புளூட்டோவில் உயிரினங்கள்..? உறைந்தவெளியில் புதிய ரகசியம்.. நாசா கண்டுபிடித்தது என்ன?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
திடீரென ஒரு நாள், "இனி புளூட்டோ ஒரு கிரகமே கிடையாது" என்றார்கள். பிறகு "புளூட்டோவில் நிலச்சரிவு தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன" என்றார்கள். இப்படி புளூட்டோ பற்றிய பரபரப்பு தகவல்களுக்கு எப்போதுமே பஞ்சமிருந்ததில்லை. அந்த வரிசையில் தற்போது புளூட்டோ மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவலை கொடுத்திருக்கிறது.
புளூட்டோவின் மேற்பரப்பில் சமீப காலத்தில் திரவ நைட்ரஜன் பாய்ந்ததற்கான புதிய ஆதாரங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 2015-ஆம் ஆண்டு நாசாவின் New Horizons விண்கலம் புளூட்டோவை நெருங்கிச் சென்றபோது சேகரிக்கப்பட்ட படங்களை மீண்டும் ஆய்வு செய்ததில், இந்த முக்கியத் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
புதிய ஆய்வின்படி, புளூட்டோவின் மிகப்பெரிய இதய வடிவ பனிப்பாறைப் பகுதியான Sputnik Planitia-வின் வடக்குப் பகுதியில் உள்ள விரிசல்கள் வழியாக, அடிப்பகுதியில் இருந்து திரவ நைட்ரஜன் மேலே எழுந்துள்ளது. மேலும், அது மேற்பரப்பை அடைந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புளூட்டோவில் சமீப காலத்தில் நீர்மம் பாய்ந்ததற்கான முதல் நேரடி ஆதாரம் இதுவே என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், New Horizons திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான ஆலன் ஸ்டெர்ன், "புளூட்டோ விஞ்ஞானிகளை தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு, சமீபகாலத்தில் நீர்ப் பொருட்கள் புளூட்டோவின் மேற்பரப்பை அடைந்திருக்கலாம் என்பதையும், அந்தக் கிரகத்தில் காலப்போக்கில் மாறிக்கொண்டிருக்கும் புதிய வகை நிலவியல் அமைப்புகள் இருக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Sputnik Planitia என்பது முழுவதும் உறைந்த நைட்ரஜனால் உருவான மிகப்பெரிய பனிப்பாறைப் பகுதி. இதன் பரப்பளவு அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் ஒக்லஹோமா மாநிலங்களின் மொத்த பரப்பளவையும்விட அதிகமாக உள்ளது. 2015-ஆம் ஆண்டு New Horizons விண்கலம் இந்தப் பகுதியைப் படம் பிடித்தபோது, நகரங்களின் அளவுக்குச் சமமான Geological Convection Cells அதாவது நிலவியல் சுழற்சி அமைப்புகள் வடக்குப் பகுதியில் காணப்பட்டன. அவற்றுக்கு இடையே மெல்லிய கருநிற கோடுகள் மற்றும் பரவலாகக் காணப்பட்ட கருநிற அடையாளங்களும் பதிவாகியிருந்தன. அவை கடந்த காலத்தில் அங்கு நீர்மம் பாய்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அப்போது ஏற்படுத்தின.
இந்நிலையில், ஜூலை 31-ஆம் தேதி The Planetary Science Journal இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு, அந்த கருநிற கோடுகள் மற்றும் அடையாளங்கள் அவ்வப்போது தற்காலிகமாக ஈரமடைவதாக கூறுகின்றன. மேலும், அதற்குக் காரணம் பனிப்பாறையின் அடிப்பகுதியில் இருந்து திரவ நைட்ரஜன் மேலே எழுந்து மேற்பரப்பை அடைவதுதான் என்றும் தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் புளூட்டோவை ஆய்வு செய்யும் கோளியல் விஞ்ஞானிகளுடன், பூமியில் உள்ள பனிப்பாறைகளை ஆய்வு செய்யும் பனியியல் நிபுணர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, Sputnik Planitia-வின் வடக்குப் பகுதியில் காணப்படும் மேற்பரப்பு அமைப்புகள், பூமியில் மழை பெய்தபிறகு அல்லது நிலத்தடியில் இருந்து திரவம் மேலே வந்த பிறகு ஈரமாக மாறும் பனிப்பாறைகளின் தோற்றத்தை மிகவும் ஒத்திருக்கின்றன. ஆனால், புளூட்டோவில் நிலவும் மிகக் குறைந்த வெப்பநிலையும் மெல்லிய வளிமண்டலமும் காரணமாக, அங்கு திரவ நைட்ரஜன் மழையாகப் பொழிவது இயற்பியல் ரீதியாக சாத்தியமற்ற ஒன்று.
எனவே, மேற்பரப்பில் காணப்படும் இந்த மாற்றங்களுக்கு ஒரே சாத்தியமான விளக்கம், பனிப்பாறையின் அடியில் இருந்த திரவ நைட்ரஜன் விரிசல்கள் வழியாக மேலே எழுந்து மேற்பரப்பை அடைந்திருக்க வேண்டும் என்பதுதான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய கண்டுபிடிப்பு, புளூட்டோ முற்றிலும் செயலற்ற உறைந்த உலகம் என்ற முந்தைய கருத்துக்கு சவால் விடுவதோடு, அந்தக் கிரகத்தில் இன்னும் செயலில் இருக்கும் புவியியல் மாற்றங்கள் நடைபெற்று வரக்கூடும் என்ற புதிய புரிதலையும் விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளது.
இறுதியாக இந்த ஆய்வு புளூட்டோவில் திரவ நைட்ரஜன் பாய்ந்ததற்கான ஆதாரத்தை மட்டுமே காட்டுகிறது. இது உயிர் இருப்பதை நிரூபிக்கவில்லை. ஆனால், புளூட்டோவின் புவியியல் செயல்பாடுகள் இன்னும் தொடர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

