TRENDING Playlist-ல் இளையராஜா: Gen Z-யை ஈர்க்கும் இசை! தலைமுறை கடந்து ஆதிக்கம்!
1980களில் தன்னுடைய இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட இளையராஜா, தற்போது புதுமையான இசையால் Gen Z இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இன்றியமையாத இசையமைப்பாளராகவும், இசை உலகின் King Maker-ஆகவும் இருந்து வரும் இசைஞானி இளையராஜா, பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒரு காலத்தில் திரையரங்குகளிலும், கேசட்டுகளிலும். ரேடியோக்களிலும் அவருடைய இசையைக் கொண்டாடிய ரசிகர்கள், இன்று YouTube, Spotify, Instagram Reels என டிஜிட்டல் தளங்கள் வழியாகவும் இளையராஜாவிடம் சரணடைந்து வருகிறார்கள்.
அப்படி, ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட இளையராஜாவின் இசை, இன்றைய Gen Z இளைஞர்களையும் ஈர்ப்பது எப்படி?
1980, 90-களில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு அந்த இசையோடு பல நினைவுகளும் சேர்ந்திருக்கும். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு அந்த அனுபவம் வேறு மாதிரி இருக்கிறது. ஒரு Reel-ல் சில விநாடிகள் கேட்கும் இசை பிடித்துப்போனால் அந்தப் பாடல் என்ன? எந்தப் படத்தில் வந்தது என்று தேட ஆரம்பிக்கிறார்கள். அப்படித் தொடங்கும் தேடல் இளையராஜாவின் மற்ற பாடல்களையும் கேட்க வைக்கிறது.
இதற்கு ஒரு முக்கியமான உதாரணம், 1991-ல் வெளியான குணா திரைப்படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாடல். 2024-ல் வெளியான மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இந்தப் பாடல் முக்கியமான காட்சியில் பயன்படுத்தப்பட்டது. இதனால், ஏற்கெனவே பலருக்குப் பரிச்சயமான இந்தப் பாடல், ஜென் சி தலைமுறையினரையும் ஈர்த்தது.
அதேபோல அஜித் குமாரின் good bad ugly படத்திலும் ஒத்த ரூவா தரேன் என்ற பழைய பாடல் பயன்படுத்தப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
புதிய படங்களில் பழைய பாடல்கள் இடம்பெறும்போது, அந்தக் காட்சியை ரசிக்கும் இக்கால இளைஞர்கள், அந்தப் பாடல் எந்தப் படத்தில் வெளியானது என்பதையும் தேடத் தொடங்குகிறார்கள். இப்படித்தான் ஒரு பழைய பாடல், புதிய தலைமுறைக்கும் அறிமுகமாகிறது.
ஆனால் ராஜாவின் இசையை இன்றைய இளைஞர்கள் ரசிப்பது பழைய பாடல்கள் மீண்டும் டிரெண்ட் ஆவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவருடைய இசையில் இருக்கும் நுணுக்கங்களையும் பலர் ரசிக்கிறார்கள்.
ஒரு பாடலில் வரிகள் முக்கியம். ஆனால், சில நேரங்களில் வரிகளே இல்லாமல் இசை மட்டும் நம்மை ஒரு உணர்வுக்குள் கொண்டு சென்றுவிடும். காதல், தனிமை, சோகம் என ஒரு காட்சியின் உணர்வுகளை வசனங்கள் இல்லாமலேயே வெளிப்படுத்தும் வலிமை பின்னணி இசைக்கு இருக்கிறது. இளையராஜாவின் இசையில் இந்தத் தனித்துவத்தை உணர முடியும்.
பாடல்களைத் தாண்டி, அவருடைய how to name it, nothing but wind போன்ற Instrumental இசைத் தொகுப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த டோரதி திரைப்படத்தின் இசை மிகுந்த கவனத்தை பெற்றிந்தது. தற்போதைய காலகட்டத்தில் பரபரப்பான இசையையே இளைஞர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். வேகமான BEATSம் மேலோட்டமான HOOK SOUNDம் மட்டுமே ட்ரெண்டில் இருந்துவரும் நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான ஆழமான இசையை GENZக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார் இளையராஜா. அப்படத்தில் இடம் பெரும் கல்யாண விருந்து, முத்துமணி என அனைத்து பாடல்களும் தனித்துவமான இசையை கொண்டிருக்கும்.
இதன்மூலம் இன்றைய Gen Z தலைமுறையினர் புதிய இசையை மட்டும் தான் விரும்புகிறார்கள் என்று வலம்வரும் சொல்லாடலுக்கு மாறாக, பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான இசையையும் தங்களுடைய ரசனைக்குள் கொண்டு வருகிறார்கள். ஒரு பாடல் எப்போது வெளியானது என்பதைவிட, அது தங்களுக்குள் என்ன உணர்வை ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியமாக இருக்கிறது.
ஒரு தலைமுறை கேசட்டில் கேட்டு வளர்ந்த இசையை, அடுத்த தலைமுறை YouTube-ல் கேட்டது. இப்போது Gen Z அதே இசையை Reels, Playlists, புதிய திரைப்படங்கள் வழியாகக் கண்டுபிடிக்கிறது.
தொழில்நுட்பம் மாறியிருக்கிறது, மின்னணு இசைக்கருவிகளும் வந்துவிட்டன, அதனூடே இசையைக் கேட்கும் முறையும் மாறிவிட்டது. இருந்தாலும் உணர்வுகளை பிண்ணிப்போடும் இளையராஜாவின் இசை, புதிய தலைமுறையினரையும் விட்டுவைக்கமால் ஜென் சியின் ஆத்மாவையும் ஆட்கொண்டு வருகிறது என்றால் பொய்யில்லை.
80களில் ரசிகர்களைக் கட்டிப்போட்ட இளையராஜாவின் இசை, இன்று Gen Z தலைமுறையையும் சென்றடைந்திருக்கிறது.
