பெண்களே.. பேறுகாலத்தில் இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்..! மொட்டுகளை நசுக்கவேண்டாம்!

பெண்களே.. பேறுகாலத்தில் இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்..! மொட்டுகளை நசுக்கவேண்டாம்!

பெண்களே.. பேறுகாலத்தில் இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்..! மொட்டுகளை நசுக்கவேண்டாம்!
Published on

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு நிகராக குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வரிசையில், சில தினங்களுக்கு முன் சென்னை வேளச்சேரியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்த வெங்கண்ணா - உமா தம்பதிக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு சார்விக் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 5ம் தேதி குழந்தை காணாமல் போனது. அது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டதில், தாயே குழந்தையை கொன்று ஏரியில் வீசிவிட்டு நாடகமாடியது அம்பலமானது. குழந்தைக்கு பாலூட்டும்போது மார்பகங்களில் ஏற்பட்ட அதிக வலியை பொறுத்துக்கொள்ள முடியாததால் குழந்தையை கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மனநல மருத்துவரிடமும், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவரிடமும் கேட்டோம். ஏன் இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறுகின்றன? இச்சம்பவம் குறித்து மனநல மருத்துவர் பூர்ணசந்திரிகா, இன்ஸ்டிட்யூட் ஆஃப் மென்டல் ஹெல்த்-ன் இயக்குநர் கூறுகையில், இது போன்ற நிகழ்வுகளை சில வகைகளாக பிரிக்கலாம்.

முதலில், எப்போதுமே ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒரு தாய் ‘பிரசவத்திற்கு பிந்தைய மனஅழுத்தம்’ (Postpartum Depression)-னிற்கு உள்ளாக நேரும். அதாவது, வெறுப்பு, கவலை, குழந்தை மீது ஈடுபாடின்மை போன்றவை பேறுகாலத்திற்கு முன்னரே தொடங்கி குழந்தை பிறந்து சில நாட்களுக்கு தொடரும். அதில் வெகு சில சமயங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் பொறுத்தவரை மார்பக வலியால் குழந்தையை கொலை செய்ததாக அப்பெண் கூறுவது ‘இயலாமையின் உச்சக்கட்டம்’ என்றே கூறலாம். தாய்க்கு சரியான தூக்கமின்மை, குடும்பத்தினரிடமிருந்து சரியான ஆதரவு இல்லாமை போன்றவை ஆகும். எனவே, இது பெருங்கோபத்தின் வெளிபாடாக கருத வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே, மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு தாய்க்கு தன் குழந்தையை பார்க்க பார்க்கவே மகிழ் உணர்ச்சியால் பால் நன்றாக சுரக்கும்; பால் சுரப்பு தோல்வியுற்றது என்கிற கான்செப்ட்டே கிடையாது.

எனவே, இதுபோன்ற சம்வங்களை தவிர்க்க பேறுகாலத்திற்கு பிந்தைய குறிப்புகள் சிலவற்றை பின்பற்றலாம். அதிகமாக சாப்பிடவேண்டும், நல்ல ஓய்வு அவசியம், குழந்தையை அரவணைக்க வேண்டும் என்கிற ஆவல் ஆகியவையாகும். ஆனால், தற்போது இவை குறைவதால், சில நேரங்களில் தாய்க்கு மார்பக வலி என்பது பொதுவாகவே இருக்கக்கூடிய ஒன்றாகிறது. பேறுகால சமயங்களில் ஒரு பெண்ணுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிக அவசியம்.

இவை அனைத்தும் இருந்தாலே, மகிழ்ச்சி பெருக்கில் ஒரு பெண்ணுக்கு தன் குழந்தைக்கு பாலூட்ட பால் நன்றாக சுரக்கும். அவ்வாறு குடும்பத்தினரின் ஆதரவு சரிவர இல்லையெனில், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அதனால் தாய் - சேய் பிணைப்பு சரிவர இருக்காது, பிணைப்பு சரிவர இல்லாததால் தாய்ப்பாலும் குறைவாக சுரக்கும். இது ஒரு சுழற்சி முறையாகும்.

ஒரு தாயின் மார்பகத்தை குழந்தை கடித்திருக்க நேரிட்டிருக்குமானால், அந்த தாய் சரியான நிலையில் குழந்தையை பிடித்து பாலூட்டவில்லை என்று அர்த்தம். அப்போது வலி ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வலியை தாங்கக்கூடிய மனப்பக்குவம் தாய்க்கு தேவைப்படுகிறது. ஆகவே, என்னை பொறுத்தவரை மார்பக வலியால் மட்டும் குழந்தையை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை; அதிக மன அழுத்தத்துடன் கூடிய மற்ற காரணிகளும் இதில் அடங்கும். மேலும், குடும்பத்தினரிடம் இருந்து அப்பெண்ணிற்கு ஆதரவு கிடைத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம்.

முன்கூட்டியே தடுக்கும் வழிகள்:

மன சோர்வு, தூக்கமின்மை போன்றவை இருந்தால், அதை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெறுதல் அவசியம். சீரான மனநிலை, பிரசவத்திற்கு முன்பும், பின்பும் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுதல் மிக மிக அவசியம். தற்போது இருக்கும் சூழ்நிலையில், திருமணத்திற்கு முன்புபே கவுன்சிலிங் எடுத்துக்கொள்கின்றனர். ஏறத்தாழ எல்லா பேறுகால மருத்துவமனைகளிலும் பிரசவத்துக்கு முன்பும், பின்பும் கவுன்சிலிங் கொடுத்தல் கட்டாயமாக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்; மேலும் இதுபோன்ற நிகழ்வுகளையும் தவிர்க்கலாம்.

என்ன செய்யலாம்?

பேறுகாலத்தில் பெண்கள் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும், நல்ல உடல்நிலை, நல்ல உறக்கம், குடும்ப சூழல், பிரசவத்தை அவர்கள் மனநிலை எவ்வாறு அணுகுகிறது? போன்றவை. ஏனெனில், கர்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு தூக்கமின்மை ஒரு ஆபத்தான விஷயம். எனவே, மனச்சோர்வு, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சாலச்சிறந்தது. ஆகையால், குழந்தையும் நல்ல உடல்நிலையில் பிறக்கும். ‘A Healthy Mother is a Healthy Baby’ என்பதே என் கருத்து. உடல்நிலையும், மனநிலையும் சீறாக பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். பிரச்னைகள் அனைத்தும் முன்கூட்டியே கண்டறியப்பட்டால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும்.

மேலும், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.சீனிவாசன் கூறுகையில், தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு 10,00,000 பிரசவங்கள் நடக்கின்றன. மார்பகங்களில் வலி ஏற்படுவது பொதுவாக நடக்கக்கூடிய விஷயம்தான். ஒரு தாய், பிரசவத்தின்போது எதிர்கொள்ளும் வலியோடு ஒப்பிடுகையில் மார்பக வலி என்பது சற்று குறைவுதான். இது பெரும் துரதிஷ்டவசமான சம்பவம் என கூறலாம். 10இல் ஒரு பங்கு தாய்மார்களுக்கு இது போன்ற மார்பக பிரச்னை வரலாம், ஆனால் அதுவும் தாங்கிக்கொள்ளக்கூடிய வலியாகதான் நிச்சயமாக இருக்கும்.


மார்பக வலியை தவிர்க்கும் வழிமுறைகள்

குழந்தைக்கு பாலூட்டும்போது சரியான நிலையில் குழந்தையை பிடித்து அரவணைப்போடு கொடுத்தல் மிகவும் அவசியம். பாலூட்டுவது குழந்தைக்கும், தாய்க்கும் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஊட்டுகிறது. சரியான நிலையில் குழந்தையை மார்பகங்களில் பொருத்துதல், மனதளவில் மகிழ்ந்து அரவணைப்போடு குழந்தைக்கு பாலூட்டினால் அதைவிட ஓர் உன்னத செயல் வேறேதும் இருக்க முடியாது. குழந்தைக்கு, தான் பாலூட்ட விரும்பாததால், சரியான நிலையில் குழந்தையை மார்பகங்களில் பொருத்திக்கொள்ளாததால், தாயின் மார்பை குழந்தை கடித்திருக்கலாம், அதுவே மார்பக வலிக்கு காரணியாகவும் அமைகிறது. அப்பெண்ணை குழந்தை பிறந்தவுடனேயே சற்று ஆராய்ந்து மருத்துவரை அணுகியிருந்தால், இது போன்ற சம்பவத்தை நிகழாமல் தவிர்த்திருக்கலாம்.

மேலும், மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு முன்பும், பின்பும் தாய்க்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும், பாலூட்டும் முறை குறித்தும் விளக்கி ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதற்காக விழிப்புணர்வும் தற்போது தாய்மார்களிடையே பரவலாக இருக்கிறது. குழந்தையை ஒரு தாய் அரவணைக்கும் விதமே அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும். மருத்துவர்களான நாங்களும் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் உன்னதம் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறோம்.

எனவே, முதலில் தாய்மார்கள் உணர வேண்டியது- ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் எப்படிப்பட்ட ஈடுஇணையற்ற இயற்கை மருந்து என்பதை! ஒன்றுமறியா பிஞ்சுகளின் உயிர்களை காப்போம்! மொட்டுகளை பூக்களாக விரிய அரவணைப்போம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com