இந்திய பாரம்பரிய இடங்கள் 20: சாஞ்சி - இறக்கைகளுடன் சிங்கம், குதிரை, மீன் தலையுடன் மனிதன்!

இந்திய பாரம்பரிய இடங்கள் 20: சாஞ்சி - இறக்கைகளுடன் சிங்கம், குதிரை, மீன் தலையுடன் மனிதன்!
சாஞ்சி
சாஞ்சி சாஞ்சி

தற்போதைய நிலவரப்படி, ஆசியாவில் உள்ள மதங்களில் மூன்றாவது பெரிய மதமாக இருப்பது புத்த மதம். புத்த மதத்தின் பிறப்பிடம் இந்தியாவாக இருந்தாலும், இலங்கை, வியட்நாம், கொரியா, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா என்று கிழக்கு நாடுகள் எங்கும் புத்தம் பரவியது. இப்போது வரை அங்கே நிலைத்தும் வருகிறது. ஆனால், உதயமான இந்தியாவில் இன்று வெறும் பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. புத்த விஹாரங்களும் ஸ்தூபிகளும் எஞ்சியுள்ள சில மடங்களும், இலக்கியங்களும் தான் புத்த மதத்தின் நினைவுகளாக தற்போது உலாவி வருகின்றன.

இன்றைய பீகார், நேபாளம், ஜார்க்கண்ட் பகுதிகள்தான் புத்த மதத்தின் பிறப்பிடங்கள். வேத காலத்தில் தொடங்கிய வர்ண முறை மக்களை பெரிதளவில் பிரித்து ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கியது. சூத்திரர்கள், பெண்கள் கோயில்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் அனுமதிக்கப்படவே இல்லை. அவர்களை மதிக்கும் ஒரு இடமாகவும், எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் நிலையாகவும் புத்த மதமும், சமண சமயமும் உருவானது. ஆனால், உருவாகிய சில நாட்களில் புத்த மாதத்திற்குள் எண்ணப் பிளவுகள் வந்து, ஹீனயணம், மஹாயானம் என இரண்டாகப் பிரிந்தது புத்த மதம்.  ஹீனயணம் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குப் பரவியது.

அதில் ஒரு குழுவினர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து புத்த மதத்தைப் பரப்பினர். அவர்களின் எழுத்துக்களாலும், பேச்சுகளாலும் அங்கிருந்த மன்னர்கள் புத்த மதத்தைச் சாரத் தொடங்கினர். அவர்களின் உதவியோடு ஏராளமான புத்த கட்டட அமைப்புகள் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட கட்டடங்களில் ஒன்று தான் புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியும், அது சார்ந்த கட்டடங்களும். மத்தியப் பிரதேசம், போபாலிலிருந்து 46 கிமீ தொலைவில், ராய்சென் மாவட்டத்தில் அமைத்துள்ளது சாஞ்சி எனும் நகரம். கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையில் இவ்விடம் பாதுகாக்கப்பட்டு மேலும் அழகு சேர்க்கப்பட்டு வந்தது.

சாஞ்சி ஸ்தூபி கட்டட அமைப்பு: ஸ்தூபி என்றால் நினைவிடம் என்று பொருள். புத்த மதத்தில் இறந்த புத்த பிட்சுகளுக்கும், போதிசத்துவர்களுக்கும் ஸ்தூபி கட்டுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. ஸ்தூபியின் முக்கிய கட்டட அமைப்பானது, முதலில் அரைக்கோள வடிவத்தில் அண்டா என்ற பெயரில், பகுதியின் மேற்பகுதி கட்டப்பட்டு அதன் மீது சதுரமான ஹர்மிகா என்ற அமைப்பு கொடுக்கப்பட்டு, அதன்மேல் சக்கர வள்ளி எனும் குடை அமைப்பு வைக்கப்பட்டு அமைக்கப்பட்டு வந்தது.

அண்டா என்பது இந்துக் கோயிலின் கர்ப்ப கிரகம் போன்றது. அதைச் சுற்றி வரும் பாதையாக பிரதட்சண பாதை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவரும், வாயில்களுக்காக அலங்கரிக்கப்பட்ட தோரணங்களும் உருவாக்கப்பட்டிருக்கும். தோரணங்களுக்கு அருகில் தூண்கள் அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும். அப்படியான நான்கு சின்னங்களையும் அசோக சக்கரத்தையும் கொண்டுள்ள அசோகத் தூண் தான் இந்தியாவில் அடையாளமாக அரசு அறிவித்துள்ளது. சாஞ்சி ஸ்தூபி ஆனது மவுரியர், சுங்கர், சாதவாகனர், குப்தர், ஆங்கிலேயர் காலத்திலிருந்து வளர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளது.

இரண்டாவது ஸ்தூபி கி.பி.150-ல் கட்டப்பட்டது. 3அடி விட்டத்தில் 22.5அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்தூபியைச் சுற்றி சிறு கைப்பிடிகள் கொண்ட சுவர் போன்ற அமைப்பு உள்ளது. அதில் பெண் தெய்வங்கள், புராணங்களில் காணப்படும் இறக்கைகளுடன் கூடிய சிங்கம், குதிரைத் தலை, மீன் தலையுடன் கூடிய மனித உருவங்களைக் காண முடிகிறது.

கால ஓட்டத்தில் சாஞ்சி ஸ்தூபி...

மௌரிய காலம்! (கி.பி. 3ஆம் நூற்றாண்டு): சாஞ்சியில் உள்ள "பெரிய ஸ்தூபி" மிகவும் பழமையான கட்டடமாகும். இது கிமு 3 ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னரான பிந்துசாரரின் மகன் அசோகரால் அமைக்கப்பட்டது. கிமு 3 இல் அசோகர் சாஞ்சியில் மொத்தம் எட்டு ஸ்தூபிகளைக் கட்டினார், ஆனால் இன்று மூன்று ஸ்தூபிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த ஸ்தூபிகளில் புத்தரின் பற்கள், முடி மற்றும் தோள்பட்டை எலும்புகள் போன்ற நினைவுச்சின்னங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சாஞ்சியில் இருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் விதிஷா என்ற பழங்கால நகரம் உள்ளது. மௌரியப் பேரரசர் அசோகர் உஜ்ஜயினிக்கு வைஸ்ராயாக பயணம் செய்தபோது, விதிஷாவில் ஒரு வணிகரின் மகளான தேவி என்பவரை மணந்தார். அவர்களுக்கு உஜ்ஜயினி, மகேந்திரா, சங்கமித்ரா என்ற மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.

அசோகரின் பிரவேசத்திற்குப் பிறகு, மகேந்திரன் ஒரு பௌத்த மதப் பணிக்குத் தலைமை தாங்கினார். புத்தர் இறந்த பிறகு அவருடைய நினைவுப் பொருட்களை எட்டாகப் பிரித்து 8 சிற்றரசர்கள் எடுத்துச் சென்றனர். அவர்களில் 7 பேரிடம் இருந்து அந்த நினைவு பொருட்களைப் பெற்று சாஞ்சி ஸ்தூபியில் வைத்து, அதனை அமைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. எட்டாம் சிற்றரசனாக நாக அரசர் மட்டும் புத்த நினைவு பொருளை அவர் உடனே எடுத்துச் சென்றார்.

இந்த காட்சிகள் யாவும் சாஞ்சி ஸ்தூபியின் சுவர்களிலும் தோரணங்களிலும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மகாராணி தேவியின் பிறப்பிடமும், இவர்களுக்கான திருமணம் நடைபெற்ற இடமும் விதிஷாவுக்கு அருகிலுள்ள சாஞ்சி ஆகும். புத்த சமயத்தை தழுவிய அசோகர், புத்தரின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்ப விரும்பினார். இன்று நாம் பார்க்கும் ஸ்தூபியின் பாதி விட்ட அளவைக் கொண்டு முழுக்க முழுக்க செங்கல்லால் உருவாக்கப்பட்டது தான் சாஞ்சியில் உள்ள ஸ்தூபி.

பெரிய அலங்காரங்கள் இன்றி எளிதான முறையில் எழுப்பப்பட்டது. இலங்கை நாட்டின் புத்த நூலான மஹாவம்சம் என்ற நூலில் அசோகர் பற்றிய குறிப்பும், அவரது மகனான மகேந்திரன் மற்றும் சங்கமித்ரா புத்த மதத்தைப் பரப்புவதற்காக இலங்கை வந்ததும், அவர்கள் வருவதற்கு முன் நினைவாக எழுப்பப்பட்ட சாஞ்சி ஸ்தூபி பற்றிய குறிப்பும் அமைந்துள்ளது.

அசோகத் தூண்: நாற்பத்து இரண்டு அடி உயரமுள்ள மணற்கல்லைத் தேய்த்து மெருகேற்றி அசோக தூணாக வடிவமைத்துள்ளனர். தூணின் உச்சியில் நான்கு சிங்கங்களும் அதற்குக் கீழ் நேரத்தைக் குறிக்கும் 24 ஆரம் கொண்ட ஒரு சக்கரத்தையும் வடிவமைத்தனர். அதன்கீழ் பிராமி எழுத்துகளால் கல்வெட்டுகளை அமைத்துள்ளனர். சாஞ்சி ஸ்தூபியின் தெற்கு வாயில் அருகில் இந்த அசோக தூண் அமைந்துள்ளது. இது காலப்போக்கில் சிதிலமடைய, அசோக தூணின் கீழ்ப் பகுதி மட்டும் இன்றும் அங்குக் காணப்படுகிறது. நான்கு சிங்கங்கள் கொண்ட தூணின் மேற்பகுதியை சாஞ்சி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். இந்தத் தூண் அமைந்துள்ள மணற்கல்லானது சுனாரில் உள்ள குவாரியில் இருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள 40வது கோயிலானது அசோகரின் தந்தையான பிந்து சாரர் கட்டியது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் அது எரிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. மேலும், அது 7 முதல் 8ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டு 50 தூண்கள் கொண்ட ஒரு மண்டபமாக மாற்றப்பட்டது. 

சுங்கர்கள் காலம்! (கிமு 2 ஆம் நூற்றாண்டு): சுங்கர்கள் பாரத் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இரண்டாம் சந்திரகுப்த மௌரியர் காலத்திற்குப் பிறகு அரசு மிகவும் வலுவிழந்து இருந்தது. அவர்களைக் கைப்பற்றிய சுங்கர்கள் சாஞ்சியையும் ஆக்கிரமித்தனர். சுங்க அரசனான புஷ்ய மித்திரன் இரண்டாம் நூற்றாண்டில் சாஞ்சியில் உள்ள ஸ்தூபியையும் கோவிலையும் சேதப்படுத்தியதாகக் குறிப்புகள் கூறுகின்றன. அதன்பின் வந்த அவரின் மகன் அக்னிபமித்திரன், சாஞ்சி ஸ்தூபியைச் சுற்றி கற்களால் கொண்ட அமைப்பை எழுப்பினார். அது போக கோவிலில் அமைந்துள்ள அலங்காரங்கள் கொஞ்சம் மெருகேற்றப்பட்டது. மணிகள் மட்டும் அலங்காரமாக இருந்த உடுப்பியில், விலங்குகள், பூக்கள் உடைய அலங்கார வேலைப்பாடுகளும் இவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது.

சாத்தவாகனர் காலம்! (கிமு 1 ஆம் நூற்றாண்டு - கிபி 1 ஆம் நூற்றாண்டு): இரண்டாம் சதகர்னியின் கீழ் சாதவாகனப் பேரரசு கிழக்கு மால்வாவை சுங்கர்களிடமிருந்து கைப்பற்றியது. சாதவாகனர்கள் காலம் இந்த ஸ்தூபியின் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த ஸ்தூபியை அலங்கரித்து மெருகேற்றியவர்கள் இவர்கள்தான். கிமு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஒன்றாம் நூற்றாண்டு வரை மத்திய பகுதியை ஆண்டுவந்த சாத்தவாகனர்கள், கலையில் திறன் வாய்ந்தவர்கள்.

புத்த மதத்தைத் தழுவி வந்த அவர்கள் ஜாதக கதைகளை பெரும்பாலும் வெளிப்படுத்தி வந்தனர். கிரேக்க வணிகர்களுடன் அதிகம் பழகி வந்த இவர்கள், பார் இந்தோ கிரேக்கர் முறையிலான சிற்ப வேலைகளை இந்தியப் பகுதியில் நிலைநாட்டி வந்தனர். அப்படியான ஒரு கலைப்படைப்பு தான் சாஞ்சி ஸ்தூபியில் சுற்றி அமைந்துள்ள அமைப்புகளில் காணப்படுகிறது. அந்தம் மற்றும் மர வேலை செய்பவர்களை வைத்து இந்த தோரணங்களில் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைச் சாதவாகனர்கள் செய்துள்ளனர். ஹிரியோடோரஸ் எனும் கிரேக்க வணிகரின் நினைவாக ஒரு தூண் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. காந்தார கலைப் பள்ளி என்று சொல்லப்படும் இந்த கிரேக்கச் சிற்ப வேலைப்பாடுகளை இன்று அதிகம் காணலாம். காந்தார முறை என்பது பாதி மூடப்பட்ட விழியும் கிரேக்க உடையும் கொண்ட புத்தர் உருவம் கொண்டதாகும்.

இந்த அமைப்புகள் காஞ்சியில் அதிகம் காணப்படுகிறது. தூண்களின் உச்சியில் உள்ள யானை சிங்கம் யக்ஷர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாதவாகனர்கள் காலத்தில் மன்னர்கள் மட்டுமின்றி மக்களும் நிதி உதவி அளித்துள்ளனர். அவர்களுக்குப் பிடித்த ஜாதக கதையின் நிகழ்வுகளை ஸ்தூபியின் சுவர்களில் வடிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூறும் நிகழ்வுகளோடு அவர்களது பெயரும் அந்த ஸ்தூபியின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. ஹதிகும்பா கல்வெட்டுகளும் கரோஷி கல்வெட்டுகளும் சாதவாகனர்களின் சிறப்பு பற்றி கூறுகிறது. கிரேக்கர்கள் ஸ்தூபிக்கும் புத்த மதத்திற்கும் கொடுத்த கொடைகள் பற்றிய சிற்பங்களையும் இங்குக் காணலாம். மகாயான புத்தி சக்தி சட்டை சேர்ந்த போதிசத்துவர் கதைகளும் இங்கு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

குப்தர்கள் காலம்! (கி.பி 412-423): இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில், இங்குள்ள கிழக்கு தோரண வாயிலும் 17ஆம் கோயிலும் கட்டப்பட்டது. பதினேழாம் கோயில் என்பது அன்றைய புத்த குகைக் கோயில்கள் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. முகப்பு நான்கு தூண்கள் செவ்வக வடிவிலான ஒரு சைத்திய அமைப்பைக் கொண்டிருந்தது. பத்மபாணி சிலை, வஜ்ரபாணி தூண் போன்றவை குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும். பத்மபாணியின் மற்றொரு தூண், இப்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்த ஸ்தூபி பெரிதாக கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மீட்டமைப்பு… 1817-1819 ஆம் ஆண்டில், மூன்றாம் மராட்டியப் போரில் பிரிட்டிஷ் அதிகாரியாக இருந்த ஜெனரல் ஹென்றி டெய்லர் என்பவர் காடுகள் சூழ்ந்த ஒரு பகுதியில் இந்த ஸ்தூபியைக் கண்டறிந்தார். தளம் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்தது. 1822 ஆம் ஆண்டில் சர் ஹெர்பர்ட் மேடாக் என்பவரால் பெரிய ஸ்தூபி விகாரமாக உடைக்கப்பட்டது, இருப்பினும் அவரால் மையத்தை அடைய முடியவில்லை. இதனால் முயற்சியை அவர் கைவிட்டார்.

பின்னர், அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் மற்றும் ஃபிரடெரிக் சார்லஸ் மைசி ஆகியோர் 1851 ஆம் ஆண்டில் சாஞ்சி மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஸ்தூபிகளில் முதல் முறையான ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டனர். 1881ம் ஆண்டுகளில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதையல் தேடுபவர்களால் அப்பகுதி சேதமடைந்தது. 1912 மற்றும் 1919 க்கு இடைப்பட்ட காலத்தில் சர் ஜான் மார்ஷலின் தலைமையிலான குழு, இந்த ஸ்தூபியை மீட்கும் பணியை மேற்கொண்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து நிறையச் சிற்பங்களை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அதுபோலவே சாஞ்சி ஸ்தூபியில் உள்ள ஒருசில சிற்பங்களையும் லண்டன் விக்டோரியா அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்சென்றனர். 1958இல் சாஞ்சி ஸ்தூபி இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, அன்றிலிருந்து இன்று வரை பாதுகாத்து வருகின்றனர். தற்போது, மூன்று முக்கிய ஸ்தூபிகள் மற்றும் பல கோயில்கள் உட்பட சுமார் ஐம்பதுக்கும் அதிகமாக நினைவுச்சின்னங்கள் சாஞ்சியில் உள்ளன.

ஒரே இடத்தில் பல ஆயிர சரித்திரத்தையும், உயர்ந்த கலை வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் இந்த இடங்களை, 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கலை, கட்டடக்கலை, சிற்பங்கள், வரலாற்று நினைவுகள் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1,2,3,4 மற்றும் 6-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள் சேர்க்கப்பட்டன. சாஞ்சி ஸ்தூபியை கெளரவிக்கும் வகையில் 2017ம் ஆண்டு வெளிவந்த புதிய 200 ரூபாய் நோட்டில் சாஞ்சி ஸ்தூபியின் படத்தை அச்சடித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு…

சென்னையிலிருந்து 1525 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாஞ்சிக்கு செல்ல விரும்பினால், சென்னையிலிருந்து போபாலுக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து, பேருந்து அல்லது வாடகை கார் மூலம் செல்லலாம். ரயில் வழியில் செல்ல விரும்பினால் சாஞ்சி வரை ரயிலில் சென்று, அங்கிருந்து வண்டி மூலம் செல்லலாம். அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் சாஞ்சிக்கு செல்ல திட்டமிடலாம். நவம்பர் மாதம் சாஞ்சியில் சேத்தியகிரி விகாரை திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் சடங்குகளின் ஒரு பகுதியாக, கௌதம புத்தரின் ஆரம்பக்கால சீடர்களின் இரண்டு நினைவுச்சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

சாஞ்சி ஸ்தூபியைச் சுற்றிப் பார்க்க> VIRTUAL TOUR 

இப்பகுதிகளை சுற்றிப்பார்பதற்கு, இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு 10 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்கு 250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற வார நாட்களில் சாஞ்சி ஸ்தூபி பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கும்.

(உலா வருவோம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com