பாண்டிச்சேரிக்கு ஒரு நீதி ; தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி என்ற வாதம் சரியா? அரசியலா?

பாண்டிச்சேரிக்கு ஒரு நீதி ; தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி என்ற வாதம் சரியா? அரசியலா?

பாண்டிச்சேரிக்கு ஒரு நீதி ; தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி என்ற வாதம் சரியா? அரசியலா?
Published on

சமீபத்தில் மிகவும் எதிர்பார்க்கபப்ட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பு என்பது ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரும் மனு மீதான தீர்ப்பே. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில முக்கிய விஷயங்களை நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருந்தனர். அதன்படி ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்ற சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என கூறி திமுக கொறடா சக்கரபாணி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்று பார்த்தால் சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது , சபாநாயகரை முடிவெடுக்க வற்புறுத்த முடியாது , குறிப்பிட்ட காலத்துக்குள் சபாநாயகர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது , இவையெல்லாம் தாண்டி நீதிமன்றத்துக்கு இத்தகைய வானளாவிய அதிகாரமுள்ளதா என்ற சந்தேகம் உள்ளது என கூறியிருந்தனர். 

உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததுதான் தாமதம் எதிர்கட்சிகள் கொதிக்க ஆரம்பித்தனர். பாண்டிச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் சொன்னபோது அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் சபாநாயகர் முடிவை ரத்து செய்தது. ஆனால் இங்கு சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என கூறுகிறது. பாண்டிச்சேரிக்கு ஒரு நீதி , தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா ? என்ற கேள்வியை ஸ்டாலின் , நாரயணசாமி என அனைவரும் எழுப்பினர். அதிமுக சார்பில் இதற்கு எதிராக அமைச்சர்கள் பேட்டி கொடுத்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை காலநிலைக்கு ஏற்ப திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் வளைத்துக் கொள்கின்றனர் என்றனர். இந்த ஒப்பீடு சரியா என்ற கேள்வி எழுகிறது.  

சில வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவையில் தவறாக நடந்து கொண்டதாக தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சிலரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. நீதிபதி செல்லமேஸ்வர் வழக்கை விசாரித்தார். அப்போது வைக்கப்பட்ட முதல் வாதமே, சபாநாயகரின் அதிகாரத்தில் அல்லது சட்டமன்ற நிகழ்வுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதுதான். அப்போது நீதிபதி உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை சுட்டிக் காட்டி , சட்டமன்ற நிகழ்வுகள், சபாநாயகரின் அதிகாரம் எப்போழுதெல்லாம் நீதிமன்றத்தால் சட்டப் பரிசீலனைக்கு அல்லது நீதிமன்றத்தால் விசாரித்து தீர்ப்பளிக்க முடியும் என விளக்கினார்.

”1992 -ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் (1) அரசியல் சாசன மீறல், (2) இயற்கை நீதிக்கு முரண், (3) விதிமீறல்கள் , (4) ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது முரண் படும் வகையிலான செயல்பாடு ஆகிய நான்கு விஷயங்களில் ஏதோ ஒன்று சபாநாயகரின் செயல்பாடுகளில் வெளிப்பட்டால் , சட்டமன்ற நிகழ்வுகள், சபாநாயகரின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடலாம்” என உள்ளது. இதனை 11 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பிலும் , பாண்டிச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும் பொருத்திப் பார்த்தால் பதில் கிடைக்கும்.

பாண்டிச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் வழக்கை பொருத்தவரை, அவர்கள் நியமன எம்.எல்.ஏக்களாக அறிவிக்கப்பட்டு ஆளுநரால் பதவி நியமனம் செய்யப்பட்டு அவைக்கு செல்லும் போது , அவர்களது நியமனத்தை ஏற்றுக் கொள்ள சில காரணங்களை தெரிவித்து சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கிறார். ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கை பொருத்தவரை அவர்களது விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதிகாரம் பொருந்திய அவருக்கு , முடிவெடுக்க இத்தனை நாள் என்ற காலக்கெடுவும் இல்லை. எனவே அவரது அதிகாரத்தில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் கூறி விட்டது.  இந்த இரண்டு நிகழ்வுகளோடும் 1992- உச்சநீதிமன்ற தீர்ப்பையும், தேமுதிக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்த தீர்ப்பையும் பொருத்திப் பார்க்க வேண்டும். 

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் சட்டமன்ற நிகழ்வுகளிலோ அல்லது சபாநாயகரின் முடிவிலோ எப்பொழுதெல்லாம் தலையிடுகிறது அல்லது எப்பொழுதெல்லாம் தலையிட மறுக்கிறது என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மிகத் தெளிவாக விளக்குகிறது. தீர்ப்புகள் பாண்டிச்சேரி என்பதால் சபாநாயகரை தவறென்றும், தமிழகம் என்பதால் சரியென்றும் சொல்லவில்லை. சபாநாயகர் செயல்பட்டால், அது சரியா தவறா என நீதிமன்றம் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சபாநாயகர் செயல்படாத போது நீதிமன்றம் அதிகாரத்தில் தலையிட விரும்பவில்லை அல்லது அதிகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி விலகி இருக்கிறது. ஆனால் இது முன்பே நீதிபதிகளுக்கு தெரியாத என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகிறது. அதற்கு மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளே பதில் சொல்ல வேண்டும். தற்போதைய தீர்ப்பில் மாநில பாரபட்சம் காட்டப்படவில்லை என்பது சட்டப்படி உறுதியாகியிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com