இந்திய பொருளாதார நிலை குறித்து ப.சிதம்பரம்
இந்திய பொருளாதார நிலை குறித்து ப.சிதம்பரம்புதிய தலைமுறை

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... ‘பட்ஜெட்டுக்கு முந்தைய இந்திய பொருளாதார நிலை - ஓர் அலசல்’

2025-26 நிதி நிலை அறிக்கை இன்றைய பிரச்சினைகளுக்கு விடை காணும் வகையில் இருக்கிறதா என்பதை முடிவு செய்வதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
Published on

இப்போதைய ஒன்றிய அரசுக்கு, பொருளாதாரம் தொடர்பாக மாறாத கொள்கையும் ஒரே சீரான நோக்கமும் இருந்தால் அடுத்து வரும் பட்ஜெட் (நிதி நிலை அறிக்கை) - சில வியப்புக்குரிய அறிவிப்புகளைத் தவிர்த்து – எப்படி இருக்கும் என்று ஓரளவுக்கு ஊகித்துவிடலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக அப்படிப்பட்ட நிலை இல்லை.

பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025

இந்த அரசு, கடந்த காலங்களில் முதலாளியத்திலிருந்து சலுகைசார் முதலாளியத்துக்கும், தாராளமய பொருளாதாரக் கொள்கையிலிருந்து வணிகச் சார்பியத்துக்கும், தொழில்துறையில் ஆரோக்கியமான போட்டிகளுக்கு ஆதரவான நிலையிலிருந்து ‘சில்லோர்’ (ஆலிகோபலி) ஆதிக்கத்துக்கும், விலையில்லா திட்டங்களே கூடாது என்று கண்டித்த நிலையிலிருந்து, விலையில்லா உணவு தானியங்களை வழங்கியும், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை அமல்படுத்திக் கொண்டே, உணவு தானியக் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ காப்பை அளிக்க மறுத்தும் முரண்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே, இன்றைய பொருளாதார நிலையின் முக்கிய அம்சங்கள் எப்படி இருக்கின்றன என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு, 2025-26 நிதி நிலை அறிக்கை இன்றைய பிரச்சினைகளுக்கு விடை காணும் வகையில் இருக்கிறதா என்பதை முடிவு செய்வதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கும்போதும், வாழ்க்கையின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களைக் கூர்ந்து கவனிக்கும்போதும் நாட்டில் வளம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றுகள் பல தெரிகின்றன. 1950-கள் 1980-களுடன் ஒப்பிடும்போது கடந்த முப்பதாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கை காரணமாக கோடிக்கணக்கான மக்கள், தாங்கள் விரும்பும் பொருள்களை உற்பத்தி செய்யவும் சேவைகளை மேற்கொள்ளவும் வழியேற்பட்டது. இந்தியாவில் ‘அரசு’ என்பதே இல்லாவிட்டாலும் கூட ஆண்டுக்கு 5% என்ற அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் ஏற்படும்! ஆட்சியிலிருக்கும் அரசுகள் தங்களுடைய கொள்கைகள் மூலமும், செயல்களாலும் எடுக்கும் நடவடிக்கைகள்தான் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் அல்லது மேலும் வீழ்ச்சி அடைய வைக்கும்.

இந்திய பொருளாதார நிலை குறித்து ப.சிதம்பரம்
சிந்திக்கத் தூண்டும் சிந்தனைகள் 1 | 90 மணி நேர வேலை.. மட்டுமீறிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறதா?

சரிகிறது வளர்ச்சி வீதம்

இப்போதுள்ள சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் வீழ்ந்துவருகிறது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். உலகிலேயே அதிக வளர்ச்சி வீதமுள்ள நாடு இந்தியாதான் என்று மார் தட்டிக்கொண்டாலும் – அதுவும் ஓரளவுக்கு உண்மையே - ஆண்டுக்கு 6% முதல் 7% என்ற வரம்புக்குள்ளேயேதான் திக்கித்திணறிக் கொண்டிருக்கிறது.

உலகின் பெரிய பொருளாதார நாடுகள் மிகவும் குறைவான வளர்ச்சி வேகமே கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் அது 2.7%, சீனத்தில் 4.9%. ஆனால் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது, 2024-ல் அமெரிக்கா (நடப்பு விலை அடிப்படையில்) தன்னுடைய மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 78,700 கோடி டாலர்களை மேலும் கூட்டியது, சீனம் 89,500 கோடி அமெரிக்க டாலர்களை மேலும் சேர்த்தது.

வேகமான பொருளாதார வளர்ச்சியுள்ள இந்தியாவால் 25,600 கோடி அமெரிக்க டாலர்களை மட்டுமே கூடுதலாக சேர்க்க முடிந்தது, சீனத்துக்கும் இந்தியாவுக்குமான பொருளாதார வலிமையின் இடைவெளி மேலும் அதிகரித்துவிட்டது.

இது கூறும் பாடம்:

இந்தியப் பொருளாதாரம் மேலும் அதிக வளர்ச்சி வேகத்துடன், தொடர்ச்சியாக செயல்பட்டால்தான் அமெரிக்கா, சீனா இரண்டையும் எட்ட முடியும்.

வளர்ச்சி வேகம் சரிவதற்குக் காரணம் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகள் அனைத்துமே சரிந்து கொண்டிருக்கின்றன. அவை:

நுகர்வு, பொது முதலீடு, தனியார் முதலீடு
தனியார் நுகர்வு

இவற்றில் தனியார் நுகர்வு கணிசமாகக் குறைந்துவருவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால் பொருளாதாரம் மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை, மிகப் பெரிய பணக்காரர்களின் (மக்கள் தொகையில் 1%-க்கும் குறைவு) அருவருக்கத்தக்க சில ஆடம்பரக் கொண்டாட்டங்கள் ஏற்படுத்தின.

நடுத்தர வர்க்கத்தினரும் (30%), வறியவர்களும் (69%) தங்களுடைய அவசிய நுகர்வுகளைக்கூட வெகுவாகக் குறைந்துக்கொண்டுள்ளனர். விருப்பப்பட்டு செய்யும் கூடுதல் செலவுகளும்கூட வெகுவாகக் குறைந்துவிட்டன. சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் இது வெளிப்படையாகவேத் தெரிகிறது. தனியார் செய்யும் இறுதி நுகர்வுச் செலவு (நிலையான விலைகள் அடிப்படையில்)

மூன்று காலாண்டுகளில்:

  • ரூ.22,82,980 கோடி,

  • ரூ.23,42,610 கோடி,

  • ரூ.24,82,288 கோடி.

அரசின் இறுதி நுகர்வுச் செலவும் கணிசமாக இல்லை. அவை முறையே

  • ரூ.3,36,707 கோடி,

  • ரூ.3,83,709 கோடி,

  • ரூ.4,00,698 கோடி.

நுகர்வும் முதலீடும்

இவ்வளவு மந்தமான நுகர்வுக்கு முக்கியக் காரணங்கள்:

1. உணவு தானியங்களின் விலையில் ஏற்பட்ட உயர்வு,

2. ஊதிய விகிதங்கள் மிகவும் குறைவாகவும் - கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக உயராமல் தேக்க நிலையிலேயே இருப்பதும்.

விவசாயத் தொழிலாளர்கள் பெறும் ஊதிய ‘உண்மை மதிப்பு’ 2017 முதல் 2023 ஆறு ஆண்டுகளில் அன்றாடம் ரூ.138-லிருந்து ரூ.158 ஆக மாறியிருக்கிறது. பெண்களுக்கான ஊதியம் இதிலும் ரூ.40 குறைவு. கட்டுமானத்துறையில் ஆண் தொழிலாளர்களின் அன்றாட ஊதிய ‘உண்மை மதிப்பு’ ரூ.176-லிருந்து ரூ.205 ஆக உயர்ந்திருக்கிறது; மகளிரின் ஊதியம் இதில் ரூ.45 குறைவு.

இவ்வாறு இரு துறைகளில் தொழிலாளர்கள் பெறும் குறைவான ஊதியமானது, கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் அன்றாடச் செலவுகளை எதிர்கொள்ளக்கூட வழியில்லாமல் வறுமையுடன் போராடுகிறார்கள் என்பதையே நினைவூட்டுகிறது.

‘பொது முதலீடு’

‘பொது முதலீடு’ (அதாவது அரசாங்கத்தால் செய்யப்படுவது) கடந்த பத்தாண்டுகளில் மொத்த ஜிடிபி மதிப்பில் (நடப்பு விலையில்) 6.7% முதல் 7.0% ஆகவே இருக்கிறது. மத்திய அரசும் அரசுத்துறை நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் மூலதனச் செலவு 2019-20-ல் ஜிடிபியில் 4.7% ஆக இருந்தது, 2023-24-ல் 3.8% ஆகக் குறைந்திருக்கிறது.

‘பொது முதலீடு’

தனியார் முதலீடு ஜிடிபியில் 21% முதல் 24% ஆக இருக்கிறது. ஒரு கணித வரைபடத்தில் இந்த எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டு, ஒப்பிட்டால் அவை கிட்டத்தட்ட நேர்கோட்டிலேயே இருப்பது புரியும்.

விலையுயர்வு, வேலையின்மை, வரிகள்…

பணவீக்கம் (விலையுயர்வு) என்பது மக்களுடைய கழுத்தில் கட்டப்பட்ட பாறாங்கல் போல - பெருஞ்சுமை. உணவு தானியங்களின் விலையில் ஏற்பட்ட உயர்வானது 2012 தொடங்கி 2024 வரையில் சராசரியாக 6.18%. மருத்துவத்துக்காகும் செலவு ஆண்டுக்கு 14% உயர்ந்திருக்கிறது. கல்வித்துறையில் படிப்புக்கான கட்டணம் உள்ளிட்டவற்றுக்கான செலவு 11% அதிகரித்துள்ளது. சிஎம்ஐஇ அமைப்பின் கணிப்பின்படி 2024 டிசம்பரில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 8.1%. இந்தத் தரவை, கல்வித்தகுதி - பாலினம் அடிப்படையில் பகுத்துப் பார்த்தால் மேலும் மனச்சோர்வையே ஏற்படுத்தும் விவரங்கள் வெளிப்படும்.

பணவீக்கம்
பணவீக்கம்

பணவீக்கம் பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதங்களில் உரத்துப் பேசப்படுவது வருமான வரி செலுத்துவோருக்கான ‘விலக்கு வரம்பு உயர்வு’ பற்றியே. நிதியாண்டு 2023-24-இல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 8,09,03,315 அல்லது மொத்த மக்கள் தொகையில் 6.68%. அவர்களிலும் 4,90,00,000 பேர், வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் அதிகமில்லை என்று கணக்கு கொடுத்துவிட்டனர். வருமான வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிப்பது அவசியம், அதே வேளையில், அன்றாடம் உழைத்து அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்துவோருக்கு நிவாரணம் அளிப்பது அதைவிடப் பன்மடங்கு அவசியம். பொருளாதார வளர்ச்சி வேக வீழ்ச்சிக்குக் காரணமான இதர அம்சங்களில் முக்கியமானது ‘வரி கட்டமைப்பு’, குறிப்பாக பொது சரக்கு - சேவை வரி; இது ஏழைகள் உள்பட அனைவரையுமே பாதிக்கிறது.

‘பெரு நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்குமான அரசு’ என்ற பெயரை இந்த அரசு ஏற்கெனவே பெற்றுவிட்டது.

2022-23 நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் பெற்ற லாப அளவு ரூ.10,88,000 கோடி, அது 2023-24-ல் ரூ.14,11,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. அந்த இரண்டு ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் வாங்கிய கடன்களில் முறையே ரூ.2,09,144 கோடி, ரூ.1,70,000 கோடி வணிக வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

மோடி - நிர்மலா சீதாராமன்
மோடி - நிர்மலா சீதாராமன்

அரசின் நிதி நிர்வாகத்துக்குப் பெரும் சவாலாகத் திகழ்பவை ‘பொது நிதி பற்றாக்குறை’ (மொத்த செலவுக்கும் வருவாய்க்குமான இடைவெளி), ‘வருவாய் பற்றாக்குறை’ (அரசு எதிர்பார்த்த மொத்த வரி வருவாய்க்கும் உண்மையில் வசூலான தொகைக்கும் இடையிலான இடைவெளி) ஆகியவைதான்.

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் அரசு எப்படித் தீர்க்கப் போகிறது என்று மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நிதியமைச்சரும் அவருடைய ஆலோசகர்களும் இவற்றுக்குத் தீர்வுகளை வைத்திருப்பார்கள்.

ஆனால் தில்லியில் எல்லோருக்கும் ‘தெரிந்த ரகசியம்’ என்னவென்றால், நிதியமைச்சர் தீர்வுகளைக் கூறலாம் -  ஆனால் அவற்றை இறுதியில் ஏற்பதும் மறுப்பதும் பிரதம மந்திரிதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com