’சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரம் | ’உழைத்து எழுதியது’ - இயக்குநர் அருண் பிரபு விளக்கம்!
’சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரம் தொடர்பாக, இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான படம் `சக்தித் திருமகன்'. இந்தப் படம் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது. சமூகத்தில் இருக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இருந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் கதை தன்னுடைய கதை என சுபாஷ் சுந்தர் என்பவர் பதிவிட்டிருக்கிறார். இது பற்றி எழுதி இருந்த அவர், இக்கதையில் மாதவனை வில்லனாக மனதில் வைத்து 3 வருடங்களுக்கு முன் எழுதியதாகவும், Dream warriorsக்கு அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அருண் பிரபுவின் முதல் படம் ’அருவி’யை தயாரித்தது Dream warriorsதான் என்பதால் அவரது கதை அங்கிருந்து சென்றிருக்கக் கூடும் என சந்தேகித்துள்ளார். மேலும், அவர் எழுதிய கதை பக்கங்களின் சில இணைப்புகளையும் இணைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், ”சும்மா விடுவதாக இல்லை, சின்ன சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி? கதையை copy rights of indiavil register செய்து வைத்துள்ளேன். டாக்குமென்ட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கிறது, வருடம் 2022. தொடர்பான படங்களை பதிவிட்டுளேன். கேஸ் போடுவதாகவும் உள்ளேன். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள், ஒருவரைப் போல் ஒருவர் இவ்வளவு பொருத்தங்களுடன் சிந்திக்க முடியாது, அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்து பதிவு செய்பவருக்கே உரிமை. ஒழுக்கத்தை, நேர்மையை போதிப்பதாக படம் இருப்பதைப்போல அதை எடுப்பவர்களும் இருந்தால் நன்று" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது, தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக `சக்தித் திருமகன்' பட இயக்குநர் அருண் பிரபு பதிலளித்துள்ளார். அவர் தனது வெளியிட்டுள்ள இன்ஸ்ட்டா பதிவில் "மிகவும் தவறான அவதூறு. சொந்த உழைப்பில் பல வருடங்கள் உழைத்து எழுதியது. நன்றி வணக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

