கூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..? சுவாரசிய தகவல்கள்

கூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..? சுவாரசிய தகவல்கள்

கூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..? சுவாரசிய தகவல்கள்
Published on

கூகுள்- இந்த வார்த்தையை பயன்படுத்தாதவர்களையே காண முடியாது என்ற அளவுக்கு நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி இருக்கிறது. எந்த சந்தேகமாக இருந்தாலும் கூகுளை நாடலாம். கூகுளை நம்பினோர் கைவிடப்படார் என்றும் கூறலாம். பல்வேறு சந்தேகங்களுடன் தன்னை தேடி வருபவர்களை கூகுள் ஒரு நாளும் ஏமாற்றியதில்லை. பல சமயங்களில் நமக்கு ஆசானாக இருக்கும் கூகுள் தேடுபொறி அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 
ஸ்டேன்ஃபோர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் 1998-இல் கூகுள் என்ற தேடுபொறியை அறிமுகம் செய்த போது இந்த அளவு வளர்ச்சியடையும் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். 

கூகுளின் இயற்பெயர் தெரியுமா?

லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் இணையதளத்தில் குவிந்திருக்கும் தகவல்கள் ஓரிடத்தில் கிடைக்கும் வகையில் ஒருதேடு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை 1996-ஆம் ஆண்டிலேயே தொடங்கினர். பின்னர் அப்படி ஒரு தளத்தை உருவாக்கி அதற்கு அவர்கள் சூட்டிய பெயர் BACKRUB-ஆம், BACKRUB என்ற பெயர் தான் பின்னாளில் கூகுள் என்றானது. எண் 1ஐத் தொடர்ந்து 100 பூஜ்யங்கள் வந்தால் அதற்கு பெயர் GOOGOL.. இதனை அடிப்படையாக கொண்டே கூகுள் என பெயர் சூட்டினர்.

கூகுள் ஆண்டவர்

1998-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் கூகுள் தேடுதளம் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்தது. வெறும் ஆங்கிலத்தோடு நில்லாமல் பல்வேறு மொழிகளிலும் தேடுதல் வசதியை அறிமுகம் செய்ததே கூகுள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய காரணம். அவரவர் தாய்மொழியில் தகவல்களை கொண்டு சேர்ப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு கூகுளின் வளர்ச்சியே ஒரு சான்று. இன்று 150-க்கும் அதிகமான மொழிகளில் கூகுளில் தகவல்களை தேட முடியும். கிட்டதட்ட 190 நாடுகளில் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்தலாம்.

ஜிமெயில் சேவை

2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தான் ஜிமெயில் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் வசதியை தான் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்களுக்கும் கூட பயன்படுத்தி வருகிறோம். காலத்துக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை வழங்கி வருவதும், கூகுளின் வெற்றிக்கு மற்றொரு காரணம். கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நிமிடமும் கூகுளை பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் சந்தை மதிப்பு கணக்கிட முடியாத வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கூகுள் நிறுவனர்களான லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றனர். 

ஆர்குட்டை மறக்கமுடியுமா?

நமக்கெல்லாம் 2004-ஆம் ஆண்டிலேயே ஆர்குட் என்ற சமூக வலைதள பக்கத்தை அறிமுகம் செய்ததும் கூகுள் தான். ஆனால் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளகளின் வளர்ச்சியால் ஆர்குட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்ததால் 2014-ஆம் ஆண்டு ஆர்குட்டின் செயல்பாடு முடித்துவைக்கப்பட்டது. ஆர்குட் மட்டுமல்ல, கூகுள் பிரெண்ட் நெட்வொர்க் என்ற சமூகவலைதளமும் கூகுளால் தொடங்கப்பட்டு பின்னாளில் அதுவும் முடக்கப்பட்டது. தற்போது கூகுள் பிளஸ் சேவையை கூகுள் வழங்குகிறது. 

நம்பிக்கையே முதலீடு

கூகுளின் மிக முக்கிய முதலீடு நம்பகத்தன்மை. கூகுள் வரும் தகவல்கள் அனைத்தையும் நாம் நம்புகிறோம். ஆனால் சமீபகாலமாக பல்வேறு இணையதளங்கள் வாயிலாக பொய்யான செய்திகளும் தகவல்களும் வெளியிடப்படுகின்றன. சில நேரங்களில் கூகுளில் நாம் ஒரு தகவலை தேடினால் முதலில் இந்த பொய்யான தகவல்களே வருகின்றன. எனவே நம்பகத்தன்மையை கைவிடக் கூடாது என்ற நோக்கில் கூகுள் பொய்யான தகவல்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஊடகங்களை சேர்ந்தவர்களுக்கும் கூகுள் பயிற்சி அளித்து வருகிறது. 

அனைவரும் உச்சரிக்கும் வார்த்தை கூகுள்

யூடியூப், ஆண்டிராய்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் வாங்கி அவற்றின் வளர்சிக்கும் கூகுள் காரணமாக அமைந்துள்ளது. கூகுள் வரைபடம், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களையும் நமக்கு வழங்கி வரும் கூகுள், இன்னும் பல்வேறு வசதிகளை நமக்கு அளிக்க காத்திருக்கிறது.. உலகில் பல்வேறு மொழி பேசுபவர்கள் இருந்தாலும் அனைவரும் பொதுவாக உச்சரிக்கும் வார்த்தையாக கூகுள் மாறி இருக்கிறது. 20 ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் தகவல்களை வழங்கும் களஞ்சியமாக உருவெடுத்திருக்கும் கூகுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com