
சிபிஎஸ் இ 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் குறித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதத்திற்கு சிபிஎஸ்இ பதிலளித்துள்ளது.
தமிழ்நாடு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு இயற்பியல் & உயிரியல் பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் கடுமையாக இருந்ததாகவும், ஆகவே மாணவர்கள் பாதிக்கப்படாமல் தேர்வுத் தாள் திருத்தம் அமையவேண்டும் எனவும் இப்படி குறிப்பிட்ட மாநில மண்டல மாணவர்கள் கேள்வித் தாள் கனத்தால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்ச் 20ம் தேதியன்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதற்கு சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் சன்யாம் பரத்வாஜ் எழுதிய 25.03.2023 தேதியிட்ட பதில் கடிதத்தில், "பொத்தாம் பொதுவாக செயலூக்கம் உள்ள உள் கட்டமைப்பு எங்கள் வசம் இருக்கிறது, இது பாட நிபுணர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி முடிவெடுக்க கூடியது" என்று கூறி இருந்தார்.
குறிப்பிட்ட பிரச்னை உங்கள் கவனத்திற்கு வந்ததா? மாணவர்களின் குறை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு கனத்தில் கேள்வி தாள் இருப்பது சரியா? என்று மீண்டும் 19.04.2023 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் சன்யாம் பரத்வாஜ் அவர்களிடம் இருந்து மீண்டும் பதில் சு.வெங்கடேசனுக்கு வந்துள்ளது. அதில் "தேர்வுத் தாள் திருத்தம் நடந்து கொண்டு இருப்பதாகவும், திருத்தம் முடிந்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக மாணவர்களின் மதிப்பெண் விவரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாணவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.