அதிகரிக்கும் காற்று மாசுபாடு.. ஆஸ்துமா நோயாளிகளுக்கான 6 முக்கிய வழிகாட்டுதல்கள்!
டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மாசு காலம் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்துமா நோயாளிகளுக்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் கூறும் 6 மிக முக்கியமான அறிவுறுத்தல்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆஸ்துமா நோயாளிகள், மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலர்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவசர காலத்திற்காகவும் வழக்கமான பயன்பாட்டிற்காகவும் இன்ஹேலரின் காலாவதி தேதி, அதில் உள்ள மருத்தின் அளவை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்வது அவசியம். சுவாசத் தொற்றுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள, மருத்துவர்களின் ஆலோசனையின்படி காய்ச்சல், கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் 'ஆஸ்துமா செயல் திட்டம்' ஒன்றை எழுதி வைத்துக்கொள்வதுடன், அதுகுறித்து குடும்பத்தினரும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளியே செல்வதற்கு முன் காற்றுத் தரக் குறியீட்டை (AQI) சரிபார்க்கவும், மாசு அதிகம் உள்ள நாட்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர். வெளியே செல்ல நேரிட்டால், N95 முகக்கவசத்தை தவறாமல் அணிய வேண்டும் எனவும் ஆலோசனை கூறுகின்றனர். வீடுகளுக்குள் காற்றுத் தரத்தைப் பாதுகாக்க, மாசுக் காலத்தில் ஜன்னல்களை மூடி வைப்பதோடு, கொசுவர்த்தி சுருள், நறுமணப் புகைகளைத் தவிர்த்து, தேவைப்பட்டால் Air Purifier-ஐ பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். தொடர் இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தீவிரமடைந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.
