முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... ‘அரசமைப்புச் சட்டத்தை வெல்கிறது சித்தாந்தம்!’
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 44,
என்கிறது.
சித்தாந்தத்தால் உந்தப்படும் பாரதிய ஜனதா கட்சி இதில் ‘பொது சிவில் சட்டம்' என்பதற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, அதே சமயம் அந்த சட்டக் கூறில் இடம் பெற்றுள்ள ‘மக்கள்’ – ‘இந்திய நிலப்பரப்பு முழுவதற்கும்’ என்கிற வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.
அரசமைப்புச் சட்டத்தின் உட்கிடக்கை என்னவென்றால், 'எல்லா குடிமக்களும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும் நிரந்தரமாகக் குடியேறவும் உரிமையுள்ளவர்கள்; அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு ஒரே விதமான சிவில் உரிமைகள் நிலவ வேண்டும்' என்பது. அனைத்து மக்களுக்கும் சிவில் உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதுதான் அரசின் கடமை.
நாடாளுமன்றம் பெருமளவுக்கு இந்தக் கடமையை நிறைவேற்றிவிட்டது; இந்தியக் குடிமக்கள் அனைவருமே ஒரே விதமான ஒப்பந்த சட்டங்களாலும், கட்டுப்பாட்டு விதிகளாலும், சிவில் உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் ஒரேவிதமான நடைமுறைகளாலும், குடிமக்களுடைய உரிமைகளுக்கான சட்டங்கள் தொடர்பாகவும் (குற்றச்செயல்கள் தொடர்பான விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது) இப்போதும் நிர்வகிக்கப்படுகின்றனர்.
வரம்பு மீறலா?
மக்களுடைய இதர சிவில் உரிமைகள் தொடர்பாக – உதாரணத்துக்கு திருமணம், மணவிலக்கு, சொத்துகளை அடைவதற்கான வாரிசுரிமை ஆகியவற்றுக்காக - நாடாளுமன்றத்தால் நிச்சயம் புதிய சட்டங்களை இயற்ற முடியும். திருமணம், மணவிலக்கு, சொத்துகளை அடைவதற்கான வாரிசுரிமை தொடர்பாக சட்டமியற்றும் வேலையை உத்தராகண்ட் மாநிலம் மேற்கொள்ள முன்வந்திருப்பது தன்னுடைய அதிகார வரம்புக்கு மீறிய செயல்.
முதலாவதாக,
தான் இயற்றும் சட்டத்தை அனைத்து இந்தியர்களுக்கும் பொருந்துவதை அதனால் உறுதி செய்ய முடியாது.
உத்தராகண்டிலேயே பிறந்த குடிமக்கள் தொடர்பாகவும் அவர்கள் அதே மாநிலத்தில் வசிக்கும்போதும் வாழும்போதும் மட்டும்தான் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியும். அந்த சட்டம் பிடிக்காதவர்கள், மாநிலத்தைவிட்டு வெளியேறிவிடலாம். மாநிலத்தின் சிவில் சட்டத்தை மீறும் வகையில் மணமக்கள் இருவரும் வேறு மாநிலத்துக்குச் சென்று, தாங்கள் விரும்பும் வகையில் திருமணம் செய்துகொண்டுவிடலாம். அவர்கள் மாநிலத்தைவிட்டு போகக் கூடாது என்றோ, திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்றோ மாநில அரசால் தடுத்துவிட முடியாது.
இரண்டாவதாக,
உத்தராகண்டில் பிறந்த ஒருவர் நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், அவருக்குத் தங்களுடைய பொது சிவில் சட்டம் செல்லுபடியாகும் என்று உத்தராகண்ட் அரசு கருதிவிட முடியாது. உத்தராகண்டைச் சேர்ந்த ஒருவர் மாநிலத்துக்கு வெளியே ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாலோ, குழந்தைகளை ‘தத்து’ எடுத்துக்கொண்டாலோ, மாநிலத்துக்கு வெளியே சென்று உயில் எழுதி அதைப் பதிவு செய்தாலோ அந்தந்த மாநிலத்தில் நிலவும் உரிய சட்டங்கள்தான் அவர்களுக்குப் பொருந்தும். நாடாளுமன்றம் இயற்றியுள்ள சட்டத்துக்கும் உத்தராகண்டின் புதிய சிவில் சட்டத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், நாடாளுமன்றம் இயற்றிய சட்டம்தான் செல்லுபடியாகும்.
இப்போது உத்தராகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை இயற்றியிருக்கலாம்... உண்மையில் மத்திய அரசுதான் உத்தராகண்ட் வாயிலாக இங்கே பூர்வாங்க சோதனையைத் தொடங்கியிருக்கிறது. இது ஆழம் பார்க்கும் முயற்சி.
எதிர்பார்த்தபடியே உத்தராகண்டின் புதிய சட்டம் குறித்து விவாதங்கள் நடக்கின்றன. பொது சிவில் சட்டத்தை ஆராயும் தகுதி படைத்தது 21-வது தேசிய சட்ட ஆணையம்தான். அது ஆகஸ்ட் 31-ல் அளித்த அறிக்கையில், “அனைவருக்கும் சிவில் உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக மக்களை பாரபட்சமாக நடத்தும் (பொது) சிவில் சட்டங்களுக்கு அவசியமும் இல்லை, இந்த நிலையில் விரும்பத்தக்கதும் இல்லை” என்று தெளிவாகக் கூறிவிட்டது.
சமூகத்தில் மாறிக்கொண்டிருக்கும் விழுமியங்கள், தார்மிகங்கள், பழக்க வழக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் முற்போக்கானதும் அதிக சுதந்திரத் தன்மையுள்ளதுமான சட்டத்தை இயற்றுவது உத்தராகண்ட் அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. பிற்போக்கான தனிச் சட்டங்களை நீக்குவதுதான் அதன் நோக்கம் என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். உண்மையில், உத்தராகண்டின் புதிய சட்டமானது பெரும்பான்மை மதத்தின் பேரினவாத ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.
இதுவா சீர்திருத்தம்?
உத்தராகண்டின் புதிய பொது சிவில் சட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி (பிரிவு 4 முதல் 48 வரையில்) ‘திருமணங்கள்’ – ‘மணவிலக்கு’ தொடர்பானது; இரண்டாவது பகுதி (பிரிவு 49 முதல் 377 வரை) சொத்துகளுக்கான வாரிசுரிமை பற்றியது; மூன்றாவது பகுதி (பிரிவு 378 முதல் 389 வரையில்) திருமணம் செய்துகொள்ளாமல் ‘சேர்ந்து வாழும்’ உறவுமுறை பற்றியது; நான்காவது நானாவிதமான இதர உரிமைகள் தொடர்பானது.
முதல் பகுதியின் சில சட்டக்கூறுகள் வரவேற்கத்தக்கவை. இருதார மணம், பலதார மணம் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்குத் தகுதியான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 என்று வரையறுக்கப்பட்டுள்ளது. எல்லா திருமணங்களையும் பதிவு செய்துகொள்வது இனி கட்டாயமாகிறது.
சில பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்துக்கு வெளிப்படையாகவே எதிரானவை. உத்தராகண்டில் ‘குடியிருப்பவருக்கு’ இது பொருந்தும் என்கிற சட்டம், அவர் உத்தராகண்டை விட்டு வேறெங்கும் சென்றாலும்கூட பொருந்தும் என்கிறது. ‘குடியிருப்பவர்’ யார் என்பதற்கு மிகவும் விரிவான விளக்கத்தை அது அளிக்கிறது.
(i) மத்திய அரசில் வேலை பார்க்கும் நிரந்தர ஊழியர் தற்காலிகமாக உத்தராகண்டில் பணிக்காக மாற்றப்பட்டிருப்பவர் கூட ‘குடியிருப்பவர்’ என்கிறது.
(ii) மத்திய அரசின் எந்த ஒரு திட்டப் பயனாளியும் (குடியிருப்பவர்) என்கிறது. அதாவது, உத்தராகண்டின் பிரதேச அதிகார எல்லையை மீறும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
அதன் சில பிரிவுகள் விவாதத்துக்குரியவை, உதாரணத்துக்கு மணவிலக்கு தொடர்பானது. சில பிரிவுகள் முந்தையை நிலை அப்படியே நீடிக்கச் செய்கிறது. திருமண உறவில் ஈடுபடுவது ஆணாகவும் பெண்ணாகவும்தான் இருக்க முடியும். அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். சில பிரிவுகள் மிகவும் பிற்போக்கானவை. இன்றைய காலத்துக்குப் பொருந்தாததும், பழங்காலத்தில் வலியுறுத்தப்பட்டதுமான ‘தாம்பத்ய (உடல்) உறவுக்கு அழைக்கும் உரிமை’ புதிய சட்டத்திலும் அப்படியே தக்க வைக்கப்பட்டிருக்கிறது.
சேர்ந்து வாழும் இணையர் தொடர்பான மூன்றாவது பகுதி பிற்போக்கானதாகவும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும் இருக்கிறது. இந்த சட்டம் உத்தராகண்டிலேயே வசிப்பவர்களுக்கும் உத்தராகண்டுக்கு வெளியே வசிப்பவர்களுக்கும் (உத்தராகண்ட்வாசிகள்) பொருந்தும் என்று முன்னுக்குப் பின் முரணான இரு பண்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த மூன்றாவது பிரிவு தனி நபர் சுதந்திரம், அந்தரங்க வாழ்க்கை தொடர்பான உரிமை ஆகியவற்றில் அப்பட்டமாகத் தலையிடுவதாக இருக்கிறது, இது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றங்களால் நிச்சயம் நீக்கப்படும். விதிகள் (15 முதல் 19 வரையில்) மிக மோசமாக வகுக்கப்பட்டுள்ளன. நம்பினால் நம்புங்கள் - சேர்ந்து வாழும் இணையர்களின் உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்று அந்த விதிகள் கூறுகின்றன!
முரண்பாடு
புதிய சட்டத்தின் இரண்டாவது பகுதி சொத்துகளுக்கான வாரிசுரிமை பற்றியது. சொத்துக்கு உரிமையாளர் உயில் எதுவும் எழுதிவைக்காமல் இறந்துவிட்ட நிலையில் யாரை அந்த சொத்துகள் அடைய வேண்டும் என்ற சட்டத்தில் இந்து வாரிசுரிமை சட்டம், 1956-ன் பிரிவுகள் ஒரு சில சிறிய மாற்றங்களுடன் அப்படியே புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதர சிறுபான்மைச் சமூகங்களின் வாரிசுரிமைச் சட்டப் பிரிவுகள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை. உயில் எழுதாமல் விடப்பட்ட நிலையை விவரிக்கும் சட்டம் அந்தச் சொத்தில் வாரிசுகள் அனைவருக்கும் கூட்டுரிமை இருப்பதையும் அங்கீகரிக்கிறது, அதிலிருந்து இந்து சமூகத்தில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையே இதில் முக்கியத்துவம் பெறுவது புலனாகிறது.
உயிலில் எழுதப்பட்டபடி வாரிசுகளைத் தீர்மானிப்பது தொடர்பான விவகாரத்தில் ‘இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925’ தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளில் அளித்த விளக்கங்கள் எடுக்கப்பட்டு இதற்கான விதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
உத்தராகண்டின் புதிய பொது சிவில் சட்டமானது, தன்னுடைய மாநில எல்லையையும் தாண்டி அமலாகும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பது முதல் நோக்கிலேயே, அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகிவிடுகிறது. சட்ட வாசகங்கள் மூலமும் அது ஏற்படுத்த விரும்பும் விளைவுகள் வாயிலாகவும் பெரும்பான்மை மதத்தின் விருப்பத்துக்கேற்ப இருப்பதுடன் இந்துக்கள் அல்லாத பிற மதத்தவர் கடைப்பிடிக்கும் உரிமைகளை அப்படியே நிராகரித்துவிட்டது.
இந்தச் சட்டம் சீர்திருத்தத்துக்கான விதையைத் தூவியிருக்கிறதா அல்லது மோதலுக்கான விதையைத் தூவியிருக்கிறதா – காலம்தான் பதில் சொல்லும்!