மிரளவிட்ட நாசா ரோவர்.. அதிர்ந்துபோன விஞ்ஞானிகள்.. செவ்வாயில் 'ஷாக்' கண்டுபிடிப்பு!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
மனித இனத்தின் கற்பனைக்குக்கூட எட்டாத விண்வெளி, அவ்வப்போது நம்மை அதிரவைக்கும் தகவல்களை தந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் விஞ்ஞானிகளையே ஆச்சரியத்தில் மூழ்க்கடித்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. செவ்வாய்க்கிரகத்தில் ஆய்வு செய்து வரும் நாசாவின் Perseverance ரோவர், அங்குள்ள ஒரு பாறை மீது லேசர் கதிர்களைச் செலுத்தி ஆய்வு நடத்தியது. இதில் பூமியில் உள்ள ரத்தினக் கற்களுக்கு ஒப்பான கனிமங்கள் இருப்பதற்கான தடயங்களைக் கண்டுபிடித்துள்ளது. செவ்வாயின் ஜெஸிரோ பள்ளத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோவர், பாறையில் வழக்கத்திற்கு மாறாக, அதிக அளவில் சில கனிமங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. பூமியில் ரத்தினக் கற்களுடன் தொடர்புடைய இந்தக் கனிமங்கள், செவ்வாயில் இருக்கும் என எதிர்பார்க்கப்படாத பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதே விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், செவ்வாய்க் கிரகத்தில் இதுவரை கணிக்கப்பட்டதைவிட மிகவும் சிக்கலான புவியியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த புவியியல் வேதியியலாளர் ஆன் ஒலிலா தலைமையிலான குழு வெளியிட்ட ஆய்வுச் சுருக்கத்தில், ஜெஸிரோ பள்ளத்தின் விளிம்பில் சேகரிக்கப்பட்ட மூன்று பாறைகளில் குரோமியம் கலந்த குருந்தக்கல் இருப்பதற்கான தெளிவான தடயங்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கனிமங்கள், பல மில்லியன் அல்லது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாறைகளில் ஏற்பட்ட விரிசல்கள் வழியாக சூடான நீர் சென்றபோது உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பூமியிலும் இதுபோன்ற சூழ்நிலைகள் படிகங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் உருவாக உதவுகின்றன.
செவ்வாயில் இந்தக் கனிமங்கள் இருப்பது, அந்தக் கிரகத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் முக்கியப் பங்கு வகித்ததற்கான மேலும் ஒரு ஆதாரமாக இருக்கலாம். இதன்மூலம் செவ்வாயின் பழமையான சூழல், எரிமலைச் செயல்பாடுகள் மற்றும் அதன் மேற்பரப்புக்கு அடியில் நீர் சென்ற விதம் குறித்து அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். Perseverance ரோவர் தொடர்ந்து பாறை மாதிரிகளைச் சேகரித்து வருகிறது. அவை எதிர்காலத்தில் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு விரிவாக ஆய்வு செய்யப்படலாம். இந்த எதிர்பாராத கண்டுபிடிப்பு, செவ்வாய்க்கிரகத்தின் சாதாரணமாகத் தோன்றும் பாறைகளுக்குள்கூட பல ரகசியங்கள் மறைந்திருப்பதைக் காட்டுகிறது.

