உலக நாடுகளில் பணமதிப்பிழப்பு…. ஒரு பார்வை

உலக நாடுகளில் பணமதிப்பிழப்பு…. ஒரு பார்வை
உலக நாடுகளில் பணமதிப்பிழப்பு…. ஒரு பார்வை

2016 நவம்பர் 8ல் இந்தியாவில் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்கம் உலக அளவில் கவனிக்கப்பட்ட ஒரு பொருளாதார நடவடிக்கை. இந்தியாவின் வரலாற்றில் நெருக்கடிநிலை - என்ற வார்த்தைக்கு எப்படி ஒரு தனித்த இடம் உண்டோ, அதுபோல பணமதிப்புநீக்கம் என்ற வார்த்தைக்கும் கட்டாயம் ஒரு இடம் உண்டு. 
உலக வரலாற்றில் அது முதல் பணமதிப்பு நீக்கம் அல்ல, கடைசியும் அல்ல. உலகின் பல நாடுகளில் நிகழ்ந்த சில முக்கியமான பணமதிப்பு நீக்கங்கள் அந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு பலவீனத்தையோ பலத்தையோ கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன.


 1873 ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்காவில் ‘தங்கக் கட்டுப்பாடு’ வந்தபோது ‘நாணயச் சட்டமும்’ அமலுக்கு வந்தது. பொருளாதாரத்தில் தங்கத்தின் இடத்தை உறுதி செய்வதற்காக வெள்ளி நாணயங்களை மதிப்பிழப்பு செய்வது அந்த சட்டத்தின் முக்கிய பணி ஆகும். அப்போது அமெரிக்க வெள்ளி நாணயங்கள் தங்கள் மதிப்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டன. இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்களும், வணிகர்களும், சுரங்க உரிமையாளர்களும் கொடுத்த கடும் அழுத்தங்களின் காரணமாக 1878ஆம் ஆண்டில் வெள்ளிப் பணம் மீண்டும் சட்டபூர்வ பணமாக ஏற்கப்பட்டது. இந்தப் பணமதிப்பு நீக்கம் தோல்வியடைந்தது.


முந்தைய காலத்தில் பணமதிப்பிழப்புப் பாடம் கற்றுக் கொண்ட அமெரிக்கா தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன், தெளிவாகத் திட்டமிட்டு மீண்டும் 1969ல் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. இந்தமுறை 100 டாலருக்கும் மேல் மதிப்புள்ள அமெரிக்கப் பணத்தாள்கள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டன. உலகின் மிகத் தெளிவான பணமதிப்பு நீக்க நடவடிக்கையாக இது இருந்தது, ஏனெனில் அதன் பின்னர் இன்றுவரை 100 டாலர் நோட்டே அதிக மதிப்புள்ள அமெரிக்கப்பணத்தாளாக உள்ளது. இதனால் கறுப்புப் பணப்பதுக்கல்  கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, 1978ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டது. இதன்படி அன்றைக்கு புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய், 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தவையாக அறிவிக்கப்பட்டன. அந்த பணத்தாள்களை மாற்றிக் கொள்ள ஒருவாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அப்போது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஐ.ஜி.படேல் கூட அரசின் பக்கம் நிற்கவில்லை. பொருளாதார வல்லுநர்கள் கூறியபடி இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்தது, இதன் எந்தவிதத் தாக்கத்தையும் இந்தியப் பொருளாதாரத்தில் பார்க்க இயலவில்லை.

1983 ஆம் ஆண்டில் ஆப்ரிக்க நாடான கானாவில் ‘வரி ஏய்ப்பைத் தடுக்கிறோம்’, ‘அதிக பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துகிறோம்’ என்று ’50 செடி’ மதிப்புள்ள உயர்மதிப்பு பணத்தாள்களை கானா அரசு பணமதிப்பு நீக்கம் செய்தது. ஆனால் அப்போது கானாவின் பதுக்கல்காரர்கள் உடனடியாக வெளிநாட்டுப் பணத்தாள்களுக்கு மாறினர். பொது மக்கள் மட்டுமே பாதிப்புகளுக்கு ஆளானார்கள். இதனால் மக்கள் வங்கிகள் மீது நம்பிக்கை இழந்தனர், சொத்துகளின் பக்கம் மீண்டும் முதலீடுகள் திரும்பின, எல்லாவற்றுக்கும் மேலாக கள்ளச்சந்தையில் அயல்நாட்டுப் பணத்தைப் பெறுவது பெருகியது. கானாவின் பொருளாதாரம்  பாதிக்கப்பட்டது.

1984ல் நிகரகுவாவின் ராணுவ சர்வாதிகாரி முகமது புஹாரி தனது புதிய பணத்தாள்களுக்காக அறிவித்த பணமதிப்பு நீக்கம் படுதோல்வி அடைந்தது. கடன்கள் திரும்பவரும் பணவீக்கம் குறையும் என்று சொல்லப்பட்ட இரண்டு காரணங்களும் சிறிதும் நிறைவேறவில்லை.

1987ல் மியான்மரின் 80% நோட்டுகள் அரசால் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. கருப்புப் பொருளாதாரத்தை ஒழிப்பதாகக் கொண்டுவரப்பட்ட இந்த அறிவிப்பால் நாடே திண்டாட, மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். பணமதிப்பு நீக்கத்தால் அங்கு அரசு மதிப்பிழந்து அடுத்த ஆண்டே கவிழ்ந்தது.

1991ல் மிகயீல் கோர்ப்பச்சேவ் சோவியத் ரஷ்யாவின் அதிபராக இருந்தபோது 50ரூபிள், 100 ரூபிள் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. கருப்புப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகக் கூறப்பட்ட இந்தப் பணமதிப்பு நீக்கம் தாக்கியது என்னவோ தேச ஒற்றுமையைத்தான். கஜகஸ்தான், உக்ரேன் போன்ற சில சோவியத் மாகாணங்கள் பணமதிப்பு நீக்கத்தினால் கடுமையான பாதிப்பை அடைந்தன. இதனால் கோர்ப்பசேவ் தனது நம்பிக்கைக்கு உரியவர்களைக் கண்டே அஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் சோவியத் ரஷ்யா பல தேசங்களாக உடைந்ததன் பின்னணிக் காரணங்களில் இந்தப் பணமதிப்பு நீக்கம் பிரதான இடத்தைப் பெற்றது. 

1993ல் ஆப்ரிக்க நாடான சைர் (Zaire) பணமதிப்பு நீக்கத்தை அறிவித்து, பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது. சர்வாதிகார ஆட்சியாளர் மபுடு சேசே செகோ (Mobutu Sese Seko) இதனால் பெரும் பிரச்னைகளுக்கு ஆளானார். தொடர்ந்த பொருளாதார சிக்கல்களால் 1998ல் செகோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். பணமதிப்பு நீக்கத்தை சரியான தொலைநோக்கோடு பயன்படுத்தி, நல்ல பலன்களைப் பெற்ற நாடு ஆஸ்திரேலியா. தனது பழைய காகித நோட்டுகளுக்கு பதிலாக புதிய பாலிமர் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்காக 1996ல் ஆஸ்திரேலிய அரசாங்கம் பணமதிப்பிழப்பைக் கொண்டுவந்தது. இதனால் சிறிது காலத்துக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், கள்ளப்பணம் அச்சடிக்க முடியாத, எளிதில் கிழியாத பாலிமர் நோட்டுகளின் பலன் அற்புதமாக இருந்தது. கள்ளப்பணம் இல்லாத நாடு - என்ற பெயரால், பல தோழமை நாடுகள் ஆஸ்திரேலிய வர்த்தக உறவுகளை வலுப்படுத்தின. மேலும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் மதிப்புக்கும் எண்ணிக்கைக்கும் இணையான பாலிமர் நோட்டுகளைத் துல்லியமாகத் திட்டமிட்டு புழக்கத்தில் விட்டதால் எந்த நீண்டகால பாதிப்புக்கும் ஆஸ்திரேலியா ஆளாகவில்லை. 

2002 ஜனவரியில் உலகின் மிகப்பெரிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஐரோப்பாவின் 12 நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டன. அப்போது புதிய யூரோ நாணயங்கள் மற்றும் பணத் தாள்களுக்காக யூரோ வெளியீட்டில் உள்ள 12 நாடுகளின் நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டன. 2,18,000 வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமும் 28 லட்சம் மையங்கள் மூலமும் இந்த அற்புதத்தை திட்டமிட்டு நிகழ்த்திக் காட்டின ஐரோப்பிய நாடுகள். முன்னதாக 1998ன் மத்தியில் இருந்தே இதுபற்றி தங்கள் மக்களுக்கு ஐரோப்பிய நாடுகள் விளக்கிவந்ததால் பெரிய பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை.

2010ல் வடகொரியாவில் இரண்டாம் கிம் ஜாங்கின் ஆட்சியில் பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டது. கருப்பு சந்தையை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் முடிவில் தேசப் பொருளாதாரத்தை ஒழித்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயர மக்கள் பணவீக்கத்தின் பாதிப்புகளுக்கு ஆளானார்கள். நிதித்துறையின் திடீர் ஆய்வில் தோன்றிய இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கு நடந்த ஒரே நிகழ்வு நிதியமைச்சரின் படுகொலைதான்.

2015ல் ஜிம்பாப்வே அரசு தொடர்ந்து அதிகரித்து வந்த பணவீக்கத்தைத் தடுக்க வேறு வழியில்லை என்று கூறி, புதிய மதிப்பிலான பணத்தாள்களுக்காக பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. சரியான திட்டமிடுதல்கள் இல்லாமல் அவசரமாக அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பு நீக்கம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜிம்பாப்வேயின் ஏற்றுமதித்துறை இதனால் மண்போட்டு மூடப்பட்டதுதான் மிச்சம். ஏற்கனவே பணவீக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் திட்டமிடப்படாத இந்த நடவடிக்கையால் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

2016 நவம்பரில் இந்தியா பணமதிப்பு நீக்கத்தைக் கொண்டு வந்ததைக் கண்ட பின்னும் திருந்தாமல், 2016 டிசம்பரில் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தநாடு வெனிசுலா. பணவீக்கம் 425% அதிகரித்த காரணத்தால் ’மாபியா கும்பல்களும் கடத்தல் கும்பல்களும் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவருகிறேன்’ - என பணமதிப்பு நீக்கம் அறிவித்த அந்நாட்டு அதிபர் மதுரோ, நாட்டின் உயர்மதிப்பு பணத்தாளான ‘100 பொலீவர்’ நோட்டுகள் செல்லாது என அறிவித்து, அவற்றை மாற்றிக் கொள்ள 72 மணிநேரக் கெடுவும் கொடுத்தார். ஏற்கனவே பொருளாதார நெருக்கடிநிலை பிரகடன்படுத்தப்பட்ட நிலையிலும் அங்கு மக்கள் கொதித்து எழுந்தனர். சாலைகள் மறிக்கப்பட்டன, வங்கிகள், கடைகள், ஏடிஎம்கள் உடைக்கப்பட்டன. பழைய நோட்டுகளுக்கான காலக்கெடுவை நீட்டித்து தனது தோல்வியை ஏற்றார் மதுரோ.

மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் நமக்கு சொல்லும் செய்திகள் எளிமையானவை,
1.பணமதிப்பு நீக்கம் ஒன்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் சஞ்சீவி மருந்து இல்லை.
2.சரியாக திட்டமிடப்படாத பணமதிப்பு நீக்கம் ஒரு பொருளாதார தற்கொலை..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com