"உக்ரைனில் இறந்த கர்நாடக மாணவரின் மரணத்துக்கு நீட்டே காரணம்" - முன்னாள் முதல்வர் குமாரசாமி

"உக்ரைனில் இறந்த கர்நாடக மாணவரின் மரணத்துக்கு நீட்டே காரணம்" - முன்னாள் முதல்வர் குமாரசாமி
"உக்ரைனில் இறந்த கர்நாடக மாணவரின் மரணத்துக்கு நீட்டே காரணம்" - முன்னாள் முதல்வர் குமாரசாமி

உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீன் எஸ்எஸ்எல்சியில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அப்போதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது, அவரின் மரணத்துக்கு நீட் தேர்வே காரணம் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் நுழைவுத் தேர்வு, மருத்துவக் கல்வி படிக்கவிரும்பும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவுகளைத் தகர்த்து வருகிறது. நீட் தேர்வு பெற்றோர் மற்றும் மாணவர்களின் மரணச் சிலையாக மாறியுள்ளது. உயர்கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, இல்லாதவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

தகுதி என்ற போர்வையில் திறமையான ஆனால் பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் வெட்கமற்ற முகத்தின் பிரதிபலிப்பே உக்ரைனில் ஷெல் தாக்குதலில் பலியான மருத்துவ மாணவர் நவீனின் சோகமான மரணம்.

நவீன் எஸ்எஸ்எல்சியில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அப்போதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக மதிப்பெண் சதவீதத்தைப் பெறுவது எளிதானது அல்ல, இருந்தும் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவ சீட் மறுக்கப்பட்ட பிறகு, நவீன் தனது கனவை நனவாக்கி மருத்துவராக ஆவதற்கு உக்ரைன் சென்றார். அந்த இளைஞனின் மரணம் ‘விஸ்வ குரு’ ஆக ஏங்கும் இந்தியாவின் `சுய மனசாட்சியை’ கேள்வி கேட்க வைத்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

நீட் தேர்வுக்கு பிறகு ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மருத்துவக் கல்வி கனவாகி விட்டது. டுடோரியல்கள் காளான்களாக வளர்ந்து மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 99% மாணவர்கள் இந்தப் பயிற்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லை. இந்த உண்மையை உணர்ந்து, டுடோரியல்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்தி, நவீன் போன்ற மாணவர்களின் சடலங்களில் நடனமாடுகின்றன. பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பெறும் 90% மாணவர்கள் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கருத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட்டுப் பேசுவதற்கு இது நேரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய சர்ச்சை அல்லது விவாதத்திற்கு வழிவகுக்கும் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட விரும்பவில்லை என்று மத்திய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை வெளியிடுவதன் பின்னணியில் உங்கள் நோக்கம் என்ன? அவரது இந்த கருத்து பல யூகங்களுக்கு வழிவகுக்கிறது.

அப்படியானால் நீட் பயிற்சிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? இவர்களுக்கு மத்திய அரசு ரகசிய ஆதரவு அளிக்கிறதா? நீட் தேர்வின் கல்வி அராஜகத்தால் இன்னும் எத்தனை மாணவர்கள் இறக்க வேண்டும்?. நவீன் மரணம் நீட் தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி பணக்காரர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட மருத்துவக் கல்வி முறை நாட்டுக்கே அவமானம். புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஒருமுறை இதயத்திலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com