வேறு வழியில்லாமல் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விட்டீர்களா? எளிய வழியில் அடைப்பது எப்படி?
கடன் வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் அதனை எப்படி தீர்ப்பது என்பது குறித்தும் பொருளாதார மற்றும் நிதி ஆலோசனை வல்லுநர் ஸ்ரீராம் போஸ்டன் தெரிவித்தார்.
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல... இது, தினக்கூலி, வாரக்கூலி, மாத சம்பளம் வாங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தேசிய கீதம் என்றே சொல்லலாம். திடீரென தேவைப்படும் பணத்தை பெற நண்பர்களை, உறவினர்களை நாடுவோம். முடியவில்லையா இருக்கவே இருக்கு நிதி நிறுவனம் என எத்தனை வட்டியானாலும் தேவையான பணத்தை வாங்க மும்முரம் காட்டுவோம். ஆனால், அதன் பிறகு வாங்கிய கடனையும், வட்டியையும் அடைக்க முடியாமல் சிக்கி சின்னாபின்னமாகி கடன் வாங்கிய நபர்கள் விபரீத முடிவை எடுப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
கடன் வாங்கலாமா? எதற்கெல்லாம் கடன் வாங்கலாம்? அதிக வட்டிக்கு கடன் வாங்கிவிட்டோம் அதை எப்படி அடைப்பது.? போன்ற சிக்கலான கேள்விகளுக்கு எளிமையாக பதிலளிக்கிறார், அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார மற்றும் நிதி ஆலோசனை வல்லுநர் ஸ்ரீராம் போஸ்டன். அவர் அளித்த பதில்களை இங்கு விரிவாக பார்க்கலாம்...
எது நல்ல கடன்?
சேமிப்பு பழக்கத்தை வளத்துக் கொண்டு தேவையில்லாமல் கடன் வாங்காமல் இருப்பதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும், கடனில் இரண்டு வகை உண்டு ஒன்று நல்ல கடன். மற்றொன்று கெட்ட கடன்.
நல்ல கடனுக்கு உதாரணமாக இதை சொல்லலாம்.
அதாவது, நமக்கு ஒரு சேல்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நமக்கு டூ வீலர் தேவைப்படுகிறது. நம்மிடம் டூ வீலர் இல்லையென்றால் நாம் கடனுக்கு ஒரு டூ வீலரை வாங்கலாம். இந்த சேல்ஸ் வேலையின் மூலம் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம வருமானம் வருவதாக வைத்துக் கொண்டால் டூ வீலர் கடனை அடைக்க மாதம் ரூ.500 செலுத்துவோம். அதுபோக இதன் மூலம் நமக்கு ரூ.4,500 வருமானமாக கிடைக்கிறது. ஒரு பொருளை நாம் கடனுக்கு வாங்கும் போது அதன்மூலம் நமக்கு வருமானம் கிடைத்தால் அந்த வருமானத்தைக் கொண்டே அந்த கடனை அடைத்துவிடலாம். இதை நல்ல கடன் என்று சொல்லலாம்.
எது கெட்ட கடன்?
நம்மிடம் ஒரு செல்போன் இருக்கும் போதே தேவையின்றி மற்றொரு செல்போளை கடனுக்கு வாங்குவது கெட்ட கடன், அப்படி நாம் கடனுக்கு வாங்கும் செல்போனால் நமக்கு எந்த வருமானம் கிடைக்கப் போவதில்லை. செல்போனை நாம் ஏன் கடனுக்கு வாங்குகிறோம். அவன் அந்த போன் வச்சிருக்கான் நாம டப்பா போன்தானே வச்சிருக்கோம். எல்லா வசதியும் உள்ள ஒரு நல்ல செல்போனை வாங்கலாம் என தேவையின்றி ஆடம்பரத்துக்காக கடனுக்கு செல்போன் வாங்கி கடனை கட்ட முடியாமல் தவிப்பதை பார்க்கிறோம். இது தேவையா என பின்னால் உணர்வதும் உண்டு. இப்படி தேவையின்றி ஆடம்பரத்துக்காக ஒரு பொருளை வாங்கி கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறோம். இதை கெட்ட கடன் என்று அழைக்கலாம்.
எதற்கெல்லாம் கடன் வாங்கலாம்?
ஓரு தொழில் செய்பவர் அந்த தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் வாங்கலாம். இதற்கென குறைந்த வட்டியில் கடன் கொடுக்க வங்கிகள் தயாராக உள்ளன. இதில் வீடு, நிலம் போன்ற சொத்துகளை அடமானம் வைத்து கடன் வாங்கும் போது, நாம் வாங்கும் கடனுக்கான வட்டி மிக குறைவாக இருக்கும். ஆனால், எதையும் அடமானம் வைக்காமல் வாங்கப்படும் கடனுக்கான வட்டிவிகிதம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், முடிந்த அளவு நகை மற்றும் இடத்தை வைத்து குறைந்த வட்டிக்கு அடமான கடன் வாங்குவதே சிறந்தது. நாம் கடன் வாங்கிய பணத்தை தொழிலில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் எளிதாக கடனை அடைத்துவிடலாம்.
வீடு கட்ட கடன் வாங்கலாமா?
குருவிக்கு ஒரு கூடு குடும்பத்துக்கு வீடு என்று சொல்வார்கள். கஞ்சியோ கூலோ குடுச்சுட்டு வாடகை இல்லாமல் சொந்த வீட்டில் வசிப்பதில் இருக்கும் சுகமே தனிதான். ’இப்பதான் வாடகை கொடுத்தோம் அதுக்குள்ள அடுத்த மாச வாடகை வந்துருச்சு’ என புலம்பும் வாடகை வீட்டில் வசிப்பவர்களை பார்க்க முடிகிறது. ’வீட்டு வாடகையா கொடுக்குற பணத்தை கடன் வாங்கி வீடு கட்டுனா அடச்சுறலாம்’ என்று துணிந்து வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டும் ஏழை எளிய மக்களும் இருக்காங்க. சுலப தவணையில் கடனை அடைக்கும் வகையில் வீட்டுக்கடன் கொடுக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளது. குறைந்த வட்டிக்கு எங்கு கடன் கொடுக்கிறார்களோ அங்கே கடன் வாங்கி வீடு கட்டிக் கொள்ளலாம்.
அதிக வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பது?
அதிக வட்டிக்கு கடன் வாங்கிவிட்டோம். கடனை அடைக்க முடியல. அதிகாலையிலேயே கடன்காரன் வீடடு வாசல்ல வந்து நிக்கிறான் என அழுது புலம்பும் மக்களை அதிகமாக காணமுடிகிறது. அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க, குறைவான வட்டிக்கு பணம் கொடுக்கும் நிறுவனத்திடம் இருந்த பணத்தை பெற்று அந்த கடனை அடைத்து தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால், வீட்டில் இருக்கும் நகை அல்லது நிலம் இருந்தால் அதை விற்று கடனை அடைத்து மீண்டு வரலாம். வரும்முன் காப்போம் என்பது போல நோய் வரும் முன்போ தடுப்பூசி போடுவது போல கண்ணும் கருத்துமாக இருந்த கடன் வாங்குவதை தவிர்ப்பதே நல்லது.
சேமிப்பு பழக்கதை வளர்த்துக் கொள்வது நல்லது?
மக்கள் சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஓரளவுக்கு கடன் வாங்குவதை தவிர்த்து விடலாம். தொடர்ந்து மாதந்தோறும் ஒரு தொகையை சேமித்து வந்தால் அவசர தேவைக்கு அந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் தேவையின்றி கடன் வாங்கும் முயற்சியை தடுத்துவிடலாம். ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்து தேவையின்றி கடன் வாங்குவதை தவிர்த்து இருப்பதை வைத்து இன்பமாக வாழலாம் என்றார்.