AIADMKs Next Move After TVK decline on alliance talk
Edappadi palaniswamipt web

PT Analysis| ரெட் சிக்னல் கொடுத்த தவெக.. உடைந்துபோனதா அதிமுக கூட்டணி கணக்கு? பலம் அறிவாரா பழனிசாமி?

அதிமுகவின் கூட்டங்களில் தவெக கொடி பறந்ததும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியே இது கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என்று கூறியதும் அரங்கேறியது. அதிமுக அமைச்சர்களும் வரிந்து கட்டிக் கொண்டு தவெகவை கூட்டணிக்கு அழைத்தனர்.
Published on
Summary

அதிமுக கூட்டணியில் தவெக இணைவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. நிர்மல் குமார் பேச்சு அதிமுகவின் கூட்டணி கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இபிஎஸ்-க்கு கட்சியின் பலத்தை முழுமையாக பயன்படுத்தி, சரியான கூட்டணியை அமைப்பது முக்கியம். 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கான சவால்கள் அதிகம்.

கடந்த சில தினங்களாக அதிமுக கூட்டணியில் தவெகவும் இணையப்போகிறது என்கிற தொணியில் அதிமுகவினர் பேசி வந்த நிலையில், இன்று தவெகவின் நிர்மல் குமாரின் பேச்சு அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் அமைந்துவிட்டது. இந்த இடத்தில்தான் அதிமுக அடுத்து என்ன செய்யப்போகிறது? தன் பலத்தை அதிமுக உணராமல் பேசுகிறதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது. பழனிசாமியின் பலம் என்ன? கூட்டணி விவகாரத்தில் அதிமுக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூட்டணிக் கணக்கு - அதிமுகவுக்கு நெருக்கடியா?

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலானது மற்ற எல்லா கட்சிகளைக் காட்டிலும் அதிமுகவுக்கும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும்தான் அதிக அழுத்தம் கொண்டது. இதே நெருக்கடி கடந்த 2021 தேர்தலின்போது திமுகவுக்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இருந்தது. அந்த அக்னி பரீட்சையை திமுகவும், மு.க.ஸ்டாலினும் வெற்றிகரமாக கடந்தார்கள். கட்சியின் கட்டமைப்பையும் கூட்டணியின் பலத்தையும் சரியாக பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் அதனை செய்து முடித்தார்.

eps, stalin
eps, stalinx page

திமுகவுக்கு இணையான கட்டமைப்பு பலத்தைக் கொண்டது அதிமுக. தற்போது பழனிசாமிக்கு இருக்கும் சவால் அதிமுகவின் கட்டமைப்பு பலத்தை தனக்கு சாதகமாக, முழுமையாக பயன்படுத்துவது. மற்றொன்று, சரியான கூட்டணியை அமைப்பது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அரசியல் ஆளுமையாக பழனிசாமி இன்னும் முழுமை பெறாத நிலையில், மீதமுள்ள விஷயங்களில் முழுக் கவனம் செலுத்தி வெற்றிக் கோட்டையைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் பழனிசாமிக்கு உள்ளது.

கூட்டணிதான் தற்போது அதிமுகவுக்கு சவாலான விஷயமாக மாறியுள்ளது. தவெக, அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற தொணியில் அதிமுகவினர் பேசிவந்த நிலையில் தற்போது தவெகவின் நிர்மல் குமாரின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது அதிமுகவின் கூட்டணி கணக்கிற்கு விழுந்த அடியாக பார்க்கப்படுகிறது.

AIADMKs Next Move After TVK decline on alliance talk
நிதிஷ்குமாருக்கு முடிவுரை எழுதும் பாஜக.. என்னவாகும் நிதிஷின் அரசியல் எதிர்காலம்?

சோதனையில் தாக்குப்பிடித்த இபிஎஸ்!

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நடைபெறும் இரண்டாவது சட்டமன்ற தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சியில் எவ்வளவோ பிரச்னைகள் இருந்தபோதும் மீதமிருந்த 4 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தார் பழனிசாமி. அடுத்துவந்த 2021 தேர்தலில் தோல்வியை தழுவினாலும் 66 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக முன்னிலை பெற்றது அதிமுக. ஏனெனில், அவ்வளவு மோசமான வெற்றி அல்ல, அதிமுக பெற்றது.

2021 தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பாஜக வந்த பிறகு 50 - 60 இடங்கள் வேண்டும் என்ற தொணியில் பாஜக பேசிவந்தது. ஆனால், எல்லா நெருக்கடிகளையும் சமாளித்து வெறும் 20 இடங்களை மட்டுமே ஒதுக்கினார் இபிஎஸ். அதேபோல், பாமகவுக்கு 23 இடங்கள் மட்டுமே ஒதுக்கினார். இது பழனிசாமியின் தன்மையை பறைசாற்றியது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

உட்கட்சி பிரச்னையில் தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் தொடங்கி தற்போது செங்கோட்டையன் வரை பலரையும் கட்சி இழந்துள்ள நிலையிலும் கட்சியை தன்வசப்படுத்தி தேர்தல் பணியாற்ற வைக்க எல்லா கட்சிக்கும் முன்பாக களத்திற்கு சென்று முழுவீச்சில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் பழனிசாமி. சற்றே தயக்கத்தில் இருக்கும் கட்சியின் நிர்வாகிகளையும் தனக்கு சாதமாக மாற்றவும் முனைப்பு காட்டி வருகிறார். அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக சுற்றி சுழன்றால் அதிமுக நிர்வாகிகளை முழுமையாக ஆர்வமுடன் பணியாற்ற வைப்பதில் பழனிசாமி வெற்றிபெற்று விடுவார். ஏனெனில், மாவட்ட நிர்வாகிகள் முதல் பூத் கமிட்டி நிர்வாகிகள் வரை முழு வீச்சில் பணியாற்றினால்தான் தேர்தல் வெற்றிகளை ருசிக்க முடியும்.

AIADMKs Next Move After TVK decline on alliance talk
தடுப்பூசியால் ஆட்டிசம் பாதிப்பா? ஸ்ரீதர் வேம்புவின் சர்ச்சைப் பதிவு... விசிக வன்னியரசு விமர்சனம் !

கூட்டணி நேற்றும் இன்றும் - பழனிசாமி காய்நகர்த்தல்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் பழனிசாமி. அதிமுக நேரடியாக 179 இடங்களில் போட்டியிட்ட போதும் மற்ற உதிரி கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து அதிமுகவின் எண்ணிக்கையை 191 ஆக உயர்த்தினார். இது திமுகவைவிட அதிகம். திமுகவே மொத்தம் 188 இடங்களில்தான் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக உடனான கூட்டணி முறிந்தது. அடுத்து வந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதானமாக தேமுதிகவுடன் மட்டுமே கூட்டணி வைத்து போட்டியிட்டது அதிமுக. பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தது. தற்போது, 2026 தேர்தலையொட்டி தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாஜகவும் தமாகாவும் மட்டுமே பிரதான கட்சிகளாக இடம்பெற்றுள்ளன. கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் இன்னும் அதிமுகவுக்கு பிடிகொடுக்காமல் இருந்து வருகின்றன.

இத்தகைய சூழலில்தான், திமுகவை வீழ்த்த அடுத்த கூட்டணி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது அதிமுக. ஆனால், அதிமுக கையிலெடுத்துள்ள அந்த ஆயுதமே அதற்கு எதிராக மாறி நிற்கிறது. ஆம், அரசியல் எதிரியாக திமுகவையும், சித்தாந்த எதிரியாக பாஜகவையும் அறிவித்துதான் தவெக தொடங்கப்பட்டது. அத்துடன் தன் தலைமையில்தான் கூட்டணி என்றும் அறிவித்து இருந்தது. இப்படி இருக்கையில் தவெகவுக்கு அதிமுக விடுக்கும் அழைப்பு என்பது மிகவும் அரிதான வாய்ப்பு உள்ள ஒன்று. அதுவும் முதல் தேர்தலிலேயே தன்னைவிட அதிக பலம் வாய்ந்த ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்க தவெக எப்படி முற்படும் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. கரூர் துயர சம்பவத்திற்கு முன்புகூட ஒரு ஹேசியமாகத்தான் இது இருந்தது. ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு வெளிப்படையாகவே அதிமுகவினர் அழைப்பு விடுக்கும் நிலை உருவானது. 41 உயிர்கள் பறிபோனது தவெகவுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் கூட்டணி அழைப்பு என்பது எடுபடக் கூடும் என்று அதிமுக கணக்கு போட்டிருக்கலாம்.

அந்த வகையில்தான், அதிமுகவின் கூட்டங்களில் தவெக கொடி பறந்ததும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியே இது கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என்று கூறியதும் அரங்கேறியது. அவரோடு நின்றிருந்தால் பரவாயில்லை, அதிமுக அமைச்சர்களும் வரிந்து கட்டிக்கொண்டு தவெகவை கூட்டணிக்கு அழைத்தனர். கிட்டதட்ட திமுகவை காட்டி தவெகவுக்கு கூட்டணிக்கு வர அழுத்தம் கொடுப்பதுபோலவே இருந்தது.

AIADMKs Next Move After TVK decline on alliance talk
’சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரம் | ’உழைத்து எழுதியது’ - இயக்குநர் அருண் பிரபு விளக்கம்!

கூட்டணி கணக்கில் கோட்டை விடுகிறதா அதிமுக?

கடந்த சில வாரங்களாகவே அதிமுக உருவாக்கி வந்த கருத்துகளை ஒரே வார்த்தையில் உடைத்துவிட்டது தவெக. இந்தச் சூழலில் நேற்று காலை நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் அக்கட்சியின் இணைச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தவெக நிர்மல் குமார்
தவெக நிர்மல் குமார்pt web

ஒரு மாதத்திற்கு முன் தவெக என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ, அதன்படியேதான் தற்போதும் இருப்பதாக அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் நிர்மல்குமார். தவெக தரப்பில் இருந்து தற்போது வந்துள்ள பதிலானது, அதிமுகவின் கூட்டணி கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இது அதிமுகவிற்கு பின்னடைவாகவே பார்க்கப்படும். அத்துடன், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் ஒருவித சோர்வைக்கூட ஏற்படுத்தும். கூட்டணி கணக்கில் அதிமுக தற்போது கோட்டைவிட்டுள்ளதாகவே தெரிகிறது.

இந்த விவகாரத்தில் அதிமுகவின் அணுகுமுறை விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு இணையாக பலம் வாய்ந்த கட்சியாக இருப்பது அதிமுகதான். ஆனால், தவெக உடன் கூட்டணிக்காக மிகவும் இறங்கி வந்தது சரியான அணுகுமுறை இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

AIADMKs Next Move After TVK decline on alliance talk
பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டம்.. உள்ளுக்குள்ளேயே கிளம்பிய கடும் எதிர்ப்பு.. பின்வாங்கிய கேரள அரசு!

என்ன செய்ய வேண்டும் அதிமுக?

சாத்தியக்கூறு மிகவும் குறைவாக உள்ள தவெகவை விடுத்து ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணியில் இடம்பெறச் செய்து முழுவீச்சில் திமுகவை எதிர்த்தால் நிச்சயம் அதிமுகவுக்கு பலன் கிடைக்கும். ஏனெனில், அதிமுகவுக்கு கீழ் தவெக வருவதற்கு தயங்கும், அத்துடன் பாஜக வெளியேறாமல் நிச்சயம் அந்தக் கூட்டணியில் தவெக இடம்பெறாது. இப்படி பல விஷயங்கள் அதில் இருக்கிறது. அதிமுக வெற்றி பெற தவெக உழைப்பதற்கு வாய்ப்பில்லை. தங்கள் கட்சி தலைமைக்கு வரும் என்ற கனவில்தான் அக்கட்சியினரும் இருந்து வருகிறார்கள். ஆனால் தவெக வராமல் போவது நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக அதிமுகவுக்கு சிக்கலை உண்டாக்கும். ஆம், தவெக தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதை தாண்டியும் திமுக எதிர்ப்பு வாக்குகள் பெரிய அளவில் சிதைந்துவிடக் கூடாது என்பதில் அதிமுக கவனமாக இருப்பது சரிதான். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி அதிமுக தன் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். 2021 தேர்தலில் அதிமுக எவ்வளவு கெத்தாக இருந்ததோ அதே பாணியில் நடந்துகொண்டால்தான் அதனால் வலிமையாக பேரம் பேச முடியும்.

pt web

ஆளும் கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்துவது தற்போது மிகவும் சவாலான ஒன்றுதான். அதனால், கடந்த முறை 66 இடங்களை பிடித்திருந்த நிலையில் 80 - 90 இடங்களை தனித்து பிடித்துவிட்டாலே பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படும். அதனால், முடிந்த அளவிற்கு கட்சியினரை ஒருங்கிணைத்து, முடிந்தவரை கூட்டணியை கட்டி அமைத்து மற்றபடி களத்தில் எதிரில் உள்ள அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் எதிர்த்து களமாடுவதுதான் அதிமுகவிற்கு பலனை கொடுக்கும். பழனிசாமி தன் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை கடந்த காலங்களில் அவர் பல முறை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், தன் மீது அவர் வைத்திருக்கும் அதே நம்பிக்கையை அதிமுக எனும் ஆலமரத்தின் மீது வைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலின் வாக்குச் சதவீத கணக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதனால், சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக முழுவீச்சில் அரசியல் செய்வதே பழனிசாமி முன் இருக்கும் பெரிய பணி. திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்பதை மக்கள் மன்றத்தில் அவர் நிலைநாட்டிவிட்டால் நிச்சயம் அதன் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com