முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்| காத்திருக்கிறது இந்தியா!
காஷ்மீரத்தின் பஹல்காமில் கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் பற்றியும் அதற்குப் பிறந்த நடந்தவை குறித்தும் தான் பிரதமரின் ‘மனதில் குரல்’ உரை நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று அமைந்தது. “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக ஒவ்வொரு இந்தியரும் ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருக்கிறார் - அவர்கள் பேசும் மொழி எதுவாக இருந்தாலும் - இந்தத் தாக்குதலில் உறவினர்களைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் தொடர்பான புகைப்படங்களைப் பார்த்த ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது” என்று மோடி பேசியதாக பத்திரிகைகள் தெரிவித்தன. நாட்டு மக்களின் உணர்வுகளை அப்படியே தனது உரையில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் பிரதமர். ஒருமைப்பாடு ஒற்றுமை காக்க இந்த தீச்செயலுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற மக்களுடைய முடிவு குறித்துப் பேசிய அவர், ‘உறுதியான மன உறுதிகொண்ட நாடுதான் இந்தியா என்பதை பதில் நடவடிக்கைகள் மூலம் நிரூபிப்போம்’ என்று அறிவித்தார். உறுதியான அந்த வார்த்தைகளைக் கேட்டு, நானும் கரவொலி எழுப்பினேன்.
மிகையான கூற்றுகள்
அந்தத் தருணத்தில் பிரதமர் கூறிய அனைத்துமே சரியானவை என்று கூற எனக்கு அச்சமாக இருக்கிறது; பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக காஷ்மீரில் இருந்த நிலவரம் குறித்து மோடி இவ்வாறு கூறினார்: “காஷ்மீரத்தில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது, பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் உயிர்த்துடிப்பு நிலவியது, மாநிலத்தில் கட்டுமானப் பணிகள் இதுவரை இருந்திராத வகையில் வேகம் பெற்றிருந்தது, ஜனநாயகம் முன்பைவிட வலிமையைப் பெற்றது, சாதனை அளவாக மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவியத் தொடங்கினர், மக்களுடைய வருமானம் உயர்ந்தது, இளைஞர்கள் முன்னேற்றம் அடைய புதிய வாய்ப்புகள் ஏற்பட்டன…”. அவர் பேசியது அனைத்தும் உண்மை என்று எல்லோருமே ஒப்புக்கொண்டுவிட மாட்டார்கள்… ஒரு வேளை மோடியேதான் பேசியதை மீண்டும் ஆழமாக அசைபோட்டுப் பார்த்தால், மிகைப்பட பேசிவிட்டோம் என்று அவரே கூட நினைக்கக் கூடும்!
Ø காஷ்மீரில் அமைதி என்பது தொலைதூர இலக்கு. தில்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் காஷ்மீர் குறித்துப் பல தகவல்களைத் தெரிவித்தது. ஜூன் 2014 தொடங்கி மே 2024 வரையிலான பத்தாண்டுகளில் பயங்கரவாதிகள் தொடர்புடைய சம்பவங்கள் 1,643 நிகழ்ந்துள்ளன. எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுருவ 1,925 முறை முயன்றுள்ளனர், அவற்றில் 726 முறை வெற்றியும் கண்டுள்ளனர், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் 576 பேர் உயிரிழந்துள்ளனர்.
Ø பள்ளிக்கூடங்களில் அப்படியொன்றும் உயிர்த்துடிப்பான முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. ‘அசர்’ ஆய்வறிக்கையின்படி 2018-க்குப் பிறகு அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேருவது குறைந்துவிட்டது. தேர்ச்சி பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களால் இரண்டாம் வகுப்புக்குரிய பாடங்களைப் படிப்பதற்குக் கூட முடியாமல் திணறும் அளவுக்கு கல்வியின் தரம் குன்றிவிட்டது.
Ø ஜம்மு – காஷ்மீரத்தில் ஜனநாயகம் மேலும் வலுவடைந்துவிட்டது என்பது அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு பொருள். மாநில அந்தஸ்திலிருந்து மத்திய ஆட்சிக்கு உட்பட்ட நேரடிப் பிரதேசமாக ஜம்மு – காஷ்மீரத்தை மாற்றியதை அடுத்து அங்கு ஜனநாயகம் குன்றிவிட்டது. மக்களுடைய நேரடிப் பிரதிநிதிகளான மாநில அமைச்சர்களுக்குக்கூட மறுக்கப்பட்ட பல அதிகாரங்கள், துணை நிலை ஆளுநருக்கு தரப்பட்டு ‘வரம்பற்ற அதிகாரத்துடன்’ அவர் உடன் செயல்படுவதால் ஜம்மு – காஷ்மீரத்தை ‘பாதி ஜனநாயக பிரதேசம்’ என்றே அழைக்கலாம். மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், விரைவில் மாநில அந்தஸ்தைத் தருவோம் என்ற வாக்குறுதியைக்கூட நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு செயல்படுவதை, தங்களைத் தொடர்ந்து ஏளனப்படுத்துகின்றனர் என்றே மக்கள் அனைவரும் பொருமுகின்றனர்.
Ø ஜம்மு – காஷ்மீரில் 2023-24-ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக 6.1%.
Ø தனி நபர் சராசரி ஆண்டு வருமானமோ (நபர்வாரி வருமானம்) தேசிய சராசரியை விடக் குறைவு.
Ø சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கினார்கள் என்பது உண்மையே. ஆனால் அதுவும் பஹல்காம் தாக்குதலால் அதிர்ச்சிகரமாக உடனடியாகக் குறைந்துவிட்டது.
கரைகிறது கருத்தொற்றுமை
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் இயல்பாகவே அரசுக்கு ஆதரவாக அணிதிரண்டனர். அரசு எடுக்கும் நடவடிக்கை எதுவாக இருந்தாலும், நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் பிற அரசியல் கட்சிகளும் அறிக்கைகளை வெளியிட்டன. மக்களிடம் அப்போது வெளிப்பட்ட உணர்வு இப்போது மங்கி வருவதற்கு, தொடர்ந்து செயல்படாமல் இருக்கும் தானே காரணம் என்பதை அரசு உணர வேண்டும். இதற்குப் பல காரணங்கள்: பயங்கரவாதிகளின் தாக்குதல் பற்றி ‘அதிர்ச்சி’ தெரிவித்த அரசு, அதற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த ஓட்டைகள் குறித்து, பொறுப்பு மிக்க எவரும் வெளிப்படையாகப் பேசவில்லை. சவுதி அரேபியாவில் அரசு முறை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு உடனடியாக தில்லிக்குத் திரும்பிய பிரதமர் மோடி, பஹல்காமுக்கோ, ஸ்ரீநகருக்கோ செல்லவில்லை.அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம், பிஹார் தலைநகர் பாட்னாவில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.
அரசியல் கட்சிகளும் பல தனிப்பெரும் தலைவர்களும், தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கேற்ப இந்தத் தாக்குதல் குறித்துப் பேசினார்கள். நாட்டில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கட்டிக்காக்கப் படவேண்டிய இந்த நேரத்தில் அதிருப்தி, சந்தேகம், மத ரீதியிலான அணி சேர்க்கை, மக்களை மத அடிப்படையில் பிரிப்பது ஆகிய வேலைகளில் பாரதிய ஜனதா சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மூலமாகவும் ஈடுபடுவதை காங்கிரஸ் செயல் குழுவின் தீர்மானம் சுட்டிக்காட்டியது. பஹல்காம் பகுதியானது மூன்றடுக்கு பாதுகாப்பு வலையமைப்பால் பாதுகாக்கப்படும் பிரதேசமாக இருக்கும்போது உளவுத்துறையிடமிருந்து தகவல் கிடைக்காததால் இது நிகழ்ந்ததா, அல்லது உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மெத்தனமாக இருந்தார்களா என்பது ஒட்டுமொத்தமாக ஆராயப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் செயல்குழு தீர்மானம் வலியுறுத்துகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பழி வாங்கியே தீர வேண்டும் என்று தீவிர தேசபக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வேளையில், காஷ்மீர் பாதுகாப்பு விவகாரத்தில் நிபுணரும் ஆய்வு-பகுப்பாய்வு பிரிவின் முன்னாள் தலைவருமான ஏ.எஸ். தௌலத் கூறுகிறார்: “போர் தொடுப்பதை நாம் தேர்வு செய்ய வேண்டியதில்லை… அது கடைசி ஆயுதமாக மட்டுமல்ல, கடைசி தவறான ஆயுதமாகவும் மாறக்கூடும்”.
பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற யோசனை குறித்து, பாகிஸ்தானில் இந்திய ஹை-கமிஷனராக (தூதர்) செயல்பட்ட சரத் சபர்வால், கரண் தாப்பரின் நேர்காணலில் கூறுகிறார்: “சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்குப் போகாமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால் அரசு அப்படியொரு முடிவு எடுத்தால் அதை ஏற்பேன்”. இந்த கொடுந்தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படும் டிஆர்எஃப் அமைப்பையோ லஷ்கர் இ தொய்பாவையோ ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை குறை கூறவுமில்லை. முஸ்லிம்கள் அல்லாதவர்களை மிகுந்த ஆணவத்தோடு குறி வைத்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி அது கண்டிக்கவுமில்லை. இருந்தாலும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவை இந்தியாவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டதைப்போல சித்தரிக்கப் பார்க்கின்றன அரசு வட்டாரங்கள்.
இந்த விவகாரத்தில் சீனம் தன்னுடைய எண்ணத்தைச் சிறிதும் ஒளித்துப் பேசவில்லை. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தீவிரமாகச் செயல்படுவதாகவும், அந்த நாட்டின் நியாயமான பாதுகாப்புக் கவலைகள் குறித்துத் தங்களுக்கு ஆழ்ந்த புரிதல் இருப்பதாகவும், தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தங்கள் நாடு உறுதுணையாகச் செயல்படும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, பாகிஸ்தானுக்குப் புகழாரமே சூட்டியிருக்கிறார்.
காத்திருக்கிறது இந்தியா!
பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்து பத்து நாள்களுக்கும் மேலாகிவிட்டது. துல்லியத் தாக்குதலை இப்போது நிகழ்த்த முடியாது, நம்முடைய குண்டு வீச்சு விமானங்கள் வருவதை எதிர்பார்த்து இடைமறிப்பார்கள் என்று ராணுவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ராணுவத் தாக்குதலால் பல பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் கட்டுரையில் (The Road from Pahalgam 24.04.2025) அஜய் சஹானி சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்திய ராணுவத்தின் ஆற்றல், மேன்மை காரணமாக, பதிலடிக்கு வேறு வழிமுறைகளும் இருக்கும் என்று கருதுகிறேன். இதற்குப் பதில் தர முப்படைகளுக்கும் ‘முழு சுதந்திரம்’ அளித்திருக்கிறார் பிரதமர் மோடி என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஜனநாயக நாட்டில், இது போன்ற விவகாரங்களில் முடிவைப் பிரதமர்தான் எடுக்க வேண்டும், ராணுவம் அதை நிறைவேற்றும். காஷ்மீரத்தில் படுகொலைகளைச் செய்த அரசு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை இனி இப்படியொரு செயலில் ஈடுபடாதபடிக்குக் கடுமையான பதிலடி தரப்பட்டாக வேண்டும். (அப்படிப்பட்ட பதில் நடவடிக்கைக்காக) இந்தியா காத்திருக்கிறது!