திருச்சி: சினிமா பாணியில் ஊசி மூலம் உடலில் காற்றை ஏற்றி கொலை... மருமகள் உதவியோடு மகனை கொன்ற தாய்!
செய்தியாளர்: வி.சார்லஸ், லெனின்
திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மதுபோதைக்கும், கஞ்சாவுக்கும் அடிமையான குணசேகரன், தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி சுலோச்சனா மற்றும் தாய் காமாட்சி ஆகியோரிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
அப்படி, நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன், தனது மனைவி சுலோச்சனா தாய் காமாட்சி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார். அப்பொழுது காமாட்சியின் உறவினர்களான திருநங்கை விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ (19), திருநங்கை குபேந்திரன் என்கிற நிபுயா (19) மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து வீட்டிலிருந்த காமாட்சியும் சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து யாரும் வராமல் காவல் காத்துள்ளனர். உள்ளே சென்ற அவர்கள் மூவரும், ராஜ்ஜியம் என்ற விஜயகாந்த் திரைப்படத்தில் வருவது போல, குணசேகரனின் உடலில் காலி ஊசியை செலுத்தியுள்ளனர். பின்னர் மூவரும் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு நாடகம் ஆடியுள்ளனர். பின்னர் தாய் காமாட்சி கோட்டை காவல் நிலையத்தில் தனது மகன் தற்கொலை செய்து கொண்டான் என புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் பேரில் கோட்டை போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில்தான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் குணசேகரனின் எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் சோதனை செய்த போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் 2 திருநங்கைகள் மற்றொரு நபர் என 3 பேர் வீட்டிற்குள் செல்வதும் மனைவி சுலோச்சனா மற்றும் அம்மா காமாட்சி ஆகியோர் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பதும் தெரியவந்தது.
அதன்பேரில் இது தற்கொலை அல்ல கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. கோட்டை காவல் நிலைய போலீசார் காமாட்சி, சுலோச்சனா, விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ , குபேந்திரன் என்கிற நிபுயா, விஜயகுமார் ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.