17 ஆண்டுகளில் 1,765 யானைகள் உயிரிழப்பு! ரயில் மோதி.. மின்சாரம் தாக்கி.. தொடரும் யானைகள் மரணம்!
இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளில் மின்சாரம் தாக்குதல், ரயில் மோதி உயிரிழத்தல், வேட்டையாடுதல் மற்றும் விஷம் வைத்தல் என இயற்கைக்கு மாறான காரணங்களால் 1,765 யானைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் RTI மூலம் அளித்த பதிலில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்துக் காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2009 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மின்சாரம் தாக்கி மட்டும் 1,185 யானைகள் உயிரிழந்துள்ளன. இது மொத்த உயிரிழப்புகளில் 67 சதவீதத்திற்கும் அதிகமாகும். அடுத்தபடியாக, ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 277 ஆக உள்ளது. வேட்டையாடப்பட்டு 222 யானைகளும், விஷம் வைக்கப்பட்டு 81 யானைகளும் உயிரிழந்துள்ளன.
2009-2010 முதல் 2013-2015 வரையிலான காலகட்டத்தில் 267 யானைகள் உயிரிழந்த நிலையில், 2021-2022 முதல் 2025-2026 வரை இந்த எண்ணிக்கை 441 ஆக உயர்ந்துள்ளது.
மாநில வாரியாகப் பார்த்தால், அனைத்து வகையான உயிரிழப்புகளிலும் ஒடிசா 371 யானைகள் உயிரிழப்புடன் முதலிடத்தில் உள்ளது. அசாம் 356 யானைகள் உயிரிழப்புடன் இரண்டாவது இடத்திலும், கர்நாடகா 223 யானைகள் உயிரிழப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கையில் ஒடிசா 238 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா 195 உயிரிழப்புகளுடனும், அசாம் 191 உயிரிழப்புகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ரயில் மோதி யானைகள் உயிரிழந்த சம்பவங்களில் அசாம் 90 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் 68 யானைகளும், ஒடிசாவில் 45 யானைகளும் ரயில் மோதி உயிரிழந்துள்ளன.
இதுகுறித்து RTI மனுதாரரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அமித் குப்தா கூறுகையில், யானைகள் நடமாடும் வழித்தடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலிகள், தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற மின்சார இணைப்புகளே பல உயிரிழப்புகளுக்குக் காரணம் என PTI-யிடம் தெரிவித்துள்ளார்.
யானைகள் பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக விவசாயிகள் சட்டவிரோதமாக மின்சாரம் பாயும் கம்பிகளை அமைப்பதும் யானைகளின் உயிரிழப்புகளுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தடுக்க, ரயில் பாதைகளில் ஆபத்தான பகுதிகளைக் கண்டறிதல், யானைகளின் வழித்தடங்களைப் பாதுகாத்தல், விழிப்புணர்வு வழிகாட்டிகளை உள்ளூர் மொழிகளில் வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மனிதர்கள் - யானைகள் இடையிலான மோதலைக் குறைப்பதற்கான நீண்டகால ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.
யானைகள் நாட்டின் இயற்கைச் சூழலுக்கும், வனச் சமநிலைக்கும் முக்கியமானவை. அவற்றின் வாழ்விடங்களையும், வழித்தடங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் உள்ளது. மின்வேலிகள், பாதுகாப்பற்ற மின்கம்பிகள் மற்றும் ரயில் பாதை விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

