[X] Close

இந்திய பாரம்பரிய இடங்கள் 19: நந்தா தேவி பூங்கா - மலர் படுக்கையும், அரிய வகை விலங்குகளும்!

சிறப்புக் களம்

Indian-Heritage-Sites-19--Nanda-Devi-and-Valley-of-Flowers-National-Parks

சிறந்த பாதுகாப்பும், எழில் நிறைந்த இயற்கை அழகும் இருக்கும் இடம் என்றால் அது இமாலய மலை தான். உயரமான சிகரங்களும், பனி மூடிய மலைகளும், மலைகளுக்கு இடையேயான பள்ளத்தாக்குகளும், அதன் வழி ஓடும் நதிகளும் சேர்ந்தே இமாலய மலைப்பகுதிகளின் அழகை அதிகமாக்குகின்றன. இந்தியாவில் ஓடும் பெரும்பாலான நதிகள் அனைத்தும், திபெத்தியப் பகுதியில் உதித்து இமாலய பள்ளத்தாக்குகள் வழியே இந்தியாவிற்குள் பாய்கிறது. வட இந்தியாவின் நீராதாரங்களின் ஊற்று என்றே சொல்லலாம். எனவே, இங்கு செழிப்பிற்கும் வளத்திற்கும் பஞ்சமே இல்லை. அப்படிப்பட்ட அமைப்பில் அமைந்துள்ள இடமே நந்தா தேவி தேசிய பூங்கா மற்றும் பூக்கள் பள்ளத்தாக்குகள். அழிந்துவரும் உயிரினங்களுக்கு அடைக்கலமாகவும், தனித்துவமான இயற்கை அமைப்புகளையும் கொண்டதால் இந்த இடம் பூக்களின் பள்ளத்தாக்காகவும், சரணாலயமாகவும், உயிரியல் காப்பகமாகவும் செயல்பட்டு வருகிறது.

image

கடல் மட்டத்திலிருந்து 7817 மீட்டர் உயரம் கொண்ட நந்தா தேவி சிகரம் இந்தியாவின் 2 ஆவது பெரிய சிகரமாகும். அதைச் சுற்றி 630 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இடம் தான் நந்தா தேவி தேசிய பூங்கா. கங்கையின் முக்கிய துணை நதியான ரிஷி கங்கா இந்த பூங்காவையொட்டி பாய்கிறது. இதனால் பூங்கா, செழித்துக் காணப்படுகின்றது. அடர்த்தியான மரங்கள், அதைச் சார்ந்த உயிரினங்கள் என்று இயற்கையின் குடிலாக அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு மேற்கு இமாலய உள்ளூர் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. இதனால் இமாலயப்பகுதிக்கே உரித்தான பறவை வகைகளை இங்கு அதிகம் காணமுடியும். வனப்பகுதியாகவும், உயர்ந்த மரங்களும், பசுமைப் போர்த்திய புல்வெளிகளும் அதிகம் இருப்பதால் இங்குள்ள தேசியப் பூங்காவில், ஆசியக் கருப்பு கரடி, பழுப்பு கரடிகள், பல வகையான கருப்பு கரடிகள், பனி சிறுத்தைகள், மஸ்க் மான், செந்நரி, நீல ஆடுகள், பறக்கும் அணில், ஹிமாலய மோனல், இமாலய தகர் மற்றும் பல்வேறு வகையான அரிதான விலங்குகளும், பாலூட்டிகளும் உள்ளன.


Advertisement

image

நந்தா தேவி தேசிய பூங்காவின் வரலாறு… வட இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் ஒரு மாவட்டமான கர்வால் மாவட்டத்திலிருந்த இப்பகுதி, உலகின் மிக உயரமான மலையாகக் கருதப்பட்டது. இங்குள்ள வனப்பகுதிகளில் மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும் அடர் வனம் சூழ்ந்த பல இடங்களில் மனிதர்களின் நடமாட்டமானது இல்லாமல் இருந்தது. இதனால் இப்பகுதிகளின் சிறப்பும், அழகும் மனிதர்களுக்குத் தெரியாமலேயே இருந்து வந்தது. 1883ம் ஆண்டுகளில் கிரகாம் என்ற ஆங்கிலேயர் ஒருவர் இப்பகுதிகளில் ஓடும் ரிஷி கங்கா நதியின் வழியாகப் பயணம் மேற்கொண்டார். அப்போது இங்குள்ள பறவைகள், விலங்குகள், பூக்களையும் கண்டு, அப்பகுதிகளின் வளத்தையும், அதன் மதிப்பையும் பற்றி குறிப்புகள் கொடுத்தார். இதனால் அப்பகுதியைப் பற்றி பலருக்கும் தெரியவந்தது. இருந்தாலும், அடர் வனப்பகுதி என்பதால் அங்கு யாரும் செல்லவில்லை. கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்து 1934ம் ஆண்டில் பில் டில்மேன் , எரிக் ஷிப்டன் மற்றும் அவர்களின் நண்பர்கள் 3 பேருடன், பள்ளத்தாக்குகளின் வழியாக இப்பகுதிக்குச் செல்ல முயற்சி செய்து, அவ்விடத்துக்கான பாதையைக் கண்டு பிடித்தனர். பின்னர் 1936 இல், டில்மேன் மற்றும் நோயல் ஓடல், ஒரு அமெரிக்க-பிரிட்டிஷ் குழுவினருடன் சேர்ந்து, 7,816 மீ உயரத்திற்கு உச்சியில் ஏறினர்.

image

இதையடுத்து இந்த இடங்களின் தனித்துவங்கள், வளங்கள் பற்றிய செய்திகள் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆங்கில அரசாங்கமே ஏற்றுக் கொண்டது. 1939 இல் இவ்விடங்களை சரணாலயமாக அறிவித்தது. இந்த அடர்ந்த காட்டை வேட்டைக்கான இடமாகவும், மலை ஏறும் பயிற்சி இடமாகவும் பயன்படுத்தி வந்தனர். 1960களில் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சிஐஏ இந்தியாவின் நந்தா தேவி சிகரத்தை தன் இடமாகக் கொண்டு அங்கிருந்து சீனாவை உளவு பார்த்து வந்தது. அதற்காக புளூட்டோனியம் சார்ந்த உளவுக்கருவிகளை 1964இல் நந்தா தேவி தேசிய பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் அமைத்தது. இதிலிருந்து வெளியாகும் புளூட்டோனியம் கழிவுகள் இங்குள்ள நதிகளில் கலந்து வந்தது.

image

அதன் பின்னர் இந்திய ஆட்சி, பாதுகாப்பின் கீழ் இந்த இடம் வந்தது. 1974 முதல் 1982 வரையிலான காலகட்டத்தில் இவ்விடத்தில் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் மனிதர்களின் ஊடுருவலால் இங்குள்ள இயற்கை அமைப்பு மாறுவதையும், சிதைவடைவதையும் கருத்தில் கொண்டு 1980 இல் இதை சஞ்சீவ் காந்தி தேசிய பூங்காவாக இந்திய அரசு அறிவித்தது. இப்பகுதியில் மேய்ச்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் 1983 இல் இருந்து மேய்ச்சலுக்கும், மலையேற்றத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. 1982 இல் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா என்று இருந்த பெயரை நந்தா தேவி தேசிய பூங்கா என்று மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. நந்தா தேவி தேசிய பூங்கா, பூக்கள் பள்ளத்தாக்கு மற்றும் சில பகுதிகளை உள்ளடக்கி நந்தா தேவி தேசிய உயிரியல் காப்பகமாக 1988ல் அறிவிக்கப்பட்டது.

image

மேலும், அழிந்துவரும் உயிரினங்களுக்கு அடைக்கலமாகவும், தனித்துவமான இயற்கை அமைப்புகளையும் நிறைந்த இந்த இடங்களை, 1988-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த மலைப்பகுதி, வனப்பகுதி, புல்வெளிகள், நிலப்பரப்புகள், தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வாழ்விடங்கள் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 7 மற்றும் 10-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா சேர்க்கப்பட்டன.

image

2000 ஆம் ஆண்டு நந்தா தேவி தேசிய பூங்கா விரிவுபடுத்தப்பட்டு இரண்டாவது முக்கிய பகுதியாகப் பூக்கள் பள்ளத்தாக்கும் இதனுடன் இணைக்கப்பட்டது. அதன்பின்னர் நந்தா தேவி உயிரினங்கள் காப்பகத்தின் பரப்பளவு விரிவுபடுத்தப்பட்டது. 2004ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உயிர் கோள காப்பகமாக இவ்விடம் இணைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு பூக்கள் பள்ளத்தாக்கும் இந்த பாரம்பரிய இடத்தோடு இணைக்கப்பட்டது. 2021ல், ஏற்பட்ட கடும் பனிச்சரிவு காரணமாக இப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.

image

பூக்களின் பள்ளத்தாக்கு... மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Valley of Flowers National Park) சாஸ்கர் இமாலயம், கிரேட் இமாலயாஸ் ஆகிய மலைத்தொடர்களில் இடையே உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த பூக்களின் பள்ளத்தாக்கு. இராமாயணத்தில் இராவணன் மகன் இந்திரஜித்தினால் காயபடுத்தப்பட்ட லட்சுமணனுக்கு இங்கிருந்து தான் அனுமன் சஞ்சீவினி மலையைக் கொண்டு வந்ததாகவும், அதன் மூலம் அவர் குணமடைந்ததாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அழகிய காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ள இப்பகுதி, கங்கை நதிகளின் நீரால் செழித்து, அதன்மூலம் பூக்களை ஈன்று வருகிறது. சுமார் 8750 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பூக்கள் பள்ளத்தாக்கு 520 ஆல்பைன் மலர் வகைகளுக்குத் தாயகமாக அமைந்துள்ளது. 1931ல் இங்கு வந்த பிரான்ஸ் என்பவர்தான் இந்த இடத்திற்குப் பூக்களின் பள்ளத்தாக்கு என்று பெயரிட்டார்.

image

1987 ல் இந்தியத்தாவரவியல் அளவாய்வு (Botanical Survey of India), 1992 ல் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா Forest Research Institute (FRI), 1997 ல் வைல்ட் லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா Wildlife Institute of India (WII) ஆகிய நிறுவனங்கள் இங்கே தாவரவியல் கணக்கெடுப்பை நிகழ்த்தினர். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இங்கே மழை குறைந்து பூக்கள் மலரத் தொடங்கும். எனவே இந்த காலம் பூக்கள் பள்ளத்தாக்கைக் காணக்கூடிய சிறந்த காலமாகும். பூக்கள் பள்ளத்தாக்கைக் காண விரும்பும் பார்வையாளர்கள் கங்காரியா மாவட்ட வனத்துறையிடம் முன்கூட்டியே ஒப்புதல் வாங்க வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல் படி இவ்விடத்தைப் பார்வையிடலாம்.

image

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு... சென்னையிலிருந்து 2,642 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்தா தேவி தேசிய பூங்காவிற்குச் செல்ல, விமான பயணத்தைத் தேர்வு செய்பவர்கள் டெராடூன் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை கார் மூலம் பூங்காவை அடையலாம். ரயில் பயணத்தை விரும்புபவர்கள், 276கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரிஷிகேஷ் பகுதியை அடைந்து அங்கிருந்து செல்லலாம். டெல்லியிலிருந்த ஹரிதுவார் வழியே ரிஷிகேஷ் பகுதியை அடையாளம். அங்கிருந்து கோவிந்தகாட், கங்காரியா வழியாக ஜோஷிமத் எனும் இடத்தை அடையலாம். இது தான் பூங்கா அமைந்துள்ள பகுதியை அடையும் வண்டி செல்லும் பகுதியாகும்.

image

இங்கு சிறப்பம்சமாக சுமார் 4 கி.மீட்டருக்கு கயிறு வழிப்பாதை அமைந்துள்ளது. மே முதல் அக்டோபர் வரையிலான காலம் நந்தா தேவி தேசிய பூங்காவைப் பார்வையிட சிறப்பான நேரமாகும். பூங்காவிலிருந்து, பூக்கள் பள்ளத்தாக்கைப் பார்வையிட சுமார் 17 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். அதாவது ட்ரெக்கிங். நடந்து செல்ல முடியாதவர்கள் டோலி எனப்படும் ஆள் தூக்கும் கூலி ஆட்களின் உதவியைப்பெறலாம்.

image

கட்டணம்: பூங்காவைப் பார்வையிட விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு 50 ரூபாயும், பிற நாட்டுப் பயணிகளுக்கு 150 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணச் சீட்டை பெற்றுக் கொண்டவர்கள் அதனை 3 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் பூங்காவிற்குள் தங்குவதற்கு அனுமதி இல்லை. அதேபோல் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி உண்டு. அதுவும் குழுக்களாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

(உலா வருவோம்...)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 18: தஞ்சை பெருவுடையார் கோயில் - தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளம்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close