
இந்தியாவின் மிக முக்கியமான யானைகள் ஆய்வாளர் அஜய் தேசாய் காலமானார்
பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆராய்ச்சியாளராக 1980களில் முதுமலைக் காடுகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் அஜய் தேசாய். யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி, அவற்றைப் பின் தொடர்ந்து, அவற்றின் மேய்ச்சல் பரப்பு, வேளாண் பயிர் மேய்தல் மற்றும் யானைகளின் சமூக வாழ்க்கை முதலான கூறுகளை ஆராய்ந்தறிந்தவர். யானைகளின் வாழிட அழிப்பு, காடுகள் துண்டாடப்படுதல் ஆகியவையே யானைகளின் விவசாய தோட்ட நுழைவிற்கு தலையாய காரணம் என்ற கூற்றை மீண்டும் மீண்டும் எடுத்து கூறியவர் இவர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் யானைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் IUCN யானைகள் நிபுணர் குழுவின் தலைவராகவும் இருந்தார். மசினங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட கேளிக்கை விடுதிகள் மற்றும் யானைகளின் வலசைதடங்களை ஆய்வு செய்ய நீதி மன்றம் அமைத்த குழுவில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்தவர் அஜய் தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது.