
‘தாயைப் போல தாலாட்ட, ஆகாயம் இருக்குதே
நம் தந்தை போல் பூமி கை நீட்டுதே
பேர் கூட கேட்காமல் பூங்காற்று அடிக்குதே
காசேதும் வாங்காமல் பூவாசம் கொடுக்குதே’
- இந்த வரிகளை கேட்கையில், கொண்டாட்ட மனநிலையில் பயணப்படும் யாரோ ஒருத்தருக்காக இது எழுதப்பட்டது என்று உங்களுக்குத் தோன்றலாம். அதுதான் இல்லை. இது, தெருவோரங்களில் வசிப்பவர்களுக்காக கவிஞர் யுகபாரதி எழுதிய வரிகள். ஆம், இதுவே தெருவோரம் வசிப்போரின் நிலை. குறிப்பாக தெருவோரம் வசிக்கும் தாய் - தந்தை ஆதரவின்றி வாழும் இளைய சமுதாயத்தின் அவலநிலையென்றே சொல்லலாம். இப்படியான குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12-ம் தேதி, இவர்களுக்கான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆம், இன்று சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தினம்.
‘தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளின் கனவுகள் மறுக்கப்படக்கூடாது, அவர்கள் வாழ்வு மேம்பட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்’ என்ற நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தில், இந்தியாவில் எத்தனை தெருவோர குழந்தைகள் உள்ளனர் என்பதை அறிய வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. உடன் அவர்களை மீட்பதில் நம் பங்கு என்ன என்பதையும் நாம் அறிய வேண்டும்.
1989-ல், ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடந்த குழந்தைகளின் உரிமைகள் பற்றிய மாநாட்டில் உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரேமாதிரியான வாழ்க்கை வழங்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தினம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் மொத்தமாக (பெற்றோருடனோ, பெற்றோர் இல்லாமலோ) 19,546 குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கின்றனர். இவர்களில் பெற்றோருடன் சுமார் 10,000 குழந்தைகளும், பெற்றோர் இல்லாமல் சுமார் 9,000 குழந்தைகளும் தெருவோரங்களில் வசிக்கின்றனர்.
மகாராஷ்ட்ரா – 5,153 குழந்தைகள்
குஜராத் – 1,990 குழந்தைகள்
டெல்லி – 1,853 குழந்தைகள்
தமிழ்நாடு - 1,719 குழந்தைகள்
மத்திய பிரதேசம் - 1,491 குழந்தைகள்
கர்நாடகா – 1,220 குழந்தைகள்
உத்தர பிரதேசம் – 1,038 குழந்தைகள்
பெற்றோர் / குடும்பங்களின் ஆதரவின்றி வசிக்கும் குழந்தைகள் விவரம்:
உத்தரபிரதேசம் – 270 குழந்தைகள்
தமிழ்நாடு – 124 குழந்தைகள்
கர்நாடகா – 105 குழந்தைகள்
டெல்லி – 61 குழந்தைகள்
மத்திய பிரதேசம் – 45 குழந்தைகள்
மகாராஷ்ட்ரா – 39 குழந்தைகள்
சமீபத்திய மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, உலகம் முழுவதும் 150 மில்லியன் குழந்தைகள் தெருவில் வாழ்கின்றனர்.
இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் குழந்தை தொழிலாளர்களாகவோ, யாசகம் கேட்பவர்களாகவோ, சிறு சிறு பொருட்களை வணிகம் செய்பவர்களாகவோ, பெர்ஃபார்ம் செய்பவர்களாகவோ இருக்கின்றனர். தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள, தாங்களே தினம் தினம் இப்படி போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெருநகரங்கள்தான் இப்படியான குழந்தைகளை அதிகம் கொண்டிருக்கிறது.
இந்த அவலநிலை குறித்து, குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் நம்மிடையே கூறுகையில், “உண்மையில் இந்தியாவில் எவ்வளவு தெருவோர குழந்தைகள் உள்ளனரென்ற தரவே இங்கு யாரிடமும் கிடையாது. எல்லாமே ஆன்லைன் மூலமோ, தனியார் அமைப்புகள் மூலமோ ஆங்காங்கே எடுக்கப்பட்டது மட்டுமே. அரசிடம் இதற்கு தரவே இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மட்டுமன்றி,
குழந்தைகள் பற்றிய தரவை பொறுத்தவரை கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்கு பின் என்று நாம் பிரிக்க வேண்டும். கொரோனாவுக்குப்பின், நிறைய குழந்தைகள் ஆதரவற்று வீதிகளில் தஞ்சமடைந்திருப்பர்
தெருவோர குழந்தைகளை காக்க, முதலில் அவர்கள் பெற்றோர் / வளர்ப்பவருக்கு வாழ்வாதாரம் இருக்கும்வகையில் நாம் (அரசும் மக்களும்) பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தெருவோரத்தில் வசிப்பதால்தான், அவர்களின் பிள்ளைகளுக்கும் அதே அவலநிலை வருகிறது. இப்படியானவர்களை, பொதுபுத்தி எப்படி பார்க்கிறது தெரியுமா? நில ஆக்கிரமிப்பாளர்கள் என்று!
இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல; அவர்களின் வாழ்வாதரம் அழிக்கப்பட்டுள்ளது. கல்வி மறுக்கப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ வசதிகள்கூட மறுக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு. அந்த வகையில் இக்குழந்தைகள், வசதி மறுக்கப்பட்டவர்கள். இது அரசின் தோல்வியென்றே சொல்ல வேண்டும்.
பலரும் இக்குழந்தைகளுக்கு உரிமை மீறல் நடக்கும்போதுதான் அவர்கள் நலன் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும்போது பேசுவதில்லை. உரிமை மறுப்புக்காக பேசினால் மட்டுமே, நம்மால் உரிமை மீறலை தடுக்கமுடியும். ஆகவே தடுப்பதை முதலில் பேசுவோம், மீறுவதை அடுத்து பேசிக்கொள்ளலாம். தெருவோரங்களில் வசிப்பவர்களை அப்புறப்படுத்துவது எப்போதுமே தீர்வல்ல, அவர்களுக்கென தனி இடம் ஒதுக்குவதுதான் தீர்வு.
தெருவோரக் குழந்தைகளென்பவர்கள், தொடர்ந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாழ்வாதாரத்துக்காக நகர்ந்துகொண்டே இருப்பவர்கள். போகும் இடத்திலெல்லாம் துரத்தப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள். அப்படி வெவ்வேறு இடங்களுக்கு அவர்கள் நகர்கையில், ஒருகட்டத்தில் வேற்று மாநிலங்களுக்கு கூட செல்வார்கள். வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, தாய்மொழி தடைபடும். இதனால் அவர்களின் கல்வியும், அடிப்படை விஷயங்களும் மொத்தமாக கேள்விக்குறியாகும். நம் கண்முன் தவிக்கும் வடமாநில தொழிலாளர்களின் குடும்பங்களே இதற்கு சாட்சி. ஆகவே அரசு அப்பா – அம்மாவின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதே, அக்குழந்தைகளை காக்கும்.
இவர்கள் ஒருபுறமெனில், ஆதரவற்று நிற்கும் குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். இவர்களை ஒருங்கிணைக்ககூட இங்கு ஆளில்லை. இப்படியானவர்களை அரசு அப்படியே இவர்களை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு படிக்க வைத்து, முன்னுக்கு கொண்டு வரவேண்டும்.
2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில், குழந்தைகளுக்கான கொள்கை இயற்றப்பட்டது. அதில் இவ்வகை குழந்தைகளை, எளிதில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் என பட்டியலிடுகிறது அரசு. இதை கருத்தில்கொண்டு அவர்களுக்காக பல நலத்திட்டங்களை அதில் குறிப்பிட்டது அரசு. அவை அனைத்தையும் நான் வரவேற்கிறேன்.
ஆனால் இவையாவும் செயல்பாட்டில், நடைமுறையில் எப்படி உள்ளது என்று பார்த்தால், கேள்விக்குறிதான். அரசு இவ்விஷயத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்த நோக்கத்தையெல்லாம் நம்மால் அடையமுடியும்.
இந்தக் குழந்தைகள், குழந்தைகளாக வளரவேண்டும். அது, நம் (அரசு, தனிநபர்) கைகளில்தான் இருக்கிறது” என்றார்.