புறக்கணிக்கப்படும் பெண் விஞ்ஞானிகள்

புறக்கணிக்கப்படும் பெண் விஞ்ஞானிகள்

புறக்கணிக்கப்படும் பெண் விஞ்ஞானிகள்
Published on

ஐநா சபை அறிவித்திருக்கும் சர்வதேச தினங்கள் சிலவற்றை இந்திய அரசாங்கம் கடைபிடிக்கிறது, பலவற்றைக் கடைபிடிக்காமல் புறக்கணித்து விடுகிறது. அப்படி கண்டுகொள்ளாமல் விடப்படும் சர்வதேச தினங்களில் ஒன்றுதான் பிப்ரவரி 11.  

பிப்ரவரி 11 ஆம் நாளை ‘ அறிவியல் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான சர்வதேச நாள்’ என 2015 ஆம் ஆண்டு ஐநா சபை அறிவித்தது. அதற்கான தீர்மானம் ஒன்றும் – A/RES/70/212 -  பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பு நாடுகள் யாவும் அதைக் கடைபிடிக்கவேண்டும் எனவும் ஐநா சபையின் தீர்மானம் கேட்டுக்கொண்டது. அறிவியல் துறையில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட ஊக்குவிக்கும் திட்டங்களை வகுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியது. 

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வளர்ச்சி இலக்குகளை ஒரு நாடு எட்டவேண்டுமென்றால் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சம அளவில் பங்கேற்பது அவசியம். ஆனால் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதில் ஆண்களால் நிர்வகிக்கப்படும் அரசுகள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ஆட்சியாளர்கள் இழுத்தடித்து வருவதே அதற்குச் சான்று. 

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே அறிவியல் துறையில் பெண்களின் பங்கேற்பு குறைவாகத்தான் உள்ளது. ஐநா சபையின் மேற்பார்வையில் 14 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அறிவியலில் இளநிலை பட்டம் பெறுவோரில் 37 சதவிதம்; முதுநிலை பட்டம் பெறுவோரில் 18 சதவிதம்; டாக்டர் பட்டம் பெறுவோரில் 6 சதவிதம் மட்டும்தான் பெண்கள் உள்ளனர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. 

பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் உலக நாடுகள் பலவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த இந்தியா, பெண்களுக்கு அறிவியல் கல்வியை அளிப்பதில் தயக்கம் காட்டவே செய்தது. காலனிய ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு வேறு பாடத் திட்டம் ஆண்களுக்கு வேறு பாடத் திட்டம் என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வைத்திருந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும்கூட அதுவே தொடர்ந்தது. 1958-59 ல் அமைக்கப்பட்ட  ‘பெண் கல்விக்கான தேசிய கமிட்டி’தான் ஆண் பெண் இரு பாலருக்கும் ஒரே விதமான பாடத் திட்டம் உருவாக்கப்படவேண்டும் எனப் பரிந்துரை செய்தது. 

காலனிய ஆட்சிக் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு மருத்துவர் ஆவதற்கும், மருத்துவப் பணிப்பெண்களாக பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது என்றபோதிலும் அறிவியலின் பிற துறைகளில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டே இருந்தது. 1941-42 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் அதைத் தெளிவாகக் காட்டுகிறது.அப்போது இளநிலை பட்ட வகுப்பில் அறிவியல் பயின்ற ஆண் மாணவர்கள் 11,217 பேர் ஆனால் பெண்களோ வெறும் 903 பேர் மட்டும் தான். முதுநிலை வகுப்பில் ஆண்கள் 1321 பேர் இருக்க பெண்கள் 83 பேர் மட்டுமே படித்துள்ளனர். 

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பெண்கள் அறிவியல் கல்வி பெறுவது கணிசமாக உயர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இளநிலை அறிவியல் பயிலும் மாணவர்களில் சுமார் 40% பேர் பெண்கள் என 2009 ஆம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் அது மேலும் கணிசமாக அதிகரித்திருக்கும். ஆனால் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை இப்போதும்கூட இந்தியாவில் குறைவாகவே உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக பொருளாதார அமைப்பின் (WEF ) அறிக்கையின்படி இந்தியாவில் பெண் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை 14.3% ஆக இருக்கிறது. ஆனால் அது மேற்கு ஆசிய நாடுகள் பலவற்றோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு. உதாரணத்துக்கு பஹ்ரைன் நாட்டில் பெண் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை 41.3% ஆக உள்ளது. 

இப்போது இஸ்ரோ போன்ற உயர் ஆராய்ச்சி மையங்களில்கூட கணிசமான எண்னிக்கையில் பெண்கள் உள்ளனர் என்றபோதிலும் பெண்களுக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் பாகுபாடு அவர்களிலிருந்து திறமைமிக்க விஞ்ஞானிகள் உருவாவதைத் தடுத்துக்கொண்டே உள்ளது. பல்வேறு தடைகளைக் கடந்து அறிவியல் ஆராய்ச்சிக்கு வரும் பெண்கள் அங்கே பாகுபாடு காட்டி ஓரம் கட்டப்படுகின்றனர். அவர்களுக்கான அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. 

2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இண்டர் பிரஸ் சர்வீஸ் நியூஸ் ஏஜன்ஸியின் அறிக்கை அறிவியல் துறை சார்ந்த ஃபெலோஷிப்புகளை வழங்குவதில் எப்படி பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியது. மொத்தமுள்ள 744 இண்டியன் நேஷனல் சயன்ஸ் அகாடமியின் ஃபெலோஷிப்புகளில் 3.2% மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டது எனவும்; 841 இண்டியன் அகாடமி ஆஃப் சயன்ஸ் ஃபெலோஷிப்புகளில் 4.6% மட்டுமே பெண்களுக்கு அளிக்கப்பட்டன எனவும்; 395 நேஷனல் அகாடமி ஆஃப் அக்ரிகல்ச்சுரல் சயன்ஸ் ஃபெலோஷிப்புகளில் 4% மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டன் என்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.

ஆராய்ச்சிக்கான நிதி நல்கைகள் வழங்கப்படுவதில் மட்டுமின்றி விருதுகள் வழங்குவதிலும்கூட பெண் விஞ்ஞானிகள் புறக்கணிப்புக்கு ஆளாகவே செய்கின்றனர். இந்திய அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ள பத்ம விருதுகளில் பெண் விஞ்ஞானிகள் எத்தனைபேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன எனப் பார்த்தால் அது தெரிந்துவிடும். யார் யாருக்கோ பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தாவரவியல் ஆராய்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த இ.கே.ஜானகி அம்மாளுக்கு அதை வழங்கவேண்டும் எனக் கேட்பதற்குக்கூட ஆளில்லை. 

பெண் விஞ்ஞானிகளுக்கு எதிரான இந்த மனோபாவம் எப்படி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி.ராமன் காலத்திலேயே இருந்தது என்பதை அபா சூர் என்னும் பெண் விஞ்ஞானி விரிவாக ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். சி.வி.ராமனின் மேற்பார்வையில் ஆராய்ச்சி மேற்கொண்ட லலிதா துரைசாமி, சுனந்தா பை, அன்னா மணி என்ற மூன்று பெண்களும் பிஎச்டி பட்டத்தைப் பெற முடியாமலேயே போன கதையை அவர் எழுதியிருக்கிறார். ஸ்வீடன் நாட்டில் ஆராய்ச்சிப் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சுனந்தா பை தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவத்தை அவர் விவரித்திருக்கிறார். 

பெண்கள் மட்டுமல்ல அறிவியல் கல்வி பெற முயற்சிக்கும் தலித் மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டு சாகவேண்டிய சூழலைத்தான் நமது பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு செந்தில்குமாரின் மரணமும், ரோஹித் வெமுலாவின் மரணமும் சமகாலச் சான்றுகளாக இருக்கின்றன. அவர்களைப்போல தற்கொலை செய்துகொள்ளாமல் வெற்றிகரமான விஞ்ஞானியாக உருவாகி உலக அளவில் மதிக்கப்பட்டாலும் இந்தியா அவர்களை அங்கீகரிக்காது என்பதற்கு மேக்நாத் சாஹா ( 1893- 1956 ) வின் வாழ்க்கையே ஒரு உதாரணம்.    

 ரேடியேஷன் ப்ரஷ்ஷர், குவாண்டம் தியரி ஆகியவை குறித்து மேக்நாத் சாஹா வெளியிட்ட கட்டுரைகள் அவருக்கு 1918 ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றுத் தந்தன. 1920 ஆம் ஆண்டு அவர் ionization theory of gases  குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். Astrophysics இல் அவரது ஆய்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

Astro Physics இல் தேர்ந்த விஞ்ஞானியாக இருந்த சாஹா நட்சத்திர மண்டலம் குறித்து thermal ionization of elements என்ற அடிப்படையில் உருவாக்கிய சாஹா சமன்பாடு ( Saha Equation) என்பது அந்தத் துறையில் அதன்பின் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. சூரியக் கிரணத்தின் எடையையும் அழுத்தத்தையும் கண்டறிவதற்கான கருவியையும் சாஹா உருவாக்கினார். சுதந்திர இந்தியாவில் இந்திய நதிகளை ஒழுங்கமைக்கும் திட்டங்களை வகுத்தார். அம்பேத்கருடன் இணைந்து அவர் உருவாக்கியதுதான் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம். 

அம்பேத்கர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வங்காளத்தில் பிறந்த சாஹா, அம்பேத்கரைப் போலவே பல்வேறு சமூக இடர்களை சந்தித்தவர். சிறந்த அறிவாளி. சாஹாவும் அரசியலில் ஈடுபட்டு சிலகாலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அம்பேத்கர் இறந்த அதே 1956 ல் அவரும் மரணமடைந்தார். 

பெண்களுக்கும் தலித்துகளுக்கும் எதிரான வன்கொடுமைகள் (Atrocities)வெளிப்படையாக தெரியக்கூடியவை. ஆனால் அவர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் பாகுபாடுகள் (Discriminations)நுட்பமானவை. வன்கொடுமைகளை சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம், ஆனால்,  பாகுபாடுகளை மனமாற்றத்தின்மூலமே களைய முடியும். பாகுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை எட்டும் நோக்கிலேயே ஐநா சபை இப்படி சர்வதேச தினங்களை அறிவிக்கிறது. ஆனால் சர்வதேச தினங்களை கடைபிடிப்பதிலும்கூட நாம் பாகுபாடு காட்டிக்கொண்டிருக்கிறோம்!  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com