\
ilayaraja muthumani song
ilayaraja muthumani songdorothy

இணையத்தை மிரட்டும் ராஜாவின் 'Trance'.. ‘முத்துமணி’ பாடலால் நெகிழும் நெட்டிசன்கள்!

இளையராஜாவின் இசையில் வெளிவந்திருக்கும் முத்துமணி பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. 83 வயதில் எப்படி இவரால் இப்படியொரு மேஜிக்கை நிகழ்த்த முடிகிறது என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
Published on
Summary

1976 முதல் தமிழ்சினிமாவை இசையால் ஆளும் இளையராஜா, 83 வயதிலும் ‘முத்துமணி’ பாடல் மூலம் இணையத்தையே டிரான்ஸ் ரிதத்தில் ஆட்டுகிறார். ஸ்வேதா மோகன் குரல், மெல்லிசை முதல் கிளைமாக்ஸ் வரை பில்டாகும் அமைப்பு, “மண்ணிலுள்ள தாய்களுக்கெல்லாம்” போன்ற வரிகள், பேஸ் பீட் எல்லாம் சேர்ந்து நெட்டிசன்களை மயக்க, டோரதி படத்துக்கான இந்த பாடல் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

1976ஆம் ஆண்டு தமிழ்சினிமாவிற்கு கிடைத்த இளையராஜா எனும் ஆச்சரியம்.. 50 ஆண்டுகளை கடந்தபின்னும் இன்றுவரை தன் இசையால் கொஞ்சம் கூட சளைக்காமல் 83 வயதிலும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 7000-க்கும் மேற்பட்ட பாடல்களை வழங்கியிருக்கும் இளையராஜா, சிறந்த இசை மற்றும் பின்னணி இசைக்காக 5 முறை தேசிய விருதுகளை வென்றவர். அதுமட்டுமில்லாமல் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளையும் வென்றவர்.

இவற்றையெல்லாம் கடந்து தன்னுடைய இசைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லாக லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா (Royal Philharmonic Orchestra) குழுவைக் கொண்டு முழு சிம்பொனி (Symphony) அமைத்த இளையராஜா, இதைச்செய்த முதல் ஆசிய இசையமைப்பாளராக மகுடம் சூடினார். அதற்கும் ஒருபடி மேலே சென்று புகழ்பெற்ற 'திருவாசகம்' நூலை சிம்பொனி வடிவில் அமைத்து வெளியிட்டு தமிழர்களின் நெஞ்சங்களுக்கு புது இசை விருந்தை படைத்தார்.

Ilayaraja
Ilayaraja Raja

இன்று வரை எல்லோரையும் கட்டிப்போடும் மகுடி வித்தையை கையில் வைத்துள்ளதால் தான், வாலிப கவிஞர் வாலி ஒருமுறை ராஜாவை ‘தமிழ்நாடு செய்த தவம் என்றும், தமிழ்நாட்டுக்கு கிடைத்த விருது இளையராஜா’ என்றும் புகழாரம் சூடினார்.

இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி அடைமொழியில்லை என்பதை ஒவ்வொருமுறையும் நிரூபித்துள்ள இளையராஜா, சமீபத்தில் அவருடைய இசையில் வெளியான ‘முத்துமணி’ பாடல் மூலம் எல்லோரையும் தன் இசையால் கட்டிப்போட்டுள்ளார். டிரான்ஸ் (Trance) என்ற மின்னணு நடன இசையின் வடிவத்தில் வெளிவந்திருக்கும் முத்துமணி பாடல், இளையராஜா மற்றும் ஸ்வேதா மோகனின் கொஞ்சும் குரலில் வேறொரு வடிவத்தை பெற்றுள்ளது.

தமிழ்சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட ’முத்துமணி’!

டிரான்ஸ் இசைவடிவத்திற்கு ஏற்ப பாடலின் முதல் 120 நொடிகள் ஒரு ரம்மியமான மெல்லிசைமூலம் டெம்போவை செட்செய்துவிட்டு, ஸ்வேதா மோகன் குரலில் கிளாமாக்ஸ் நோக்கி பாடலை பில்ட் செய்கிறது. அதிலும் ஸ்வேதா மோகன் குரலில் ’முத்துமணிச்சரம் கோர்க்கணும், மாலைய சூடணும் தங்கத்துக்கு’ என இடம்பெறும் வரிகளும் அதற்குவரும் கோரஸ்ஸும் நமக்குள் அடுத்து இளையராஜா வந்து என்ன மகுடிவித்தை செய்யப்போகிறார் என்ற உணர்வை கடத்துகிறது. அதிலும் ‘மண்ணிலுள்ள தாய்களுக்கெல்லாம் ஒரு மகளாக பிறந்தவளே’ என்ற இடமும் பின்னணி இசையும் அலாதி.

ilayaraja muthumani song
ilayaraja muthumani song

ஸ்வேதா மோகன் ஒரு ரம்மியமான இசை திரளை திரட்டி இளையராஜாவிடம் கொடுக்க, வண்ணக்கிளியே என அவர் எடுக்கும் இடம் இரட்டை அலாதி. 83 வயதிலும் எப்படி இவரால் இந்த மேஜிக்கை நிகழ்த்த முடிகிறது என்ற ஆச்சரியத்தை எல்லோருக்கும் கடத்திவிடுகிறார். பின்னணியில் ஒலிக்கும் அந்த பேஸ் பீட் எல்லோருக்குள்ளும் அதிர்கிறது.

மெதுவாகத் தொடங்கி படிப்படியாக மாறும் இசை அமைப்பின் இறுதியில் ‘தனியா நான் தவிச்சு துடிக்கணுமா.. வாடி மீனாட்சி’ என முடிக்கும் இளையராஜா, நம்மை மொத்தமாக முடித்துவிடுகிறார். முத்துமணி பாடலை ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்..

இப்பாடல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவரவிருக்கும் டோரதி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கும் நிலையில், பாடலின் இரண்டாவது பாடலாக முத்துமணி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com