சித்த மருத்துவமும் மகத்துவமும் - ஓர் சிறப்புப் பகிர்வு

சித்த மருத்துவமும் மகத்துவமும் - ஓர் சிறப்புப் பகிர்வு
சித்த மருத்துவமும் மகத்துவமும் - ஓர் சிறப்புப் பகிர்வு
அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்ட சித்த மருத்துவ முறையில், சில தாவரங்கள் மூலம் மயக்கமுறச் செய்து, அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு நாட்டின் மருத்துவ வரலாறினை உற்று நோக்கினால், அங்கிருக்கும் தாவரங்கள் சார்ந்தே மருத்துவ வளர்ச்சி அடைந்திருப்பதைப் பார்க்க முடியும். ஒவ்வொரு நாட்டுக்கும் பாரம்பரிய மருத்துவம் என்று ஒன்று உண்டு. ஆங்கில மருத்துவத்தின் வருகைக்கு முன்னர் நம் பகுதியில் அனைத்து நோய்க்குமான தீர்வு சித்த மருத்துவம் சார்ந்தே இருந்தது. இச்சூழலில் சித்த மருத்துவத்தை நோக்கிய மக்களின் பார்வை கடந்த சில ஆண்டுகளாக திரும்பியிருக்கிறது என்கிறார் அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம் குமார். சித்த மருத்துவத்தின் மகத்துவம் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
’’என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற வாக்கியத்தின் அடிப்படையிலேயே சித்த மருத்துவத்தையும் பொறுத்திப் பார்க்கலாம். என்ன வளம் இல்லை நம் சித்த மருத்துவத்தில்? மூலிகைகள், தாதுப்பொருட்கள், சீவப் பொருட்கள் என பல்வேறு அடிப்படைப் பொருட்களிலிருந்து மருந்துகளை தயாரித்து நோய் நீக்கும் சிறப்புத் தன்மை கொண்டது சித்த மருத்துவம்.
அதாவது தாவரங்களின் வேர் முதல் விதை வரை. இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற தாதுப்பொருட்கள். நத்தை, நண்டு, மீன் ரகங்களான கடல்சார் பொருட்கள் முதலிய சீவப் பொருட்கள் என ஒவ்வொருவருக்கும் அருகாமையில் கிடைக்கும் எளிமையான பொருட்களை நுட்பமாக மருந்தாக்கி உபயோகித்து நோய் தணிக்கும் சிறப்பு சித்த மருத்துவத்திற்கே உரித்தானது.
சித்த மருத்துவத்தின் மூலம் பல்வேறு நோய்களைத் தடுக்க முடியும். கட்டுக்குள் வைக்க முடியும். நோய்களைக் களையவும் முடியும். அசுர மருத்துவம் என்று அக்காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவ முறையில், சில தாவரங்கள் மூலம் மயக்கமுறச் செய்து, அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
அசுர மருத்துவம் சார்ந்த சித்த மருத்துவக் குறிப்புகள் இன்றும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் சித்த மருத்துவத்தில் அறுவை மருத்துவத்தின் பங்கு வெகுவாக குறைந்துவிட்டது. இப்போதும் நாட்பட்ட நீரிழிவுப் புண், நாளவிபாத புண் போன்றவற்றை கட்டுப்படுத்தும் வெளிப்புற மருந்துகள், கொம்பு கட்டல் சிகிச்சை, தொக்கண சிகிச்சை எனப் பல நோய்களுக்கு தீர்வளிக்கும் சிகிச்சை முறைகள் புழக்கத்தில் இருக்கின்றன. அட்டைவிடல் சிகிச்சையின் முலம் இரத்தக் குழாய் சார்ந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் முறை இப்போதும் வழக்கத்தில் இருக்கிறது. இப்படி சித்த மருத்துவத்தின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
சித்த மருத்துவத்தின் மகிமை என்பது தமிழ் சித்த மாமுனிவர்களின் அருளாற்றலால் உணர்ந்த மருத்துவ முறை என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் பார்வைகளை உள்ளடக்கி மெய்ஞானத்தால் அருளப்பட்ட மருத்துவமுறை சித்த மருத்துவம். மனிதர்களுக்கு உருவாகக்கூடிய பல வகையான நோய்களுக்கு தெளிவாக குறிகுணங்கள், சிகிச்சை முறைகள், மருந்துகள், நோய்க்காலத்து பத்திய முறைகள் என அனைத்து விதமான மருத்துவக் கட்டமைப்புகளையும் உள்ளடக்கியது சித்த மருத்துவம்.
96 உடல் தத்துவங்களின் அடிப்படையில் நோய்க்கான சிகிச்சை வழங்குகிறது சித்த மருத்துவம். நா, நிறம், மொழி. விழி, நாடி, ஸ்பரிசம், மலம், சிறுநீர் என பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து நோய்க்கணிப்பை உறுதி செய்கிறது சித்த மருத்துவம். அதிலும் நாடி பார்த்து நோய்க்கணிப்பதென்பது சித்த மருத்துவத்திடம் இருக்கும் தனித்துவம்.
நெய்க்குறி, மணிக்கடைக் கணக்கு என ஆய்வக வசதியில்லாத அக்காலத்திலேயே தனித்துவமான நோய்க்கணிப்பு முறைகளைக் கையாண்டது சித்த மருத்துவம். சுவை தத்துவ அடிப்படையிலும், பஞ்ச பூத தத்துவ மார்க்கத்திலும், நாடியின் தனித்துவத்திலும் நோய்களைக் கணிக்கும் பிரத்யேகமான மருத்துவ முறைதான் சித்த மருத்துவம்.
நெருப்புக்கு புகைந்து ஓடக்கூடிய பாடாணப் பொருட்களையும் முறையாக சுத்தித்து நெருப்பில் புகையா வண்ணம் செய்து கட்டாக உருவாக்கிய பெருமை சித்தர்களை மட்டுமே சாரும். உள்மருந்துகள் 32 வகை, வெளி மருந்துகள் 32 வகை என இலட்சக்கணக்கான மருந்து செயல்முறைகளை கொண்டது சித்த மருத்துவம். அதனால்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை வாழ்வாங்கு வாழ வைக்க தமிழ் சித்த மாமுனிகளால் அருளப்பட்ட மருந்துகள் இன்றும் பயன்களை அள்ளி வழங்குவதை அறிய முடிகிறது.
எந்த விதமான புது நோய்கள், புதிது புதிதாக வைரஸ்களின் பெருக்கம் ஏற்பட்டாலும், குறிகுணங்களுக்கு ஏற்ப அதை தடுக்கக் கூடிய வல்லமை சித்த மருந்துகளுக்கு நிச்சயம் உண்டு. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மனிதர்கள் இந்த உலகில் உள்ளவரை சித்த மருந்துகள் தமது வல்லமையை நிரூபணப்படுத்திக் கொண்டே தான் இருக்கும். நமது நோய்க்கட்டமைப்பை வலுப்படுத்தக் கூடிய மருந்துகள், கிருமித் தாக்குதலிலிருந்து உடலை மீட்டெடுக்கும் மருந்துகள், குறிப்பாக உடனடியாக நமது உடலில் பணியாற்றும் கஷாய ரகங்கள் சித்த மருத்துவத்தின் சிறப்பு.
சித்த மருத்துவம் நோக்கி மக்களின் பார்வை கடந்த சில ஆண்டுகளாக திரும்பியருக்கிறது. ஆனால் கொரோனாவிற்குப் பிறகு சித்த மருத்துவத்தை நாடும் மக்களின் எண்ணிக்கையோ மிக மிக அதிகம். கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்குப் பின் என சித்த மருத்துவத்தின் நவீன காலத்தை தாராளமாக பகுப்பாய்வு செய்யும் அளவிற்கு சித்த மருத்துவத்தின் மீது கொரோனா தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை சித்த மருத்துவத்தின் மீட்டுருவாக்கத்திற்கு உதவியது எனலாம். கொரோனா காலத்தில் சித்த மருத்துவம் வெகுவாக பயன்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
சித்த மருத்துவத்தில் ஓலைச்சுவடிகளில் சொல்லப்பட்ட மருத்துவ முறைகளை அச்சு வடிவத்தில் புதிய நூல்களாக பல தொகுதிகளாக வெளியிடலாம். கூடுமானவரை மின் புத்தகங்களாகவும் வடிவமைக்கலாம். சித்த மருத்துவத்தில் ஆய்வு செய்வதற்கு பல்வேறு தளங்கள் இருக்கின்றன. முறையாக ஆய்வுப்படுத்தினால் இன்னும் பல மருத்துவ மகிமைகள் நமக்கு கிடைக்கும்.
சமீபத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய சித்த மருத்துவ சிக்கல்களை உற்று நோக்கி அதற்கான வழிமுறைகளை நாடினால், சித்த மருத்துவத்தில் இருக்கும் மரபு சார் பெருமைகள் உலகிற்கு புது வெளிச்சம் பாய்ச்சும்’’ என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com