47-வது நினைவு தினம்: காமராஜரை நினைவுகூறும் நினைவுத் துளிகள்

47-வது நினைவு தினம்: காமராஜரை நினைவுகூறும் நினைவுத் துளிகள்
47-வது நினைவு தினம்: காமராஜரை நினைவுகூறும் நினைவுத் துளிகள்
* விருதுநகரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, குமாரசுவாமி-சிவகாமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் காமராஜர்.
* பிறந்தவுடன் காமாட்சி என்ற பெயருடன் அழைக்கப்பட்டவர், பின்னர் காமராஜர் என மாற்றப்பட்டது.
* காமராஜர் தனது சிறு வயதிலே தந்தையை இழந்தார். ஆகையால் இவரது படிப்பு வெறும் ஆறாம் வகுப்போடு நின்றுபோனது.
* 1919ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டபோது காமராஜருக்கு வயது 16.
* காந்தியின் ஒத்துழமையாமை இயக்கத்தில் பங்கெடுத்தபோது வயது வெறும் 18 மட்டுமே.
* 1930 - இல் வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்தில் கலந்துக்கொண்டதற்காக, காமராஜர் முதன் முதலில் சிறைச்சாலை சென்றார்.
* தீவிர விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய காமராஜர், ஒத்துழையாமை இயக்கம் முதல் அடுத்தடுத்த போராட்டங்களில் பங்கேற்று, 6 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
* காங்கிரஸ் கட்சியில் காமராஜர் சேர்ந்த 2 ஆண்டுகளில் சுதந்திர இந்தியா இயக்கத்தை முன்னெடுக்கும் நோக்குடன் மதுரை வந்த காந்தியை காமராஜர் சந்தித்தார்.
* 1922-இல் சாத்தூர் தாலுகாவில் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக காமராஜர் தேர்வானார்.
* 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை என 9 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார்.
* ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை முடிவுக்கு கொண்டுவந்ததுதான் முதலமைச்சராக காமராஜரின் முதல் நடவடிக்கை.
* ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்தது, பல்வேறு அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டியது, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்க சீருடைகள் அதுவும் இலவசமாக, மதிய உணவுத்திட்டம் என இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக வார்த்தெடுக்க, சமரசமின்றி அவர் செயல்பட்ட விதம் இன்றளவும் பேசப்படும் அம்சம்.
* நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் நுழைந்தவர் காமராஜர். 1964-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார்.
* 1963ஆம் ஆண்டு காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜரின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார்.
* சோதனையான சூழலில் நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் என 3 முறை பிரதமர்களைத் தேர்வுசெய்த பெருமை இவருக்கு உண்டு. இதலனாலேயே ‘கிங்மேக்கர்’ என்று அவர் போற்றப்படுகிறார்.
* தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக விளங்கிய காமராஜர் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றைத் தாரக மந்திரமாகப் பின்பற்றினார்.
* 1967 தேர்தல் தோல்வி காரணமாகத் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட திமுக ஆட்சியை ஆறு மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டேன் என்று பெருந்தன்மையோடு அரசியல் நாகரிகத்தை அறிமுகப்படுத்தினார் காமராஜர்.
* 1971ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காமராஜர். உயிரிழக்கும் வரை இந்த தொகுதியின் எம்.பி ஆக அவர் இருந்தார்.
* வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாதவராகவே தனது ஆயுளை நிறைவு செய்தார் காமராஜர்.
* காந்திய நெறியில் வாழ்ந்த காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளான இன்றைய தினத்தில் மறைந்தார்.
* அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, காமராஜுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வை நடத்த உத்தரவிட்டார்.
* 1976ஆம் ஆண்டு, அவருக்கு குடிமக்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது அங்கீகாரம் ஆகிய துறைகளில் தனித்து விளங்கியதற்காக இறப்புக்கு பிந்தைய அங்கீகாரமாக பாரத ரத்னா விருதை காமராஜருக்கு தருமாறு அப்போதைய குடியரசு தலைவருக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பரிந்துரை செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com