#பேசாதபேச்செல்லாம் - 6: உடலுறவு மனநிம்மதியை தரும் என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை?

#பேசாதபேச்செல்லாம் - 6: உடலுறவு மனநிம்மதியை தரும் என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை?
#பேசாதபேச்செல்லாம் - 6: உடலுறவு மனநிம்மதியை தரும் என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை?

’Sex is a stress buster’ என்று ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக ஒருவர் அழுத்தத்தில் இருக்கும்போது, அவர்களுடைய இணை உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டால், எனக்கு இப்போது அதில் நாட்டமில்லை என்று கூறி அதனை தவிர்த்துவிடுவர். கடுமையான மன உளைச்சல் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு உடலுறவு வைத்துக்கொள்ள தோன்றாது. இருப்பினும் அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைத்து மன நிம்மதியை தரும் என்கிறார் உளவியலாளர் Dr.சுஜிதா. உடலுறவு கொண்டபிறகு ஒருவித நிம்மதியும், நல்ல தூக்கமும் வருவதற்கான காரணம் உறவின்போது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான் என்கிறார் அவர்.

உடலுறவு என்ற வார்த்தையை பொதுவெளியில் யாராவது சொல்லக்கேட்டாலே அதை ஏதோ ஒரு கெட்டவார்த்தையை கேட்டதுபோன்று பலரும் அணுகுகின்றனர். ஆனால் ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவை எவ்வளவு அவசியமோ அதேபோல குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு துணையும், முழுமையான உடலுறவும் அவசியம். உடலுறவு என்பது குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டுமல்ல; உடலுறவின்போது சுரக்கும் ஹார்மோன்களால் பல்வேறு நன்மைகளும் நிறைந்திருக்கிறது.

உடலுறவு என்ற எண்ணம் வரும்போதே அதற்கு தயாராகும் வகையில் ஒருவித திரவம் சுரக்கும். இந்த திரவம் தான் உடலுறவின்போது ஆண், பெண் இருவருக்கும் உச்சக்கட்டம் அடைவதற்கும், மன மகிழ்ச்சி அடையவும் முக்கிய காரணமாக இருக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று இதைப்பற்றி விளக்கியிருக்கிறது. உடலுறவு கொள்ளும்போது Amygdala,Hypothalamus, Nucleus Accumbens போன்ற மூளையிலுள்ள கிட்டத்தட்ட30 பகுதிகள் இயக்கத்தில் இருக்கின்றன. இதனால் உடலுறவின்போது ஒரு முழுமையான மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் அடையமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்சிடாசின் மற்றும் வாசோப்ரஸினின் சுரப்பில் உடலுறவு முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆக்சிடாசின் மன நிம்மதிக்கும், ரிலாக்சாக இருப்பதற்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது. வாசோப்ரஸினின் பொதுவான வேலை, ஒருவித கோபம், வெறுப்பு, வன்புணர்வை தூண்டக்கூடிய வேலையை செய்கிறது. உடலுறவின்போது இந்த வாசோப்ரஸின் ஹார்மோன் சுரப்பு குறைந்த அளவிலேயே இருக்கும். ஆக்சிடாசின் அதிகளவில் சுரக்கும். இதனால்தான் உடலுறவின்போது ஒருவித சந்தோஷமும், மன நிம்மதியும் உண்டாவதுடன் நேர்மறை உணர்வுகளும் மேலோங்குகிறது.

இதுதவிர உடலுறவின்போது எண்டாக்சின் என்ற திரவமும் சுரக்கிறது. இதுவும் மகிழ்ச்சியை தரக்கூடியதுதான். இதுமட்டுமல்லாமல் டோபோமைனும் மூளைக்கு ஒருவித சுறுசுறுப்பையும், ஆற்றலையும் தரும். இது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் ஒருவித நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. இதனால்தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் ஒரு நபர் தனது இணையுடன் உடலுறவு வைத்துக்கொள்ள நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர். எனவே பகல் முழுவதும் கடுமையான வேலை, உடலுழைப்பு, மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் போன்ற பிரச்னைகளை சந்திப்பவர்கள் இரவு நேரத்தில் தங்கள் இணையுடன் உடலுறவு கொள்ளும்போது மன நிம்மதி, மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல் நிம்மதியான தூக்கமும் வரும்.

#பேசாதபேச்செல்லாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com