அஜித் மட்டுமல்ல... இவரும் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவரே! - விஜய் ஆண்டனியின் கதை

அஜித் மட்டுமல்ல... இவரும் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவரே! - விஜய் ஆண்டனியின் கதை
அஜித் மட்டுமல்ல... இவரும் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவரே! - விஜய் ஆண்டனியின் கதை

'மாக்கயலா', 'நாக்கு முக்க' என்ற வார்த்தைகளை கேட்ட மக்களுக்கு அது மிகவும் புதிதாக இருந்தது. அர்த்தம் புரியவில்லை என்றாலும் கூட பிடித்திருந்தது. கொண்டாடித் தீர்த்தார்கள். இறுதியில் 'யாருயா இது புதுசா இருக்கே' என மக்கள் தேடிய பெயர்தான் விஜய் ஆண்டனி. ஒருபுறம் குத்துப் பாடல்களைப்போட்டு ஏறி ஆடவும் வைப்பார். மறுபுறம் 'அழகாய் பூக்குதே' என உருகவும் வைப்பார். 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல்களைப்போல உத்வேகம் கொடுக்கவும் செய்வார். பெரிய அளவில் கவனிக்க மறந்த ஒரு இசையமைப்பாளனின் இசைப் பயணத்தையும், திரைப் பயணத்தையும் பற்றி பார்ப்போம்.

பிரபல நாவல் ஆசிரியர், கர்நாடக இசை ஆர்வலர் என அறியப்படும் மாயவரம் சாமுவேல் வேதநாயகம் பிள்ளையின் குடும்பப் பின்புலத்தைச் சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சி. விஜய் ஆண்டனி 7 வயது ஆனபோது அவரின் தந்தை எதிர்பாராத விதமாக தவறிவிடுகிறார். மொத்தக் குடும்பம் நிலைகுலைந்து நின்ற நிலையில், தந்தையின் அரசு வேலை, தாய்க்கு கிடைக்கிறது. ஆனால், அதுவரை வாழ்ந்துவந்த திருச்சியில் இல்லை பணி. திருநெல்வேலியில் வேலை கிடைக்க, 7 வயது சிறுவனாக இருந்த விஜய் ஆண்டனியையம் அவரின் 5 வயது தங்கையையும் அழைத்துக்கொண்டு அங்கு இடம்பெயர்கிறார் அவரின் தாய். திருநெல்வேலி, தமிழக வரலாற்றில் எப்படி மறக்கமுடியாத ஒரு நகரமோ, அதேதான் விஜய் ஆண்டனிக்கும். பள்ளிப் படிப்பும் முழுவதும் அங்கேதான் முடித்தார்.

விஜய்யின் இசை ஆர்வம் அங்கேதான் தொடங்கியது. பள்ளி படிக்கும் வயதில் சீனியர் மாணவர்கள் தாங்கள் நடத்தும் போராட்டங்களில் விஜய் ஆண்டனியை அழைப்பது வழக்கம். எதற்காக என்றால், கோஷம் எழுப்பவதற்காக. உரத்த குரல் காரணமாக போராட்டங்களில் முன்னின்று கோஷம் பாட, நாளடைவில் கானா பாடல் வரை சென்றது. பள்ளியில் பெஞ்சில் தாளம் போட்டுகொண்டு பாட்டு பாட, அதுவே அவரை பள்ளியில் பிரபலமாக்கியது. அந்த வயசுக்கேற்ற ஆசையில் பாடல்களை பாடி பள்ளியில் வலம்வந்தவர் அவராக புதிய மெட்டுக்களை, வரிகளை போட்டு பாடத் தொடங்கினார். இது அவரை பள்ளியில் தனித்து காண்பிக்க அதற்காகவே புதுமெட்டுகள் அமைப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். பள்ளியில் படிக்கும்போதே எந்தவித இசையும் கற்காமல் 300 மெட்டுக்கள் வரை இசையமைத்த விஜய், பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த தருணம் அது.

பக்தி ஆல்பங்களுக்கு இசையமைக்கும் யோசனை வருகிறது. திருச்சி கல்லூரியில் படித்ததால் அங்கிருக்கும் ஸ்டூடியோ ஒன்றில் வாய்ப்பு கேட்டு செல்கிறார். தான் மெட்டமைத்த பாட்டுக்களை காண்பித்து வாய்ப்பு கேட்டவரிடம் ஸ்டூடியோ ஆட்கள் கேட்ட கேள்வி, 'எந்த கருவி இசைக்க தெரியும்' என்பதே. முறையாக எந்த இசையையும் கற்காத காரணத்தால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ஸ்டூடியோவில் அவர்கள் கேட்ட கேள்வி மனதை உறுத்த, 18 வயதில் முறைப்படி இசை கற்க ஆரம்பிக்கிறார். முதலில் வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்த 2-வது மாதத்தில் விபத்தில் கையில் அடி. பின்னர் டிரம்ஸ் கற்றுக்கொள்ளும்போது அந்த ஆசிரியரே ஊரை காலி செய்து போய்விடுகிறார். இப்படி போகிற இடங்களிலெல்லாம் பல தடைகளை கடந்து இசையை முறையாக கற்றுக்கொள்கிறார்.

இசை மீது இருந்த ஆர்வம் அவரின் படிப்பில் கவனத்தைக் குறைக்கிறது. 30 பாடங்களில் 24 அரியர்கள் உடன் கல்லூரிப் படிப்பை முடித்தபோது சென்னை சென்று இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசை வர, தன் தாயிடம் சென்று அனுமதி கேட்கிறார். மகனை அரசு அதிகாரியாக ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த தாய்க்கு விஜய் ஆண்டனியின் ஆசை பயத்தை கொடுத்தது. அந்தப் பயம் சென்னைக்கு அனுப்ப அனுமதி மறுக்கும் அளவுக்கு சென்றது. தாயை சமாளிக்க வேறுவழியை தேர்ந்தெடுத்தார் விஜய். சென்னையில் படிக்கப்போவதாக சொல்லி, சமாதானம் செய்து, லயோலா விஸ்காம் படிப்பில் சேர்கிறார். எதிர்பார்த்தது போலவே சென்னை அவரை வாழ்க்கையை மாற்றியது.

லயோலாவில் படிக்கும்போதே நண்பர் மூலமாக சவுண்ட் இஞ்சினீயராக பணியாற்றும் வாய்ப்பு வருகிறது. தான் எதிர்பார்த்திருந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, பார்ட் டைமாக வேலை பார்த்துக்கொண்டே இசை குறித்த தொழில்நுட்ப நுணுக்கங்களை கற்றுக்கொள்கிறார். கல்லூரி 3 மணிக்கு முடிந்தபின், நள்ளிரவு வரை ஸ்டூடியோவே கதி என இருந்து பணியாற்றிய அவருக்கு இசை வாழ்க்கையில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது சவுண்ட் இஞ்சினீயர் பணிதான்.

இந்த வேலையில் கிடைக்கும் மாதம் 600 ரூபாய் சம்பளத்தை கொண்டு தனக்கு தேவையான இசைக்கருவிகளை வாங்கி வீட்டையே மினி ஸ்டூடியோவாக மாற்றிக்கொள்கிறார். ஒருகட்டத்தில் வீட்டில் இருந்தே சின்ன சின்னதாக கம்போஸிங் செய்ய தொடங்கியவர், தனது இசையமைப்பாளர் கனவை நோக்கி பயணத்தை ஆரம்பித்தார். திரைப்பட இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் சந்தித்து வாய்ப்பு தேடிய விஜய்க்கு அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நிறைய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரை தவிர்த்துள்ளனர்.

என்றாலும் தனது முயற்சியை கைவிடவில்லை. எல்லா சினிமா கம்பெனிகளுக்கும் ஏறி, இறங்கியவர் ஒருநாள் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சினிமா கம்பெனிக்கு செல்கிறார். அங்கே ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சகோதரரை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது, மறுநாள் வர சொல்லியிருக்கிறார்கள். வாய்ப்பு தேடிச் செல்லும்போது மற்றவர்கள் போல் கேசட் கொண்டு போகும், பழக்கம் அவரிடம் இல்லை. மாறாக கையோடு ஹெட்போன், வாக்மேன் சகிதமாக செல்லும் விஜய், அன்று ஆஸ்கர் நிறுவனத்தில் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் தனக்காக ஒதுக்கும்படி கேட்டு தனது பாடலை அங்கேயே கேட்க வைக்கிறார். இப்படித்தான் முதல் வாய்ப்பு கிடைக்கிறது. 'டிஷ்யூம்' படம்தான் முதல் வாய்ப்பாக வருகிறது.

அதேசமயத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் 'சுக்ரன்' படம் வாய்ப்பும் வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருட காத்திருப்பு அந்த இரண்டு படங்கள் கிடைத்ததன் வழியாக முடிவுக்கு வருகிறது. இரண்டு படமும் வெளியாகி பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், யுவன்சங்கர் ராஜா என ஜாம்பவான்கள் கோலோச்சி கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஒரு எனெர்ஜிடிக் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்து, அடுத்தடுத்து துள்ளல் பாடல்களால் கவனம் ஈர்க்கத் தொடங்கினார். 'நான் அவனில்லை', 'நினைத்தாலே இனிக்கும்' படங்களில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.

மற்ற இசையமைப்பாளர்களின் எந்த சாயலும் இல்லாமல் தனித்துவ இசையை வழங்குவதில் கில்லாடியான விஜய் ஆண்டனி 'காதலில் விழுந்தேன்' படத்திற்காக இசையமைத்த 'நாக்க முக்கா' கேன்ஸ், உலகக் கோப்பை கிரிக்கெட் என சர்வதேச அரங்குகள் வரை அவரை கொண்டு சேர்ந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்த விஜய் ஆண்டனி, படத்தின் ஆல்பம் அனைத்தையும் ஹிட் கொடுக்க தெரிந்த வித்தகர்.

இசையமைப்பாளராக தொடங்கிய சில ஆண்டுகளிலேயே நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். 2012-ல் 'நான்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவருக்கு முதன்முதலில் இசையமைப்பாளராக வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சசியின் `பிச்சைக்காரன்' படம் புதிய அவதாரத்தை கொடுத்தது. சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்', 'சைத்தான்', 'எமன்', 'அண்ணாதுரை', 'காளி', 'திமிரு பிடிச்சவன்', `கொலைகாரன்', இதோ இப்போது `கோடியில் ஒருவன்' என தற்போது இசையமைப்பதை குறைத்துக்கொண்டு நடிப்பதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது வெளியாகியுள்ள அவரின் `கோடியில் ஒருவன்' கொரோனாவால் சிக்கித் தவித்த தமிழ் சினிமாவுக்கு புதுத் தெம்பை கொடுத்திருக்கிறது. ஆனால், இந்தப் படத்தை விமர்சிப்பவர்கள் வைக்கும் கூற்று, விஜய் ஆண்டனியின் நடிப்பைதான். இப்போது மட்டுமல்ல, பொதுவாக விஜய் ஆண்டனி படங்களை விமர்சிப்பவர்கள் பலரும், அவரது நடிப்பாற்றலை குறைகூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரே மாதிரியான முக பாவனை, ஒரே மாதிரியான உடல்மொழிகளுடன் நடிக்கிறார் என்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

ஆனால், இந்த விமர்சனங்களைத் தாண்டி கொண்டாடப்பட வேண்டியவர் விஜய் ஆண்டனி. அவர் நடித்த படங்களைப் பார்க்கும்போது, கதையின் ஓட்டத்தில் அவரது நடிப்பு எந்த விதத்திலும் துருத்திக்கொண்டு இருப்பதை உணர முடியாது. தன் இயல்பு ஏற்ப கதைகளையும் கதாபாத்திரங்களையும் அவர் தேர்வு செய்வதை கவனிக்கலாம்.

தனக்கு வராது, செட் ஆகாது என்ற எந்த விஷயங்களையும் தன்னம்பிக்கை இல்லாமல் இதுவரை அவர் அணுகியதில்லை. எந்த விஷயத்தில், எந்த துறையில் கால் வைத்தாலும் அதை முழுமையாக கற்றுக்கொண்டே முன்னேறிவந்துள்ளார். சிறுவயதில் இசை ஆர்வமே இல்லாமல் இசையமைப்பாளராக மாற கடின உழைப்பால் அனைத்தும் கற்றுக்கொண்டவர். எந்தப் பின்புலமும் இல்லாமல் விடா முயற்சியின் பலனாக வாய்ப்புகளை தேடிப் பிடித்தவர். நடிகர் அஜித் போல தமிழ்த் திரையுலகில் இவரும் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர்தான். விஜய் ஆண்டனியின் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், புதிய முயற்சிகளும் இன்னும் குறையவில்லை.

சினிமாவில் நாயகன் என்ற நிலைக்குச் சென்ற பிறகும், தமிழைத் தாண்டில் தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட் உருவான பிறகும், புதிய முயற்சிகளை செய்து வருகிறார். நடிப்பு, இசையை தாண்டி 'அண்ணாதுரை', 'திமிரு புடிச்சவன்', `கோடியில் ஒருவன்' படங்களுக்கு படத்தொகுப்பும் இவரேதான். இப்போது இயக்குநர் என்ற அவதாரமும் எடுக்கவிருக்கிறார். தனது சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த `பிச்சைக்காரன்' படத்தின் அடுத்த பாகத்தில் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அனைத்தும் அவரே.

சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாமல் இந்த நிலைக்கு வந்ததன் பின்னணி காரணமாக தனது பல படங்களிலும் இயக்குநர் தொடங்கி டெக்னீஷியன்ஸ் வரை பல புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுபோன்ற செயல்களே அவரை தனித்து தெரியவைக்கிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com