ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து பேரவையில் அனல்பறந்த விவாதம்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து பேரவையில் அனல்பறந்த விவாதம்
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து பேரவையில் அனல்பறந்த விவாதம்

சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதத்தை முன்மொழிந்தார்.

எந்த உயர்பதவியில் இருந்தாலும் அந்த 17 பேரை சஸ்பெண்ட் செய்து சிறையில் அடைக்கவும் - வேல்முருகன்:

இதைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் என்பது மக்கள் மீதான வன்முறையை அரசு தெரிந்தே கட்டவிழ்த்து விட்ட சம்பவம் ஆகும். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ஓ அப்படியா! துப்பாக்கி சூடு நடந்திருக்கிறதா? டிவி பார்த்து தான், அதனை தெரிந்து கொண்டேன்’ என கூறினார். இது முதலமைச்சர் பதவிக்கு அவமானகரமானது.

மக்கள் மீதான வன்முறையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தென் மண்டல ஐஜி வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் மீது, தற்போது அவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அந்த பதவியிலிருந்து அவர்களை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது குற்றவழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் அரசு வழங்க வேண்டும்” என கூறினார்.

அப்போதைய முதல்வர் பழனிசாமி மீதும் குற்ற வழக்கு பதிவு செய்க - ஜவாஹிருல்லா:

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் , அதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் எடப்பாடி முதலமைச்சராக இருந்தார். மக்களை பாதுகாக்க வேண்டிய அவர், அதிலிருந்து தவறியதால் எடப்பாடி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - தளி ராமச்சந்திரன்:

“வேண்டுமென்றே 13 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அப்போதய முதல்வர் தொலைக்காட்சியை பார்த்து தான் இந்த சம்பவத்தை தெரிந்து கொண்டேன் என்று சொன்னது வெட்கக் கேடானது. 17 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் தூத்துக்குடி மாவட்ட அட்சியர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி ராமசந்திரன் தெரிவித்தார்.

துரோகம் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் - செல்வப்பெருந்தகை

“தூத்துக்குடி துப்பாக்கி சூடி சம்பவம் வன்மத்தை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல். துரோகம்,துரோகம் என்றால் அது அப்போதய முதலமைச்சர் எடப்பாடி தான். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, கொ.ம.தே.க சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோரும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்:

சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்திற்கு பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை அறிக்கையை கொடுத்து இருக்கிறது. இது அதிமுக ஆட்சியில் நடந்த மிகப் பெரிய கரும்புள்ளி. திட்டமிட்ட படுகொலை என ஆணையம் கூறி இருக்கிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என அறிவித்தார்.

உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்தவர் பழனிசாமி - முதல்வர் மு.க.ஸ்டாலின்:

“அதிமுக அரசின் அலட்சியம் காரணமாக தான் இத்தனை பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதில் உண்மைக்கு மாறான தகவலை பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். டி.ஜி.பி, தலைமை செயலாளர், உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரித்தும் தவறான கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அமைதி வழியாக நடந்த போராட்டம் அது. அப்போதைய அதிமுக அரசு போராட்டத்தை சரியாக கையாளவில்லை. போராட்டம் நடத்திய மக்களுடன் பேசவும் இல்லை.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சம்பவத்திற்கு காரணமான அனைவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவார்கள் - ஸ்டாலின்:

“துறை ரீதியான நடவடிக்கை காவல்துறை அதிகாரிகள் மீதும், மூன்று வருவாய் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்கானிப்பாளர், DSP மற்றும் 3 ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு. காரணமான அனைத்து அதிகாரிகள் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

- ராஜ்குமார், ச.முத்துகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com