"ஒர்க் ஃப்ரம் ஹோம்... குழந்தைத் தொழிலாளர்களுக்கும்தான்!" - பேரிடர் அவலம் பகிரும் தேவநேயன்

"ஒர்க் ஃப்ரம் ஹோம்... குழந்தைத் தொழிலாளர்களுக்கும்தான்!" - பேரிடர் அவலம் பகிரும் தேவநேயன்
"ஒர்க் ஃப்ரம் ஹோம்... குழந்தைத் தொழிலாளர்களுக்கும்தான்!" - பேரிடர் அவலம் பகிரும் தேவநேயன்

ஜூன் மாதம் 12-ம் தேதியான இன்று, உலக குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர்களை பொறுத்தவரை, கடந்த 30 ஆண்டுகளாக அவர்களின் எண்னிக்கை ஓரளவு குறைந்து வந்த நிலையில், கொரோனா அலை தாக்கம் நிகழ்ந்த இந்த இரு ஆண்டுகளில் அது மீண்டும் அதிகரித்துள்ளது என யுனிசெஃப் கூறியுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்பது எப்படி? இவர்கள் உருவாகாமல் தடுக்க என்ன வழி? ஏன் இவர்கள் உருவாகிறார்கள்? எந்த நிர்ப்பந்தம், இவர்களை தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கிறது? – இப்படி அடுக்கடுக்கான கேள்விகள், நம் மனதுக்குள் எழாமல் இல்லை. இந்தக் கேள்விகளுகெல்லாம், பதில் சொல்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர், தேவநேயன். அவர் நம்முடன் பகிர்ந்துக்கொண்ட சில தகவல்கள் இங்கே…

“எந்தவொரு பேரிடருக்குப் பிறகும், அந்தப் பேரிடரின் நிர்ப்பந்தத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவது – குழந்தைத் தொழிலாளர் உருவாவது போன்ற சம்பவங்கள் அதிகமாக ஏற்படும். அந்தப் பேரிடர் நில அதிர்வாக இருக்கலாம் அல்லது ஏதேனும் புயல் பாதிப்பாக இருக்கலாம் அல்லது சுனாமி பேரலையாகக்கூட இருக்கலாம். எனில், கொரோனாவின்போது மட்டும் ஏன் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றால், இது பிற பேரிடர்போல குறிப்பிட்ட பகுதியில் மட்டும் – குறிப்பிட்ட நாள்கள் மட்டும் ஏற்படும் பேரிடர் அல்ல. இது, ஆண்டுக்கணக்கில் நீடித்துக்கொண்டிருக்கிறது. அதுவும், உலகளவில் ஏற்பட்டுள்ளது. ஆகவே சிக்கலும் பெரிது, பாதிப்பும் பெரிது.

இதை சமாளிக்க, அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். மாவட்ட அளவிலும், பஞ்சாயத்து அளவிலும் குழந்தைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதன்மூலம், அனைத்து குழந்தைக்கும் கல்வி கிடைக்கிறதா, அவர்களில் யாரேனும் வேலைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டில், இதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் செயல்பாட்டளவில் அது பரவலாக ஏற்படுத்தப்படவில்லை. அரசு அம்முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து பஞ்சாயத்திலும் இந்தக் குழு இயங்குவது, உறுதிசெய்யப்பட வேண்டும்.

நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உருவாக மற்றுமொரு காரணமும் இருக்கிறது. அது, சட்டம். சட்ட ரீதியாக பார்த்தால், 14 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும், தொழிலில் ஈடுபடுத்தப்படலாம். இங்கு 18 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையால், வங்கிக் கணக்குக்கூட உருவாக்க முடியாது. ஆனால், வேலை செய்யலாமாம். எனில் அந்தக் குழந்தையின் உழைப்பை சுரண்டி, அதன் பலனை யாருக்கு கொடுக்க நினைக்கிறார்கள் என தெரியவில்லை.

முதலில் 14 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என சொல்வதே தவறு. பன்னிரெண்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் அடிப்படைக் கல்வி இலவசமாகவும் தரமுடனும் தரப்பட வேண்டும். அதுவும், அவரவர் தாய்மொழிக்கல்வி கிடைக்க வேண்டும். இந்திய அளவில், இது செய்யப்பட வேண்டும். அப்படி சொன்னால் மட்டுமே 18 வயதுக்குட்பட்டவர்கள் வேலைக்கு செல்லும்போது, அவர்களை அதிலிருந்து மீட்டு நம்மால் கல்வி கொடுக்க முடியும்.

இன்று பல குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடிக்க முடியாமல் இருப்பதற்கும், அதை எங்களால் தடுக்க முடியாமல் இருப்பதற்கும், இந்த 14 வயது உச்சவரம்பே முக்கிய காரணி. ஆக, இதை நாம் நிச்சயம் ஒழிக்க வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக, கொரோனா காலத்தில் வேலை இழந்த பெற்றோரை அரசு கவனத்தில் கொள்வது, காலத்தின் கட்டாயம். காரணம், வேலையின்மை ஏற்படுத்திய பொருளாதார சிக்கலில்தான் பெற்றோரே குழந்தைகளை வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். எந்தவொரு பெற்றோரிடம், குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் இருக்கிறதோ, அவர் நிச்சயம் குழந்தையை வேலைக்கு அனுப்ப விரும்பமாட்டார். இந்த விஷயத்தில், நிவாரணத்தொகையை விடவும் வேலைவாய்ப்புகள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. ஆகவே ஏழை, எளியோருக்கும், வறியவருக்கும் அரசு வேலைவாய்ப்பை உறுதிபடுத்திக்கொடுத்தால், குழந்தைத் தொழிலாளர்களை நம்மால் மீட்கவும், மேலும் உருவாகாமலும் தடுக்க முடியும்.

குழந்தைத் தொழிலாளர்களை தடுப்பதில், அரசுக்கு எந்தளவுக்கு பங்கிருக்கிறதோ, அதேயளவுக்கு சமூகத்துக்கும் பங்கிருக்கிறது. எங்கோ ஒரு கடையிலும் தெருவோரத்திலும் யாராவது ஒரு குழந்தை வேலை செய்வதை பார்க்கும்போது உடனடியாக 1098 என்ற எண்ணுக்கு அழைத்து, அதை அரசு தகவல் மையத்துக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

முன்பெல்லாம் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் வீட்டையே தொழிலகமாக மாற்றியிருக்கும் இந்தக் கொரோனா அலையின் தாக்கத்தில், வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்கின்றனர். அவர்களை மீட்க, பஞ்சாயத்து மையங்கள் அமைத்து, கண்காணிப்பது மிக மிக முக்கியம். சமூகத்திலுள்ள மக்கள், தங்கள் பகுதியிலுள்ள எல்லா குழந்தையும் கல்வி பயில்வதை உறுதிசெய்ய வேண்டும். ஏதேனுமொரு குழந்தை வேலை செய்தால், அதை அருகிலிருக்கும் பாதுகாப்பு மையம் மூலமாகவோ, 1098 எண் மூலமாகவோ அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இது அனைத்துக்கும் முன்பு, 18 வயதுக்குட்பட்டவர்களை குழந்தைகள் என சட்டம் அறிவிக்க வேண்டும். 1960களில், அம்பேத்கர் சட்டம் இயற்றும்போது 14 என்று சொல்லப்பட்டதை சிறு மாற்றம் கூட செய்யாமல் 2021-ம் ஆண்டிலும் பின்பற்றுவது, தவறு” என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com