வைட்டமின் சி மாத்திரைகளால் ஆபத்தா? -என்ன சொல்கிறார் சரும மருத்துவர்..?

வைட்டமின் சி மாத்திரைகளால் ஆபத்தா? -என்ன சொல்கிறார் சரும மருத்துவர்..?
வைட்டமின் சி மாத்திரைகளால் ஆபத்தா? -என்ன சொல்கிறார் சரும மருத்துவர்..?

இப்போது யுடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எங்கு பார்த்தாலும் ஆளுக்கு ஒரு பியூட்டி டிப்ஸை அள்ளி வீசி இதை செய்தால் கலராகி விடலாம். இப்படி செய்தால் ஒல்லியாகி விடலாம் என தங்கள் கருத்துகளை பதிவிட்டுக் கொண்டு வருகின்றனர். அதிலும் இப்போது வைட்டமின் சி மாத்திரைகள் மருந்துக்கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதை வாங்கி சாப்பிட்டாலே கலராகி விடலாம் என பல வீடியோக்களைப் பார்க்க முடிகிறது. உண்மையில் அப்படி மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி சாப்பிடலாமா என விளக்கமளிக்கிறார் சரும மருத்துவர் ஸ்ரத்தா.

வைட்டமின் சி என்றால் என்ன?

வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் என்பது நீரில் கரையும் தன்மை கொண்ட ஒரு வைட்டமின். இது மனிதர்களால் தொகுக்கமுடியாத அதே சமயம் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து கிடைக்கக்கூடிய மிக முக்கியமாக ஊட்டச்சத்து ஆகும். உடலில் வைட்டமின் சி குறைந்தால் பல நோய்கள் வரும். முக்கியமாக நம் அனைவருக்கும் தெரிந்த ஸ்கர்வி நோய்.

குறிப்பாக இந்த கொரோனா காலங்களில் வைட்டமின் ஏன் அவசியம்?

நோயெதிர்ப்பு சக்தி: உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் போதுமான அளவு வைட்டமின் இருப்பது அவசியம். உடலில் கொலாஜன் சுரப்பு மிகவும் அவசியம். இது சருமத்தின் லிப்பிட் லேயரை அதிகரித்து கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுத்து தோலினை வலுவாக வைத்திருக்கிறது. வைட்டமின் சி ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் சி ரத்த உயிரணுக்களில் சேர்ந்து அழற்சி பாதைகளின் செயல்பாட்டைக் குறைக்கிறது.

 (கோப்பு புகைப்படம்)

ஒரு நாளைக்கு 500 எம்.ஜி வைட்டமின் சி எடுத்துக் கொள்வது நியூட்ரோபில்லின்(ரத்த வெள்ளை அணுக்கள்) செயல்பாட்டை மேம்படுத்தி தீங்கு விளைவிக்கும் நுண்ணிய கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதில் இந்த வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தோலில் சிறு காயம் ஏற்பட்டாலும் அதை குணமாக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் வைட்டமின் சி மிகமிக அவசியம்.

வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றி. அதாவது, உண்ணும் உணவானது செரிக்கும்போது உடலில் சிகரெட் புகை, கதிர்வீச்சு அல்லது மாசுபடும்போதும் அதிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கில்களின் விளைவுகளை இது தடுக்க உதவும். இந்தத் தன்மையால்தான் வைட்டமின் சி தோல் பராமரிப்புப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது. இது தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, ஒரே மாதிரியான புத்துணர்வான இளமையான சருமத்தைப் பெற உதவுகிறது.

(கோப்பு புகைப்படம்)

எலும்புகள், தசை நார்கள், தசை நாண்களை வலுவாக வைத்திருக்கவும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒருநாளில் 200மி.கி வைட்டமின் சி அதிகமாக எடுத்துக்கொண்டால் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைத்து விரைவில் குணமடைய செய்யும். நிமோனியாவின் தீவிரத்தையும் குறைக்கும். மேலும் சுவாச நோய் தொற்றுகளின் தீவிரத்தைக் குறைத்து வரவிடாமல் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கொரோனா காலங்களில் வைட்டமின் சி, இ, பி3 மற்றும் வைட்டமின் டி போன்றவை உடலில் இருந்தாலே கடுமையான நோய் தாக்கத்திலிருந்துகூட நம்மை பாதுகாக்கும்.

தினமும் வைட்டமின் சி எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

ஒரு நாளைக்கு 100 முதல் 200மி.கி வைட்டமின் சி உடலுக்கு தேவை. அதை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் கலந்து உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளலாமா?

மருத்துவரின் பரிந்துரைபடி தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 500மி.கி -1000மி.கி கூடுதலாக எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் மேம்படும்.

(கோப்பு புகைப்படம்)

அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்?


பொதுவாக வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய ஒன்று. சில நேரங்களில் அதிகமாக எடுத்துக்கொண்டாலும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் ஒரு நாளில் 1 கிராம் அளவுக்கு மேல் எடுத்துக்கொள்பர்களுக்கு சிறுநீரகக் கல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், வயிற்றுப் பிடிப்பு, தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.

யாரெல்லாம் வைட்டமின் சி மருந்துவடிவில் எடுத்துக்கொள்ளக்கூடாது?

சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்ளவேண்டும். முடிந்தவரை இதுபோன்ற மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. ஹீமோக்ரோமாடோசிஸ்(Hemochromatosis) என்று அழைக்கப்படும் இரும்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் வைட்டமின் சி கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வைட்டமின் சி உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. தலாசீமியா(Thalessemia) எனப்படும் ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரை இன்றி வைட்டமின் சி எடுத்துக்கொள்ளலாமா?

பெரும்பாலும் உடலில் எந்தவொரு வியாதியும் பிரச்சினைகளும் இல்லாதவர்கள் என்றால், படிப்படியாக உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றால் தினமும் 500மி.கி முதல் 1000 மி.கி வரை சுமார் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். எந்த பிரச்சினையும் இல்லாதவராக இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்வது நல்லதல்ல. சிறுநீரக நோய், கல்லீரல் நோய் மற்றும் பிற கடுமையான பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்வதே நல்லது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com