சென்னை: மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி - தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் கைது
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனுக்கும், நாகையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பணிபுரிந்து வரும் கோவிந்தராஜனுக்கும், நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. கோவிந்தராஜன், தனக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பழக்கம் எனவும், மருத்துவக்கல்லூரியில் சீட் வேண்டுமென்றால் கூறுமாறும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி சுப்ரமணியன் அவரது நண்பர் சாதிக்கின் மகள் ஆயிஷா என்பவருக்கு மருத்துவ சீட்டு வாங்கி தரும்படி 15 லட்சம் ரூபாயை கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளார். மேலும் இதுபோன்று சிலரிடம் பணம் பெற்று 85 லட்சம் வரை கோவிந்தராஜ் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார் சுப்ரமணியன். பணத்தையெல்லாம் பெற்றுக்கொண்ட கோவிந்தராஜ், மருத்துவ சீட் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் சாதிக், சுப்ரமணியனிடம் பணத்தை கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து சுப்ரமணியன் கோவிந்தராஜிடம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார் கோவிந்தராஜ். இதன் பின்னர் கோவிந்தராஜ் குறித்து ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்படவே, புகாரை பெற்றுக்கொண்ட ‘வேலைவாய்ப்பு மோசடி பிரிவு ஆய்வாளர்’ ஆல்பி பிரிஜெட் மேரி, வழக்குப் பதிவு செய்து வால்பாறையில் பதுங்கி இருந்த தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் கோவிந்தராஜை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரை ஆவடி அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த தமிழக அரசு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.