்ம பிராப்தியே உண்டு' என்பதைச் சொல்லும் காட்சி அது. கமல்ஹாசன் பாலத்திலிருந்து குதித்து தப்பும் லாரி வைணவப்பெயரை நாமத்துடன் சுமந்திருக்கும்.

'கடவுள் இல்லைனு சொல்லலை; இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொன்னேன்' என்று கமல் வசனம் பேசி முடித்ததும், கேமரா பின்னால் நகரும். அங்கே சுனாமியில் கரை ஒதுங்கியிருக்கும், நம்பிராஜனோடு சேர்ந்து கடலில் வீசப்பட்ட பெருமாளின் சிலை. பழையகாலப் புராணப்படங்களையும் ராமநாராயணன் படங்களையும் நினைவூட்டும்படி வைணவ அடையாளங்களும் ஆபத்து நேருமிடத்தில் எல்லாம் ஏதேனுமொரு வகையில் பெருமாளின் பிரசன்னமும் தொடரும். கமல்ஹாசன் பார்ப்பனர்கள்மீதும் பார்ப்பனியத்தின்மீதும் விமர்சனங்களை முன்வைப்பவர் என்றாலும் பலபடங்களில் பார்ப்பன வேடங்களை ஏற்று நடித்தவர் என்பதையும் அவரைச் சுற்றியிருந்த பல திரையுலக ஆளுமைகள் பார்ப்பனர்கள் என்பதையும் இங்கு நினைவுகூரலாம்.

கமல் தொடர்ச்சியாகப் பேசிவரும் பெரியாரிய மற்றும் காந்தியச் சார்புக்கு முற்றிலும் நேர்மாறானவை அவரது 'உன்னைப் போல் ஒருவன்' மற்றும் 'விஸ்வரூபம்' திரைப்படங்கள்.

கமல்ஹாசன் படத்திற்கு எதிர்ப்பு

'விருமாண்டி'யில் மரணதண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்த கமல்ஹாசன், 'உன்னைப் போல் ஒருவ'னில் காமன்மேனாக மாறி, 'குண்டுவைக்கும் தீவிரவாதிகள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பலனளிக்காது. தந்திரமாக அவர்களைக் குண்டுவைத்துக் கொல்லவேண்டும்' என்றார். படத்தில் ஒரு காட்சி. 'காமன்மேனின்' நிபந்தனையின் அடிப்படையில் மூன்று இஸ்லாமியத் 'தீவிரவாதிகளும்' ஓர் இந்து ஆயுத வியாபாரியும் வேனில் அழைத்து வரப்படுவார்கள். தான் தீவிரவாதியானதற்கான காரணத்தை விவரிப்பார், அதில் ஒரு முஸ்லிம். அவரது மூன்று மனைவிகளில் ஒருவர் பெஸ்ட் பேக்கரி கொலையில் கொல்லப்பட்டவர். அதற்குப் பழிவாங்கத்தான் அவர் கோவையிலே குண்டுவைத்தார் என்பது அவர் முன்வைக்கும் காரணம். இந்தக் காட்சியே அடிப்படையில் தவறானது. பெஸ்ட்பேக்கரி கொலை நடந்தது 2002ல். கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது 1998ல். அதைவிடக் கொடூரம், அந்த முஸ்லிம், வேதனையுடன் அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது, அந்த இந்து ஆயுத வியாபாரி சொல்வார், "மூணு பொண்டாட்டியில ஒண்ணுதானே போச்சு, மிச்சம் ரெண்டு இருக்குல்ல" என்று. முஸ்லிம்கள் பல மனைவிகள் உடையவர்கள், வகைதொகையில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் என்ற பொதுப்புத்தி, 'உன்னைப்போல் ஒருவன்' படத்திலும் 'தசாவதாரம்' படத்திலும் அழுத்தமாகப் பதியப்பட்டிருக்கும்.

அதைத் தொடர்ந்து உருவான கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்துக்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதும்கூட, "இந்தப் படத்தைப் பார்த்தால் ராமகோபாலன்தான் எதிர்ப்பார். முஸ்லிம்களைச் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறது இந்தப் படம்" என்று நம்பிக்கையுடன் சொன்ன கமல்ஹாசன், முஸ்லிம் இயக்கத் தலைவர்களை அழைத்துப் படத்தைப் போட்டுக்காட்டினார். பிறகு 'விஸ்வரூபம்' படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி, நீங்கி, படம் ரிலீஸானது. முழுக்க அமெரிக்கப் பார்வையுடன் அல்கொய்தா இயக்கத்தை அணுகிய படம் 'விஸ்வரூபம்'. அதிலும் இந்திய உளவாளி சம்பந்தமேயில்லாமல் அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்காக, அல்கொய்தாவில் ஊடுருவி, அவர்களை அழித்தொழிப்பதாகப் படம் சித்தரித்தது.

சாதியப் பெருமிதத்தைப் பேசிய படங்கள்

இதேபோல் பட்டியலின தரப்பிலிருந்து கமல் படங்கள்மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் பரிசீலிப்போம். 'தேவர் மகன்' படத்தை ஒரு பட்டியலின விரோதப் படம் என்று சொல்லிவிட முடியாது. வெற்று சாதியப் பெருமிதத்தின் அடிப்படையில் முக்குலத்தோர் வன்முறையைத் தூக்கிப்பிடிப்பதை விமர்சித்த படம்தான். ஆனால் 'தேவர் மகன்' என்ற டைட்டில், மீசையும் அரிவாளும் தேவர்களின் அடையாளங்களாக முன்வைக்கப்பட்டவை, 'போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே' என்ற பாடல் ஆகியவை, கமலின் நோக்கத்துக்கு மாறாக 'சாதியப் பெருமிதத்தைச் சித்தரிக்கும் படமாக' அது தென்மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. விழாக்களில் மீண்டும் மீண்டும் 'போற்றிப்பாடடி பெண்ணே' பாடல் ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து சாதிய மோதல்கள் ஏற்பட்டன. 'சின்ன கவுண்டர்', 'தேவர் மகன்' படங்களைத் தொடர்ந்து சாதியப் பெயர் தாங்கி ஏராளமான படங்கள் வரத்தொடங்கின. மீசையும் அரிவாளும் சாதியப் பெருமிதங்களாக முன்வைக்கும் பல படங்கள் சில ஆண்டுகளுக்கு வியாதியைப் போல் பரவின.

தன் சொந்தச் சாதியின்மீது விமர்சனம் வைத்த கமல்ஹாசனுக்கு பட்டியலின விரோதத்தோடு மேலெழும்பும் இடைநிலைச் சாதி அதிகாரம் குறித்து என்ன புரிதல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. பார்ப்பனர் ஆதிக்கம் என்பது சற்றுத் தளர்ந்தும் குறைந்தும் உள்ள சூழலில் இடைநிலைச் சாதி அதிகாரம், கொடிய அபாயமாக உருவெடுத்துள்ளது. ஆனால், இதுகுறித்த தன் பார்வைகளை கமல் விரிவாக விளக்கியதில்லை. 'தசாவதாரம்' படத்தில் வரும் பூவராகவன் என்ற பட்டியலினத் தலைவர்கூட ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகத்தான் குரல் கொடுப்பாரே தவிர, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அல்ல.

கமல்ஹாசனின் கோபம்

இப்போது சாதி எதிர்ப்புப் படங்களும் பட்டியலின சினிமாக்களும், குறைந்த அளவிலேனும் வரத்துவங்கியிருக்கின்றன. சாதியப் பெருமித சினிமாக்கள் குறைந்திருக்கின்றன. சாதிப்பெயர் தாங்கி வரும் சினிமாக்களோ முற்றிலுமாக இல்லை. ஆனாலும் கமல்ஹாசன் 'முத்துராமலிங்கம்' என்னும் படத்தில், அதே இளையராஜா இசையில் ஒரு சாதிப்பெருமிதப் பாடலைப் பாடுகிறார்; 'சபாஷ் நாயுடு' என்று தன் படத்துக்குப் பெயர் வைக்கிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? 'சாதி என்பது இன்னும் ஒழிக்கப்படாத, எதார்த்தமாக இருக்கும்போது சாதிப்பெயரை டைட்டிலில் வைப்பது என்ன தவறு? அந்தப் படம் சாதியைத் தூக்கிப்பிடித்தால்தானே தவறு?' என்றுகூட கேள்வி எழுப்பப்படலாம். ஆனால் யோசித்துப்பாருங்கள்,

சாதி என்பது எதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டு, ஆதிக்கச்சாதிப் பெயர்களை வைப்பதுபோல், 'பறையர் மகன்' என்றோ, 'அருந்ததியர் மகன்' என்றோ டைட்டில் வைக்கமுடியுமா? 1929லேயே 'பெயருக்குப் பின்னால் சாதிப்பெயர்களைப் போடக்கூடாது' என்று தீர்மானம் போட்ட பெரியாரின் பெயரை முன்மொழிந்துகொண்டே, சாதிப்பெயரில் டைட்டில் வைப்பது நியாயம்தானா?

ஜெயலலிதா
ஜெயலலிதாPt web

'சண்டியர்' படத்துக்குப் பட்டியலின தரப்பிலிருந்தும் 'விஸ்வரூபம்' படத்துக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்தும் எழுந்த எதிர்ப்பு, கமலை எதிர்த்திசைக்குச் செலுத்தியிருக்குமோ? கமல்ஹாசனின் ஜெயலலிதா மீதான கோபம் வலுத்ததற்குப் பின்னணியில் 'விஸ்வரூபம்' தடையும் அதன் பின்னணியில் இருந்த ஜெயலலிதாவும்தான் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. எந்த ஒரு கலைப்படைப்பையும் எந்த ஒன்றின் பேராலும் தடை செய்வது என்பது நிச்சயமாக விமர்சிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் படைப்புச் சுதந்திரத்தை வலியுறுத்தும் அதேவேளையில் படைப்பாளிகளின் பொறுப்பையும் உணர வேண்டும். காலங்காலமாக சினிமாக்களிலும் இலக்கியங்களிலும் ஊடகங்களிலும் மோசமாகச் சித்தரிக்கப்பட்டவர்களின் கோபத்தில் உள்ள நியாயங்களையும் புரிந்துகொள்வதுதான் கலைமனம்.

சுயவிமர்சனங்களை விரும்புபவர் கமல்

இத்தனைக்கும் கமல் சுயவிமர்சனங்களை விரும்புபவர்தான். 'பரிசோதனை சினிமாக்கள் வந்த காலகட்டத்தில், தான் நடித்த 'சகலகலா வல்லவன்' படம் சினிமாவை வேறுதிசைக்கு மாற்றியது' குறித்து அவரே பேசியிருக்கிறார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் மனநிலை பிறழ்ந்தவர்களைக் கொச்சையாகச் சித்தரித்ததை விமர்சித்து, மன்னிப்பும் கேட்டவர். அதேபோல் ‘விகடன் பிரஸ்மீட்’ என்னும் நிகழ்ச்சியில் ‘தேவர்மகன்’ திரைப்பட பாடல் தென்மாவட்டங்களில் பட்டியலின மக்களைச் சீண்டவும், சாதிய மோதல்களுக்கு வித்திடவும் காரணமானது குறித்து அப்போது விகடனில் பணிபுரிந்த நான் கேள்வி எழுப்பியபோது, கமல்ஹாசன் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

அதேநேரம், பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்த, 'ஹே ராம்' படம் எடுத்து இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்திய கமல்ஹாசன், 'விஸ்வரூபம்' படத்தை அத்வானிக்குப் போட்டுக்காட்டி, அவரோடு விருந்துண்டது, கமல் மீதான நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியது. மோடியின் 'தூய்மை இந்தியா' இயக்கத்தின் தமிழகப் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டதைக்கூட, 'சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான்' பாடலின் நீட்சியாக, சார்புமனநிலையாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் தொடர்ந்து காந்தி குறித்துப் பேசி வரும் கமலுக்கு, காந்தியைப் படுகொலை செய்த இந்துத்துவ அரசியல் குறித்துப் படமெடுத்த கமலுக்கு, மோடி அரசு காந்தியின் பிறந்த தினத்தைத் 'தூய்மை தின'மாக அறிவிப்பதன் பின்னுள்ள அரசியலையும் காந்தி, நேரு ஆகியோருக்கு மாற்றாக வல்லபபாய் பட்டேல், சாவர்க்கர், தீனதயாள் உபாத்தியாயா போன்ற இந்துத்துவக் கருத்தியல் தலைவர்களை முன்னிறுத்துவதையும் புரிந்துகொள்ள இயலாதா, என்ன?

கமல்ஹாசனின் பங்களிப்பு

ஊழல் என்பது சமூகத்தின் முக்கியமான பிரச்னைதான். ஆனால் மதவாதத்தையும் சாதியவாதத்தையும் மறைப்பதற்காக ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்துவது அதைவிடவும் முக்கியமான பிரச்னை. ஊழல் என்பது ஆளுங்கட்சியோடு முடிந்துவிடுவதில்லை. அது உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் - கார்ப்பரேட் ஆதரவு அரசியலோடு தொடர்புடையது. மோடி அரசின் நடவடிக்கைகள் முழுக்க, கார்ப்பரேட் ஆதரவாக இருக்க, அதுகுறித்து கமல் விமர்சிக்காதது ஏன் என்று ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

அதேநேரத்தில், கமலை ஒரு பார்ப்பனியவாதியாகவோ, இந்துத்துவ ஆதரவாளராகவோ அடையாளப்படுத்திவிட முடியாது. அவர் தன் திரைப்படங்களில் சுயசாதி விமர்சனத்தை முன்வைத்தவர். பெரியாரிய, கம்யூனிச அடையாளத்தால் எந்த வணிகவெற்றியும் கிடைக்காத காலகட்டங்களில் அந்த அடையாளங்களுடன் தன்னைக் காட்ட முயன்றவர். எனவே முரண்பாடுகளுடனே கமல்ஹாசனின் பங்களிப்புகளையும் இணைத்தே மதிப்பிட வேண்டும்.

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க: நிறம் மாறும் சினிமா - 15 | மணிரத்னத்தின் பிளாஸ்டிக் சினிமாக்களும், இந்து தேசியமும்!

(நிறம் மாறும் சினிமா தொடரும்...)